அப்பாவின் அக்காவும் எனது மாமியும்

எனது அப்பாவின் அப்பாவுக்கு மூன்று பெண் பிள்ளைகள். ஒரு ஆண்குழந்தை. ஏனோ அத்துடன் நிறுத்திவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார். அவர் இறக்கும் போது என் அப்பாவுக்கு 15 வயது. அதன் பின் அவர்கள் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்தார்களாம். நான் எனது அப்பாவுடனான அனுபவங்கள் சிலவற்றை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இன்றைய பதிவு அவரின் சகோதரிகளைப் பற்றியது.. அதாவது எனது மாமிமார்களைப் பற்றியது.

அப்பாவின் மூத்த சகோதரி இவரை மட்டும் தான் நாம் மாமி என்று அழைத்தோம். மற்றைய இருவரும் ”அன்டி” என அழைக்கப்பட்டார்கள். ஏனோ என்னைப் போல இவர்களுக்கும் அப்பாவின் மீது பயம் இருந்தது. அப்பாவின் அக்காவும் அப்பாவுக்கு பயப்பட்ட போது நான் பயப்பட்டதில் ஏதும் அநியாயம் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. இதைப் பற்றி விசாரித்த போது அவன் முரடன் என்றார் மாமி ஒரு நாள்.

அப்பாவின் சகோதரிகளில் முத்தவருக்கு மட்டுமே திருமணமாகியது. ஏனைய இருவரும் ஏனோ திருமணம் செய்யவில்லை. இதனால் எனக்கு ஒரு பெரும் பாதிப்பிருந்தது. அதாவது, இவர்களால் எனக்கு வந்திருக்க வேண்டிய மச்சாள்கள் வராது போயினர். மச்சான் என்ற பந்தா இல்லது போயிற்று.

இந்த அன்டிகளில் முத்தவர் கொழும்பில் தொழில் அமைச்சகத்தில் புரிந்தவர். பரம சாது. மற்றவர் யாழ்ப்பாணத்தில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவர். இவர் ஆங்கில ஆசிரியராக இருந்தது எனக்கு பல தடவைகள் மிகுந்த சிரமத்தையும் சங்கடங்களையும் தந்தது. மட்டக்களப்பில் சூறாவளி வீசிய நாட்களின் பின் நான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க நேர்ந்தது. அந் நாட்களில் அவர் எனக்கு ஆங்கிலம் கற்பிப்பிக்க முயன்றதனால் எனக்கும் அவருக்கும் எட்டாப் பொருத்தமாய் இருந்தது. அப்பாவிடம் சொல்வேன் என்று வெருட்டுவார்.  அப்பா அருகில் இல்லை என்ற தைரியத்தில் சொல்லுங்கோ என்பேன். எனது பதிலால் அவர் அழுத நாட்களும் உண்டு. மிகவும் மென்மையானவர்.

இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஓர் நாள் பாடசாலை விடுமுறையை நான் மகிழ்ச்சியாய் பிபிலையில் கழித்துக்கொண்டிருந்த போது இவர் மதியம் போல் யாழ்ப்பாணத்தில் இருந்து பிபிலைக்கு எம்மிடம் வந்தார். வீட்டில் எவருமில்லை. அம்மாவும், அப்பாவும் வேலையில். நான் வீட்டில். வந்தவர் சஞ்சயன் இங்கே வா என்றார். அன்டி வந்திருக்கிறார். ஏதோ கிடைக்கப் போகிறது என்று நினைத்தபடியே அருகில் ‌சென்றமர்ந்தேன்.  Queue  என்னும் சொல்லைச் சொல்லி அதன் ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்கக் கேட்டார்.

என்னுள் இருந்த தன்மானச் சிங்கம் சிலிர்த்துக் கொண்டது. கோபம் கண்ணை மறைக்க அவர் கொணர்ந்திருந்த உடுப்புப் பெட்டியை தூக்கி வெளியில் எறிந்து விட்டு வெளியேறி விட்டேன். அன்பு மாமியால் எனது அராஜகத்தை தாங்க முடியவில்லை. வீட்டு வாசலிலேயே அண்ணண் வரும் வரை அழுது  கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் அம்மா வந்த போது அன்டீ வீட்டு வாசலில் அழுது கொண்டு. தனது அண்ணணிடம் எனது செயலை கூறிவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அந்நோரம் ‌ அன்டியின் ஆசை அண்ணண் வருகை தந்த போது அவரது பாச மலர்  தங்கை எனது செயலை அறிவித்த போது ” நீயேன் வந்தவுடன் அவனிட்ட spelling  கேட்ட நீ” என்றாராம் இப்பா.  அன்று மாலை நீ இண்டைக்கு தப்பீட்டாய் என்றார் அம்மா. அன்று எனக்கு அப்பாவை மிகவும் பிடித்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் அப்பாவின் அக்காவின் வீட்டில் தான் பாட்டி, மாமி, மாமா மற்றும் இரண்டு ஆன்டிமார் வாழ்ந்திருந்தார்கள்.

மாமா சந்தையில் புறோக்கறாய் இருந்தார். காலையில், கள்ளு இல்லாமல் சிறு கல்லைக் கூட அசைக்க முடியாதளவுக்கு உள்ளூர் உற்பத்திக்கு மரியாதை செய்தவர் அவர். அவரின் சைக்கிலுக்கு ஏதோ மந்திர சக்தி இருக்கிறது என்று நான் நினைத்ததுண்டு. மாலை கருக்கும் நேரத்தில் மாமாவுக்கு ‌பூலோகத்தின் நினைவு தப்பிப்போகும். ஆனால் GPS  பூட்டிய இந்தக் காலத்து மோட்டார் வாகனங்கள் போல் மாமாவில் ரலி சையிக்கில் உடுவில் ஒழுங்கைகளுக்குள்ளால் மாமாவை ஒரு வித காயமுமின்றி அழைத்து வரும். சைக்கிலை ஸடான்ட் இல் போட்டு விட்டு மாமா சரிந்தார் என்றார்... மாமி ”இஞ்சாரும் ..  எழும்பி சாப்பிடும்” என்று கூறும் வரை பூலோக நினைவின்றி இருப்பார் மாமா. 

மாமா அந்த நேரங்களிலும் காசு விசயத்தில் படு கராராக இருப்பார். படம் பார்க்க காசு கேட்டால் தர மாட்டார். மாமா நேற்று வாங்கின கடனைத் தாங்கோ என்றால் ஒரு கண் திறந்து தூங்கியபடியே பார்த்துச் சிரிப்பார். ஆனால் மறு நாள் சந்தையில் கையில் காசு புரளும் நேரங்களில் உள்ளூர் உற்பத்திக்கு தேவையானது போக மிகுதியைக் கொண்டு எமது கடனை அடைக்கும் நேர்மையும் அவரிடம் இருந்தது. மறக்க முடியாத ஒரு அழகிய சித்திரம் போல் மனத்திரையில் இருக்கின்றன அவரின் நினைவுகள்.

காலத்தின் கோலத்தில் பாட்டி, ஒரு ஆன்டி, மாமா என்பவர்கள் கரைந்து போயிருக்க மாமியும், ஆங்கல டீச்சர் அன்டியும் இன்றும் இருக்கிறார்கள். சென்ற வருடம் யாழ் சென்றிருந்த போது  இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்கக்கிடைத்தது அவர்களுடன். பழங்கதைககள் பேசிக் கொண்டிருந்தார் மாமி. கண்தெரிவது குறைவு என்றார். கொப்பனைப் போல உனக்கும் மொட்டை என்றார். நீயும் குடிப்பியோ என்ற போது இல்லை என்றேன். சிரித்தார். நானும் சிரித்தேன். எண்பது வயது தாண்டி ஓரிரு பற்களுடன் மகிழ்ச்சியாகவே இருக்கிறார் போலிருந்தது எனக்கு. அக்காவை கவனித்தபடியே தனது காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ஆன்டி. இந்த ஆன்டி ஏறத்தாள 40 வயதுக்கு பின்பே சைக்கில் ஓடப் பழகினார் என்பது பலரும் அறியாத ஒரு ரகசியம். இன்றும் சைக்கிலிலேயே திரிகிறார்.

இறுதியாய் விடைபெற்ற போது வாஞ்சையான குரலில் ”இனி எப்ப பார்ப்பனோ” என்னும் வார்த்தைகளுடன் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பினார் மாமி.  மாமியை பார்க்கும் ஆசை இடையிடையே வந்து போகும். இருப்பினும் நேரம் கடந்து கொண்டிருப்பதையும் உணர்கிறேன்.

தந்தை வழி நெருங்கிய உறவினர்களில் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். தாய் வழியில் எவருமில்லை. ஒரு சந்ததி மறைந்து கொண்டிருக்கிறது. அடுத்தது எமது சந்ததி. அதிலிருந்தும் ஒருவர் மறைந்திருக்கிறார். அந்த மறைவும் பூடகமாய் ஏதோ போதித்துப் போயிருக்கிறது.

வாழ்க்கையின் வழியில் நாம் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?

புவனேஸ்வரி என்னும் எனது மாமிக்கு இது சமர்ப்பணம்.


இன்றைய நாளும் நல்லதே!

.


6 comments:

  1. நல்ல பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  2. பழுத்த இலைகளைப் பார்க்கும்போது அவை குருத்தாக இருந்தபோது எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கும் என் மனது கனக்கிறது. ஆன்ரி சிறுமியாக இருக்கும்போது "நான் சைக்கிள் ஓடலாமா?" என்று தன் தந்தையைக் கேட்டிருப்பாரா?"

    ReplyDelete
  3. This is one of the tragedy of an Eezha tamilan.

    ReplyDelete
  4. Fine written I have become your regular reader Premraj

    ReplyDelete
  5. உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete
  6. தங்கள் மாமியார் பற்றிச் சுவையாக எழுதியுள்ளீர்கள். பிபிலை நல்ல சுவாத்தியமான , அழகான இடமாச்சே!
    படம் அருமை, கனிவு தெரிகிறது.

    ReplyDelete

பின்னூட்டங்கள்