பரதம் பேச மறந்த பாவங்கள்

மாற்றம் என்பது காலத்தின் கட்டாயங்களில் ஒன்று, மாற்றம் மட்டுமே மாறாதது அல்லவா?

24.03.2018 நாளை நோர்வே வாழ் தமிழர்களின் கலையுலகு நினைவில் கொள்ளும் என்றே நம்புகிறேன். இன்று Osloவிலுள்ள Freestyle dans கலைக்கூடமான Dans for ever இன் நடன நிகழ்வு நடைபெற்றது. மண்டபம் நிரம்பி வழியுமளவுக்கு ஆர்வலர்கள்.

இன்றைய நிகழ்வே முதன் முதலில் Oslo தமிழர்களிடத்தில் நடைபெற்ற முழு நீள Freestyle நடன நிகழ்வு என அறிப்பாளர் அறிவிக்கக் கேட்டேன். அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

இந்த நிகழ்வு பல சிந்தனைகளுக்கு களம் அமைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அவற்றில் முக்கியமானது எமது சமூகத்தில் பரதநாட்டியம் பெற்றிருந்த இடத்தை இப்போது Freestyle dans வடிவம் தனதாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்பதும் எமது இலக்கியங்கள் Freestyle நடனவடிவங்களின் ஊடாக எதிர்காலச் சந்ததியினரிடம் ஆரோக்கியமான முறையில் நகர்த்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதுமாகும்.

Freestyle dans ஊடாக கருத்துக்களை, கதைகளை பார்வையாளர்களுக்கு முன்வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதுவரை பரதக்கலை, நாடகம், கூத்து மற்றும் இசைவடிவங்கள் ஆகிய கலைவடிவங்கள் மூலமாக மட்டும் முன்வைக்கப்பட்ட இராமாயணத்தை இன்று நான் முதன்முதலாக Freestyle dans வடிவத்தின் ஊடாகப் பார்க்கக்கிடைத்தது. இது மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சி. எனவேதான் நோர்வே தமிழர்களுக்கு இன்றைய நாள் முக்கிய நாளாகிறது என்கிறேன்.

நோர்வேயிலுள்ள உத்தியோகபூர்வ நடனவடிவங்களுள் ஒன்றான Freestyle நடனவடிவத்திலேயே இந்நாடடில் வாழும் இளையோரும் பதின்ம வயதினரும் ஆர்வத்துடன் பங்கு கொள்கின்றனர். நோர்வேயில் விளையாட்டுக்களுக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான kongepokal (அரசனின் விருது) என்னும் விருதும் இந்நடனத்திற்கு உண்டு.

தவிர 30- 40 ஆண்டுகளாக இச்சூழலில் வாழும் இலங்கைத் தமிழர்களால் வெவ்வேறு நடன வடிவங்களின் மூலம், முக்கியமான பரத்தின் மூலம் எமது வாழ்வியலை, இலக்கியங்களை, இந்நாட்டுமக்களிடம் குறிப்பிடத்தக்க அளவிலேனும் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதும் உண்மையே. ஆனால் Freestyle மூலம் இவற்றை இலகுவாக எடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பமும் வசதியும் அதிகம் என்றே கருத வேண்டும்.

கலையுலகில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோர் தங்களின் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு செவிசாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை Freestyle dans பாடசாலைகளில் இணையும் பிள்ளைகளின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றே எண்ணுகிறேன். எமது சமூகத்தில் இதனை மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம் என்றே கூறவேண்டும்.

மறுபுறத்தில் இது பரதநாட்டிய ஆசியர்களுக்கு ஒரு பெரும் சவாலைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது அல்லது கொடுக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த சவாலை எவ்வாறு பரதக்கலை ஆசிரியர்கள் கையாளப்போகிறார்கள் என்பது அவ்வாசிரியர்களின் திறமையில் தங்கியிருக்கிறது மட்டுமல்ல பரதக்கலையை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதுவே நிர்ணயிக்கப்போகின்றது.

இங்கு திறமை என்பது அனுபவமோ, பிரபல்யமான ஆசிரியர் என்பதோ அல்ல. மாறாக அது பரதத்தை எவ்வாறு குழந்தைகளுக்கு பிடித்தவகையில் தயாரித்து, கற்பிக்கப்போகிறார்கள் என்பதிலும், அவர்களது கலைச்சிருஷ்டித்திறமையிலும், ஆசிரியத்துவத்திலுமே தங்கியிருக்கிறது. மிக முக்கியமாக குழந்தைகளுக்கு கலையைக் கற்பிக்கும் முறையிலும் அவர்களைக் கையாளும் திறமையிலுமே இது தங்கியிருக்கிறது.

இதுவரை காலமும் பரதத்திற்கு மாற்றீடாக குழந்தைகளுக்கு வேறு நடனவடிவங்கள் இருக்கவில்லை. எனவே அனைவரும் பரதத்தைக் கற்றனர். தேவைக்கு அதிகமாக அது புனிதப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

ஆனால் காலமாற்றத்தின் தேவைகளை போதுமான அளவு கவனிக்காததன் விளைவே இன்று பலர் Freestyle dans பக்கமாச் சாய்வதற்கு காரணமாயிருக்கிறது என்றும் கொள்ளலாம்.

இப்போது பரதத்திற்கு போட்டியாக Freestyle dans வடிவம் உருவாகியிருக்கிறது. இதற்கு தென்னிந்திய தொலைக்காட்சிகளும், எமது மேற்கத்திய வாழ்க்கையும் முக்கிய காரணிகளாகும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பரதத்திற்கும் பொருத்தமானதல்லவா.

Freestyle dans இன் வருகை இன்னொருவிதத்தில் பரதநாட்டியத்திற்கு எமது சமூகத்தில் இருக்கும் ‘புனிதமான கலை' என்ற அர்த்தமற்ற அந்த்தஸ்த்தினை கேள்விக்குறியாக்கத் தொடங்கியுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது.

Freestyle dans இல் பரீட்சைகள் இல்லை, விலையுயர்ந்த உடையலங்காரங்கள் அவசியமில்லை, அரங்கேற்றம் இல்லை, பட்டங்கள் இல்லை, ஆண் வேடத்திற்கு பெண் தேவை என்ற நியதியில்லை. மாறாக அங்கு குழந்தைகள் தங்களின் மனம் லயித்து நடனத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே உண்மை. அது மட்டுமல்ல ஆண் பெண் இருபாலாரும் வரையறைமீறாது கலைபடைக்கின்றனர்.

ஆணும் பெண்ணும் இணைந்து நடனமாடுவது என்பது Freestyle dans ல் மிகச் சாதாரண விடயம். பரத நாட்டியத்தில் இதற்கான சாத்தியம் மிகக் குறைவு.

காலத்திற்கு ஏற்ற தலைப்புக்களை மிக இலகுவாக Freestyle dans ஊடாக படைக்கமுடிகிறது. இத்தனை வருடங்களானபின்பும் இந்து மதத்தைக் கடந்து பரதம் அதிக தூரம் வந்துவிடவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இதற்கான காரணிகள் ஆராய்ந்து தீர்த்துக்கொள்வதே இப்போது அவசியமானது.






இன்றைய நிகழ்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்களான குடும்ப வன்முறை அதனூடான பாதிப்புக்கள், பாடசாலையில் நடைபெறும் கேலிவதை, மிரட்டல் போன்றவற்றை நாம் ஏன் இதுவரை பரதத்தின் ஊடாக படைக்க முன்வரவில்லை என்பதை இன்றைய நிகழ்வு சிந்திக்கத்தூண்டியுள்ளது. உரியவர்கள் சிந்திப்பார்கள் எனக்கொள்வோம். எதை எமது சமூகம் விதைத்ததோ அதை அறுவடைசெய்கிறோம் என்றும் நாம் இதை நோக்கலாம்.

எனவே Freestyle நடன ஆசிரியர்களும், ஏனைய கலையாசிரியர்களும் பரதக்கலை ஆசிரியர்களிடத்தில் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டு.

இன்றைய நிகழ்வில் நோர்வேயின் முக்கிய பரதக்கலை ஆசிரியர்கள் மூவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டமையும், Dans for ever கலைக்கூடத்தின் ஆசிரியைகள் அனைவரும் பரதக்கலையை அரங்கேற்றம் வரையில் கற்றுத்தேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையில், இந்திய இசையும் Jazz இசையும் இணைந்து IndoJazz இசையை உருவாக்கிக்கொண்டதைப்போன்று, பரதமும் Freestyle dansம் புதியதோர் நடனவடிவத்தினை உருவாக்கிக்கொள்ளக்கூடும்.

குழந்தைகள் மெய்மறந்து கொண்டாடும் எக்கலையும் எனக்குக் கலையே.

மாணாக்கரிடத்தே ஆர்வத்தை உண்டாக்குபவனே ஆசிரியன் என்றும் எங்கோ வாசித்திருக்கிறேன்.



யார் யார் ஆசிரியர்கள் என்பதை காலம் காண்பிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

இன்றைய நிகழ்வினை தயாரித்து வழங்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

மனதுக்கு நம்பிக்கை தந்த ஒரு மாலை.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்