முன்னாள் போராளியின் இந் நாள் போராட்டம்


அண்மையில் ஒரு நண்பனைக் காணக் கிடைத்தது. பால்ய சினேகம். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவன். அருகில் உள்ள நாட்டில் இருந்தாலும் சந்திப்பது மிகக் குறைவு. எனவே இம் முறை சற்றே அதிகமாய் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அறியக் கிடைத்த கதை தான் இது.

கதை என்பதை விட உயிரைச் சுடும் உண்மை என்றே சொல்ல வேண்டும். எனக்கும் அரசியலுக்கும் என்றும் பொருத்தமிருந்ததில்லை. ஆனால் அராஜகமாயோ, அநியாயமாயோ தோன்றுமிடத்து  எனது ஒரு சில பதிவுகளில் சற்று அரசியல் கலந்திருந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் சற்று அரசியல் ஆதங்கத்தை  கலந்திருக்கிறேன்.
Read More
வாருங்கள் கதைக்குள் போவோம்.

நண்பனின் உறவினர் ஒருவர் கனடாவில் இருப்பவர். வசதியானவர். அவருக்கு சில ஆண்டுகளாக இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்திருந்திருக்கின்றன. அங்கு அறுவைச் சிகிச்சைக்காக காத்திருந்திருக்கிறார். காலம் கடந்ததே அன்றி சிறுநீரகம் கிடைக்கவில்லை.

திடீர் என இலங்கையில் சிறுநீரகம் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக அறிந்து, அதன் பின்னான பரிசோதனைகளின் பின் அந்த சிறுநீரகம் பொறுந்தக் கூடியது என்று அறிவித்திருந்திருக்கிறார்கள்.

அடுத்த ஒரு சில மாதங்களுக்கிடையில் சிறுநீரகம் மாற்றப்பட்டு தற்போது முன்பை விட மிகுந்த நலத்துடன் வாழ‌்கிறாராம்.

அதுவரை கதை மகிழ்ச்சியாகவே இருந்தது.

சிறு நீரகத்தை அவருக்கு வழங்கியது தென் கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு முன்னாள் போராளி.  கிழக்கின் பிளவின் போதும் வன்னித் தலமைக்கு விசுவாசமாயிருந்த ஒருவர். அதற்காக பிரிந்து போன தளபதியின் சகாக்களினால் பலத்த சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பின்பு தெய்வாதீனமாக உயிர் தப்பியவர். இறுதி யுத்தத்தில் தப்பிய பின் சொந்த ஊரில் வாழ முடியாததால் தற்போது கொழும்பில் ஒளிந்திருப்பவர். ஒரு லாட்ஜ்  இல் இரகசியமாக தொ‌ழில் புரிகிறார்.

அவருக்கு ஒரு தங்கை. தாயாரை கவனிக்கவேண்டிய கடமையும் உண்டு. தந்தையார் யுத்தத்தில் இறந்திருக்கிறார். தங்கையின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கொழும்பில் பிரபல்யமாகிக் கொண்டிருக்கும் உறுப்பு விற்பனை தொழில் முகவர் ஒருவர் மூலமாக தனது ஒரு சிறுநீரகத்தை இலங்கைப் பணம் ஆறு இலட்சம் ரூபாய்களுக்கு விற்றிருக்கிறார்.

ஒப்பந்தத்தின்படி பணம் கைமாறியதும் சிறு வீடு கட்டி தங்கையின் திருமணத்தையும் முடித்திருக்கிறார்.

ஆறு லட்சம் ருபாயில் ஒரு வீடும், ஒரு திருமணமும் சாத்தியமாகுமா? என்று நண்பனைக் கேட்டேன்.  சிரித்தபடியே  கேட்டான் ”ஆறு லட்சம் அந்த முன்னாள் போராளிக்கு கிடைத்திருக்குமா” என்று?
”புரியவில்லை” என்றேன்.
முகவர் பல ஆயிரங்களை எடுத்திருப்பார். எனவே இவரிடம் அந்தளவு பணம் இருந்திருக்காது. இருப்பினும் மிகுந்த பின்னடைவான பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு சிறு வீடு கட்டிக் கொண்டிருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கும். திருமணத்தையும் மிகுந்த சிக்கனமாய் முடித்திருப்பார்கள் என்றான்.

தவிர அவரின் உடல் நிலை மோசமானால் வைத்தியத்திற்கு என்ன செய்வார்? பாதுகாப்பான தொழில் கிடைக்குமா? தாயாரை எப்ப‌டிக் கவனிப்பார்? எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும் என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் நண்பன்.  எதுவும் பேச முடியாதிருந்தேன்.

வாழ்க்கையையே எங்கள் போராட்டத்திற்கு அர்ப்ணித்த ஒருவரின் கதை இது. இவரின் கதையை விட அண்மையில் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்த மின்னஞ்சலிலும்  இரு சீரகங்களும் பழுதடைந்த நிலையில் இன்னொரு முன்னாள் போராளி உதவி கேட்டிருந்தார். அவருக்கு உதவ சில நண்பர்கள் முன் வந்திப்பது மகிழ்ச்சியைத் தந்தது. இவற்றை தவிர்த்து முன்னாள் போராளிகளின் உதவிக்கரம் நீட்டுங்கள் என்னும்  குரல்கள் தினமும் பலரின் காதுகளிலும் விழுந்தபடியே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இவையெல்லாம் முன்னாள் போராளிகளிகளின் இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தைக் காட்டுகிறது. இவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு பண பலம்  பொருந்திய விடுதலைப்‌ புலிகளின் அமைப்புக்களிடமும் அவர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் தானைத் தலைவனின் தவப்புதல்வர்கள் என்றவர்கள் எல்லாம் எங்கே? ஊருக்குள் பணம் வசூலித்து கொமிசனை சுருட்டிக்கொண்டவர்கள் எங்கே? வாக்கெடுப்பு நடாத்தி பதிவி பெற்றவர்கள் எங்கே? இன்றும் முடிந்ததை சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது சுருட்டியதை பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

இவை பற்றி பேசினால் ”உளவாளி” என்கிறார்கள்.
அல்லது நாம் பல திட்டங்களை செய்கிறோம் அவை இரகசியமானவை என்கிறார்கள். ஏதும் காத்திரமாய் நடந்தால் மகிழ்ச்சி.  அத்துடன் வாழ வழியில்லாத முன்னாள் போராளிகளையும் கவனித்தக் கொண்டால் கொள்ளை மகிழ்ச்சி.

இறுதியாய் எனது கருத்தையும் இணைத்துவிடுகிறேன். எவரையும் இனி நம்பிப் பயனில்லை.  நாம் அனைவரும் நம்மாலான உதவியினை நேரடியாகவே முன்னாள் போரளிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இரண்டு தொடக்கம் நான்கு  நண்பர்கள் சேர்ந்து அவ‌ரவர் ஊர்களில் அவர்களால் முடிந்த உதவிகளை அங்கிருக்கும் மக்களுக்கு செய்யுமிடத்து சிறு துளி பெரு வெள்ளமாய் மாறும்.

இப்படியான திட்டங்களை திறம்பட நாடாத்தி ‌பலன்களை பலரும் பெறும் வகையில் இயங்கிவரும் இரு நிறுவனங்கள் ஒஸ்லோவில் இருக்கின்றன.  இந் நிறுவனங்களில் வருமானங்கள், செலவுகள் என்பன எல்லோரினதும் பார்வைக்கும் வைக்கப்படுவதால் அங்கு நம்பிக்கையும் பேணப்படுகிறது.

எம்மவர்க்காய் கைகோர்ப்போம் வாருங்கள். நீங்களும் உங்கள் உதவியினை நேரடியாகவே உங்கள் நம்பிக்கைக்குரியவர்கள் முலமாகச்  செய்யுங்கள்.   சிறு துளி பெரு வெள்ளமாகட்டும்.

பி.கு:
சிறுநீரகத்தை விற்ற போராளிக்கு சிறு நீரகத்‌தை பெற்றுக் கொண்டவரும், இது பற்றி பேசிய நண்பனும் தொடர்ந்தும் உதவுகிறார்கள்.

லட்சத்தில் ஒருவர் ஓரளவு உதவி பெற்றிருக்கிறார். லட்சங்களை பெற்றுக்கொண்டவர்கள் மௌனித்திருக்கிறார்கள்....

”பொதுச்சொத்து குல நாசம்” என்றும் நாம் பழமொழியினை மாற்றிக்கொள்ளலாம்.

புரிந்ததா நட்பே?

6 comments:

  1. இவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு பண பலம் பொருந்திய விடுதலைப்‌ புலிகளின் அமைப்புக்களிடமும் அவர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
    ஊருக்குள் பணம் வசூலித்து கொமிசனை சுருட்டிக்கொண்டவர்கள் எங்கே? வாக்கெடுப்பு நடாத்தி பதிவி பெற்றவர்கள் எங்கே? இன்றும் முடிந்ததை சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    மேலே உள்ளவை மறுக்க முடியாத உண்மைகள்.
    இதை தவிர சமுதாயத்தின் கேவலம் ஒன்றும் உள்ளது.
    தங்கையின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கொழும்பில் பிரபல்யமாகிக் கொண்டிருக்கும் உறுப்பு விற்பனை தொழில் முகவர் ஒருவர் மூலமாக தனது ஒரு சிறுநீரகத்தை இலங்கைப் பணம் ஆறு இலட்சம் ரூபாய்களுக்கு விற்றிருக்கிறார்.

    ReplyDelete
  2. மனதை உருக்கும் நிகழ்வையும் மிகவும் சரியான கருத்தையும் முன்வைத்திருக்கிறீர்கள்.உங்கள் துணிச்சலான கருத்து பகிர்விற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. உண்மையினை பதிந்துள்ளீர்கள்... உதவி வேண்டி நிற்கும் போராளிகளை இவர் காஸ்ட்ரோ ஆள், நெடியவன் ஆள், ரெஜி ஆள் என்று பேசி பேசி உதவி செய்யாமல் பலரை தற்கொலைக்கு தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்... லண்டனில் இருக்கும் நிமலன் சீவரத்தினம், விஜய் போன்றவர்களும் இவ்வாறே...

    ReplyDelete
  4. மனம் வலிக்கும் பதிவு. அனானியின் சமூக கேவலம் பற்றிய குறிப்பும் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம்.

    ReplyDelete
  5. உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள்



    அவசரம் ஒரு உயிர்காக்க வேண்டிய அவசியம்



    நேற்று முதல் ஒரு உயிரைக்காக்குமாறு வேண்டுதல்கள் ஊடகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடைசி யுத்தத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்து மருத்துவம் பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர் ஜெகதீஸ்வரன். இந்த ஜெகதீஸ்வரன் என்ற முன்னாள்போராளி கொழும்பு வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் தனது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.



    அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த 33வயது இளைஞனின் 2சிறுநீரகங்களும் பாதிப்புற்றுள்ள நிலமையில் மாற்றுச்சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலமையில் இருக்கிறார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் சிறநீரகம் மாற்றப்படாதுவிட்டால் அவருக்கு இறப்பு நிச்சயம் எனப்படுகிறது.



    மாற்றுச்சிறுநீரகம் பொருத்தப்படும் வரை 6நாட்களுக்கு ஒருமுறை இரத்தம் மாற்றப்பட வேண்டும். இரத்தமாற்றுகைக்கு ஒருமுறைக்கு 6ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.



    ஜெகதீஸ்வரனின் மருத்துவச் செலவுகள் மாற்றுச்சிறுநீரகம் பொருத்துதல் எவற்றிற்கும் அவரது குடும்பத்தினரிடம் பணவசதியில்லை. உலகத்தமிழர்களிடம் உதவியை வேண்டும் இந்தக் குடும்பத்திற்கு உறவுகளே உங்களிடம் உதவியை வேண்டுகிறோம்.



    இந்த இளைஞரின் உயிர்காக்க எம்மாலான உதவியினைச் செய்ய முன்வாருங்கள் உறவுகளே…..!





    உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :-



    Nesakkaram e.V

    Hauptstr – 210

    55743 Idar-Oberstein

    Germany

    Shanthy Germany – 0049 6781 70723

    மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

    Vereinsregister:

    AZ- VR 20302

    Amtsgericht 55543 Bad Kreuznach

    Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8



    Donation



    Bank information



    Germany:



    NESAKKARAM e.V.

    55743 Idar-Oberstein

    Konto-Nr. 0404446706

    BLZ 60010070

    Postbank Stuttgart



    Other countrys:



    NESAKKARAM E.V

    A/C 0404446706

    Bank code – 60010070

    IBAN DE31 6001 0070 0404 4467 06

    Swift code – PBNKDEFF

    Postbank Stuttgart

    Germany



    தொடர்புபட்ட செய்தியிணைப்புகள் :-



    http://www.bbc.co.uk...eyfailure.shtml

    http://www.virakesar...asp?key_c=33992

    ReplyDelete
  6. பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

பின்னூட்டங்கள்