உயிருள்ள கடிதங்கள்

இறுதியாய் எப்போ கடிதம் எழுதினேன் என்பதை ஞாபத்தில் கொணர முயலுகிறேன். பெருத்த சிரமமாய் இருக்கிறது. ஏறத்தாள 10 வருடங்கள் இருக்குமா? அதற்கு மேலாயும் இருக்கலாம்.

காகிதக் கடிதத்தில் அடங்கியிருக்கும் உயிர்ப்பும், அருகாமையும், நெருக்கமும், தனிமையின் இனிமையும் இருப்பும் இன்றைய உலகின் மின்னஞ்சலில் இல்லை. கடிதம் என்பது மனிதர்களுக்கிடையேயான ஒரு ஊடகமாக இருக்கலாம். ஆனால் ஒரு கடிதத்தின் பிறப்பில் இருந்து இறப்பு வரை அது மனிதர்களுக்கு கொடுத்துப் போகும் உணர்வு வெறெந்த ஊடகத்துக்கும் இருக்குமா என்பது சந்தேகமே.  கடிதம் எழுதும் போது எழும் மன எழுச்சி, நெருக்கம், பதிலுக்காய் காத்திருக்கும் தவிப்பு, எழுத்தைக் கண்டதும் கரைந்தபோகும் மனம், அதைத் தொடந்து வரும் மன அமைதி. அப்பப்பா அப்படி எத்தனை எத்தனை உணர்வுகள் கையினால் எழுதப்பட்ட கடிதங்களுக்கு இருக்கிறது.

எனக்கு கடிதத்துடன்  ஆன பரீட்சயம் மிகவும் மிகச் சிறிய வயதிலேயே கிடைத்துவிட்டது. 1972ம் ஆண்டு அம்மாவும் அப்பாவும் தொழில் புரிந்த பிபிலையில் தமிழ்பாடசாலைகள் இல்லை என்பதால்  என்னை கொழும்பிற்கு  அம்மாவின் அண்ணிடம் அனுப்பி படிக்க வைத்தார்கள். அந்நாட்களில் தொடங்கிய கடிதத்துடனான உறவு கணணியுலகம் வரும் வரையும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அம்மாவின் முத்து முத்தான எழுத்துக்களுடன் வரும் கடிதங்கள் அம்மாவை அருகிலேயே அழைத்துவரும். அக் கடிதங்களை அம்மாவே அருகில் இருந்து வாசிப்பது போலிருக்கும். கடித்தை நான் வாசித்தாலும் அம்மமாவின் குரலே காதுக்குள் கேட்கும். அம்மாவின் அணைப்பில் கிடைக்கும் அதீத மகிழ்ச்சியும், மன அமைதியும் அந்தக் கடிதங்களை வாசிக்கும் போது உணர்ந்திருக்கிறேன்.

ஒரு காகிதத்துக்கு இத்தனை சக்தியா என்று நினைக்கத் தோன்றுகிறது இன்று.
அம்மாவின் நினைப்பு வந்தால் உடனே கடிதம் எழுதுவேன். எழுதி முடியும் போது தனிமையுணர்வும், ஏக்கமும், சுயபரிதாபமும் அகன்றிருக்கும். ஒரே நாளில் இரண்டு கடிதம் எழுதிய  நாட்களும் உண்டு. 1970 களின் இறுதி வரை அம்மா நான் எழுதிய கடிதங்களை பாதுகாத்து வைத்திருந்தார். ஒரு நாள் திருட்டுத்தனமாய்  எடுத்து ஒளிந்திருந்து படித்துப் பார்த்தேன். வெட்கமாய் இருந்தது. அம்மா வாங்கோ, அம்மா வாங்கோ என்று கடிதம் முழுவதும் எழுதியிருந்தேன். அப்போ அது எவ்வளவு வலியை அம்மாவுக்கு கொடுத்திருக்கும் என்று தோன்றவில்லை, ஆனால் இன்று இரண்டு இளவரசிகளின் தகப்பனான பின் அக்கடிதத்தின் வலி நெஞ்சைப் பிழிகிறது.

அம்மா இப்போதும் கடிதம் எழுதுகிறார்.  முன்பு போன்ற அதே முத்து முத்தான எழுத்துக்கள். அம்மாவின் எழுத்துக்களுக்கு, அவரைப் போல் வயது போவதில்லை போலிருக்கிறது. அம்மாவின் எழுத்தின் அழகு எங்கள் மூவருக்கும் இல்லை. அப்பாவுடன் எனக்கு ஆகாது. எனினும் கோழிக் கிறுக்கல் போன்ற அப்பாவின் எழுத்தே எனக்கு வாய்த்திருக்கிறது. ஆகாத அப்பாவின் நினைவு அடிக்கடி வரவேண்டும் என்பதற்காகவே இப்படியாகிருக்குமோ?

அப்பா கடிதம் எழுதி நான் கண்டதில்லை. அப்பம்மாவுக்கும் அம்மா தான் எழுதுவார். அப்பா இப்போது இல்லை. அவரின் எழுத்துரு எந்த வடிவத்திலும் என்னிடமில்லை. அவரின் கடிதமொன்றை மெதுவாய் தடவிப்பார்க்க ஆசையாய் இருக்கிறது. அம்மாவிடம் அல்லது அப்பாவின் வீட்டில் இருக்கலாம்.

அம்மாவின் எழுத்தில் பல கடிதங்கள் இருக்கின்றன. இருந்து இல்லாதவர்களாகிவிட்ட  சின்னம்மா, பெரியம்மா, மாமிமார் என எல்லோரும் எழுதிய கடிதங்களை சேமித்து வைக்கவில்லையே என்பது அவர்கள் இல்லாத போது கனக்கிறது. கடிதங்கள் இருந்திருப்பின் அவை அவர்களின் ஒரு வித இருப்பை சுமந்து கொண்டிருக்குமல்லவா?

நான் எழுதிய காதல் கடிதங்களுக்கு எண்ணிக்கையி்ல்லை. சில வருடங்களுக்கு முன் ஓரு பெட்டியை கிண்டியபோது ஒரு கட்டுக் கடிதங்கள் இருந்தன.  ஒளிந்திருந்து வாசித்தேன். வெட்கம் பிடுங்கித் தின்றது. எத்தனை அபத்தமான எழுத்துக்களை எழுதித் தீர்த்திருக்கிறேன். அந்த வயதின் சகல கோளாறுகளும், கடிதங்களில்  தங்கள் பாதிப்ப‌பை காட்டத் தவறவில்லை. கற்பனைக்கும், யதார்த்தத்துக்கும் இடையில் தான் எத்தனை எத்தனை தூரம்.
ஒரு சில காதல் கடிதங்களும்  எழுதிக் கொடுத்திருக்கிறேன்.   எனது தூரதிஸ்டமோ, அவர்களின் அதிஸ்டமோ அவையேதும் ”சக்சஸ்” ஆகவில்லை. ஆண்டவன் இன்னும் இருக்கிறார்.

நான் நோர்வே  வந்திருந்த காலங்களில்  ஒரு மிகச் சிறிய கிராமத்தில் வாழ்ந்திருந்தேன்.  வெளியுலகுடன்  தொடர்பே எனக்கிருக்கவில்லை. அந் நாட்களில் எனது பாடாசலை நண்பர் ஒருவர் தான் வெளிநாடு வர விரும்புவதாயும், அதற்குத் தேவையான தகவல்களை தருமாறும் கேட்டு கடிதம் போட்டிருந்தார். எனக்கு நோர்வேக்குள்ளேயே பயணப்பட தெரிந்திருக்காத காலம் அது. தவிர ஏஜன்ட் சம்பந்தமாக தெளிந்த அறிவிருந்த நண்பன் ஒருவர் இன்னொரு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்திருந்தார். அவர் அவனுக்கும் நண்பர். எனவே ”மச்சான், நீ ...  இன்னாரிடம் கேள் எனக்கு இது பற்றி தெரியாது” என்று உண்மையை எழுதிய போது தொலைந்து போனது ஒரு நட்பு. 20 வருடங்களின் பின்பும் என் சமநிலையை குழப்புகிறது  நண்பனின் கடிதத்துக்கு நான் எழுதிய பதிலால் கிடைத்த பரிசு.

எனக்கு 1993ம் ஆண்டளவில் ஒரு மிக மிக நெருங்கிய நோர்வேஜிய  குடும்பத்தினரிடம் இருந்து நத்தார் வாழ்த்துடன், ஒரு கடிதம் வந்திருந்தது. அக் கடிதம் கணணியில் எழுதப்பட்டிருக்க, கடிதத்தின் கீழ் அவர்கள் அனைவரும் நீல நிற பேனையால் கையெழுத்திட்டிருந்தார்கள். இன்றும், அன்று நான் அடைந்த ஏமாற்றம் நினைவில் நிற்கிறது.  அந்த கணணியில் எழுதப்பட்ட பகுதியை எனக்குப் படிக்கப் பிடிக்கவில்லை, என்னை அவர்கள் ஏதோ ஒதுக்கிவிட்டது போலிருந்தது. மனமெல்லாம் ஒரு வித வலியின் பிசுபிசுப்பை உணர்ந்தேன். கையெழுத்துக்கள் மட்டுமே உயிருடன் இருந்தன, அந்தக் கடிதத்தில். ஏனைய எழுத்துக்கள்  உயிரற்ற சடலங்களாயே தெரிந்தன, எனக்கு. பின்பொருநாள் அக் கடித்தை கிழித்தெறிந்து விட்டேன். ஆனால் இன்று அப்படியான கடிதங்கள் வருமெனின் அவற்றை புரிந்து‌ கொள்ளும் மனப்பக்குவமும் வந்திருக்கிறது.  ஆனாலும் கணணிக் கடிதங்களில் கையெழுத்தக்கடிதங்களில் உள்ள அன்னியோன்யம் கிடைப்பதில்லை.

சில நண்பர்களுக்கு கடிதங்களை எழுதவும், வாசிக்கவும் உதவும் சந்தா்ப்பங்களும் வந்து போயிருக்கின்றன. கடிதங்களை வாசிப்பது இலகு. ஆனால் எழுதுவது என்பது மிகக் கடினமானது. அவரின் உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டுவர வேண்டும். அதே வேளை அது எனது மொழியில் அல்லாமல் அவர்களின் மொழியாகவும் இருக்க வேண்டும். பலரின் வாழ்வின் சிக்கல்களையும் எழுதும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாகவும், சில வேளைகளில் எனோ மனதுக்கு ஆறுதலாகவும் இருந்திருக்கிறது.

அண்மையில் எனக்கு, எனது இளையமகள் ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அது தான் என் வாழ்வில் இறுதிக்காலங்களில் வந்த மிகவும் விலையான கடிதம். இப்படி இருந்தது அதில்:  (மொழிபெயர்த்திருக்கிறேன்)

அன்பு அப்பா!
எனது பிறந்தநாளுக்கு எனக்கு இவை அவசியம் தேவை!
  • மொபைல் டெலிபோன் (டச் போன்) அக்காடது மாதிரி
  • கரடிப்பொம்மைக்கு உடுப்புகள், கண்ணாடி, சப்பாத்து
  • உடுப்புக்கள்
  • Accessories கடையில் தோடு மற்றும் சோடனைப் பொருட்கள்
  • சொக்லேட்
  • நாய்க்குட்டி
  • மடிக்கணணி
  • டிஸ்னி லான்ட் பயணம் 
சிலதை மட்டும் நிறைவேற்றி சிலவற்றிற்கு கடன் சொல்லியிருக்கிறேன்.

இப்படி ஒரு கடிதத்தை எனது தந்தையாருக்கு நான் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது, ஆனால் எழுதியவர் சேதப்பட்டிருப்பார் அவ்வளவே.

கடிதங்கள் இப்படி பல வகைகளாகவும், பல விதமான அனுபவங்களை தருவனவாகவும் இருந்திருக்கிறது எனக்கு. இனி எப்போ  கடிதம் எழுதுவேன் என யோசிக்கிறேன். இனி மேல் கடிதம் எழுதும் அவசியம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் எழுதும் நாள் வருமாயின் மிக மகிழ்ச்சியே.


கையெழுத்துக் கடிதங்களுக்கு இது சமர்ப்பணம்.



.

4 comments:

  1. உங்களுக்கு ஆக சொல்லவில்லை அண்ணா . உண்மையிலேயே அருமையான பதிவு. கடிதத்தில் இருக்கும் சுகம் மின்னஞ்சல்களில் இல்லை என்பது மிக உண்மை

    ReplyDelete
  2. இன்றும் கடிதம் எழுத ஆசையே ஆனால் கால தாமதம், செலவு கருதும் போது சுகம் என்பதை விட சுமயாக தான் படுகின்றது. காலத்தின் மாற்றம் கருதி மின் அஞ்சலை அழகாக எழுத நாம் முன் வர வேண்டும். சமூக மாற்றம் கூட கடித எழுத்தின் சுவாரசியம் இன்மைக்கு காரணமாக இருக்கலாம்! சஞ்சயன் அண்ணா உங்கள் முகவரி அனுப்புங்கோ ஒரு கடிதம் எழுதி அனுப்புகின்றேன்!!!!

    ReplyDelete
  3. என் தந்தைக்கு வாழ்கையில் ஒரே ஒரு கடிதம் தான் எழுதினேன் அது அவருக்கு என்னை பற்றிய புரிதலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அப்போது
    அவர் அருகில் இருந்தவர் சொல்ல கேட்டபோது மனது நிறைந்துபோனது...

    ReplyDelete
  4. பேனா மையினால் பேப்பர் இல் எழுதும் கடிதத்துக்கு உயிர்ப்பு உண்டு. நிஜமாய் பேசுவதுபோல் இருக்கும். நிறைய எழுதியிருக்கிறேன். என்னவனுக்கும் மற்றவர்களுக்கும். என் தமிழ் வளமாகியது காதலால் என்னவனுக்கு எழுதிய கடித்தால்.சினிமா பாடல்களும் தவறாமல் இருக்கும் அது ஒரு சுகமான் காலம்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்