வெறுப்பின் உச்சமும் மரணத்தின் போதனையும்இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை ஒழுங்கமைக்கும் ஒரு நிறுவனத்தின் இரு கணணிகள் பல நாட்களாகவே திருத்துவதற்காக தரப்பட்டிருந்தது. நான் அவற்றை திருத்தி வைத்திருந்தும் உரிமையாளர் வராததால் எனது அலுவலகத்தில் அவை இறந்த உடலங்களைப் போல் இயக்கமின்றிக் கிடந்தன. நேற்று அவற்றின் உரிமையாளர் திடீர் என்று விழித்துக் கொண்டார். கணணி திருத்தியாயிற்றா என்று குறுந்தகவல் அனுப்பினார். ஆம், அவை உங்களின் வருகைக்காக காத்திருக்கின்றன என்றேன். நாளை 12:30 மணி போல் வருவதாய் ஒப்பந்தம் செய்தபடியே 11:29 மணிக்‌கு வந்து என்னையும் சவப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ஏற்றிச் சென்றார். ஏனோ வாகனத்தின் பின் பகுதியை திரும்பிப் பார்க்க பயமாயிருந்தது. எதுவும் பேசாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார் அவர். எம்மைச் சுற்றியிருந்த சூழல் மயானஅமைதியில் ஆழ்ந்து கிடந்தது. மரணமானவர்கள் போல நாம் பேசாதிருக்கிறோம் என எனது சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

அலுவலகத்திற்கு வந்த பின் கணணிகளை இறக்கி எடுக்கவும், உள்ளே எடுத்துச் சென்று பூட்டவும் உதவினார். அமைதியாய் மயானத்திற்குச்  சென்றவர்கள் வீடு திரும்பும் போது மெதுவாய் பேசிக் கொள்வது போல எங்கள் சம்பாசனைகள் மெதுவாய் தொடங்கின. சற்று நேரத்தின் பின் மரணவீட்டில் நடக்கும் அரட்டை போன்று அரட்டத் தொடங்கிவிட்டோம் இருவரும்.

மரணத்தைப் பற்றி பேச்சுத் திரும்பிய போது தன்னிடம் மரணம் பற்றி உணர்ச்சிகள் இல்லை என்பதை விட அவை மரத்து விட்டன என்றும், தினமும் சந்திக்கும் ஒரு பொருளைப் போன்றிருக்கிறது மரணம் என்றார்.

எனக்கு மரணவீட்டில் இருக்கும் அமைதி பயத்தைதத் தரும் என்றேன். சிரித்தார். மரணம் அவருக்கு நண்பனாயிருக்கிறது போலிருந்தது அந்தச் சிரிப்பு. என்னால் அதை ரசிக்க முடியவில்லை.

மறக்க முடியாத அனுபவம் ஒன்றைச் சொல்லுங்கள் என்றேன். சற்றே யோசித்தார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டானாம். தன்னிடம் அந்த இறுதிச்சடங்கிற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போது அவ் இளைஞனின் பெற்றோருடன் ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது என்றார்.

அவர்கள் இருவரும் மனோதத்துவ பேராசிரியர்கள். இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். தான் அவர்களை அழைத்து மரண அறிவித்தலை பத்திரிகையில் இடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இரு பெற்றோரினதும் பெயர்களையும், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் பெயர்களையும் எழுதிய போது அவ் இளைஞனின் தாயார், தந்தையின் பெயரையும், அவரின் உறவினர்களின் பெயரையும் அழித்துவிட்டு பிரசுரிக்கச் சொன்னாராம். தந்தையும் அப்படியே செய்தாராம். பிரச்சனையை தவிர்ப்பதற்காக தான் இரு வித மரண அறிவித்தல்களையும் ஒரே பத்திரிகையில் அருகருகே அச்சிட நேர்ந்தது என்றார்.

அதே பெற்றோர் மரணச்சடங்கின் போது அருகருகே உட்கார மறுத்ததையும், தேவாலயத்தின் இரு வேறு ‌பகுதிகளில் உட்கார்ந்திருந்தது பற்றியும் கூறினார். குரோதம் என்பது என்ன என்பதற்கு இவர்கள் இருவரும் தகுந்த உதாரணமாயிருந்தார்கள் என்பது வேதனையானது ஆனால் அதுவே உண்மை என்பதை அந்த மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அறிந்து கொண்டது வேதனையானது என்பதை அவரது கதைகளில் இருந்து புரிந்து கொண்டேன்.

குழந்தையின் மரணத்தில் கூட தமக்கிடையிலான குரோதத்தை மறைக்காத வண்ணம் நடந்து கொள்ளும்படியாக அவர்களுக்கிடையில் ஏதோ நடந்திருக்கிறது என்றேன். உண்மைதான், ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்திருப்பார்கள் என்றார். என்னால் எதும் பதில் கூறமுடியாதிருந்தது. தலையை மட்டும் ஆட்டினேன். ஒரு மனிதனின் இறப்பிலும் ஏன் தன் கோபதாபங்களை காட்டி மனிதத்தைக் கொல்கிறார்கள் என்ற போது அவர் எனக்கு எதையோ போதிக்கிறார் என்பது புரிந்தது.

நானும் ஒரு சிலர் மேலிருக்கும் அதீத வெறுப்பின் காரணமாய் எனது மரணவீட்டிற்கு அவர்கள் வருவதை நான் விரும்பவில்லை என்றும் அப்படி வந்தால் அவர்களைக் திருப்பி அனுப்ப ஒழுங்குகள் செய்துவிட்டே இறப்பேன் என்றும் கூறி இருக்கிறேன். அவர்கள் மீதான வெறுப்பு இன்றும் குறைந்தாயில்லை. அது தினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஆனால் இன்றைய நண்பரின் கருத்தினைக் கேட்டபின் மனதுக்குள் ஏதோ நெளிவது போலிருக்கிறது. புரிந்ததா நட்பே.

இன்றைய நாளும் நல்லதே!


.

7 comments:

 1. True... you cannot forgive some people in your life :(

  ReplyDelete
 2. எதுவும் நிச்சயமல்ல ஆனால் மரணம் மட்டும் நிச்சயம்.

  ReplyDelete
 3. என்னண்ணே பதிவெல்லாம் பயங்கரமாக இருக்கு?

  ReplyDelete
 4. உண்மைதான் வெறுப்பை வெறுக்க முயல்வது கஷ்டமான ஒன்றுதான்.

  ReplyDelete
 5. இப்பதிவின் டிப்ரஷனிலிருந்து வெளியில் வர ஒரு சிறு டைவர்ஷன்.


  சாவு காரியங்களை நடத்தவென்று அமெரிக்காவில் அண்டர்டேக்கர்கள் (undertakers) உண்டு. அப்படிப்பட்ட ஒருவரிடம் இந்த வாலிபன் பயிற்சியாளராகச் சேர்ந்தான். அவன் வீட்டாருக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. "எனது கிளப்பில் என் பிள்ளை என்ன வேலை செய்கிறான் என்று என் சினேகிதிகள் எமிலியும் சாராவும் கேட்கிறார்களே, என்னவென்று சொல்வது" என அன்னை அலுத்து கொள்ள, "எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான், ஐயா இப்படி துள்ளுகிறார்" என்று பேப்பரை புரட்டிக் கொண்டே தந்தை கூற என்று ஒரே கலாட்டா.

  அந்த வாலிபன் முதல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து தந்தையிடம் "இந்த வேலை ரொம்ப சுவாரசியமாக உள்ளது" என்று கூற, அவரோ 'ஹூம்' என பெருமுச்சு விடுகிறார். "இல்லையப்பா, நான் சொல்றதை கேளுங்கள்" என்று பையன் மேலும் சொல்கிறான்.

  "நான் இப்போது வேலை செய்வது ஒரு சிறிய நகரம். அதில் இரண்டு பணக்காரக் குடும்பங்கள். ஒன்றுக்கொன்று ஜன்மப்பகை. அவற்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆடவன் ஒருவனும் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த நங்கை ஒருத்தியும் காதல் கொண்டனர். ஆனால் தங்கள் காதல் நிறைவேறாது என்ற விரக்தியான நிலமைக்கும் வந்தனர். ஆகவே அவர்கள் அந்த நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பனிரண்டாவது மாடியில் அறை ஒன்று எடுத்துக் கொண்டு கடசி முறையாக கூடினர். அந்த நிலையிலேயே விஷம் அருந்தி பிணமாயினர். இப்போது பிரச்சினை நான் பயிற்சி பெறும் நிறுவனத் தலைவரிடம் வந்தது. அப்பிணங்கள் ஒன்றுக்கொன்றுடன் உடலால் கூடிய நிலையில் இருந்தன. அவற்றைப் பிரித்து, தனித்தனியாக அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்புவிக்க வேண்டும், தனித்தனியாக சடங்குகள் செய்து வெவ்வேறு இடுகாடுகளில் புதைக்க வேண்டும். ஆனால் பத்திரிகைகளுக்கு ஒன்றும் தெரியக்கூடாது.

  தலைவர் என்னை மட்டும் கூட்டிக் கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்றார். எங்களை தனி லிஃப்டில் 12 வது மாடிக்கு அழைத்து சென்றார்கள். அறைக்குள்ளே நானும் தலைவர் மட்டும் பிரவேசித்தோம். கண்ட காட்சி மனதையே உருக்கிவிட்டது. இரு உடலகளும் ஒன்றை நோக்கி ஒன்று படுத்த நிலையில் இணைக்கப்பட்டிருந்தன. இந்த அழகில் ரிகர் மார்ட்டிஸும் (ரிகர் மார்ட்டிஸ் என்றால் என்ன என்பதை ரஷ்யா ராமனாதனிடம் கேட்கவும் - டோண்டு) ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது போல இருந்தது. ஆனால் தலைவர் அசரவில்லை. தனது வாக்கிங் ஸ்டிக்கை இரு உடல்களுக்கும் இடையில் சொருகினார். பிறகு 1, 2, 3 என்று எண்ணி விட்டு கில்லியை கீழே வைத்து தாண்டை ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அடிப்பது போல வாக்கிங் ஸ்டிக்கை பட்டென்று அடித்தார். பளக் என்று உடல்கள் பிரிந்தன".

  தன்னையும் மீறிய சுவாரசியத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த தந்தை ஆர்வத்துடன் குறுக்கிட்டார். "அப்பாடா இந்த ரிகர் பிரச்சினையாவது தீர்ந்ததே" எனப் பெருமூச்சு விட்டார். "இல்லையப்பா நாங்கள் சென்றது தவறான அறைக்கு" என்று விளம்பினான் பையன். (நன்றி இசாக் அசிமோவ்)

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. பின்னூட்டங்களுக்கு நன்றி.
  டோண்டு @உங்கள் கதையை ரசித்தேன். சிரித்தேன்

  ReplyDelete

பின்னூட்டங்கள்