லண்டனில் கேர்ணல் கடாபி

நேற்றுக் காலை புத்தகக் கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அதுவும் லண்டன் மாநகரத்தில். அது பற்றியதோர் சிறு பதிவு தான் இது.

ஒருவரின் வீட்டில் காலை விடிந்தது.  அவருக்கு சக்கரைவியாதி. ”எனக்கும் தான்” என்று அவருக்கு ஆறுதலாக இரு வார்த்தைகள் கூறியது தப்பாகிவிட்டது. அவரின் சர்வதிகாரி அவருக்கு காலையில்  பாவைக்காய் தேனீர் தான் கொடுப்பார். எனக்கும் அதுவே கிடைத்தது. ஆளையாள் பார்த்தபடியே குடித்து முடித்தோம். ”நோர்வேக்கும் கொண்டு போங்கோ” என்று 4 தேயிலைப்பெட்டி தந்தார். நண்பர் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தார். நண்பேன்டா.

லண்டனுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன் நண்பர் இளவாலை விஜயேந்திரன் ஒரு மின்னஞ்சல் அனுப்பயிருந்தார். ‌அதில் லண்டனில் ஒரு புத்தகக் கண்காட்சியும் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது என்றிருந்தது. பின்னந்தலையில் குறித்துக்கொண்டேன். இன்று காலை மின்னஞ்சலை எடுத்து விலாசத்தைக் குறித்துக் கொண்டேன். ஏதோ ”வால் தம் ஸ்தொ” என்று  வாயில் புகாத ஊரில் நடைபெறுகிறது என்றிருந்தது.

நண்பரிடம் விலாசத்தைக் காட்டி அழைத்துப் போக முடியுமா என்று கேட்டேன். விலாசத்தை பார்த்த பின் அவரது பார்வை வெளிறிப்போயிற்று.  ”இதால போய், அங்கால திரும்பி, அதுல பஸ் எடுத்து, பிறகு நிலக்கீழ் தொடரூந்தில் நான்கு இடங்களில் மாறி, பின்பு பஸ் எடுத்தால் மண்டபம் வரும்” என்ற போது அவர் பார்வை வெளிறியதன் காரணம் புரிந்தது.

ஏறத்தாள இரண்டு மணிநேர பயணத்தின் பின் ”வால் தம் ஸ்தொ” என்னும் இடத்தில் நின்றிருந்தேன். விலாசத்தைக் காட்டி வழி கேட்டேன் வாயைப் பிதுக்கினார்கள்.  அருகிலே ஒரு  குட்டை டாக்ஸி நிறுவனம் இருந்ததால் தப்பித்தேன். (குட்டை டாக்ஸி என்றால் Mini Cab  ஹய்யோ ஹய்யோ)

குட்டை டாக்ஸியின் உள்ளே ஏறி இரண்டு தரம் ஆறுதலாக மூச்சு விட முன்பே உனது இடம் வந்து விட்டது என்றான். வெளியில் பார்த்தேன் ஒரு தவறனையின் (Pub) முன் நின்றிருந்தது குட்டை டாக்ஸி. சாரதியைப் பார்த்தேன் எதையுமே கவனிக்காமல் பல்லுக்குள் மாட்டிக் கொண்டிருந்த நேற்று இரவு உண்ட இறைச்சியை ஒரு குச்சியால் தோண்டிக் கொண்டிருந்தான் கண்ணாடியில் பார்த்தபடியே.

நிட்சயமாக இது தானா என்று கேட்டேன். குச்சியை எடுக்காமலே தலையை மேலும் கீழும் ஆட்டினான். சாரதிக்கு 5 பவுண்கள் அழுதுவிட்டு இறங்கிக் கொண்டேன். சுற்றாட‌லை ஒரு தடவை நோட்டம் விட்டேன். புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை. மதியமாகிவிட்டதால் தவறணைக்குள்  புகுந்து கொள்வோமா என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது பெரிதாய் திருநீறு பூசி கோட் போட்ட ஒரு பெரியவர் தவறணையின் பின்புறமாய் போவது தெரிந்தது. அவரைப் பின்தொடர்ந்தேன். புத்தக கண்காட்சி பற்றிய விளம்பரம் தெரிந்தது.

மாடியேறிப் போனேன். வாசலுக்கருகிலேயே உணவும், மெது குடிவகைகளும் ( அதான்பா soft drinks) இருந்தன. மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு  புத்தகங்களைப் பார்க்கலானேன். அங்கிருந்தவர்கள் எவரையும் எனக்குப் பழக்கமில்லை. அவர்களுக்கும் என்னைப் பழக்கமில்லை.

நகரத்தில் அலைந்த கிராமவாசியை எப்படி மோப்பம் பிடித்தாரோ தெரியாது ... நீங்கள் ஊருக்கு புதிதோ என்னும் தோரணையில் பேச்சைத் தொடக்கினார் ஒருவர். ஆமா, ஆமா என்றேன். அத்துடன் நோர்வே என்றது தான் தாமதம் மனிதர் அங்கிருந்த பலருக்கும் ”இவர் நோர்வேயில இருந்து புத்தக கண்காட்சிக்கு வந்திருக்கிறார்” என்று சொன்னார். பலர் வந்து கையை குலுக்கி ஒரு விதமாய் பார்த்தார்கள்.. எனக்கேதோ அந்தப் பார்வை ”புத்தகக் கண்காட்ச்சிக்கு நோர்வேயில இருந்து வருவதானால் உனக்கு விசராக இருக்க வேண்டுமே” என்பது போலிருந்தது. ஆனால் அப்படி ஒரு பில்ட்அப் கொடுக்கவும் ஆசையாக இருந்தது. மகள் இங்கு வாழ்வதால் அவளின் பிறந்த நாளுக்கு வந்தேன் என்னும் சிறு குறிப்பை தவிர்த்துக் கொண்டேன்.

திடீர் என்று ஒருவர் அருகில் வந்து ”அண்ணை .. நோர்வேயில தேசியப் பிரச்சனை பற்றி என்ன மக்கள் சொல்லீனம் என்றார்”

”அடப் பாவி ... இங்கயுமா?” என்று மனது கத்தியது.. ஆனால்  அவர்  என்னை அண்ணண் என்றழைத்தததால் நான் தம்பீ என்று தொடங்கி ..”  தேசியத்துக்குள்ளேயே அங்க பிரச்சனையப்பா என்றேன்” தம்பியை அதன் பின் காணவே கிடைக்கவில்லை. ஏன் உண்மை பேசினால் கல்லைக் கண்ட நாய் போல தலை தெறிக்க ஓடுகிறார்கள் நம்மவர்கள்?

ஒரு மூலையில் ”வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்” என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் இருந்தது. அதனருகில் அனாசின் சில புத்தகங்கள் இருந்தன. அப்போது ஒருவர் ”அனாசின் புத்தகங்கள இங்க வைத்தது யார் என்றார்?” பின்பு என்னைப் பார்த்தார்.. நான் பற்கள் தெரியாமல் கன்னங்களை அகட்டிச் சிரித்தேன். பின்பு ஏறக்குறைய இப்படி ஒரு உரையாடல் நடந்தது..

குறிப்பிட்ட நபர் ”வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்” புத்தகதை கையிலே எடுத்து அதை பிரசங்கம் செய்பவர் போல் உயர்த்திப்பிடித்தபடியே பேசுகிறார்.

தம்பி.. (என்னையல்ல) இந்த புத்தகத்தின் தலைப்பை பாத்தியளே? இது சுதுமலையில அப்ப தலைவர் சொன்னது என்றார். பின்பு ஒரு ஏகாதிபத்திய நாட்டில் தலைவர் பயிட்சியில் இருப்பதாகவும். இன்னும் சில பிரசங்கங்களை அவர் கூறி முடித்த போது எனக்கு ஒரு முன்றாம் தர Seience fiction படம்  பார்த்தது போன்றிருந்தது. கதை கூறும் போதாவது சற்று நம்பகத் தன்மை கலக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதன் பின் சில பதின்மவயதினர் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு பெண்ணின் தமிழ் ஆர்வம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. சாதிக்கொடுமைகளும்  தீமூண்ட நாட்களும் வாசியுங்கள் என்றேன் அவரிடம். அது பற்றி கேட்டார். விளக்கிக் கூறியதும் இப்படியும் நடந்ததா என்று ஆச்சர்யப்பட்டனர். அருகில் நின்றவர் ஒருவர் இதுகளை இவங்களுக்கு சொல்லி என்ன பிரயோசனம் என்றார். பல்லைக் கடித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.


மீண்டும் புத்தகங்களை மேயத் தொடங்கினேன்.
சித்தார்த்த யசோதரா (சிங்கள மொழிபெயர்ப்புப் நாவல் - புத்தரின் டீன் ஏஜ் லவ் என்றும் கொள்ளலாம்)
பெயரிடாத நட்சத்திரங்கள் (பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி)
நூல் தேட்டம் (ஈழத்து நூல்களின் தொகுப்பு)
இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை
ஆகிய  புத்தகங்களை தெரிவு செய்து கையில் எடுத்தக்கொண்டேன். அப்போது ஒருவர்  என்னை பார்ப்பதும் ஏதொ யோசிப்பதுமாய் இருந்தார். சிரித்தார். சிரித்தேன்.
”நீங்க நோர்வேயா” என்றார்.
”ஆம்” என்றேன்.
”சரவணணா?” என்றார்.
”இல்லை”, ஆனால் அவரைத் தெரியும் என்றேன்

எனக்கும் சரவணணுக்கும் நிறத்தில் மட்டும் தான் சற்று ஒற்றுமையுண்டே தவிர வேறு எதிலும் இல்லை. முக்கியமாய் தலைமுடியில் இல்லவே இல்லை. அப்படியிருக்க இவர் ஏன் என்னை சரவணணா? என்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எமது பேச்சு முகப்ப்புத்தகம், பதிவுலகம் என்று போன போது அவருக்கு ”விசரனை” தெரிந்திருந்தது.
எகத்துக்கும் கையை குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார். உங்கள் ரசிகன் என்ற போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.

எகத்துக்கும் கையை குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார். உங்கள் ரசிகன் என்ற போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.


சரி நீங்கள் யார்? என்றேன். பெயரைச் சொன்னார். அவரைத் தெரிந்திருக்கவில்லை எனக்கு. சின்னக்குட்டி பதிவுலகத்தின் அதிபதி என்றார். ஆஹா... என்று பொறி தட்டியது எனக்கு.  நட்பாய் பேசிக்கொண்டிருந்‌தோம்.

நண்பர் பௌசர் வந்தார். நலம் விசாரித்துக்கொண்டோம். கீரன் வருவதாய் அறியக் கிடைத்தது. நான் நிற்கும் வரை கீரன் வரவில்லை. அன்பர் ஒருவர் விமல் குழந்தைவேலின் ”கசகறணம்” நாவல் வெளிவருவது பற்றி கிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இந் நாவல் போராட்டத்தில் வாழ்வைத் துலைத்த ஏழை அக்கரைப்பற்று  மக்களின் துயரத்தை அவர்கள் மொழியில் பேசுவதாகக் கூறினார்.

நண்பர் சின்னக்குட்டியுடன் நின்றிருந்த போது ஒரு மூலையில் பதின்மவயதினருடன் சிலர் தமிழ், கலாச்சாரம், புதியன புகுதல் என்று  விவாதித்துக்கொண்டிருந்தனர். அதில் கலந்து கொண்ட போது அன்பர் ஒருவர் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். எனது கருத்துக்கள் இளைஞர்களை கெடுப்பது போலிருப்பதாக வாதித்தார். தனது கருத்தே சரி என்றார். யாதார்த்தத்தையும் வெல்லவேண்டும் என்றார்.  சாதாம் உசேன், கடாபி என்று அந்த பதின்மவயதினருக்கு முன்னுதாரணங்கள் காட்டினார். அவர்கள் யாதார்த்தத்தை வென்றவர்கள் என்றார். எனது சூட்டைத் தணிக்க இரு தடவைகள் குளிர் தண்ணி அருந்தினேன். சின்னக்குட்டியார்  தண்ணீர் அருந்தாததால் சற்று சுடாகினார்.   இதெல்லாம் சகஜமய்யா என்பது போல நாம் ஒதுங்கிக் கொண்டோம்.

மீண்டும் நிலக்கீழ் தொடரூந்து நிலயம் செல்வதற்கான வழி கேட்ட போது நண்பர் சின்னக்குட்டி  கூடவே வந்து வழிகாட்டினார். நன்றி கூறிப் புறப்பட்டேன். வீடு வரும் வழியில் திருத்த வேலைகளால் ஏறத்தாள 3 மணிநேரம் எடுத்தது வீடு வர.

வீடு வந்து கோப்பியுடன் சித்தார்த்த யசோதராவை கையில் எடுத்தேன். அதில் புத்தர் (சித்தார்த்தர்) யசோதராவுடன் ஏறத்தாள டுயட் பாடிக்கொண்டிருந்தார். நானும் ஒருத்தியை நினைத்துக்கொண்டேன்.

இன்றைய நாளும் நல்லதே!


.

6 comments:

 1. //சின்னக்குட்டி பதிவுலகத்தின் அதிபதி என்றார். ஆஹா... என்று பொறி தட்டியது எனக்கு//.

  இலங்கையில் ஓடிய பொழுது அறிவிப்பாளர் கே.எஸ் ராஜா வினோதமான முறையில் ஒரு விளம்பரம் செய்தார்
  கே .எஸ் ராஜா; எதிரொலியில் சிவாஜியின் நடிப்பு வெகு ஜோர்
  சிவாஜி; என்னை ரொம்ப புகழுறீங்கள் ...அது எனக்கே புரிகிறது..( அந்த படத்தில் வாற வசனம் ஒன்று}  //சின்னக்குட்டி தண்ணி அருந்தாதல் சூடானர்//


  சின்னக்குட்டி அந்த மாதிரியான் தண்ணி அடித்து போட்டு கதைக்கக்கை இன்னும் சூடாய் கதைப்பார்

  ReplyDelete
 2. எகத்துக்கும் கையை குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார். உங்கள் ரசிகன் என்ற போது உனக்கு மயக்கமே வந்து விட்டது.


  வலைப் பதிவர்கள் சந்தித்ததில் சந்தோஷம்

  ReplyDelete
 3. >புத்தகக் கண்காட்ச்சிக்கு நோர்வேயில இருந்து வருவதானால் உனக்கு விசராக இருக்க வேண்டுமே” என்பது போலிருந்தது

  சரிதானே? :-)

  ReplyDelete
 4. ம்ம்ம்... இந்த மாதம் அடிக்கடி பார்க்க முடிகிறது. தொடரட்டும்! :)

  ReplyDelete
 5. இன்றைக்கு கடாபி பிடிபட்டு பின் காயங்களால் இறந்தார் என்ற செய்தி கேட்டேன்.கூடவே இந்த பதிவின் தலைப்பும் கண்ணை கிள்ளியது.அனைத்தும் மறந்தேன்.நடை(எழுத்து)பயின்றேன்.

  ReplyDelete
 6. பின்னூட்டங்களுக்கு நன்றி.

  ReplyDelete

பின்னூட்டங்கள்