சனிப்பெயர்ச்சியின் அற்புதங்கள்

எனக்கு ஒருவனைத் தெரியும். அவனுக்கு வயது அதிகம் இருக்காது 25க்குள் இருக்கலாம். உடம்பில் மருந்துக்கும் சதை இல்லை. சிக்ஸ்பக் சிங்கம்.
பயங்கரமான ஒஸ்லோ முருக பக்தன். முதுகு பிய்ந்துபோகுமளவிற்கு முள்ளுக்குத்தி காவடி ஆடுவான். அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளையும் நான் அறிவேன்.
இவன் ஒரு பாட்டுப் பைத்தியம்.
யூடியூப்பில் பாட்டுக்களை கேட்டபடியே அவற்றை தொலைபேசியினூடாக முகப்புத்தகத்தில் நேரலை செய்யும் பெரும் கலைஞன்.
இவனைப் பார்த்த பின்தான் தொலைக்காட்சிகள் தங்களது செய்திகளை முகப்புத்தகத்தில் ஒளிபரப்பத்தொடங்கியிருக்கலாம் என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது.
உடம்பெல்லாம் பச்சை குத்தியிருப்பான். ஒரு கை முழுவதிலும் காதலியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறான். ஒரு நாள் அவனிடம் «இந்தக் காதல் இல்லாது போனால் கையில் குத்தியிருக்கும் பச்சையை என்னடா செய்வாய் என்றேன்»
«அண்ணை … கேனயங்கள் மாதிரி கதைக்காதீர்கள்» என்பது போன்று என்னைப் பார்த்தான். அப்புறமாய் «அதே பெயரில் இன்னொருத்தியை பார்க்கவேண்டியதுதான்» என்றான். அப்படிப்பட்ட அற்புதமான அறிவாளி அவன்.
இன்று ஒரு கடைக்குச் சென்றேன். அவன் அங்கு நின்றிருந்தான். வணக்கம் பரிமாறிக்கொண்டோம்.
நான் கடைக்கு வெளியே வந்து நண்பருக்காக காத்திருந்தபோது. கையில் தொலைபேசியுடன் வந்தான். இவன் எதையும் முகப்புத்தகத்தில் ஒளிபரப்பு செய்யக்கூடியவன் என்பதால் சற்று ஒதுங்கி நின்றுகொண்டேன்.
அருகில் வந்தான்.
கையில் தொலைபேசி.
தொலைபேசியில் முகப்புத்தகம்.
முகப்புத்தகத்தில் நண்பர்கள் அரட்டை.
என்னைக் கண்டதும் தொலைபேசியை காற்சட்டைப்பையினுள் இட்டுக்கொண்டான்.
எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
அப்போது தொலைபேசி சிணுங்கியது. அவன் தனது மணிக்கூட்டைப்பார்த்தான். அதில் அவனது அழகியின் படம் தெரிந்தது. கையை மடித்து வாயினருகில் கொண்டுசென்று காதலியுடன் பயபக்தியாக உரையாடினான். உரையாடல் முடிந்தது.
எனக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. இப்போதுதானே கையில் தொலைபேசி வைத்திருந்தான். ஆனால் இப்போது மணிக்கூட்டினூடாக உரையாடுகிறானே என்று யோசித்தபோது அவனே திருவாய் மலர்ந்தான்.
«அண்ணை இதுதான் கடைசியாய் வந்த டெக்னோலஜி»
«அப்படியா?»
«இது கையில இருக்கும். ஆனால் தொலைபேசியோட இணைக்கப்பட்டிருக்கும்»
«புளுடூத் மூலமாகவா?» என்று எனக்கும் இதுபற்றி சிறு அறிவுண்டு என்று காண்பிக்க முனைந்தேன்.
«அண்ணை.. இதுக்குள்ளயே சிம் இருக்கிறது. இது புல் அட்வான்ஸ்ஆன தொலைபேசி, ஆனால் எல்லா செட்டிங்கும் தொலைபேசியில்தான்» என்று மினுங்கும் ஒரு தொலைபேசியை காற்சட்டைப்பையினுள் இருந்து எடுத்தான். அதில் இந்த மணிக்கூட்டு தொலைபேசியை எவ்வாறு இயக்குவது என்று காண்பித்தான்.
நானும் எனது அறிவுக்கு உட்பட்டு சில கேள்விகளைக் கேட்டேன்.
«உண்மையில் அண்ணண் இந்த மணிக்கூட்டுத் தொலைபேசி குழந்தைகளின் பாதுகாப்பிற்காகத்தான் உருவாக்கப்பட்டது»
«அப்படி இதில் என்ன விசேசம் இருக்கிறது?»
பையனின் முகத்தில் ஆயிரம் வால்ட் வெளிச்சம் தெரிந்தது. அவன் ஒரு விரிவுரையை ஆரம்பித்தான்.
«அண்ணை, கவனமாகக் கேளுங்கள்»
«ம்»
«இங்கே பாருங்கள். இப்போது, என்னை உங்கள் குழந்தையாக நினையுங்கள். நீங்கள் என் அப்பா»
«சரி»
«நான் காணாமல்போய்விட்டேன். நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள். உங்களுக்கு இதயநோய் வேறு இருக்கிறது»
«டேய், அண்ணன் பாவமடா»
« உஷ்….. கதையைக் கேளுங்கள்» என்றபடியே தொடர்ந்தான் «உங்களால் என்னை கண்டுபிடிக்கமுடியவில்லை. உங்களின் மகனான என்னிடம் இப்படி ஒரு மணிக்கூடு இருக்கிறது. நான் அதல் உள்ள ஆபத்து என்ற செயலியை அமத்துகிறேன்» என்று கூறி அந்த செயலியை அமத்தினான்.
முதலில் கடிகாரம் அலரியது. அப்புறமாய் தொலைபேசி அலரியது.
வெற்றிப் பெருமிதத்துடன் என்னைப் பார்த்தான்.
«இங்கே பாருங்கள்» என்று தொலைபேசியைக் காட்டினான். அதில் கடிகாரம் எங்கே இருந்து ஆபத்து என்ற சமிக்ஞை வருகிறது, எந்த வீதி, கட்டட இலக்கம் என்று பலதையும் அது காட்டிற்று.
இப்படித்தான் குழந்தைகளை பாதுகாப்பது என்று தனது விரிவுரைக்கு முற்றுப்புள்ளி கைவத்தான்.
அப்போது, அவனது காதலி தொலைபேசியில் வந்தாள். அவள் திட்டியிருக்கவேண்டும். பையன் «இப்போ அந்தக் கடைக்குப்போகிறேன்» என்றபடியே தொலைபேசியை துண்டித்தான்.
«அண்ணை, அவள் என்னை நன்றாக புரிந்தவள். நான் எப்போது, எங்கே, என்ன செய்கிறேன் என்னுமளவறிற்கு அவளுக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. நான் அதிஸ்டசாலையல்லவா?» என்றான்.
ஆமா.. ஆமா என்று ஜல்லிக்கட்டு காளைபோன்று தலையை ஆட்டியபோதுதான் எனது மரமண்டைக்குள் ஒரு மின்னல்போன்ற ஒரு ஒளி தோன்றி மறைந்தது.
« நீதானே வளர்ந்த ஆளாகிவிட்டாயே, இந்தளவு விலையான தொலைபேசியை வாங்கி ஏன் பணத்தை விரயமாக்குகிறாய்» என்றேன்.
திரும்பவும் «அண்ணை … கேனயங்கள் மாதிரி கதைக்காதீர்கள்» என்பது போலப் பார்த்தான். அப்புறமாய், «அண்ணை, நான் இதை வாங்கவில்லை. அவள்தான் கட்டாய அன்பளிப்பாகத் தந்தாள்»
«நீங்கள் உங்கள் காதலி கட்டாய அன்பளிப்பு தந்தால் மறுப்பீர்களா» என்று கேள்வியால் மடக்கினான்.
உனக்கு 50 வயது கடக்கும்போது இந்தக் கேள்விக்கு விடைதெரியவரும். என்றபோது…. தம்பியின் காதலி மீண்டும் தொலைபேசியூடாக வந்து… «இன்றும் அதே இடத்திலேயே நிற்கிறீர்கள்போல» என்றதும்…. தம்பி என்னை பெருமிதத்துடன் பார்த்து காதலியிடம் «யெஸ் டார்லிங்» என்றான்.
நானும் என் பங்குக்கு «தம்பி, உனக்கு ஒருவருக்கும் கிடைக்காத காதலி கிடைத்திருக்கிறாள், தொலைத்துவிடாதே» என்றேன்.
«என்ட செல்லத்தை சத்தியமாகத் தொலைக்கமாட்டேன்» என்று நெஞ்சில் அடித்துச் சத்தியம் செய்தான்.
«டேய்… நேற்று முன்தினம்தான் சனிப்பெயர்ச்சி நடந்ததாம். எனக்கேதோ சனி உன்னிடம் இந்த மணிக்கூடு உருவத்தில் வந்திருக்கிறது என்று பயமாக இருக்கிறது என்று சொல்வோமா என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, காதலி மீண்டும் தொலைபேசியில் வந்தாள்.
அவள் எதையும் பேசுவதற்கு முன்பாகவே இவன்….
«வாங்கியாச்சுடா செல்லம்» என்றான்
«முதலில் கடைக்குப்போ…. என்னுடன் விளையாடாதே» என்று ஒரு கறாரான குரல் கேட்டது…
தம்பியை சனிபகவான் கவனிக்கத்தொடங்கிவிட்டார் என்பது நிட்சயமாயிற்று.
தம்பியிடம் இருந்து விடைபெறுவோம் என்று நினைத்தேன். ஆனால் தம்பி கடையை நோக்கி வேகமாய் ஓடிக்கோண்டிருந்தான்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்