மசிர்க் கதை கதைக்கிறேன்

ஏறத்தாள 35 வருடங்களுக்கு முன் நாம் பிபிலையில் வாழ்ந்திருந்தோம். பிபிலையில் தமிழ்ப்பாடசாலைகள் இல்லை என்பதால் இந்த அறிவாளியை மட்டக்களப்பில் படிக்க வைத்தார்கள் எனது பெற்றோர். இரண்டு - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீடு வருவேன். மகிழ்ச்சியின் உச்சியிலிருந்து கொண்டாடுவேன் அந்நாட்களை.

ஆனால் எனது மகிழ்ச்சி, தனக்கு மகிழ்ச்சியாய் இல்லை என்பது போலிருக்கும் எனது அப்பாவின் ஒரு நடவடிக்கை. வீடு வந்து இரு நாட்களில் பெரியதம்பி உனக்கு தலைமயிர் வெட்ட வேண்டும் என்பார். இரண்டு மாதமாய் ஆசையாசையாய் வளர்ந்திருந்த அழகிய கூந்தலைக் கண்டால் மட்டும் அவருக்கு சுர்ர்ர்ர்ர் என்று  கோபம் வரும். என்னது ”ரவுடிகள் மாதிரி தலை” என்பார். நான் தலை குனிந்திருப்பேன். ” நாளைக்கு ” பண்டாவின்ட சலூனுக்கு போய் அப்பா சொன்னவர் என்று சொல், வெட்டிவிடுவார்” என்பார். நான் விரும்பாமலே எனது தலையாடும்.

மேலே கூறு முன்..எனது தந்தையைப் பற்றி சிறு அறிமுகம். தொழில் போலீஸ், தலையில் மழைக்கு முளைத்த காளான்கள் மாதிரி ஆங்காங்கே சில கறுப்பு நிற முடிகளும், வெள்ளை முடிகளும்மட்டுமே  அங்குண்டு. எப்பவுமே போலீஸ் கிராப் வெட்டியிருப்பார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல் தலையில் இருக்கும் அந்த சில முடிகளுக்கும் மிகவும் விசேடமாகத் தயாரித்த ஒரு வித வாசனையான எண்ணையைத் தடவி, கிழமைக்கு ஒரு தடவை பண்டாவின் சலூனில் பண்டாவை நுனிப்புல் மேய விடுவார். பண்டாவும் ஒரு போலீஸ்காரனுடன் எதையும் எதிர்த்துக் கதைப்பது தற்கொலைக்குச் சமம் என்பதால் ”மாத்தயா லஸ்ஸனாய் னே”  (அய்யா அழகாய் இருக்கிறாரே”) என்று ஒரு பொய்யை மட்டும் சொல்லுவார்.  புகழ்ச்சிக்கு போலீஸ்காரன் மட்டும் விதிவிலக்கா என்ன... அவரும் அதை ஆமோதிப்பதாய் தலையாட்டுவார்.

இந்த பண்டாவிடம் அப்பாவிற்று பல சலுகைகள் கிடைத்தன. அப்பாவாலும் அவருக்கு நிட்சயமாய் சில சலுகைகள் கிடைத்திருக்கும். பண்டாவினால் அப்பாவுக்கு கிடைக்கும் முக்கிய சலுகை அப்பா அழைக்கும் போது வீடு வந்து அவரின் நேரடி மேற்பார்வையின் கீழ் எமக்கு ”மயிர்ச்சேதம்” செய்வது. இதை அப்பா மிகவும் ரசித்தார். கையிலே கனகலிங்கம் சுருட்டோடு சாரணை சற்று உயர்த்தி பிடித்தபடி பூமியை சுற்றும் சூரியன் போல எனது தலையை சுற்றி சுற்றி வருவார். அந்நேரங்களில் பண்டாவின் கண்களும் அப்பாவின் கண்களும் ஏதோ பேசிக் கொள்ளும். அதற்கப்புறமாய் பண்டா ஒரு இயந்திரத்தை கையில் எடுத்து அதன் இரு சிறிய பிடிகளையும் அமத்தியபடியே எனது பின்னந்தலையில் அவ்வியந்திரத்தை அழுத்தி அழுத்தி எனது இரண்டு மாத மகிழ்ச்சியை வெட்டிப் போடுவார். நீண்டு அழகாய் உச்சி பிரித்து  நெற்றிக்கு முன்னால் அழகாக மடிந்திருந்த மயிர்கள் அழிக்கப்பட்ட காடுகள்‌ போன்று நிலத்தில் சரிந்திருக்கும். அப்பாவோ ”தவ டிகக்” ”தவ டிகக்” (இன்னும் இன்னும்) என்று எனது கண்ணீரைப் பொருட்படுத்தாது கட்டளைியட்டபடியே நடந்து கொண்டிருப்பார்.

எல்லாம் முடிந்து முழுகி  மங்கிப்போயிருக்கும் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது அவ்விடத்திலேயே உயிர் பிரிந்தால் என்ன என்று தோன்றும். எனக்கே என்னை பிடிக்காதிருக்கும். எது  எப்படியோ, பெரிசை எதிர்க்கும் துணிவு என்னிடம் என்றும் இருந்ததில்லை. எனவே அவரிஸ்டப்படி அவர் எனது தலையில் விளையாடிக் கொண்டிருந்தார் எனது பதின்பக்காலங்கள் வரை.

அப்பாவின் மேற்பார்வையில் பண்டா என் தலையில் கத்தி வைத்தால் ஒரு சென்டிமீற்றர் உயரத்திற்கு ஒரு மில்லிமீற்றர் உயரம் கூட உயரமில்லாமல் அப்பாவுக்கு பிடித்த விதத்தில், அப்பாவுக்கு அழகாக வெட்டிவிடுவார். எனக்கு பிடிக்கிறதா, அழகாக இருக்கிறதா என்று அவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை.

ஏறத்தாள 15 வயது வரை  என் தலையின் சுதந்திரத்தை எனது தந்தையார் கைப்பற்றியிருந்தார். நண்பர்கள் ”சக்கி” கட் வைத்து காதை மூடி தலைமயிர் வளர்க்கும் போது எனக்கு மட்டும் அப்பா  ஒரு சென்டிமீற்றர் முடி வைக்க அனுமதித்தார். அப்பாவுடன் எனக்கு ”ஆகாமல்” போனதற்கு இதுவும் ஒரு கா‌ரணமாயிருக்கலாம்.

அப்பா நான் 15 வயதாய் இருந்த போது இறந்து போனார். தலைக்கு மட்டுமல்ல எனது பதின்ம வாழ்வுக்கே சுதந்திரம் கிடைத்தது. அப்பாவின் இறுதிக்கிரிகைகளுக்கு மொட்டை போடச் சொன்னார்கள். மொட்டை போட்டால் சுடலைக்கு வரமாட்டேன் என்ற போது பெரிசுகள் ”deal" க்கு வந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை எனது தலை சுதந்திரக்காற்றை சுவாசித்திருக்கிறது.

அப்பா இறந்த பின் என்னிஸ்டத்துக்கு தலைமயிர் வளர்த்தேன். பதின்மக் காலங்களின் இறுதியில் நெற்றி சற்று பெரிதாகியது. உச்சியை சற்று மே‌ல் நோக்கி நகர்த்தி பெரிதாகிய நெற்றியை மறைத்துக் கொண்டேன். இப்படியே  மேலேறிய உச்சி ஒரு வருடத்தில் நடுத்தலைக்கு வந்து விட்டது. நெற்றி மிகவும் பெரிய நெற்றியாக மாறியிருந்தது.

எத்தனையோ எண்ணைகள் (மண்ணெண்ணை தவிர்த்து), மருந்துச் சாறுகள், களிம்புகள் என்று  எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் நோர்வேக்கு வந்து  ஓரிரு வருடங்களில் ஏறத்தாள 23 வயதில் 75வீத மொட்டை 25 வீத மயிரினால் முட முயற்சித்துக் கொண்டிருந்தேன். காற்றடிக்கும் போது வெளில் செல்வதை தவிர்க்க வேண்டியதாயிற்று. காண்பவர்கள் எல்லோரும் இதைப்பற்றியே பேசினார்கள். என்னிடம் மனவருத்தப்பட்டார்கள். உள்ளுக்குள் சிரித்திரிப்பார்கள்.. (தமிழேன்டா).

எனக்கும் என்ன செய்வது என்று தெரியாதிருந்த போது கண்ணில் பட்டது அந்த விளம்பரம். முடியே அற்றவர் ஒருவர் கையில் இரு சிறு போத்தல் வைத்திருந்தார். அருகில் இருந்த படத்தில் வனாந்தரம் போன்று அடர்ந்து படர்ந்திருந்தது அவர் முடி. 300 குறோணர்கள் செலுத்தி தபாலில் வரவளைத்துக் கொண்டேன். தபாற் செலவாக 50 குறோணர்களும் செலுத்தினேன். போத்தில் அளவு எனது  சுண்டுவிரலை விட சிறியதாய் இருந்தது. அதற்கென்று செய்கைமுறை விளக்கம் படங்களுடன் அனுப்பியீருந்தனர்.

உச்சம் தயைில் 5 துளிகள் இடவும்  -  நான் 5 துளிகள் இட்டேன்
கையினால் மருந்தை தலையில் தடவி பின்பு தலையை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும் - அதையும் செய்தேன்
24 மணிநேரத்தின் பின்பு முழுகவும் - இதையும் செய்தேன்

ஒரு நாள், வாரமாகியது தினமும் கண்ணாடியின் முன் நின்று எனது தலையில் எங்காவது ஏதாவது முளைக்கிறதா என்ற பார்ப்பேன். ஏமாற்றமாய் இருக்கும். நாளை என்று மனதை தேற்றிக் கொள்வேன். இப்படியே நாட்கள், வாரங்களாகி, மாதங்களாகின. இதற்கிடையே மேலும் இரு தடவைகள் மருந்தும் வந்து சேர்ந்தது. இப்போ காலையும் மாலையும் நீர் ஊற்றி நிலம் கிண்டும் விவசாயி போன்று நான் தலையை மருந்திட்டு, மசாஜ் செய்யலானேன். கற்பனையில் முடி அதீததமாய் வளர்வதாய் கனவு கண்டேன்.

மாதங்கள் மூன்றாகிவிட்டன. தரிசு நிலத்தில் விதைத்தது போலிருந்தது எனது முயற்சி. டாக்டரிடம் போனேன். 300 குறோண் மருந்தைக் காட்டினேன். எனது மருந்தை பரிசோதனைக்கு அனுப்பினார். சில மருந்துகள் எழுதித் தந்தார். மீண்டும் டாக்டரிடம் சென்ற போது எனது தந்தையாரைப் பற்றி விசாரித்து அவரின் பரம்பரையலகே எனது மொட்டைக்கு காரணம் இதை தவிர்க ஏலாது என்றார். தவிர நான் சென்ற முறை டாக்டரிடம் காட்டி மருந்து உண்மையில் மருந்தல்ல என்றும் அதில் 95 வீதம் நீரும் 5 வீதம் உப்பும் இருக்கிறது என்றும். உன்னைப் போல் பலர் இம் மருந்து விற்பனையாளனினால் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் விளக்கினார்.

உப்பு நீரை தலையில் அதுவும் சொட்டு சொட்டாக 5 சொட்டு இட்டு மசாஜ் செய்து ”மயிர்” பயிர் செய்த எனது பேரறிவை நினைத்து இப்போது சிரிக்க முடிகிறது. அன்று அது வேதனையாகவே இருந்தது. தற்போதெல்லாம் மொட்டையே அழகு என்னும் கொள்கையை நான் ஆதரிக்கிறேன். அது பற்றிய சிந்தனையில்லை, மனவருத்தங்கள் இல்லை. மிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

தற்போது அப்பாவின் தலையில் ஆங்காங்கு சில மயிர்கள் இருந்து போலவே எனக்கும் இருக்கிறது.  தினமும் முழுகினால் தலை துடைக்கும் பிரச்சனையோ, தலை வாரும் பிரச்சனையே எனக்கில்லை இல்லை. ஒரு விரலால் தலையை துவட்டும் சுகமே தனி......

முன்பு அப்பாவின் இம்சையினால் தலைமுடி வெட்ட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இம்சை பண்ண எவருமில்லை. ஆனால் வெட்டுவதற்கு முடியில்லை. இருப்பினும் இரு கிழமைகளுக்கு ஒரு தடவை அப்பா ”பண்டாவை” நுனிப்புல் மேய விட்டது போன்று நானும் நுனிப்புல் வெட்டும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். தலையில் இருக்கும் மயிர் நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தபடியே இருக்கிறது. அதிகமாய் வளராமல் இருக்கும் வரை மட்டடற்ற மகிழ்ச்சி.

அண்மையில் ஒரு மொட்டை நண்பண் ” மொட்டை செக்ஸியாக” இருக்கிறது என்று எங்கோ வாசித்ததாக கூறினான். உண்மையாக இருக்கலாம்...



மொட்டையர்கள் அனைவர்க்கும் இது சமர்ப்பணம்



.

1 comment:

  1. ஒரு சக மொட்டையனின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்