கேளாமல் பின்தொடரும் நிழல்

இன்று காலையில் இருந்து உடம்பு உசாராய் இல்லை. அடித்துப்போட்டது போல ஒரு உணர்வு. தலை கனத்துக்கிடந்தது. எதையும் செய்யும் மனநிலையிலும் நான் இல்லை. மனமும் உடம்பும் ஒத்துழைக்க மறுத்து சோர்வில் சுருண்டு கிடந்தன.  குறுஞ்செய்தி முலமாக சுகயீனத்தை மேலதிகாரிக்கு அறிவித்தேன்.

வாய்க்கு ஏதும் புளிப்பான உணவு தேவைப்பட்டது. எனது சமையற்கலை  அறிவில் நான் முட்டை பெரிக்குமளவுக்கும், தேனீர் போடுமளவுக்குமே முன்னேறியிருப்பதால் ”நண்பனுக்கு ரசம் செய்து வை” மதியம் சாப்பிட வருகிறேன் என்றேன். மதியம் ரசம், உறைப்பான கோழிக்கறியுடன் உண்டு முடித்த போது சகல அடைப்புக்களும் எடுபட்டிருந்தன. மனம் உடலும் சற்று இலகுவாகிப் போனது. மேலதிகமாய் ஒரு போத்தலில் ரசத்துடன் வீடு வந்தேன்.

மாலை இருட்டிய பின் ஒரு சிறு நடை நடப்போம் என்று புறப்பட்டேன். உள்ளாடைக்கு மேல் ஒரு ஆடை, அதற்கு மேல் ஒரு ஆடை, அதற்கு மேலால் மொத்தமான கம்பளி ஆடை, இறுதியாக ஜக்கட் என்று படை படையாக உடைகளை உடுத்துக்கொண்டு, தொப்பி, கையுறை சகிதமாகப் புறப்பட்டேன். நேரம் 19. 22 என்றிருந்தது.

இலையுதிர்கால பின் மாலை இருட்டு ஊருக்குள் ஊடுருவியிருக்க, குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. பாதையெங்கும் உதிர்ந்த இலைகள் காலடியில் சரசரத்தன. மரங்கள் இலைகளை இழந்து தனிமையில் இருப்பது போல உணர்ந்தேன். வீதியில் மனித நடமாட்டமே இல்லை. கடந்த போகும் வானங்களைத் தவிர. 

அமைதியான ஒரு பாதையில் மெதுவாய் நடக்கத் தொடங்கினேன் நினைவுகள் எங்கெங்கோ அலைந்த கொண்டிருந்தன. இப்டியான தனிமையான நடைப் பயணங்களை நான் மிகவும் விரும்புவதுண்டு. சுயத்துடன் மனம் விட்டு பேசிக்கொள்ள முடியுமான நேரங்கள் இவை.

முன்பைப் போல இப்ப‌டியான நடைப்பயணங்கள் இப்போது அமைவதில்லை. மனம் இருந்தாலும் உடல் ஏனோ மனதுக்கு கட்டுப்பட மறுக்கிறது. ஏறத்தாள   5 - 6 வருடங்களுக்கு முன், மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்திருந்த காலங்களில் என்னை நான் மீட்டுக் கொண்டது தனிமையான நடைப்பயணங்களினால் தான். அந் நாட்களில் ஒரு கிழமைக்கு 5 - 6 நடைப்பயணங்கள் அதுவும் அவை  ஆகக் குறைந்தது 5 மணிநேரப் பயணங்கள் என நடந்து நடந்து மனதுடன் பேசி பேசி எனது மன அழுத்தத்தை குறைத்தக் கொண்டேன்.

அதன் பின்னான காலங்களில் Gym க்கு சென்று சைக்கில் ஓடுவது வழமையாகியது. அத்துடன் உடற் பயிட்சியும் செய்து கொண்டேன். பயிட்சி முடிந்து வெளியேறும் போது மனதுக்குள் ஊறும் ஒரு வித மகிழ்ச்சியையும் உடம்பில் இருக்கும் துள்ளளையும் அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர்ந்த கொள்ள முடியும்.

இன்றைய நடைப் பயணத்தின் போது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டேன். திடீர் என்று நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேனா என்ற  கேள்வி எழுந்தது எனக்கு.

எதில் மகிழ்ச்சியிருக்கிறது? என்பதை அறிந்தால் அல்லவா அக்கேள்விக்கு பதில் கிடைக்கும். இப்படியே எனக்கு நானே கேள்விகளைக் கேட்டு நானே பதிலளித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

மகிழ்ச்சி என்பது பணத்தில் அல்ல என்பது புரிந்திருக்கிறது. ஆனால் அளவான பணம் அவசியமே. பெரும் பூசல்கள் இல்லாத வாழ்வும் மகிழ்ச்சியானது. சுயம், குழந்தைகள்,புரிந்துணர்வுள்ள நட்பு, நோயற்ற வாழ்வு, இவற்றுடன் அன்பாய் தோள் சாய்ந்து ஆறுதல‌டைய புரிந்துணர்வுடைய ஒரு துணை, விரும்பிய பொழுதுபோக்கு, புத்தகங்கள், எழுத்து, பொது வேலைகள், நிம்மதியான உறக்கம் என்பனவே எனது மகழ்ச்சியின் அளவுகோல்கள் என்று எனக்குள் நானே பட்டியலிட்டுக்கொண்டேன்

அவற்றின் அடிப்படையில் எனது வாழ்வு மகிழ்ச்சியாய் இல்லை என்று சொல்வதற்கில்லை என்றும் புரிந்தது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடையும் மனநிலையும் அமைந்திருக்கிறது. முக்கியமாய் நிம்மதியான தூக்கம் அமைந்திருக்கிறது. அதன் பெறுமதியை நான் உணர்ந்துகொண்ட நாட்களில் எனது பல முட்டாள்த்தனங்களை நான் தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சிலரை வெறுப்பதிலும் ஒரு வித குரூரமான மகிழ்ச்சியை உணர்கிறேன். அதை மிகவும் அனுபவித்துச் செய்கிறேன். இதுவும் ஒரு வித மகிழ்ச்சியே. நன்றும் தீதும் கொண்டவன் நான் என்பதும் புரிந்திருக்கிறது. ”உண்னையே நீ அறிவாய்”.

தெருவிளக்கின் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தேன். என் நிழல் எனக்குப் பின்னாலும், எனக்குக் நேர் கீழேயும், எனக்கு எதிரேயும் என் விருப்பத்தை கேளாமால் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது... என் வாழ்க்கையைப் போலவே.

நடைப்பயணம் முடியுமிடத்தில் பெண் குழந்தைகள் கால்பந்து பயிட்சியில் ஈடுபட்டிருந்தனர். எனது நினைவுகள் 7 - 8 வருடங்கள் பின்னோக்கிப் போய் எனது மகளின் கால்பந்து அணிக்கு நான் பயிட்சியாளனாய் இருந்த நாட்களில் அலைந்து திரிந்தது. அந் நாட்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஒரு மணிநேர நடை மனதினை சற்று இலகுவாக்கியிருந்தது. தவிர எழுதுவதற்கும் இரு தலைப்புக்களை தந்திருந்தது. மெதுவாய் வீடு வந்து குளித்து நண்பரின் ரசத்தினை சூடாக்கி கணணியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். ரசம் வாயையும், நடைப் பயணம் மனதையும் நனைத்துக்கொண்டிருந்தது.

இன்றைய நாளும் நல்லதே!



7 comments:

  1. >.மகிழ்ச்சி என்பது பணத்தில் அல்ல என்பது புரிந்திருக்கிறது. ஆனால் அளவான பணம் அவசியமே. பெரும் பூசல்கள் இல்லாத வாழ்வும் மகிழ்ச்சியானது. சுயம், குழந்தைகள்,புரிந்துணர்வுள்ள நட்பு, நோயற்ற வாழ்வு, இவற்றுடன் அன்பாய் தோள் சாய்ந்து ஆறுதல‌டைய புரிந்துணர்வுடைய ஒரு துணை, விரும்பிய பொழுதுபோக்கு, புத்தகங்கள், எழுத்து, பொது வேலைகள், நிம்மதியான உறக்கம் என்பனவே எனது மகழ்ச்சியின் அளவுகோல்கள்

    ம்ம் அத்தோடு அதிவேக இன்டர்நெட் கனக்சன் .

    ReplyDelete
  2. என் ஒரு தாத்தா "ரசம்" என்பதையே ரசித்து ருசித்து ஒரு "ரசமாகச்" சொல்லுவார். அவர் ஒரு ரசப் பிரியர். ரசம் இல்லாமல் சாப்பாடு இறங்காது.
    ம்ம்ம்ம் என்ன எழுதுகிறேன்? அடுக்கு மொழிகள். எலக்சன் இல் நிற்கலாம் போலுள்ளது.

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    நானும் என்னுடைய நேரங்களாக
    எனக்கே எனக்கான நேரங்களாக
    இந்த் நடைப் பயணத்தைத்தான் கருதுவதுண்டு
    உள் நோக்கிய பயணத்திற்கு அதுதான் சரி
    மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    நானும் உடன் நடந்துவந்ததைப் போல் உணர்ந்தேன்
    அருமையான நடை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உண்மையிலேயே ரசித்தேன்!

    ReplyDelete
  5. நடைப்பயணம் மனதை எடை போடவைக்கிறது. உற்சாகம் தருகிறது.
    கணனி உங்களருமையான தோழன்.

    ReplyDelete
  6. அருமையான வாழ்க்கை பாடங்களை சொல்லாது சொல்லிய பதிவு! தொடரட்டும் உங்கள் பயணம் இனிதே............

    ReplyDelete

பின்னூட்டங்கள்