இரண்டு முருகபக்தர்களும் ஒரு விசரனும்


அப்பாவின் நெருங்கிய நண்பர், பெயர் கந்தப்போடியார். மட்டக்களப்பில் உள்ள சித்தாண்டி என்னும்  கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தம்பியும் நானும் வைத்த பெயர் சித்தாண்டி-அப்பு (காரண இடுகுறிப்பெயர்). அம்மாவும், அப்பாவும் அவரை போடியார் என்றே அழைத்தனர்.

உருண்டு திரண்ட தேகம், மங்கிய வேள்ளைவேட்டி, சந்தனம் புசிய, வெறுமனேயான மேல் உடம்பு, காதிலே சிவப்புக் கடுக்கன், வெற்றிலைப் பெட்டி, அவ்வப்போது வாயில் சுருட்டு, வாயிலே முருகன் தேவாரம் இது தான் சித்தாண்டியப்பு. காசைக் கூட வேட்டியில் தான் முடிந்து வைத்திருப்பார். தமிழ் படங்களில் வரும் பண்ணையார்கள் மாதிரி இருப்பார் அவர்.

இவருடனான எனது நினைவுகள் எனது 10 - 1 1 வயதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அவரிடம் வெற்றிலை கேட்டால் ”நீ சின்னப்பிள்ளை கூடாதுடா தம்பி” என சித்தாண்டித்தமிழில்* சொல்லி வெற்றிலைக்காம்பை மட்டுமே தருவார்.

எக்கச்சக்கமான பிள்ளைகள், வயல், காணி, வீடு, பண்ணை மாடுகள்… இப்படி எல்லாமே எக்கச்சக்கம், அவருக்கு. நாம் பிபிலையில், அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் திடீர் திடீர் என தோன்றுவார், சில நாட்கள் தங்கியிருப்பார் பின்பு திரும்பிவிடுவார். அவர் வீட்டிற்கு சென்றால் உபசரிப்பாலேயே தனது அதீத அன்பைக் காட்டுவார். அவ்வளவு அன்புத் தொல்லை.

எனது தந்தையார் ஒரு மிகவும் பயங்கரமான முருக பக்தர். சித்தாண்டியப்புவும் அப்பாவுக்கு சளைத்தவர்ரல்லர். ஒரு முறை பிபிலையில் இருந்து அப்பாவும், சித்தாண்டியப்புவும் கதிர்காமம் நடந்து போனதாக ஞாபகம் இருக்கிறது. காட்டில் யானையைக் கண்டதாகவும் நெருப்பெரித்து பந்தம் காட்டி யானையை துரத்தினார்களாம் என்று சொன்னார் சித்தாண்டியப்பு.


நான் 4 - 5 வயதாக இருந்த காலங்களில் ஏறாவூரில் வசித்திருந்தோம். அப்போ எங்கள் வீட்டில் ஒரு சோடி மயில்கள் இருந்தன. எனது அப்பாவிற்கு அவர் வழங்கிய பரிசு என்று பின்னாலில் அறியக் கிடைத்தது.

அவருக்கு எங்கள் வீட்டில் பெரு மரியாதை இருந்தது. அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அப்பாவின் உறவினர்களும் அவரை மதித்தார்கள். ஓரிரு முறை நாம் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்ற போது அவரும் வந்திருந்தார். எப்போதும்  நெல் அல்லது அரிசி முட்டையுடனேயே வருவார். யாழ்பாணம் சென்ற போதும் அப்படியே ஒரு முட்டை நெல்லுடன் வந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்களை முடியுமானவரை தரிசித்தார். அவரின் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்தவர்களுக்கு புதினமானதொன்றாக இருந்தது. அவர் பெரும் சத்தமாய் உரையாடும்போது அவரின் மொழியினைக்கேட்டு அவருக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிததார்கள்.


என் அம்மா வைத்தியராகக் கடமையாற்றிய காலம் வரை அவரிடம் மட்டுமே மருந்து எடுத்தார். நாம் பிபிலையில் வாழ்ந்திருந்த காலங்களில் சித்தாண்டியில் இருந்து பிபிலைக்கு வந்து எம்மு‌டன் சில நாட்கள் தங்கியிருந்து, அம்மமாவிடம் மருந்து வாங்கிப் போவார்.

அப்பாவின் இறந்த போது மரணவீட்டில் அமைதியாய் அப்பாவின் அருகில் நின்றிருந்தார். அடிக்கடி என்னை அணைத்து ஆறுதல்படுத்தினார். அப்பாவை எரித்த அன்று இரவு சாம்பல் அள்ளுவதற்காய் என்னுடன் வந்த பெரியவர்களில் இவரும் ஒருவர்.

இதற்குப் பின்னான காலத்தில் எமக்கு வயல் செய்வதற்கு காணியும், இயந்திர வசதிகளையும் செய்து தந்தவர். எமது வயலை தனது வயலைப் போல தனது மூத்தமகன் மூலமாக கவனித்துக் கொண்டார்.


1985ம் ஆண்டின் பின் நான் அவரை சந்தித்ததாக நினைவில் இல்லை. அடிக்கடி அம்மாவின் கடிதங்களில் பெரியதம்பியை கேட்டதாச் சொல்லியிருப்பார். 2005 இல் சித்தாண்டி போய் அவரைச் சந்தித்த போது முதுமை தன் அதிக்கத்தை அவரின் மேல் காட்டியிருந்தது. ஆயினும் சித்தாண்டியப்புவில் அத்தனை மாற்றம் தெரியவில்லை. அருகில் அழைத்து தம்பி உண்ட அப்பாவைப் போல இருக்கிறாய் என்று என் தலையை தடவிவிட்டு மெதுவாய் சிரித்தார். நானும் சேர்ந்து சிரித்தேன்.


”தம்பி வயது பெயித்துது, இதிலையே கிடக்கன், முருகன் கூப்பிரான் இல்லை” என்றார் சித்தாண்டி முருகன் கோயில் இருந்த திசையை பார்த்து கும்பிட்டபடி. என்னால் எதுவே பேச முடியவில்லை. அப்பாவைப் பற்றிப் பேசினார். எனது குடும்பத்தை விசாரித்தார்.  தனது ஒரு மகள் மணமுடிக்காமல் இருப்பது அவருக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது. ”அவளுக்கு உன்ர வயசிரிக்கிகும் இனி யாரு கட்டப்போறா” என்ற போது குரல் தளுதழுத்தது.


நான் அங்கிருந்த போது அவரின் பேரன் ஒருவர் விடுதலைப்போரில் விதையான செய்தி வந்தது. மகனின் மேலிருந்த கோவம் காரணமாக மரண  வீட்டுக்கு போகவில்லையாம் என்றார். ஆனால் இழப்பின் வேதனையை அவரால் மறைக்க முடியவில்லை. ஏதோ அவர் அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

நான் புறப்பட்ட போது வெற்றிலை மடித்துத் தந்தார் (வளர்ந்துவிட்டேன் என நினைத்தாரோ?), புகையிலை வேணுமா என்று கேட்ட போது வேண்டாம் என்றேன், பல்லில்லா தன் சிவந்த வாயினால் எச்சில் தெறிக்க வெடித்துச் சிரித்தார்.

என்னை அருகில் அழைத்து முகத்தை தடவி ”தம்பி காலம் கெட்டுகிடக்கு கவனமா பெயித்து வா” என்றார்.

அடுத்த முறையும் சித்தாண்டியப்புவை போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்ததாக அம்மா கூறிய போது அம்மாவின் குரலும், எனது மனமும் கனத்திருந்தது.


..............

* சித்தாண்டித் தமிழ் கேட்டிருக்கிறீர்களா? மட்டக்களப்புத் தமிழின் இனிமையான ஒலிப்பிரிவுகளில் ஒன்று அது.
என்னவென்று அதை எழுத்தில் எழுதலாம் என்று தெரியவில்லை.. என்றாலும் முயற்சிக்கிறேன்: உதாரணமாக ”என்னடா தம்பியை”  ”என்ன்னடாம்பி” என்பார்கள் (அதற்கொரு ராகமுண்டு)

சித்தாண்டித்தமிழில் ஒரு தூஷன வார்த்தை அடிக்கடி பாவிக்கப்படுவதாக பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சித்தாண்டிஅப்பு அப்படியான வார்த்தைகளை பாவித்ததில்லை.

5 comments:

 1. ஞாபகங்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் அற்புதமான பொக்கிசங்கள். உங்கள் ஞாபகங்களை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. வட்டார வழக்கில் விதைக்கப்படுகின்ற கதைகளுக்கு இதுவும் ஒரு உரைகல் . வாழ்த்துக்கள் விசரன் , நன்றாக இருக்கின்றது மண்நினைவுகள் .

  ReplyDelete
 3. சித்தாண்டித் தமிழ் கேட்க ஆசை :-)

  ReplyDelete
 4. நினைவுப் பெட்டகத்தில் வைத்துப் போற்ற வேண்டியவர்.

  ReplyDelete
 5. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

  ReplyDelete

பின்னூட்டங்கள்