புனிதப் பூமியில் ஒரு படு பாவி

2010 ஆனிமாதத்தில் ஒரு நாள் நடந்த கதையிது.

அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை எனது பெற்றோகளின் தாய் மண்ணாகிய யாழ்ப்பாணத்திற்கும் எனக்கும் பெரியதொரு தொடர்புமில்லை, பந்தமுமில்லை, விடுமுறைக்கு போய் வரும் இடம் என்பதைத் தவிர.

பால்யத்தின் நேசத்தினாலாலும், மண்ணின் வாசத்தினாலும் என்னை வளர்த்து ஆளாக்கிய பூமியே புனிதப் பூமியாகியிருக்கிறது எனக்கு.  ஆம், மட்டக்களப்பு மண் எனக்கு புனிதப் பூமி.
.
ஏறத்தாள 25 ஆண்டுகளின் பின் மீண்டிருக்கிறேன் எனது புனிதப் புமிக்கு, இன்று. இடையில் ஒரு தடவை 8 மணித்தியால விசிட் அடித்திருந்தேன் 6 வருடங்களுக்கு முன். அது ஒரு கனவு போலானது. இம்முறை 5 நாட்கள் தங்கியிருந்து சுவைத்துப் போக நினைத்திருக்கிறேன். தோழமைகளின் சந்திப்புக்கள் நிறையவே நடக்கலாம்.

நான் இன்று காலை யாழ்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை மட்டக்களப்பை வந்தடையும் வரை கண்டதையும், இரசித்ததையும், அனுபவித்ததையும் எழுதுவதாகவே யோசித்திருக்கிறேன். இன்று.
தந்தாயாரின் மூத்த சகோதரியாரை யாழ்ப்பாணம் சென்று பார்த்து விட்டு இன்று காலை மட்டக்களப்பிற்கு புறப்பட்ட போது ஆரம்பிக்கிறது 100:100 வீதமான உண்மையான இந்தக் கதை.

...............

நேரம் 5.30 காலை..டேய் மருமகனே எழும்புடா நேரமாகுது என்ற 88 வயது மாமியின் குரலில் விடிந்தது நாள். எழும்பி எல்லாம் முடித்து நேரம் 6.30 ஆன போது போது வந்து சேர்ந்தான் பால்ய சினேகம் (இவனும் மட்டக்களப்பில் தான் படித்தவன்).

இனி எப்ப பார்ப்பனோ என்னும் வார்த்தைகளுடன் முத்தமிட்டு அனுப்பினார் மாமி. வரும் வழியில் மச்சாள் வீட்டில் குழல் புட்டும் முட்டைப் பொரியலும் உட்தள்ளி, மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்த போது நேரம் ஏழு.

நட்பு யாழ்ப்பாணத்தை ஒரு சுற்றுலாபயணிக்கு காட்டுவது போல் காட்டிக் கொண்டு வந்தான். காலையின் சுறுசுறுப்பு தெரிந்தது கடந்து போன மனிதர்களிலும் அவர் மனங்களிலும். மனோகரா தியட்டர் கடந்த போது பழைய ஞாபகங்கள் வந்து போயின.

இராணுவத்தினர் எங்கும் புற்றீசல் மாதிரி நின்றிருந்தாலும் எவருக்கும் எதுவும் செய்யவில்லை. துப்பாக்கிகள் மௌனித்திருக்கின்றனவோ.. இங்கும்? அவர்கள் முகங்களிலும் ஒரு ஆறுதல் தெரிவதாகவே பட்டது எனக்கு. புன்னகைத்தபடி கடந்து போனார்கள் சிலர்.

பஸ்ஸ்டான்ட்க்கு வந்து சேர்ந்தோம்.வவுனியா - மட்டப்பளப்பு ஊடாக காத்தான்குடி, என்று போட்டிருந்த பஸ்இல் ட்ரைவருக்கு பின்னால் ஒரு சீட் தள்ளி யன்னலோம் பிடித்து உட்கார்ந்தேன். நட்பு சனி மாலை மட்டக்களப்பில் சந்திப்போம் என்று கூறி விடைபெற மனமோ சுற்றாடலை கவனிக்கத் தொடங்கியது.

பஸ் முன் கண்ணாடியில் "ஓம்" என்பதை புதிய விதத்தில் எழுதுவதாக நினைத்து "ம்"மன்னாவின் வளைவு முடியும் இடத்தை தேவைக்கு அதிகமாகவே நீட்டி கடைசியில் அதை வளைத்தும் விட்டிருந்ததால் அந்த "ம்" பார்வைக்கு "ழ்" போல தெரிந்து "ஓம்" என்பதின் அர்த்தத்தை தூசணம் போல் காட்டிக் கொண்டிருந்தது. சில வேளை ஓம் என்றதுக்குள் எல்லாமே அடக்கம் என்பதை குறிப்பிடத்தான் அப்படி எழுதியிருந்தார்களோ? இந்தளவுக்காவது தமிழைக் கற்றிருக்கிறார்களே என்று சற்று பெருமையாய்த் தான் இருந்தது. அது சிங்களவருக்கு சொந்தமான பஸ்.

பஸ்ஸ்டான்டில் சொகுசு பஸ் கொழும்பில் இருந்து வந்து நின்றது. ஒரு நடுவயதான பெண் அழகாய் பல நகை உடுத்தி, நாகரீகம் தெரிந்தவர் போல (சர்வ நிட்டசயமாய் வெளிநாடு தான்) இறங்கிமுடிய முதல் பலர் அவரை நெருங்கி அக்கா ஓட்டோ வேணுமா என்றனர்.. அவர் அதைக்கவனிக்காமல் தொலைபேசியை காதில் வைத்த 10 நிமிடத்தி;ல் ஒரு ஓட்டோ முன்பக்கத்தில் வேப்பமிலை கட்டியபடி வந்து நின்றது.. என்ன பிள்ளை மெலிஞ்சிட்டாய் என்றவாறு வந்தார் ஒரு தாய் (எனக்கு அந்தத்தாயிடம் உது மெலிவோ ஆ? என்று கேட்க வேணும் போலிருந்தது) ஏன் நம்மவர்கள் சும்மாவெல்லாம் பொய் சொல்கிறார்கள்?
பஸ்ஸில் வந்த சாமான்களில் முக்கால்வாசி அவருடையதாயிருந்தது. ஒட்டோ நிரம்ப அடுத்த ஓட்டோ பிடித்து நிரப்பினாhகள் மிச்சத்தை. நானோ இவ்வளவு பாரத்தையும் எப்படி விமானத்தில் அதுவும் ஒரு டிக்கட்இல் விட்டார்கள் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது அந்த அக்காவும், அம்மாவும் 2 ஓட்டோக்களும் மறைந்து போயின.

வைரவர் கோயிலுக்கு முன்னால் கனக்க நல்ல நாய்களும், சில சொறி நாய்களும், ஒரு நொண்டி நாயும் தங்களின் "நாய்" வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தன. வாழ்வு தன் வாழ்வையும் நாய்களின் வடிவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நேரம் 7.30 ஒரு தம்பி வந்து அய்யா! எங்க போறீங்க என்றார்.. மட்டக்களப்பு என்றதும் மறுபேச்சின்றி 550 ரூபாக்கு டிக்கட் தந்து, தனது பிட்டத்தை அடுத்த சீட் ஹான்டிலில் முண்டு கொடுத்து அடுத்தவருக்கு டிக்கட் எழுதத் தொடங்கினார்.

ட்ரைவர் வந்தார். ஸ்ட்டாட் பண்ணி 4 தரம் தேவையில்லாமல் அக்சிலேட்டரின் அடி மட்டும் அமத்திப் பார்த்தார். பஸ் அசையவில்லை, ஆனால் உயிர் போற மாதிரி கதறியது. பின்னால் வாழைக்குலை இருந்தால் பழுத்திருக்கும்.. அப்படிப் புகைத்தது.

வைரவர் கோயில் தாண்டும் போது வைரவர் கோயில் மணியடித்தது. அதனர்த்தம் "பாவியே  போய் வா" என்பதாயிருக்குமோ?

அப்போது ட்ரைவர்தம்பி பஸ்ஐ மடக்கி வெட்டி, வீதியில் ஏற்றி ஈவு இரக்கமில்லாத வேகத்தில் ஓடினார். எனக்கு பயமாயிருந்தது. ஆனால் அதை அவர் கவனிப்பதாயில்லை.

எனது மனம் மனோவேகத்தில் மட்டக்களப்பை நோக்கி நகர ஆரம்பிக்க ட்ரைவர் தம்பியோ.. அண்ணண் உங்கட மனதை விட நம்ப பஸ் வேகமாய் போகும் என்று காட்ட முயற்சிப்பது போலிருந்தது அவர் காட்டிய வேகம்.

சூரியன் எப் எம் ரேடியோ போட்டனர். அதில் வந்த ஒரு விளம்பரம் எனது கவனத்தை ஈர்த்தது.. அது இப்படி இருந்தது. "அவுஸ்திரேலிய அரசு இலங்கையருக்கு புகலிட அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும், கப்பலில் அவுஸ்திரேலியா போய் பணத்தை விரயமாக்காதீர்கள் என்றும், அப் பயணம் ஆபத்துக்கள் பல கொண்டது என்றும்"
இந்த விளம்பரத்தை யார் ஸ்பொன்சர் பண்ணியிருப்பார்கள்?

திடீர் என ஒரு பஸ் எம்மை முந்திப் போகிறது.. ட்ரைவர் தனது பரம்பரைமானம் போய்விட்டது போல நினைத்தாரோ என்னவோ கலைக்கிறார், கலைக்கிறார்.. பயங்கரமாய் கலைத்து அதை எட்டிப்பிடித்து முந்திய போது ஒரு விதமாய் ஹோன் அடித்தார். (நக்கலாயிருக்குமோ?),தம்பிமார் இருவரும் ட்ரைவர் அண்ணனை பாராட்டிக்கொண்டிருந்தனர். எனது உயிர் திரும்பக் கிடைத்த சந்தோசத்தில் இருந்தேன் நான்.

வழி எங்கும் இராணுவ முகாம்கள் தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன. மட்டக்களப்புக்கு போய்ச் சேரும் வரை கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான ராணுவ முகாம்களைக் கண்டிருப்பேன். ஆனால் கெடுபிடிகள் இருக்கவில்லை, இருப்பினும் மனதை நெருடியுது ரானுவத்தினரின் எண்ணிக்கை. சமாதானம் இன்னும் வரவில்லை என்பதையறிய அதை விட சான்று எனக்குத் தேவையாய் இருக்கவில்லை.

பச்சையில் வெள்ளையாய் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பரகையில் முகமாலை என்றிருந்தது. மனதில் "முகமாலை முன்னரங்கு" என்றும் சொற்பதம் ஞாபகத்தில் வந்து போனது.
நான் போரின் அகோரம் உணர்ந்தது இங்கு தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் "நின்ற பனையை" விட "முறிந்த பனைகள்" அதிகமாயிருந்தன. எறிகணைகளின் அகோரப்பரிமாற்றத்தின் விளைவு அது என்று புரிய அதிக நேரமெடுக்கவில்லை. அத்தோடு முல்லைத்தீவை பார்க்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டேன்.

முகமாலையில் ஒரு இடத்தில், வீதியோரமாக ராணுவத்தினர் எறிகளை கோதுகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். மலைபோலிருந்தன கந்தகத்தை கக்கி ஓய்ந்த அந்த செப்புக் குடுக்கைகள். (செப்பின்விலை அதிகம் என்பதை அறிவீரா?... அட அட போரினால் கனிவழங்கள் எமது பூமியில்..) போரினால் நாம் பெற்ற நன்மை இது தானோ?

தம்பீ முறிகண்டியில நிப்பாட்டுவாங்களோ என்றார், அருகில் இருந்த பெரியவர். அருகிலிருந்தவர் ஒருவர் சிலவேளை என்றார். பெரிசு கடுப்பாகிவிட்டார்.
என்ன சில வேளையோ? என்றார் குரலை உயர்த்தி.
அவர் அர்ச்சனை போட வேண்டுமாம் முறிகண்டிப் பிள்ளையாருக்கு.. கண் ஒப்பரேசணுக்கு போறாராம் என்றார்.
கூல் பெரிசு.. கூல் என்று சொல்ல நினைத்தேன்.. அவரின் சினம் என்னையடக்கியது.

முறிகண்டியில் நிப்பாட்டியவுடன் ஓடிப்போய் அர்ச்சனைத் தட்டு வாங்கி, தேங்காய் உடைத்து, பெரிதாய் திருநீறு பூசி வந்தமர்ந்தார் பெரியவர்.

வெளியில் சிவப்பு டீசேட் போட்ட இளைஞர் குழு ஒன்று என் கவனத்தை ஈர்ந்தது. இறங்கிப் போய் பார்த்தேன் அவர்கள் மேலங்கியில் டீ. டீ. ஜி என்றும் டனிஸ் டீமைனிங் (நிலக்கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள்) குரூப் என்றும் எழுதியிருந்தது.

முறிகண்டி கச்சானில் மெய் மறந்திருந்த ஒரு  தம்பிடம் மெதுவாய் கதைகுடுத்தேன்.முழங்காவிலில் வேலை செய்கிறார்களாம்.. அள்ள அள்ள குறையாமல் வருகிறதாம் நிலக்கண்ணி வெடிகள்.

வெடி விளைந்த புமியல்லவா? அது தான் விளைச்சல் பலமாயிருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன். தன்னுயிரை எந்தேரமும் இழக்கக்கூடய தொழிலைச் செய்யும் இவர்களும் ”அவர்களை” களைப் போல் புனிதர்கள் தான்.

வழியோரத்தில் பல இடங்களில் மிதி வெடிக்கான எச்சரிக்கை போடப்பட்டிருந்தது. அதனருகிலும் ராணுவ காவலரண்கள் இருந்தன. பல கிலோமீற்றர் நீளத்துக்கு இந்த மிதிவெடி வயல்கள் நீண்டிருந்தன... விதைப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது. அறுவடையை நினைத்தால் பயமாயிருந்தது.

தவிர்க்கமுடியாத காரணத்தால் பஸ் ஒரு  உள்ளூர்ப் பாதையால் சென்றுகொண்டிருந்தது
"மகா கண்தரவ" என்னும் குளத்தினருகால் போய்க் கொண்டிருந்தோம். வாய்க்கால்களில் நீர் ஓடிக்கொண்டிருக்க சிறுசுகள் நீந்திக் களித்தன.
திடீர் என ஒரு ஆல மரத்தின் கீழ் முருகனின் பிரதர், பிள்ளையார் தனிமையில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றியிருந்த இடம் சுத்தமாயிருந்தது. நம்ம பிள்ளையார் இங்கு என்ன செய்கிறார் என்று போசித்தேன். சமாதானம் வெளிநாட்டு கோயில்களின் இம்சை தாங்காமல் சிங்களவர்களிடம் asyl அடித்திருப்பாரோ?
கண்டி வீதியில் ஓடிக் கொண்டிருந்தது பஸ்

வீதியோர குளத்தில் குளிக்கும் பெண்
மாட்டை இழுத்துப் போகும் கிழவன்
வீதியோரத்தில் மூத்திரம் பெய்யும் சிறுவன்
கடந்து போகும் பாடசாலைச் சிறுமியர்
குந்திருந்து அலட்டும் இளசுகளும் பழசுகளும்
மரக்கறிகள் விற்கும் பெண்கள்
இப்படியாய் கடந்து போய்க் கொண்டிருந்தது பொழுதும் பாதையும்.
பாதையின் நடுவில் ஒரு கோடு போட்டு இரண்டாய் பிரித்திருந்தனர். டரைவர் தம்பீ அந்தக் கோடுகளின் இடது பக்கத்தில் பஸ்ஐ ஓட்டிக் கொண்டிருந்தார்.
ஹபரனை வந்தது. கண்மட்டும் தெரியும் உடையணிந்த இரு பெண்கள் கடந்து போயினர்.
சூரியன் எப். எம் " விடிய விடிய இரவு சூரியன்" என்று ஏதோ விளம்பரம் பண்ணிணார்கள். இவர்களால் ஏனோ மெதுவாய் பேசமுடியாமல் இருக்கிறது. அவசர அவசரமாய் பேசி ஓடுகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக எனது வாழ்க்கை அதிகளவில் பஸ்ஸில் கழிந்திருக்கிறது. இதில் நான் கண்டு கொண்டதென்னவென்றால் ட்ரைவர் தம்பிமார் காதல் தோல்விப் பாடல்களையே கேட்க விரும்புகிறார்கள் என்பது தான்.  காரணங்கள் ஏதும் இருக்குமோ?

பஸ் ஒரு மயானத்தை மெதுவாய் தாண்டிக் கொண்டிருக்கும் போது அந்த மயானத்தில் இருந்த ஒரு சமாதி என் கவனத்தை ஈர்த்தது. இலங்கையின் வரைபட வடிவில் அமைந்திருந்தது அது. அதன் நடுவில் துப்பாக்கியுடன், ராணுவச்சீருடையில் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கும் படம் இருந்தது. இதுவும் பாழாய்ப் போன யுத்தத்தின் எச்சம். ஒரு மகன், சகோதரன், காதலன், தந்தை காற்றில் கரைந்திருக்கிறார் இங்கும்... இது மாதிரி எங்கள் பகுதியிலும் பலர் இருக்கிறார்கள், சமாதியே இல்லாமல்.

"விலங்குகள் கவனம்" என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார்கள்.படம் ஏதும் போடப்பட்டிருக்கவில்லை. இதை எழுதியவர் ஒரு குசும்புக்காரராகத் தான் இருக்க வேண்டும்... இது எந்த விலங்குகளைக் குறிக்கிறது? மனித உருவிலுள்ள விலங்குகளையா?

பஸ் பொலனநறுவை, மன்னம்பிட்டி தாண்டி வெலிக்கந்தையை அண்மித்து புகையிரதப் பாதைக்கு சமாந்தரமாக போய்க்கொண்டிருந்த போது "ஊத்துச்சேனை முத்து மாரியம்மன்" திருவிழா நடந்து கொண்டிருப்பதாக விளம்பரம் அறிவித்துக் கொண்டிருந்தது. மனதில் வந்து போனது பால்யத்தில் திருவிழாக் காலங்களில் காட்டி கூத்தும், சேட்டைகளும். அப்பப்பா.. ஈரலிப்பான பருவம் அது. அடித்த லூட்டி கொஞ்சமா  நஞ்சமா?

புனானை புகையிரத நிலையத்தை கடந்து கொண்டிருந்தோம். கைகாட்டி தனது கையை மேலே தூக்கி வைத்திருந்தது. கைகாட்டிகளின் மிடுக்கு அலாதியானது.. கவனித்தப்பாருங்கள் அடுத்த முறை.

கண்முன்னே கடந்து போன இராணுவ முகாமின் வாசலில் "சவால்களின் மீதான வெற்றி" என்று ஆங்கிலத்தில் பெரிதாய் எழுதிப் போட்டிருந்தார்கள்.. பாவமாய் இருந்தது. எது வெற்றி என்று தெரிந்து கொள்ளாதவர்களை நினைத்து. ஓரு இனத்தின் உணர்வுகளோடு விளையடுகிறார்கள் சிலர். வேதனை என்னவென்றால் அவர்களே சமாதானம் பற்றியும் பேசுகிறார்கள்.

அடுத்து வந்த இராணுவ முகாமின் முன்பக்கத்தில் ஒரு அழகிய மரக்குற்றி ஒன்றை வைத்து அலங்கரித்திருந்தார்கள். இன்று கடந்து வந்த முகாம்களில் இது வித்தியாசமாய் இருந்தது. ஏவுகணையில் இருந்து... சிறு துவக்கு, மற்றவரை தாக்கும் வசனங்கள் என்றிருந்த நிலைமாறி இயற்கையை துணைக்கழைத்த இந்த ராணுவமுகாம் மற்றவைகளை விட அழகாயும் இருந்தது. சற்று மனிதம் மிச்சமிருக்கிறதோ?

ஓட்டமாவடிப் பாலம்...... எனது புனிதப்பூமியின் ஆரம்ப எல்லை... மனம் பஸ்ஸை விட வேகமமாய பாலத்தைக் கடக்கிறது. அட.... இது புதுப்பாலம்.

எனது புனிதப் புமியில் நான்..  எங்கும் கிடைக்காத ஒரு ஆறுதல் குடிவருகிறது மனதுக்குள். இதையா கேடிக்கொண்டிருந்தேன் 25 வருடங்களாக?
அல் இக்பால் வித்தியாலயம் கடந்து போகிறது எனது மத்திய கல்லூரி மனதில் வந்தாடுகிறது.
சிங்கம், ராவணண் படங்களுக்கான போஸ்டர் அழியாத கோலங்கள், நினைத்தாலே இனிக்கும் படப் போஸ்டர்களை ஞாபகப்படுத்துகிறது.

மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைக்கப்படுகிறது, கல்லுக்குமியல்களும், கிறவலும், மணலும், தென்னையும், பனையும் கடந்து போகின்றன.
காற்றில் உணர்ச்சிகளின் கலவையாய் நான். நெஞ்சு விம்முகிறது, வயிற்றுக்கள் ஏதெதோ செய்தது, அடிக்கடி கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.

கிரான் என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டதும் ஒரு செங்கலடித் தேவதையிடம் (செங்கலடி என்பது ஒரு ஊர்) பெருங்காதல் கொண்ட இந்த ஊர் நண்பன் மனதில் வந்து போனான்.

சித்தாண்டியும் கடந்து போயிற்று சித்தாண்டி முருகனும், அப்பாவின் நண்பர் ”கந்தப்போடியாரும்” ஞாபகத்தில் வந்தார்கள்.  முன்பொருமுறை இதேயிடத்தை நான் கடந்த போது  கொண்று வீசப்பட்டிருந்த 12 உடலங்களும், பயம் கலந்த அந்த நாட்கள் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை ஞாபகமூட்டின.

வந்தாறுமூலையும் கடக்கிறது..எங்களின் ஆஸ்தான வாசிகசாலை இங்க தான் இருந்தது. முன்னைநாள் வந்தாறுமூலை மகாவித்தியாலயமும் இன்றைய கிழக்குப்பல்கலைக்கழகமும் கடந்து போக 1980 களின் இறுதியில் இந்த இடத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் போன பால்ய சினேகம் ”பேக்கரி பாஸ்கரன்” ஞாபகத்தில் வந்து போனான். எத்தனையை இழந்திருக்கிறோம் கொதாரிவிழுந்த போரினால்?

அடுத்தது செங்கலடி.. நமது சிற்றரசின் எல்லை ஆரம்பிக்கும் இடம். பஸ்க்கு முன்னே போகிறது எனது கண்களும் மனமும். செங்கலடிச்சந்தி கடக்கிறது. இந்த இடத்தில் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட  மிகவும் நெருங்கிய சிறுவனெருவனின் ஞாபகங்களும், பால்யத்து ஞாபகங்களும்,, ”துரோகி” என்று வீதியோரக் கம்பங்களில் தொங்கியவர்களின் நினைவும் மனம் முழுவதையும் ஒரு வித மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம் போன்ற உணர்ச்சிகளால் ஆட்கொண்டிருந்தது. பெருக்கெடுத்த கண்கள் கலங்கி பார்வையை மறைக்க, அதை துடைத்து நிமிரும் போது பஸ் ஏறாவூரை நெருங்கியிருந்தது.

ஏறாவூர் எங்கள் ராஜ்யத்தின் தலைநகர். பிள்ளையார் கோயில் புதுப்பொலிவுடன் தெரிய, அதனருகில் தெரிந்தது ஏறாவூர் காளிகோயில் திருவிழா என்னும் விளம்பரம். உடம்பு தான் பஸ்ஸில் இருந்ததே தவிர மனம் எப்போதோ இறங்கி ஓடிவிட்டிருந்தது ஏறாவூரின் புழுதி  படிந்த வீதிகளில்.
புன்னைக்குடா சந்தியை கடந்து இஸ்லாமிய சகோதரர்களின் எல்லைக்குள் போனதும் ஒலிபரப்பாளனாய் வர விரும்பி, திறமையிருந்தும் அரசியல் பலமில்லாததால் தோல்வியுற்ற அப்துல் ஹை ஞாபகத்தில் வந்தார். ஒன்றாய் வாழ்திருந்த சமுதாயங்கள் ஏற்படுத்தப்பட்ட ரணங்களை மறந்து வாழத் தொடங்கியிருப்பது போலிருந்தது. எனது பேராசையும் அது தான்

பழைய ஐஸ்கிறீம் கொம்பனி கடந்து போகிறது. சத்துருக்கொண்டான் வருகிறது. (பெயரைக் கவனித்தீர்களா? சத்துருக்....கொண்டான்)... இந்த மண்ணில் எங்கோ ஓரு இடத்தில் பெரும் எண்ணிக்கையில் புதைந்து போன என்னுறவுகள் இருக்கிறார்கள், மெளனமாய். எமது நெருங்கிய பால்ய நண்பனொருவனும் இருக்கிறான் அவர்களுடன்.  சபிக்கப்பட்ட பூமியிது. (மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்ட இடங்களில் இதுவுமொன்று)

மனது பழைய ஞாபங்களுக்குள் மூழ்கியிருக்க, தன்னாமுனை தேவாலயம், அதைத் தொடந்து வாவியோரமாய் வரும் நீண்ட பாதை, பின்பு பிள்ளையாரடிக் கோயில் என பஸ் கடந்து கொண்டிருக்கிறது. (பிள்ளையாரடியிலும் ஒரு அழகிய வெள்ளைச்சட்டைத் தேவதை இருந்தாள் 1980 களில்) வலையிறவு சந்தி சந்தி கடந்து உறணிக்கு முன் ”மட்டக்களப்பு மாநகரம் உங்களை வரவேற்கிறது” என்றிந்தது. தலைவணங்கி மரியாதையை ஏற்றுக்கொண்டேன்.

பஸ்டிப்போ, வயோதிபர்மடம், தோவாலயம் கடந்து கோட்டமுனை சந்தியில் நிற்கிறது பஸ்.

பஸ் டவுன் போவாது.. டவுன் போறவங்க இங்க இறங்கணும் என்ற குரல் கேட்டு இறங்கிக்கொண்டேன். பாவியின் கால்கள் புனிதப்பூமியில்.

நட்பூ வந்து மோட்டார்சைக்கிலில் ஏற்றிக்கொண்டான்.... கோட்டைமுனைப் பாலத்தைக் கடந்த போது உப்புக்காற்றும் முகம் தேடிவந்து ஆசீர்வதித்துப் போனது. எனது பாடசாலையும் கடந்து போகிறது. நெஞ்சு முழுவதும் பெருமிதம். கண்களில் கண்ணீர்.

வெளிநாட்டின் ரணங்கள் செப்பனிடப்பட்டு, பாவி ரட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தான், அவனது புனிதப்பூமியில்.


அன்றைய நாள் மிக மிக நல்லது.


.

5 comments:

 1. //இம்சை தாங்காமல் சிங்களவர்களிடம் asyl அடித்திருப்பாரோ?//
  இந்த மாதிரி சின்னச் சின்ன சரவெடிகள்தான் உம் எழுத்துக்களை விடாமல் தொடர வைக்கிறது :)

  ReplyDelete
 2. இடை இடையே புகைப்படங்களையும் செருகி விடுங்கள். பயணம் இனிதே தொடரட்டும்.

  ReplyDelete
 3. சுற்றுலா முடிந்து சேமமே வர என் பிரார்த்தனைகள்.
  வீசும் காற்றில்,கொஞ்சம் கொண்டு வாருங்கள். நாம் சுவாசிக்க். படங்களுடன் பதிவு வந்தால்,
  இன்னும் அழகு.மேலும் வாசிகக் காத்திருக்கிறோம்

  தொடருங்கள்.

  ReplyDelete
 4. நண்பரே வணக்கம் கதைக்கணும் போல இருக்கு
  முடிந்தால் மின்னஞ்சலிடுங்கள் தொடர்பிலக்கத்தை அழைப்பெடுத்து நானும் சந்திக்கிறேன் உங்களை. msrames@gmail.com

  ReplyDelete
 5. மிகவும் சுவாரசியமான யதார்த்தமான எழுத்துக்கள். கடந்த வாரம் தற்செயலாக கண்ணில் பட்டது. இப்போது விசரன் பக்கம் பார்க்காமல் தூங்குவதில்லை. நன்றி சஞ்சயன் அண்ணா.
  Thusiyanthan - Batticaloa

  ReplyDelete

பின்னூட்டங்கள்