அற்புத வாழ்வும் அழகிய இரண்டு சம்பவங்களும்

இன்று காலை தூக்கத்தில் இருக்கிறேன் தொலைபேசி அலறியது. கண்ணைத் திறக்காமலே கையைத் துலாவி தொலைபேசியை காதில்வைத்து “வணக்கம்” என்றேன்.

மறுபக்கத்தில் கணீர் என்று ஒரு குரல் “சஞ்சயன்” என்றது. குரலைக் கேட்டதும் தூக்கம் பறந்தோடியது. துள்ளி எழுந்து உட்கார்ந்து என்னையறியாமலே “சேர்.. நீங்க தொலைபேசியை வைய்யுங்கள், நான் எடுக்கிறேன் ”என்றேன்.

92வயதைக் கடந்துகொண்டிருக்கும் எனது பேராசான் பிரின்ஸ் காசிநாதரின் குரல் அது.

இந்த மனிதரைப்போல் என்னை புடம்போட்டவர்கள் எவருமில்லை. மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெருமனிதர் அவர். அவர் இடத்தை எவராலும் ஈடு செய்யமுடியாது என்பதை காலம் எனக்கு உணர்த்தியிருக்கிறது.

தொலைபேசியில் அவரை அழைத்தேன்.

உடைந்து தளும்பிய குரலில் ‘மை சண்’ என்று ஆரம்பித்து ‘என்னைக் கடனாளியாக்காதே. உன்னைப்போன்ற மாணவர்கள்தான் என் முதுமைக்காலத்தை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அப்படி என்ன செய்தேன்? நீங்கள் என்னை தலையில் வைத்துக்கொண்டாட’ என்றார்.

மட்டக்களப்பில் ‘அரங்கம்’ என்று ஒரு பத்திரிகை வெளிவர ஆரம்பித்திருக்கிறது. நண்பர் Seevagan Poopalaratnam நடாத்தும் பத்திரிகை இது. இதுவரை வெளிவந்த ஐந்து வெளியீடுகளில் நான்கு பத்திகள் எழுதியிருக்கிறேன். அவற்றுள் இரண்டு எங்கள் கல்லூரியான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பற்றியது. முதலாவது எனது பேராசானைப்பற்றியது. மற்றையது அவர் உருவாக்கிய வழிகாட்டிகள் சங்கம் பற்றியது.

இரண்டிலும் எனது பேராசானின் பெருமைகளை எழுதியிருந்தேன். அது அவரது காதுக்குச் சென்றிருக்கிறது. அதுதான் என்னுடன் உரையாட விரும்பியிருக்கிறார்.

‘சேர், நீங்கள் இல்லையேல் இன்று நான் இல்லை. இன்றறைய எனது வாழ்க்கை உங்களின் பாசறை கற்றுக் கொடுத்ததே. அந்த விழுமியங்களே என்னை இன்றும் வழிநடாத்துகின்றன’ என்றேன்.

‘சஞ்சயன், அடுத்த முறை நீ வரும்போது நான் இருப்பது நிட்சமில்லை. இந்த உலகில் நான் பெற்ற பெரும் பேறு என்னை இத்தனை வருடங்களின் பின்பும் கொண்டாடும் உன்னைப்போன்ற எனது மாணவர்களே. உங்களுக்கு எவ்வாறு நான் எனது நன்றியைச் சொல்வேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும். உன் வாழ்வு மகிழ்ச்சியாக அமையட்டும். பாடசாலையை நினைவில் கொள், மகனே' என்றுவிட்டு தொலைபேசியை வைத்தார்.

இது நடந்து ஏறத்தாழ 16 மணிநேரங்கள் கடந்துவிட்டன. தற்போதும் இதை நினைக்கும்போதெல்லாம் கண் கரைந்து போகிறது, மனதைப்போல்.

எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என்பவற்றில் நான்காவதில் நம்பிக்கையில்லை. ஆனால் மூன்றாவதில் அதீத நம்பிக்கயிருக்கிறது.

பேராசானே! இன்னும் இரண்டரை மாதங்களில் உங்கள் அருகில் உட்கார்ந்திருந்து காலத்தை இரைமீட்க வருவேன்.

***
இன்று மாலை மீண்டும் மட்டக்களப்பில் இருந்து இன்னுமொரு தொலைபேசி அழைப்பு வந்தது.

எனது வாழ்வினை அர்த்தப்படுத்திய இன்னொரு மனிதர் அவர். ”படுவாங்கரை – போரின் பின்பான வாழ்வும் துயரமும்” என்ற எனது பத்திகளின் தொகுப்பை அவர் இன்றி என்னால் எழுதியிருக்கவே முடியாது.

முன்னாள் போராளி. சற்றேனும் சுயநலமற்ற பரந்த மனம் கொண்ட மனிதர். பல போராளிகளின் வாழ்வில் புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு சிறுமாற்றத்தையேனும் ஏற்றபடுத்த உதவிய மனிதர். மிக மிக எளிமையானவர்.
அவரின் சுயதொழில் முயற்சிக்கு நோர்வே நண்பர் ஒருவர் உதவியிருந்தார்.

அவரது மகள் O/L பரீட்சையில் 8A, 1C (அதிசிறப்புச் சித்தி) பெற்றிருக்கிறாள் என்பதே அந்த உரையாடலின் சாரம். மனிதரின் குரலிலிலும், வார்த்தைகளிலும் இருந்த அன்பில் உருகிப்போனேன்.

வாழ்வினை அழகாக்குவது பணமும், புகழும், சொத்துக்களுமல்ல. மாறாக இப்படியான சின்னஞ்சிறு சம்பவங்களே வாழ்விற்கு அர்த்தம் தருபவை.

வாழ்தல் அற்புதம்

1 comment:

  1. வாழ்விற்கு அர்த்தம் தருவன
    சிந்திக்கச் சிறந்த பதிவு

    ReplyDelete

பின்னூட்டங்கள்