ஒஸ்லோ முருகனைக் கொலைசெய்வது எப்படி?

மனிதர்களுக்கு ஆன்மீகம் ஒருவித அமைதி, ஆறுதலைத் தருவதாலேயே கோடானுகோடி மக்கள் இறைவழிபாட்டை நாடுகிறார்கள். மதம்சார்ந்த நிறுவனங்களை உருவாக்கி அதனை இயக்குகிறார்கள். அவர்களின் சந்ததிகள் இவற்றை பின்தொடர்ந்துசெல்வதற்கான வழிமுறைகளை அவர்கள் உருவாக்கவும் செய்கிறார்கள். இப்படியான செயற்பாடுகளினால்தான் இன்று புலம்பெயர் தேசங்களில் பல இந்துக்கோயில்கள் உருவாகக் காரணமாயின. விதிவிலக்குகளும் உண்டு.
மேலே கூறியது ஒரு கற்பனையோ என்று எண்ணத்தை ஏற்படுத்தியது இன்றைய ஒஸ்லோ முருகன் கோயிலின் நிர்வாகத்தேர்வு. ஏற்கனவே பல நாட்களாக இழுப்பட்ட நிர்வாகத்தேர்வு இன்று நடைபெற்றது.
தனி மனிதர்களின் அகங்கார உக்கிரத் தாண்டவத்தை கண்ணுற்ற ஒஸ்லோ முருகனின் இதயம் நின்றுபோயிருக்கும் இன்று.
இந்துமதத்தின் அடிப்படைத்தத்துவமே நான் என்னும் அகங்காரத்தை அழிப்பதல்லவா? ஆனால் நான் என்னும் அகங்காரத்தினை வளர்த்தபடியே மதத்தினையும் மதநிறுவனங்களையும் நிர்வகிக்கும் மனிதர்களால் இந்துமதத்திற்கும், இந்துமத நிறுவனங்களுக்கும் எதுவித பிரயோசமும் இல்லை என்பதை எமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
எனக்கு அனைத்து மத தத்துவங்களிலும் ஆர்வமுண்டு. ஆனால் கிரிகைகளில், வழிபாட்டுமுறைகளில், சாமியார்களில், எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள ஆலயங்களின் நடைமுறைகளில் பெரும் விமர்சனம் எனக்கிருக்கிறது.
இந்து ஆலயங்கள் தம்மை இளையோருக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளாவிட்டால் இன்னும் ஒரு சந்ததியின் பின் வெறிச்சோடிவிடும் என்ற கருத்தும், ஆலயங்களின் நிர்வாகிகளுக்கு ஒரு மத நிறுவனத்தை எவ்வாறு உருவாக்குவது எவ்வாறு இயக்குவது, வழிநடாத்துவது, வளர்ச்சியடையவைப்பது என்ற செயற்பாடுகள் பற்றிய அறிவுத்திறன் சற்றேனும் இல்லை என்ற கருத்தும் எனக்கிருக்கிறது.
ஒரு பொருளை விற்பனை செய்யவேண்டுமாயின் பாவனையாளர்களிடம் அதனை சிறப்பான முறையில், நம்பகமானமுறையில் எடுத்துச்செல்லவேண்டும். அதுவே பாவனையாளர்களை தக்கவைக்கும். இளையோரை அற்ற செயற்பாடுகள் எமது சந்ததியுடனே அழிந்துவிடும் என்பதை நாம் இன்னும் உணர்ந்ததாய் இல்லை.
சிறந்ததொரு முருகபக்தன், அல்லது தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள், ஆண்டுதோறும் பறவைக்காவடி எடுப்பவர், தேவாரங்களை மனமுருகப் பாடுபவர்கள் அனைவரும் ஒரு மத நிறுவனத்தை நடாத்தும் திறமையுடையவர்கள் அல்லர். இவர்களில் மிக மிகச் சிலருக்கே இப்படியான திறமைகள் இருக்கும். இதுவே யதார்த்தம்.
இங்கு, இந்து ஆலயம் என்பது நோர்வே நாட்டுச் சட்டங்களின் கீழ் ஒரு மத நிறுவனமாகவே கணிக்கப்படும். மத நிறுவனங்களுக்கு என்று சட்டங்கள், ஒழுங்குகள், கட்டுப்பாடுகள், கண்காணிப்புக்கள், உதவிகள் என்று பலதும் உண்டு.
நோர்வேயில் ஒரு நிறுவனத்தை மிக முக்கியமாக பின்வரும் அலகுகள் கட்டுப்படுத்துகின்றன. அவற்றில் முதலாவது இந்நாட்டுச் சட்டம். இரண்டாவது நோர்வே நிறுவனப்பதிவகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள யாப்பு. இவையே சட்டரீதியாக ஒரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும். இதற்கப்பால் அந்நிறுவனத்தின் பொதுக்குழு தனது செய்பாட்டினைச் செய்யும். இதற்கும் அப்பால் அந்நிறுவனம் தனது செயற்பாடுகள் எவை எவை, அவை எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தயாரித்துள்ள ஆவணம் அந்நிறுவனத்தின் நாளாந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும். இவற்றை ஒரு நிறுவனத்தின் உள்ளக பரிசோதனை கட்டுப்பாடுக்குழுக்கள் ஆய்வுசெய்து நிறுவனங்களை வழிநடத்தும்.
இவற்றை மீறுவது தவறு என்பதை அனைவரும் அறிவோம். பல வழக்குகளில் நிறுவனத்தின் இயக்குனர்கள் தமது நாளாந்த செயற்பாடுகளை மீறியதற்காக சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். அது தவிர பல மத நிறுவனங்களை இந்நாட்டு கணக்காய்வு, வரி;, தீ மற்றும் பாதுகாப்பு, சுகாதார திணைக்களங்கள் சட்டங்களை மீறியதற்காகத் தண்டித்துள்ளன.
இந்நாட்டின் நிறுவனக்கட்டமைப்பும், நிர்வாகக்கட்டமைப்பும் இருக்கும்போது இன்று ஒஸ்லோ முருக அடியார்கள் எவ்வாறு முருகனை ஆராதிக்கிறார்கள் என்பதையும் நான் கண்ட ஆன்மீக நிறுவனத்தின் சிறப்புக்களையும் பகிர்வதே எனது எண்ணம்.
இன்றைய கூட்டத்திற்கு முன்பு சில நிர்வாக சபைத்தேர்வுகள் நடைபெற்று பல சலசலப்புக்கள், சர்ச்சைகள், அச்சுறுத்தல்கள், வன்முறைச் செயற்பாடுகள் என்று ஒரு பெரும் நாடகமே சில மாதங்களாக நடந்தேறியிருந்தது. தேர்தல்குழுவினர் புதிய கூட்டம் ஒன்றினை கூட்டியிருந்தனர்.
ஒரு நிறுவனத்தினை இயக்குவது என்பது கிணற்றடி வாழைப்பழக்குலையை சந்தைக்கு எடுத்துச்சென்று விற்பது போன்ற ஒரு சிறுநடவடிக்கை அல்ல. வாழைப்பழக்குலையை வளர்த்து, பாதுகாத்து, சந்தைப்படுத்துவதற்கும் பல திறமைகள் அவசியமாக இருக்கும்போது ஒரு பெரும் மதநிறுவனத்தை, பல மில்லியன் குறோணர்கள் வருமானம் உள்ள நிறுவனத்தை, ஒரு இனத்தின் பாரம்பரிய மதரீதியான செயற்பாடுகளை தொலைநோக்குப்பார்வையுடன் நடாத்திச் செல்லவேண்டியவர்களுக்கு எத்தனை சிறப்புத் தகுதிகள் உள்ள துறைசார் நிபுணர்கள் தேவை என்பதை நினைத்துப்பாருங்கள்.
சட்டம், கணக்கியல், வரி, கட்டிடத்துறை, தீ மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் என்று எத்தனை துறைகளில் பாண்டித்தியம் உள்ளவர்கள் தேவைப்படுவார்கள்? இவற்றினை முன்னின்று நடாத்தும் நிர்வாகக்குழுவிற்கு எப்படியான திறமைகள் இருக்கவேண்டும் என்பதை நாம் சிந்திக்கவேண்டாமா? பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏன் தமது நிறுவனங்களை இயக்குவதற்கு வேறு திறமைசாலிகளைத் தெரிவுசெய்கிறார்கள் என்பதை நாம் எமது மதநிறுவனங்களை இயக்குபவர்களை தெரிவுசெய்யும்போது சிந்தித்துப்பார்க்கவேண்டும். தம்மை வளர்த்துக்கொள்ள விரும்பும் ஒரு நிறுவனம் எப்போதும் திறமைசாலிகளுக்கே முதலுரிமை கொடுக்கும். ஆனால் நாம்?
பொதுநிறுவனங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழப்பதற்கு முக்கியகாரணமாக வெளிப்படைத்தன்மையின்மையைக் குறிப்பிடலாம். நோர்வே தகவலறியும் சட்டத்தின் பிரகாரம் அங்கத்தவர்களுக்கு தகவலறியும் உரிமை முழுமையாக உண்டு. இதை நடைமுறைப்படுத்தாத நிர்வாக உறுப்பினர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
ஒரு நிறுவனம் எனின் அங்குள்ள செயற்பாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்று வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். யாருக்கு என்ன அதிகாரம், செயற்பாட்டு எல்லை எது என்பனவற்றை வரையறுக்கும் ஆவணங்கள் தயாரிக்கப்படவேண்டும். அவை மிக இறுக்கமாகப் பின்பற்றப்படவேண்டும்.
அத்துடன் ஏற்படுத்தப்பட்ட வரையறைகள் சிறப்பாக இயங்குகின்றனவா என்ற தரக்கட்டுப்பாடும் இருக்கவேண்டும். தரக்கட்டுப்பாடு அடையாளும் காணும் வரையறை மீறல்களைகளுக்குரிய தீர்வுகளை செயற்படுத்தும் செயற்பாடும் அங்கு காணப்படவேண்டும்.
நிறுவனத்தின் சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், வரையறைகள் மீறப்படும்போது அதற்கெதிரான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு நிறுவனத்தின் நிர்வாகமோ, பொதுக்குழுவோ தயக்கம் காண்பித்தலாகாது. அதாவது முறைகேடான கலாச்சாரம் உருவாவதை அனுமதித்தலாகாது. அப்போதுதான் ஒரு நிறுவனம் வளர்ச்சிப்பாதையில் நகர ஆரம்பிக்கும்.
முறைகேடான நிறுவனக் கலாச்சாரங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்படாவிட்டால் அவையே கலாச்சாராமிவிடும். அதன்பின் அங்கு வளர்ச்சிக்கே இடமில்லை.
ஏன் இவற்றை எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கடந்த வருடத்து தலைவர் உட்பட நிர்வாகஉறுப்பினர்கள், கணக்காய்வரளர், தேர்தல்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கூறிய சில கருத்துக்களை அவதானித்தால் நீங்கள் நான் மேலே எழுதியவற்றிற்கான காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள்.
உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் மயங்கிவிழாதிருப்பதற்காக நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை இறுகப்பற்றிக்கொண்டபின் தொடர்ந்து வாசியுங்கள்.
1. இன்றைய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கத்தவர்களுக்கு இருக்கவேண்டிய தார்மீகமான பொறுப்புணர்ச்சியை மருந்துக்கேனும் காணக்கிடைக்கவில்லை. இப்படியான பொறுப்பற்ற அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு நிறுவனம் எவ்வாறு வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்ற கேள்வி எனக்கிருக்கிறது.
2. யாப்பு என்பதனை மீறிய தேர்தல் நடைபெற்றது. தேர்தலை ஏற்பதா இல்லையா என்ற வாக்கெடுப்பு உண்மையில் யாப்பினை மீறுவதா இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பே அன்றி வேறு எதுவுமில்லை. இவ்விடத்தில் இந்நாட்டுச் சட்டங்கள் மீறப்படுகின்றன என்பதை குறிப்பிடவேண்டும். சட்டத்;தினை மீறுவதற்கு பொதுக்குழு அனுமதியளிக்கிறது என்பது அபத்தத்தின் உச்சம். சட்டரீதியாக இப்படியான செயல்கள் தவறானவை என்ற புரிதல் இன்மை என்பதும் வேதனையான விடயமே.
3. குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மிகவும் கீழ்த்தரமாகவே நடந்துகொண்டார்கள். அங்கு நடந்த வார்த்தைப்பிரயோகங்களை இங்கு எழுதமுடியாது. ஏறத்தாழ கைகலப்பு நிலை. பலரையும் கட்டுப்படுத்திய மனிதர்கள் இல்லையேல் இன்று வன்முறையில் கூட்டம் முடிந்திருக்கும்.
4. உயிராபத்து ஏற்படுத்துவேன் என்ற அச்சுறுத்தல்கள். (இது இந்நாட்டில் பாரிய குற்றம்)
5. பணவிரயம் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டியதற்காக கணக்காய்வாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை. அவருக்குரிய கணக்காய்வுகளை செயற்படுத்துவதற்கு கடந்த வருட நிர்வாக உறுப்பினர் ஒருவர் பல முட்டுக்கட்டைகளை தோற்றுவித்ததாக கடந்த ஆண்டுத் தலைவரே கூறினார். (இதன்போதும் பொதுக்குழு எதுவித நடவடிக்கையையும் எடுப்பதற்காக முன்னெடுப்பில் ஈடுபடவில்லை.
6. தனது வாகனத்தின் பற்றரியினை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் தரப்படவில்லை என்று ஒரு பக்தர் நிர்வாகத்தினருடன் முரண்பட்டார். மின்சாரத்தை ஏன் நிறுத்தினீர்கள், யார் அதை நிறுத்தக் கட்டளையிட்டார்கள் என்பது அவரது பிரச்சனை.
7. யாப்பினை மீறி அய்யர் நகை சேகரிப்பில் ஈடுபட்டாராம். இதற்கு ஆதரவாக ஒரு குழு. ஏதிராக இன்னொரு குழு.
8. கணக்குகளை பார்வையிட அனுமதிகோரிய பொதுக்குழு உறுப்பினருக்கு கணக்குகள் காட்டப்படவேண்டிய அவசியம் இல்லை என்று கணக்காய்வாளருக்கு அறிவிக்கப்பட்டதாக கணக்காய்வாளர் அறிவித்தார்.
9. தேர்தல் திருவிளையாடல்களால் முருகனுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவில்லையாம். பழங்கள் அழுகிப் பழுதடைந்தனவாம், வருமானம் வங்கியில் இடப்படவில்லையாம். நிர்வாகம் சில நாட்களாக சீராக இயங்கவில்லை.
இப்படியான குற்றச்சாட்டுகள் அளவுகணக்கில்லாதவை, பாரதூரமானவை சில சிறுபிள்ளைத்தனமானவை. எனவே இத்துடன் அவற்றை நிறுத்திக்கொண்டு இவற்றிற்கு பொதுக்குழு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பார்ப்போம்.
பொதுக்குழு என்பது ஒரு நிறுவனத்தின் அத்திவாரம். யாப்பின் அடிப்படையில் பொதுக்குழுவே நிறுவனத்தை வழிநடாத்தும். பொதுக்குழுவே ஒரு நிறுவனத்தின் அதிஉச்ச அதிகாரசபை.
இன்று முன்வைக்கப்பட்ட எதுவித குற்றச்சாட்டுக்களுக்கும் பொதுக்குழு எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இப்படியான மனநிலையானது பொதுக்குழு அங்கத்தவர்களுக்கு ஆலயத்தின் நிர்வாகத்தில் எதுவித ஆர்வமும் இல்லை என்பதையே காட்டுகிறது.
ஏறத்தாழ 220 அங்கத்தவர்கள் சமூகமளித்திருந்தனர். பலர் கட்டாயப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் வந்தார்கள். தமக்கு கூறப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள். சென்றார்கள். இதுவும் ஒருவிதத்தில் கூலிக்கு மாரடித்தலே. ஒருவர் தனக்கு 10க்கும் அதிகமான குறுஞ்செய்திகள் வந்ததாகக் காண்பித்தார்.
சமூகம்பற்றிய, ஆலயத்தின் வளர்ச்சிபற்றிய சிந்தனையுடையவர்கள் ஒரு சிலரே. அவர்களாலும் மௌனித்து இருக்கவே முடிந்தது. ஆடையற்றவன் ஊரில் ஆடையணிபவன் போன்ற நிலை அவர்களுடையது.
இன்றைய கூட்டம் பலவிதமான முறுகல் நிலைகளை உருவாக்கியிருக்கிறது. குழுக்களிடையேயான பிளவுகள் மேலும் விரிவடைந்துள்ளன. பொதுக்குழு யாப்பினை மீறி தேர்தலை நடாத்துகிறது. தவறான, முறைகேடான, ஆலயஒழுங்குகளை மீறியவர்கள், யாப்பு விதிகளை மீறியவர்கள் மீது எதுவித நடவடிக்கையையும் பொதுக்குழு மேற்கொள்ளவில்லை. யாப்பினை திருத்தி, ஆலயத்தின் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் எண்ணமும் எவரிடமும் இல்லை. ஆக பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்படவில்லை.
ஐந்தறிவு மிருகங்கள்கூட ஒருமுறை செய்து தவறினை மீண்டும் செய்வதில்லை. ஆனால் நாம் மீண்டும் மீண்டும் அவை சிறப்பாக நடந்தேற வழிவகுக்கிறோம்.
என்னவிதமான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? இப்படியா எமது குழந்தைகளுக்கு வழிகாட்டப்போகிறோம்? என்ற சிந்தனையும் எவரிடத்திலும் இல்லை.
ஆலயம் என்பது அமைதியன் இருப்பிடமல்லவா? ஆலய செயற்பாடுகளில் அதிகார எண்ணத்துடனும்; அகங்கார எண்ணத்துடனும் செயற்படுபவர்கள் எவ்வாறு இப்படியான நிறுவனங்களை சிறப்பாகவும் வளர்ச்சிப்பாதையிலும் இட்டுச்செல்வார்கள்?
சற்றேனும் சிந்தியுங்கள். குற்றுயிராய் இருக்கும் ஒஸ்லோ முருகனை முதலுதவி செய்து காப்பாற்றிய புண்ணியமாவது உங்களுக்குச் சேரும்.
ஏறத்தாள 6 மணிநேரத்தின் பின் தேர்தல் முடிந்துவிட்டது எல்லாம் சுபம் என்ற பேச்சுக்களுடனும், சேர்ந்தியங்கவேண்டும் என்ற அறிவுரைகளுடனும், மேலும் பல பல உத்தரவாதங்களுடனும் ஒஸ்லோ முருகனைக் கொலைசெய்யும் ஒரு சமூகம் கலைந்துபோனது.
நான் கோயிலுக்குள் சென்றேன். கர்ப்பக்கிரகத்தில் இருந்த முருகன் என்னை அருகே அழைத்தான்.
அருகே சென்று ‘என்னய்யா’? என்றேன்.
“உனக்கு ஒரு இரகசியம் சொல்லவேண்டும்“
“சரி... சொல்“
‘இந்த திருக்கூத்து முருகன்கோயிலில் மட்டும்தான் என்று மட்டும் நினைக்காதே’ என்பதுதான் அது.
அப்போது அம்மனும், பிள்ளையாரும் முருகனின் பின்னால் அழுதுகொண்டு நின்றார்கள்.
‘ஆ’ என்று வாயைப்பிளந்தேன்

1 comment:

  1. "ஐந்தறிவு மிருகங்கள்கூட ஒருமுறை செய்து தவறினை மீண்டும் செய்வதில்லை. ஆனால் நாம் மீண்டும் மீண்டும் அவை சிறப்பாக நடந்தேற வழிவகுக்கிறோம்" என்பதை நாம் உணருவது எப்போது?

    ReplyDelete

பின்னூட்டங்கள்