மறுக்கப்படும் மறைக்கப்படும் யதார்த்தங்கள்

 சில நாட்களுக்கு முன் Bridges Of Madison County என்னும் திரைப்படத்தை நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார்.  கட்டாயம் பார் என்றும் படத்தை கையிலும் திணித்தனுப்பினார்.

வீடு வந்து Mac னுள் இறுவெட்டை திணித்துவிட்டு தேனிருடன் அமர்ந்தது தான் ஞாபகம் இருக்கிறது. படம் முடியும்வரை வெறொரு உலகில் சஞ்சரித்திருந்தேன். கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு என்று படம் மனதை கொள்ளை கொண்டு போனது.

படத்தின் கருவானது Robert James Waller என்னும் எழுத்தாளரின்  Bridges Of Madison County என்னும் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணமான வயதான ஒரு குடும்பத்தாய்க்கும், விவாகரத்தான ஒரு வயதானவருக்கும் இடையில் ஏற்படும் காதல் பற்றிக் கூறுகிறது. மிகவும் உணர்வு பூர்வமான முறையில் சிறிது கூட விரசமற்ற முறையில் படத்தினை பதிவாக்கியிருக்கிறார்கள்.

Bridges Of Madison County படத்தின் கதை 4 - 5 நாட்களே நடைபெறுகிறது. இருப்பினும் அவர்களின் காதல் 3 நாட்களுக்குள் எல்லைகள் கடந்து இருவரையும் பின்னிப்பிணைத்துவிடுகிறது.

படத்தினை பார்த்த பின்னான மாலைப் பொழுது கனத்துப் போயிருந்தது எனக்கு. அண்மையில் மம்முட்டியின் ”ஒரே கடல்” மலையாளப் படம் ஒன்றும் திருமணத்திற்கப்பான ஒரு உறவு பற்றிப் பேசியிருந்தது. அப் படத்தினை மலையாளத்தில் பார்த்த போது மனதைக் கவர்ந்து கனக்க வைத்தது.

தமிழில் இப்படியான சிக்கலான உறவு முறைகள் பற்றிய திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் தயங்குவதன் காரணம் என்ன? எமது கலாச்சாரத்திற்கு அப்பாட்பட்டது என்று நாம் சில உண்மைகளை மறைக்கிறோம் மறுக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது எனக்கு. அல்லது எமக்குள் இருக்கும் முதிர்ச்சியிற்ற குணாதிசயங்களில் ஒன்றா?

அண்மையில் வாசித்த ஈழத்து எழுத்தாளர் உமா வரதராஜனின் ”மூன்றாம் சிலுவை” நாவல் கூட திருமணமான ஒருவருக்கும் திருமணமாகாத ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவினை கருவாகக் கொண்டது. ஆனால் அந் நாவலில் ஆண் பெண் பாலுறவு நிலைகள் வர்ணிக்கப்படும் முறை எமது இலக்கிய உலகுக்கு புதியது போலவே நான் உணர்ந்தேன். இங்கும் சிக்கலான விவாதக் கருப்பொருட்கள் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தன. மொழிகளின் ஆழுமையுடன் கொச்சைத்தன்மை இன்றி வாதிக்க முடியாத கருப்பொருட்டகள் எதும் உண்டா? சற்று சங்கோஜம், தயக்கம் இருப்பதில் தவறில்லை.  அவை நாம் வளர்க்கப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டவை.

அண்மையில் கவிஞர் அறிவுமதியின் ”மழைப்பேச்சு”  அந்தரங்க  நேரத்து கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் ஒரிடத்தில் ”அந்த நேரத்திற்கு மட்டும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன சில கெட்ட வார்த்தைகள்” என்று வருகிறது.  அவை எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பதை ‌நாம் அனைவரும் அறிவோம். உண்மையை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அதே வேளை சொல்ல வேண்டிய கருப்பொருளினை டிவிவாதிக்க வளமான சொற்களுக்கா தமிழில் பஞ்சம்? மழைப்பேச்சு இதற்கு ஒரு உதாரணம்.

வாழ்வின் யதார்த்தங்களை மறைக்காமல் அவற்றின் அம்மணமான குணாதியங்களை ஒரு வளமான மொழிநடையுடன் வர்ணிப்பதோ, காட்சிப்படுத்துவதோ தவறாகாது, அதுவே கலையாகிறது கலைஞனின் திறமையாகிறது அதை கொச்சைப்படுத்தாமல் இருப்பதும் அவனது கடமையாகிறது.

நவீன உலகக்கல்வி, சமூக கலாச்சார உறவு முறைகளுடன் பல ஆண்டுகளாக மேற்கத்திய சமூகத்தில் வாழும் எமது புலம் பெயர்  சமூகத்திலும் இப்படியான உறவுமுறைச் சிக்கல்கள் பல உருவாகிக்கொண்டிருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றில் பல காணாமல் போய்விட்ட அன்பின் தேடுதலாய் இருப்பதாயே உணர வேண்டியிருக்கிறது. ஏன் இலங்கையில் கூட விவாகரத்துக்களின் புள்ளிவிபரங்கள் எம்மில் பலர் விரும்பாத ஒரு வளர்ச்சியையே காட்டுகிறது. அதற்காக நாம் உண்மையை இல்லையென்றுரைக்க முடியுமா?

மணவாழ்வு ‌வாழ்வின் இறுதிவரை மகிழ்ச்சியாய் தொடருமெனின் அவர்கள் அதிஸ்டசாலிகள். ஆயினும் அப்படியான வாழ்வு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?  பலர் இடைக்காலங்களிலேயே வாழ்வினை மாற்றியமைக்க முனைகின்றனர்.  அதற்கான  காரணங்களை ஆராய்வது இவ்விடத்தில் அவசியமற்றது. ஆனால் பரஸ்பர ஒற்றுமையும், அன்பும், சமத்துவமும் இல்லாது போவதே முக்கிய காரணிகளாய் இருக்கின்றன.

சில இடங்களில் திருமண உறவு முறிய முன்பே சில மனங்கள் ஒன்று பட்டுவிடுகின்றன. அப்படியான உறவு முறைகளுக்கிடையில் ஏற்படும் பிணைப்புக்களை நாம் ”கள்ளக்காதல்” என்று உதாசீனப்படுத்துவதில் எனக்கு ஏற்பில்லை. அது அவர்களின் வாழ்வு, அவர்களின் தேர்வு. அவற்றை மதிப்பதிலேயே மனிதம் இருக்கிற‌தே அன்றி காலாச்சார காவலர்களின் கண்ணாடியை நாம் அணிந்து கொண்டு அவர்களை மென்று தின்பதில் அல்ல.

ஆனால் இப்படியான உறவுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மனத் துணிவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. அது இன்னொரு திருமணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் அவசியமில்லை. ஆனால் நேர்மையின் அடிப்படையில் சில பிரிவுகள் அவசியமாகின்றன என்றே எனக்குத் ‌தோன்றுகிறது.
இருவர் தமக்கு விருப்பமான வாழ்வு அமையாதவிடத்து குடும்பம், நட்பு, சுற்றம், சமுதாயம் என்னும் காரணங்களுக்காக மெளனித்திருக்கிறார்கள். இப்படியான வாழ்வில் ஏதும் அமைதி அல்லது திருப்தி ஏதும்  இருக்கிறதா? இதைப் புரியாத நாமோ ”சமாளித்துப் போ, சமாளித்துப் போ ” என்றதையே கிளிப்பிள்ளை போல் ஆண்டாண்டுகளாய் கூறிக்கொண்டிருக்கிறோம். பிராணவாயு கேட்பவனுக்கு கரிவாயுவை திணிப்பது போலிருக்கிறது இது? இதுவே அவர்களை மரணித்துப்போகவும் செய்கிறது, செய்திருக்கிறது.

வெறுப்பும், கோபங்களும் குரோதங்களாக வடிவெடுத்து வார்த்தைகளாலும், செய்கைகளாலும் தினம் தினம் ஒருவர் மற்றவரின் காயங்களை சீண்டியும்  சீழ்பிடிக்க வைத்தும் சுகம் கண்டு ஒரே கூரையின் கீழ் வாழும் வாழ்க்கை எந்த வகையில் பிரிந்து வாழும் வாழ்க்கையை விட உயர்ந்ததாகிறது?  இப்படியான வாழ்வின் போது  நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கிறோம் என்பதே உண்மை என்ப‌தை மறுக்க முடிகிறதா எம்மால்? போலியாய் சுற்றத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் வாழ்வதிலும் ஏற்பில்லை எனக்கு. எனது வாழ்வினை நானல்லவா அனுபவித்து வாழவேண்டும். வாழ்கிறேன் என்றபடியே இறந்துகொண்டிருப்பது போலானது போலியாய்  வாழ்வது.

குடுபம்பங்களின் பிரிவுகளின் போது இந் நிலமை பெண்களையையே பெரிதும் பாதிக்கிறது என்பதில் ஐயமில்லை. கணவரை பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப்பெற்றால் அவள் ஆட்டக்காரி என்பதில் இருந்து படுக்கயறைவரை பல கதைகளை மென்று தின்றுகொண்டிருக்கிறோமே அன்றி யாராவது அவர்களின் மனதினை புரிந்து கொள்ள முனைந்திருக்கிறோமா? அதே போல் மனம் புரியப்படாமல் வாழ்ந்து துலைக்கும் பல ஆண்களையும் கண்டிருக்கிறேன். துயர் பகிர ஒருவரும் இல்லாத நிலையினை அதை அனுபவித்தவர்களாலேயே புரிந்த கொள்ள முடியும்.

ஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களுக்கும் இருக்கலாமல்லவா?

இப்படியான பிரிவுகளை எவரும் விரும்பி வரவேற்பதில்லை.  பிரிவுகளுக்கு முன்பும், பிரிவின் பின்பும் அவர்கள் கடந்து போகும் வேதனைகள், மன அழுத்தங்கள், அவமானங்கள் என்பதை நாம் ஏனோ மறந்து விடுகிறோம். சமுதாயத்தினரின் ஏளனமான வார்த்தைகளும், பார்வைகளும் இவர்களின் சுய நம்பிக்கையை அழித்து விடுவது பற்றி எவரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை. பலர் பிரிவின் பின்னான ஆரம்ப காலங்களை தனிமைச்சிறையுனுள் வாழ்ந்து முடிக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்துக்கும் இட்டுச் செல்கிறது.  ஆண்களாயின் மதுவையும் நட்பாகிக்கொள்கின்றனர். மதுவுடனும், மருந்துடனும் வாழ்வினைத் தேடுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். சிலர் கண்முன்னே தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் தோளில் சாய்ந்தழுதும் இருக்கிறார்கள்.

பல நேரங்களில் இப் பிரிவுகள் பெரும் வெறுப்பக்களை இரு பகுதியனருக்கிடையிலும் ஏற்படுத்திப் போகிறது. பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்கள் பல சிக்கல்களை இலகுவாகவே கடந்து போகிறார்கள். அதுவே நட்பாகவும் மாறிவிடும் எனின் அங்கு எவரும் தோல்வியுறுவதாயில்லை. குழந்தைகளும் துயரத்திலும் ஒரு மகிழ்ச்சியையே காண்கிறார்கள், புதியதொரு பாடத்தையும் கற்கிறார்கள்.

இன்னும் சிலர் யதார்த்தம் மறந்து, பிரிவின் பின்னும் மற்றவருக்கு தொல்லைகளைத் தந்து இருவரின் நிம்மதியையும் குலைத்துக் கொள்கிறார்கள்.

எஸ்.ரா வின் யாமம் என்னும் புத்தகத்தின் கதை சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெறுகிறது. அதிலும் திருமணமான இருவருக்கிடையில் மனநெருக்கமும், உடல் நெருக்கமும் ஏற்படுவதனால் ஏற்படும் சிக்கலை மிக அழகாக விபரித்திருப்பார்.  காதல் என்பதற்கு காலம் என்பது ஒரு தடையில்லை என்பதைக் குறிக்கவே இதைக் கூறுகிறேன்.

Bridges Of Madison County என்னும் படத்தின் கதையாகட்டும், உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவையின் கதையாகட்டும், எஸ். ரா வின் யாமத்திலாகட்டும் அல்லது எம் கண்முன்னேயே வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடமாகட்டும் அவர்கள் எல்லோரையும் காதல் என்னும் ஒரு உணர்வு இணைத்தபடியே இருக்கிறது.

காதல் என்பது பதின்மக்காலத்தில் தான் வரவேண்டும், அல்லது திருமணத்திற்கு முன் தான் வரவேண்டும் என்று விதியா இருக்கிறது? அல்லது காதல் என்பது ஒரு முறைதான் வரலாம் என்றும் விதியிருக்கிறதா என்ன?


எனது ஆதங்கமும் இன்றைய கலைஞர்களுக்கான சவாலும்:

புலம்பெயர் கலைஞர்கள் இன்றைய யதார்த்த உலகின் அம்சங்களை வளமான கருத்துக்களுடன் தங்கள் படைப்புக்களினூடாக வெளிக்கொணர்வது அவசியமாகிறது. அது அவர்களின் கடமையும் கூட.


9 comments:

  1. யதார்த்தமாக சிந்தித்து முகமூடி அற்ற வாழ்க்கை வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் துணிவும் உண்மையும் வேண்டும். எழுத்தாளரின் கருத்துக்கள் விவாதத்திற்க்கு எடுத்து கொள்ள வேண்டியதே. அருமையான கட்டுரை!

    ReplyDelete
  2. ஹ்ம்ம்.. வழமை போலவே அருமை

    ReplyDelete
  3. சாதாரண ஒரு சினிமா விமர்சனமாக ஆரம்பித்து சிக்கலான மனித உறவுகள்பற்றி நல்ல பல கருத்துக்களை எழுதியதற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோன்ற உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. பிரமிளா சுகுமார்October 04, 2011 6:52 pm

    மிக அருமையான பதிவு....முகமூடிகளையும்..போலித்தனங்களையும் களைந்து விட்டு..உண்மைகளைப் பேச முயலும் நேரமிது...

    ReplyDelete
  5. பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்கள் பல சிக்கல்களை இலகுவாகவே கடந்து போகிறார்கள். அதுவே நட்பாகவும் மாறிவிடும் எனின் அங்கு எவரும் தோல்வியுறுவதாயில்லை.

    அருமையான கருத்து

    ReplyDelete
  6. பல ஈழத்துக் காந்திகள் இப்படி வழ்ந்தது எனக்குத் தெரியும்..உண்மையான உணர்வுகளை வெளியில் கொண்டு வர வேண்டும்..
    http://villavan.wordpress.com/2011/10/03/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/
    காந்தி தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.

    சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது. // உயிருள்ளவரை காமம் உள்ளவரை காதலும் இருக்கும் ..

    ReplyDelete
  7. >ஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களுக்கும் இருக்கலாமல்லவா?

    ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ கள்ளக்காதலுக்கு நியாயமான காரணங்கள் உண்டா? நீள வசனங்களில் எழுதினாலும் தப்புத் தப்புத்தான்!

    ReplyDelete
  8. இந்த பதிவில் கள்ள காதல் விவாதம் என்பதை விட மனதிற்க்கு பிடிக்காதவருடம் ஒரே வீட்டில் புழுக்கத்துடன் ஒரே வீட்டில் வசிப்பது அல்லது பிரிந்து வாழ்வது என்பதை விட பிடித்த நபரை நியாமாக திருமணம் செய்து நிம்மதியாக வாழலாம் என்பதே. காந்தீயை பற்றி கதைப்பதை விட ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர் அவர் மனைவியை! அதையும் மீண்டு அவர் மக்கள் பணி செய்தார். (காந்தி ஒரு மன நோயாளி என்பதே அடியேன் கருத்து அவரை கொன்ற கோட்சே பல உண்மை கருத்து அவரை பற்றி பகிர்ந்துள்ளார் அதை அரசு மறைத்து விட்டது! )

    ReplyDelete
  9. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ReplyDelete

பின்னூட்டங்கள்