ரிமோட் கொன்ட்ரொல் (remote control) மனிதரும், கொன்ரோல் (control) இல்லாத நானும்

எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்கோ கேட்ட குரல்?  எங்கு என்று நினைவுக்கு வரவில்லை. தனது கணணி இயங்க மறுக்கிறது உடனே வர முடியுமா என்றார். மாலை வருவதாகச் சொல்லி விலாசம் வாங்கிய போதுதான் அவரை நினைவு வந்தது.


வயதானவர், சுகயீனமானவர், தனிமையில் வசிப்பவர், புகைத்தலையே தனது தொழிலாகக் கொண்டவர், நான் இது வரை காணாத ஒழுங்கீனமான, அழுக்கான வீட்டின் உரிமையாளர் என்று தான் நினைத்திருந்தேன் அவரைப் பற்றி இன்று அவரைச் சந்திக்கும் வரை.

மாலை 7 மணியிருக்கும், இலையுதிர்க்கால இருட்டும், மழையும், காற்றும் தங்களின் சுயத்தை வெளியே காட்டிக் கொண்டிருந்தன. நிலக்கீழ் ரயில் நிலையத்தில் இருந்து அவர் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன்.

தனது நாய்கள் இரண்டுடன் ஒருவர் உலா சென்று கொண்டிருந்தார். ஒரு நாய் என்னருகில் வந்து என்னை மணந்து பார்த்து விட்டு கடந்து போனது. நல்ல வேளை காலைத் தூக்கவில்லை அது.

இப்போதெல்லாம் முன்பு ஊரில் இருந்த போது எனக்கு நாய்கள் மீது இருந்த, அல்லது நாய்களுக்கு என் மீதிருந்த வெறுப்புணர்வுகள் இல்லாது போயிருக்கின்றன. தொலைபேசியில் அழைத்தவரின் வீட்டு ஜன்னலில் தட்டினேன். க‌தவினூடாக எட்டிப் பார்த்தபடியே “என்ன வேண்டும்?“ என்றார் முகத்தை கடுமையாக வைத்தபடியே.


“கணணி திருத்த“ என்று  இழுத்தேன். கண்ணைச் சுருக்கி பலமாய் யோசித்தார். பின்பு “அவனில்லையே நீ” என்றார்.
”இல்லை, நான் தான் அவன். நான் தான் முன்பும் உங்கள் கணணி திருத்தியவன் என்றேன். சந்தேகத்துடன் உள்ளே அனுமதிதத்தார்.

தொப்பி, மேலாடை, சப்பாத்து போன்றவற்றறை கழட்டி வைத்துவிட்டு உள்ளே போய் அவரின் அருகில் அமர்ந்து கொண்டேன். வீடு எப்பவும் போலவே கிடந்தது.

அவரோ தொலைக்காட்சிப் பெட்டியில்  ”(T) டங்கோ” நடனத்தில் மூழ்கிப் போயிருந்தார்.

செருமினேன்.. அவர் கண்டு கொள்ளவில்லை.

ம்..  ம் என்று கனைத்தேன்.. அதற்கும் எவ்வித கவனத்தையும் அவர் காட்டவில்லை. 

இருமினேன் இப்பவும் அவர் கண்டு கொள்ளவில்லை.


திரையில் வெள்ளைத் துடையழகிகள் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தார்கள். திடீர் என இசையின் தாளம் மாறியது.
”இது ஐரோப்பிய நாடோடிகளின் இசையாக்கும்” என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.
என்னை அழைத்த காரணத்தை சொல்ல முடியுமா என்று அவரின் வெள்ளைத் துடையழகிகள் மீதான கவனத்தை கெடுக்காமல் மெதுவாயக் கேட்டேன்.

உன்னை நான் எப்போ அழைத்தேன்? என்றார்.  வடிவேலுவின் “ஆஹா”  என் காதுக்குள்  கேட்டது.

அவரோ மீண்டும் நடனத்தில் ஆழ்ந்து போயிருந்தார்.

நீங்கள் என்னை கணணி திருத்த அழைத்தீர்கள் என்றேன். ‌ என்னைப் பார்த்தபடியே பலமாய் சிந்தித்தார். சில நிமிடங்களின் பின் நான் கூறியதை நம்பாதவர் போல் ”அப்படியா”? என்ற போது எனக்கு இன்றைய நாள் நல்லதில்லை என்று உள் மனது சொல்லிக் கொண்டிருந்தது.

சில நிமிடங்களின் பின் ஆம் ஆம் எனது கணணி வேலை செய்யவில்லை அது தான் அழைத்தேன் என்றும், இது தான் அந்தக் கணணி என்றும் ஒரு புதிய கணணியைக் காட்டினார்.

நான் கணணியைத் இயக்குவதற்காக அதைத் திறந்த போது என்னை இடைமறித்து தான் கணணியை என்னைப் போல் திறந்து பின்பு தானியங்கிக் கருவியால் இயக்கியதாகவும் கூறினார். தானியங்கியா? கணணிக்கா என்று கேட்டேன். மேசையில் இருந்த தொலைக்காட்ச்சிப் பெட்டியின் தானியங்கியை எடுத்துக் காட்டினார்.  எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. மனக்கண்ணில் ”ஒரு மனிசனுக்கு எத்தின கண்டம்டா” என்று வடிவேலு கூறும் டயலாக் கேட்டது”

அய்யா! அது உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் தானியக்கி. கணணியினுடையதல்ல என்றேன். மிகவும் நிதானமாக ” அப்படியா” என்றார்.
கணணியை எவ்வாறு இயக்குவது என்று மிகவும் நிதானமாக விளக்கிக் கூறினேன்.  எதைச் சொன்னாலும் 3 - 4 தடைவைகள் திரும்ப திரும்பக் கேட்டார். அப்போது தான் அவர் ஞாபகமறதியினால் மிகவும் சிரமப்படுகிறார் என்பது புரிந்தது. படம் கீறி விளக்கங்கள் எழுதிக் கொடுத்தேன்.  சரி நீங்களே இனி கணணியை இயக்குங்கள் என்றதும் அவர் மீண்டும் தொலைக்காட்ச்சிப் பெட்டியின் தானியக்கிக் கருவியை எடுத்த போது என்னை பொறுமையை சிரமப்படுத்தி  வரவழைக்க வேண்டியதாயிற்று.

அவருக்கு படங்கள் மூலம் விளக்கிய ஆவணத்தைக் காட்டினேன். அதை பார்த்த பின்பும் அவருக்கு புரியவில்லை. அவர் ஏதோ அந்த தொலைக்காட்சிப் பெட்டியின் தானியக்கிக் கருவியை விடுவதாயில்லை

நாளை மாலை சீனியர் சிடிசன்களின் ஒரு கூட்டத்திற்கு தனது கணணியை எடுத்துப் போக வேண்டும் எதை எதை எடுத்தப் போவது என்றார். மின்சார இணைப்பு,  கணணி கொண்டு சென்றால் காணும் என்றேன். மின்சார இணைப்பை எப்படி களட்டுவது என்று தனக்கு தெரியாது, எனவே அதை இப்போதே களட்டி வை என்று கட்‌டளையிட்டார். அப்படியே செய்தேன்.

சற்று நேரம் அமைதியாய் கடந்து போனது. பின்பு ஏன் மின்சார இணைப்பை களட்டினாய்? நான் என்படி கணணியை இயக்குவது என்றார் என்னைப் பார்த்து. எனது பொறுமை எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தாலும் அவரின் நிலமை புரிந்ததால் அமைதியாக நீங்கள் தான் களட்டி வைக்கச் சொன்னதாகச் சொன்னேன். அதை அவர் நம்புவதாக இல்லை. நீ பொய் சொல்கிறாய் என்று சினந்தார். எனது சினமும் எல்லையை நெருங்குவதை உணர்ந்தாலும் அடக்கிக் கொண்டேன்.

மீண்டும் மின்சார இணைப்பை பொருத்தி வைத்தேன். ”திருப்தி” என்று  தலையாட்டினார்.  அதன் பின் தனது கணணி இயங்கவில்லை அதை இயக்கித் தர முடியுமா என்று ஆரம்பத்தில் கூறிய பிரச்சனை‌யையே மீண்டும் கூறினார்.

அய்யோ! என்று கத்த வேண்டும் போலிருந்தது எனக்கு. மெதுவாய் மீண்டும் அரம்பத்தில் இருந்து விளக்கிக் கூறினேன். அவரின் கண்கள் என்னை நோக்கியிருந்தாலும் மனது எங்ககோ சஞ்சரித்திருந்தது.

இடையிடையே என்னை இடைமறித்து ஐரோப்பிய நாடோடிகளின் இசை பற்றி  ஏதோதோ கூறினார். இசையைப் பற்றி எதுவுமறியாத ஞானசூன்யம் நான். எனக்கு அவர் கூறிய எதுவுமே புரியவில்லை. மரியாதைக்காக புரிந்தது என்று தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

நான் புறப்படுவதற்காக எனது உடைகளை அணிந்து கொண்டு தொப்பியை போட்டுக் கொண்டதன் பின்பும் அவர் என்னைக் கவனிப்பதாய் இல்லை.

”அய்யா! நான் புறப்படுகிறேன்” என்றேன். எங்கே போகிறாய்? என்றார் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து கண்களை அகற்றாமலே.

எனது வீட்டுக்குத் தான் என்றேன். சரி என்பது போல தலையாட்டினார். எனக்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்றேன். ஏன் என்றார்?
கணணி திருத்தித் தந்தேன், அதற்குரிய பணம் என்றேன். அவரோ அதை சட்டைசெய்யாமலே.... நான் கணணி திருத்துபவனுக்காக காத்திருக்கிறேன் என்ற படியே தொலைக்காட்சிப்‌ பெட்டியின் தானியக்கிக் கருவியால் கணணியை இயக்க முயற்சிக்கத் தொடங்கினார்.

எனக்கேதோ கணணி அவரை தூஷணத்தால் திட்டுவது போல இருந்தது.

வெளியே வந்தேன் குளிர் காற்று முகத்தில் அடித்தது. வீடு வந்து கதவை திறக்க முற்பட்ட போது வீட்டுத் திறப்பை நான் எங்கோ மறந்துவிட்டு வந்திருப்பது புரிந்தது.

அய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!6 comments:

 1. சிரிப்பு வந்தாலும் அல்ஜைமேரில் அவதிப்படும் அவரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!

  ReplyDelete
 2. விசரன் in form !! வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 3. >தனது நாய்கள் இரண்டுடன் ஒருவர் உலா சென்று கொண்டிருந்தார். ஒரு நாய் என்னருகில் வந்து என்னை மணந்து பார்த்து விட்டு கடந்து போனது. நல்ல வேளை காலைத் தூக்கவில்லை அது.

  ஒரு சகோதர பாசம்தான்.

  ReplyDelete
 4. அவரின் வீட்டுக்கு திறப்பை எடுப்பதற்கு நீங்கள் சென்ற பின் நடக்கும் dialog ஐ கற்பனை பண்ணிப் பார்த்தேன். வடிவேலின் பாணியில்... என்ன மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தேயா :)))

  ReplyDelete
 5. Dai English storya tamilla eluthum podhu athu enga irunthu suttathunnu theliva solluda. Intha polappukku poi pitchai edukkalaamDai English storya tamilla eluthum podhu athu enga irunthu suttathunnu theliva solluda. Intha polappukku poi pitchai edukkalaam

  ReplyDelete
 6. அனானி நண்பரே! நான் பிரதி எடுத்ததாக குற்றம் சாட்டுகிறீர்களே.. அதற்கான ஆதாரத்தை ஏனய்யா முன்வைக்க மறுக்கிறீர்கள்? இதிலிருந்து உங்கள் நேர்மை புரிகிறதே. குற்றம் சுமத்தும் போதும் ஒரு நேர்மை இருக்க வேண்டும்

  ReplyDelete

பின்னூட்டங்கள்