வயோதிபத்தின் வரலாறு

சில நாட்களுக்கு முன் ஒரு மாலை நேரம் ஒருவர் கணணி உதவி வேண்டும் என்று அழைத்திருந்தார்.  அவரின் பேச்சிலிருந்தே அவர் வயதானவர் எனப் புரிந்தது. முதல் உரையாடலிலேயே தனது கணணிப் பிரச்சனை ஒரு குடும்பபிரச்சனையில் இருந்து ஆரம்பிக்கிறது என்று அந்தக் குடும்பப் பிரச்சனையை விளக்க ஆரம்பித்தார். வயதானவர் என்பதால் நானும் மிக ஆறுதலாக “அம்மா நீங்கள் உங்கள் கணணிப் பிரச்சனையை மட்டும் கூறுங்கள்“ என்று சொன்னதையெல்லாம் அவர் இந்தக் காதால் கேட்ட அந்தக் காதால் விட்டபடியே குடும்பப் பிரச்சனையை கூறிக்கொண்டிருந்தார். ஏறத்தாள 5 நிமிடங்களின் பின் கணணிக்கு வந்தார்.  எனது கணணியை திருத்த முடியுமா என்றார். கணணியின் பிரச்சனை என்ன என்று மீண்டும் கேட்டால் குடும்பக்கதையின் பாகம் இரண்டு ஆரம்பித்துவிடும் என்ற பயத்தில் விலாசத்தினை வாங்கிக்கொண்டு நாளை வருவதாகக் கூறினேன்.

அமைதியான ஒரு பிரதேசத்தில் அமைந்திருந்தது அவரது வீடு . அவரின் வீட்‌டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.  மெதுவாய் வந்து கதவைத் திறந்து கையைக் குலுக்கியபடியே எனது கணணியின் பிரச்சனை என்னவென்றால் என்று தனது குடும்ப பிரச்சனையில் ஆரம்பித்தார். எனக்கு வாகனத்தை நிறுத்திவைப்பதற்கான அனுமதிப்பத்திரம் தேவையாயிருக்கிறது அல்லது எனக்கு தண்டம் விதிப்பார்கள் என்றேன்.  அதை அவர் கவனிப்பதாயில்லை. வாசலில் நிறுத்திவைத்துக் கொண்டே கதை சொல்லிக்கொண்டிருந்தார். வயதானவர் என்பதால் குரலை உயர்த்தி கதைக்கவும் முடியவில்லை. மீண்டும், எனககு வானக அனுமதிப்பத்திரம் வேண்டும் என்ற போது அதை எடுத்துத் தந்தார். வாகனத்தில் வைத்துவிட்டு வந்தேன்.

அவரது குடும்பக்கதை இப்படி இருந்து. அவருக்கு வயது 70. கணவர் 10 வருடங்களாக அல்ஸ்ஹைமர் என்னும் ஞாபகமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக கணவரை வயோதிபர்களை கவனிக்கும் ஒரு இல்லத்தில் வைத்து கவனித்துவருகிறார். இவர்களுக்கு இரு புத்திரிகள். முதலாமவரின் கணவர் நல்லவர். இப்போது அவர்களுக்கிடையில் விவாகரத்தாகிவிட்டது. அவர் தான் இவருக்கு கணணியை உபயோகிக்க கற்பித்தாராம். இளைய மகளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பணக்கஸ்டம் வந்த போது இவர் பெருந்தொகை கொடுத்த உதவியிருக்கிறார். கணவருக்கு சுகயீனமாகிய பின் பணம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. இவரும் கேட்டிருக்கிறார்.  மகளும் மருமகனும் மறுத்திருக்கிறார்கள். பேரக்குழந்தைகளையும் தொடர்புகொள்ள விடுவதில்லையாம். மீண்டும் மீண்டும் பணத்தை இவர் கேட்டதால் மருமகன் இவரை வெருட்டியிருக்கிறார். இவரது மூத்த மகளையும் அவர்கள் தம் பக்கம் இழுத்ததனால் இவருக்கு ஆதரவாய் எவரும் இல்லை. இவரது வீட்டுத் திறப்பு அவர்களிடம் இருந்திருக்கிறது. இந் நிலையில் இவரது வீட்டுக்குள் அவர்கள் நுளைந்து ஏதோ செய்திருக்கிறார்கள் என இவர் அறிந்து கொண்டாராம். அதன் பின் கணணியினுள்ளும் அவர்கள் அத்துமீறி நுளைவதாக இவர் நினைக்கிறார். தனது செயற்பாடுகளை  அவர்கள் கணணியின் முலமாக துப்பறிவதாக இவர் சந்தேப்ப்படுகிறார்.

நான் அவர் கூறிய கதையின் சாரத்தை மட்டுமே கூறியிருக்கிறேன். அவர் தனது கதையினைக் கூறிமுடிக்க ஏறத்தாள 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். சிறு குழந்தை ஒன்றை அநாதரவாக விட்டது போல் இருந்தது அவரின் பேச்சும் நடவடிக்கைகளும். எதையும் சந்தேகத்துடன் பார்த்தார். வீடு எங்கும் பொருட்கள் நிறைந்திருந்தன. அவரால் அந்தளவு பெரிய வீட்டை பராமரிக்க முடியாதிருந்தது. இரண்டு மாடிகளுக்கும் ஏறி இறங்க அதிகமாக நேரத்தினை எடுத்துக் கொண்டார். தனது முழங்கால்களின் செயற்பாடுகள் குறைந்திருப்பதாயும், மிகுந்த வலியை தருவதாயும்  கூறினார். கண்களில் அச்சம் இருந்தது. குரல் அடிக்கடி தழுதழுத்தது.

அவரின் கணணிக்கு தேவையான பாதுகாப்புக்களையும் அவர் இணையத்தில் பாவிக்கும் ஒரு சமூகவலைத்தளத்துக்கு ரகசியச்சொல்லையும் மாற்றிக் கொடுத்தேன். தற்போது உங்கள் கணணிக்குள் யாரும் வரமுடியாது என்று கூறிய போது. அப்பாடா என்று கைகளை கூப்பி பெருமூச்சு விட்டார். இருப்பினும் இன்னும் பல தடவைகள் அவரது சந்தேகங்களை கேட்டுத் தீர்த்தக் கொண்டார். அவரின் நிர்க்கதியான நிலையும், வயோதிபத்தின் வலியும் மிகவும் பரிதாபமாக இருந்தது.

அவரிடமிருந்து புறப்பட்ட போது பல தடவைகள் நன்றி சொன்னார். சற்று நேரம் கையைகுலுக்கியபடியே பேசிக்கொண்டிருந்து விடைதந்தார். நானும் வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை திரும்பவும் அவரிடம் கொடுத்துவிட்டு புறப்பட்‌டேன்.

மனதுக்குள் பல நாட்களாக தொடர்பு இல்லாமல் இருக்கும், மேற் கூறிய பெண்ணை விட பல வயதுகள் அதிகமான, தனியே வாழும் எனது அம்மாவின் ஞாபகம் முகத்திலடிக்க இன்றை இந்த பெரியவரும் எனக்கு எதையோ போதிக்கிறார் என்பதும் புரிந்தது.


இன்றைய நாளும் நல்லதே.



6 comments:

  1. சூப்பர் அண்ணே

    ReplyDelete
  2. >இளைய மகளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பணக்கஸ்டம் வந்த போது இவர் பெருந்தொகை கொடுத்த உதவியிருக்கிறார். கணவருக்கு சுகயீனமாகிய பின் பணம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. இவரும் கேட்டிருக்கிறார். மகளும் மருமகனும் மறுத்திருக்கிறார்கள்

    ம்ம்ம் எல்லா இடமும் இதே கதைதானா?

    ReplyDelete
  3. கணினியை சரிப்படுத்தியதைவிட
    அரை மணி நேறம் அவரின்
    பேச்சைக் கேட்டதில் அவர் சரியாகி இருப்பார்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete
  5. தயாநிதிOctober 14, 2014 1:12 pm

    மனிதம் சேடம் இழுக்கின்றது. விழுதுகளல் விரட்டப் படும் ஆலமரமும் ஒரு நாள் வயோதிப மடம் நோக்கி நகரும். இருந்தும் விழிக்க மறுக்கின்றோம். நாளா நமக்கும் இன்நிலை வரும் என்பதை ஏற்க மறுக்கின்றோம்..

    ReplyDelete
  6. தயாநிதிOctober 14, 2014 1:13 pm

    வலிகளின் பயணம்...

    ReplyDelete

பின்னூட்டங்கள்