தனிமையின் தனிமை


சில வருடங்களாகவே தனிமையின் கடலில் தினமும் தனிமையில் முத்துக்குளிக்கக் கிடைத்திருக்கிறது. முத்துக்கள் கிடைத்ததோ இல்லையோ தனிமை என்னும் பெரும் சமுத்திரத்தில் சில பல துடுப்புக்களை துலாவி சற்றுத் தூரம் போயிருப்பதாயே உணர்கிறேன். தனிமையை நண்பனாகக் கொண்டவர்கள் அதிஸ்டசாலிகள். உற்ற நண்பனொருவன் எப்போதும் அருகில் இருப்பது போலானது அவ்வுணர்வு.

இந்த 46 வருடங்களில் தனிமை ஒரு உற்ற நண்பனைப் போல் எனது சிறுவயது முதலிருந்து என் கூடவே வந்து கொண்டிருக்கிறது. எதுவுமே பேசாமல், எனது பேச்சை கேட்டபடியே. நாங்கள் பேசாதிருந்த காலங்களை விட பேசிக் கொண்ட காலங்களே அதிகம். எனது எத்தனையோ ரணங்களுக்கான களிம்புகளை தடவிப்போயிருக்கிறது தனிமை. நித்தமும் கொதிக்கும் ”பழி பழிக்கு” உணர்வை சில நிமிடங்களில் அடக்கும் இரகசியமும், நான் மூர்ச்சையடையும் போதெல்லாம் என்னை மூர்ச்சை தெளிவிக்கும் இரகசியமும் அதற்குத் தெரிந்திருக்கிறது.

ஆனால், கடந்து கொண்டிருக்கும் சில வாரங்களாகவே என்னை என்னால் புரிந்த கொள்ள முடியாதிருக்கின்றது. என் தனிமை பெரும் பாரமாய் மாறியிருக்கிறது. முன்பும் இப்படியான நாட்கள் வந்து போயிருக்கின்றன. ஆனால் இவை இவை போன்று நீண்டிருந்ததில்லை. இப்போதெல்லாம் வாசிப்பு நின்று போயிருக்கிறது, எழுது எழுது என்று மனம் கூச்சலிட்டாலும் எழுத முடியாதிருக்கிறது. உடலுக்கு மனம் பாரமாயிருக்கிறது.

எனது சிறிய ராஜ்யத்தினுள் ஒரு வித புதிய தனிமை புகுந்திருக்கிறது. முன்பெல்லாம் தனிமையை நான் மிகவும் ரசித்தது அதனைத் தேடித் தேடி ஓடியதுண்டு. ஆனால் இந்தத் தனிமை நீர் ஊறிய மணல் போல் கனக்கிறது. அதை சுமந்து திரிவதே பெருங் கனமாயிருக்கிறது.

இப்போது இந்தத் தனிமை எதை எதையோ கற்றுத் தருகிறது போலிருக்கிறது. இப்படித் தான் முன்பும் வாழ்க்கை, நான் வாழ்க்கையின் வெள்ளத்தில் முர்ச்‌சையாகி மூழ்கும் போதெல்லாம் என் கரம் பற்றி, கரைக்கிழுத்து, மூர்ச்சை தெளிவித்து, இது தான் உன் வழி என்று சமிக்ஞை தந்து போயிருக்கிறது. அவ் வழியே நடந்து வந்தே என் குட்டி ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டு அங்கு  எனது கனவுப் பூக்களுடன் வாழ்ந்திருந்தேன்.

நிம்மதியாயிருக்கிறேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன், இந்த புதிய கனமான தனிமை என்னை ஆக்கிரமிக்கும் வரை. ”நீ முட்டாள்” என்றுரைப்பது போலிருக்கிறது இந்த புதிய உணர்வு.

எனது பலம் என்று நான் நினைத்திருந்த இந்த தனிமை என்னைப் பார்த்து பரிகாசமாய் புன்னகைப்பது போல இருக்கிறது. அது தற்போது, நான் உன் ”பலம்” அல்ல ”பலவீனம்” என்று கற்றுத்தருகிறது.

இருண்ட பெரும் அதள பாதாளத்தினுள் தனிமையில் தலைகீழாய் விழுவது போலிருக்கிறது இந்த உணர்வு. பற்றிக்கொள்ள எதுவுமில்லை போலவும் உணர்கிறேன்.

பெரும் பயம் ஒன்று மெதுவாய் ஊர்ந்து ஊர்ந்து வந்து என்னுள் புகுகிறது. தடுப்பதற்கு வழிதெரியாதிருக்கிறது. இது ஒரு கனவாக இருந்திருக்க் கூடாதா என்று ‌பதறிக்கொண்டிருக்கும் மனம் விரும்புகிறது.

ஆனாலும் இவை அனைத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன்... 

இது தான் இனி நானோ?  எல்லாம் நன்மைக்கே!

இன்றைய நாளும் நல்லதே.


.

9 comments:

  1. சகோதரா வருந்துகின்றேன்!

    ReplyDelete
  2. thanimai enbathu mekavum kodithu....find some one....for sharing,caring,talking,walking....eppati ethanaiyo u can do wit her....good luck sanjayan.....

    ReplyDelete
  3. யாராவது பொண்ணு வேணும் என்று புலம்பினாங்களா இங்க. எனது தனிமையைப் பற்றியல்லவா புலம்பினேன்.
    வேணா ... இத்துடன் அனுதாபங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.
    இல்ல .. அப்புறமா நான் என் பேச்சையே கேட்கமாட்டேன்

    ReplyDelete
  4. கடேசியாக (facebook இல்) கண்டபோது நல்லாத்தானே இருந்தீர்கள்?

    ReplyDelete
  5. தனிமை தன்னை உணரவைக்கும் ஒரு சந்தர்ப்பம். ஆராய்ந்து முடிவெடுப்பது அவரவர் தேவையை பொறுத்தது.

    ReplyDelete
  6. காலகாலத்தில ஒரு கல்யாணம் பண்ணின எல்லாம் சரியபோகுமுங்க

    ReplyDelete
  7. தனிமை இல்லாவிட்டால் நான், நீ என்பதே இருக்காது.

    ReplyDelete
  8. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ReplyDelete

பின்னூட்டங்கள்