குறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்தல் Remy Martin ம்

உலக சரித்திரத்தில் முக்கிய இடம்பெற்ற, பல நாடுகளை தன் காலனித்துவத்தில் வைத்திருந்த, ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறும் தமிழர்களின் குறும்படவிழா ஒன்றிற்கு என்னை நடுவர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள். (ஏன் அழைத்தார்கள் என்று நானே குழம்பிப்போயிருக்கிறேன்).

எனக்கு தமிழில் ஓரளவு வார்த்தைகள் தெரியும். சிங்களமும் அப்படியே. எனது ஆங்கிலப் புலமை சராசரியானது. நோர்வேஜியப் புலமை சற்று  உண்டு. எனவே டெனிஸ், சுவீடிஸ் மொழிகள் சற்று புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பதால் (அவ்வ்) சில சொற்கள் புரியும். பல புரிவதுபோன்று இருக்கும்.

இன்று நான் வந்திருக்கும் இந்த நாட்டு மொழியில் எனக்கு இரண்டே இரண்டு சொற்கள் மட்டுமே தெரியும். ஒன்று ”ஓம்” மற்றையது ”நன்றி”. இது நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்தபோது கற்றுக்கொண்டது.

இன்று மாலை ஒஸ்லோவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் உட்கார்ந்திருந்தப‌டியே தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் ”தம்பி  ”.... ” க்கோ போகிறாய்?” என்றார். ”ஓம்” என்றேன்.

”தம்பி ”...” அங்க டெலிபோன கவனமா வைத்திரு. கள்ளன்கள் அதிகம். எடுத்துக்கொண்டு ஓடுவார்கள்” என்றார். அதன்பின் ஒரு வாசகம் எழுதிய துண்டு ஒன்றைக் காட்டி ”இதை எங்கே வாங்கலாம்” என்றார். அதில் அழகான கையெழுத்தில் ”Remy Martin" என்று இருந்தது.

பாட்டி நம்ம ஜாதி என்று நினைத்தபடியே ”உங்களுக்கா” என்றேன் அர்த்தமான புன்னகையுடன்.
”இல்லை, மகளின் மகள் சாமத்தியப்பட்டுட்டாள்” என்றார்.
”அப்ப அவளுக்கா” என்றேன் அளவற்ற ஆச்சர்யத்துடன்.
”தெரியாது, மருமகன் கட்டாயமாக, மறக்காமல் வாங்கிவரச்சொன்னார்” என்றார்.
”பாட்டியம்மா, மருமகன் நல்லா வருவார்” என்று கூற நினைத்தேன்.  என்றாலும் அடக்கிக்கொண்டேன்.

குறிப்பிட்ட அந்த நகரத்தை விமானம் வந்தடைந்தது. காலநிலை 17 பாகையாக இருக்கும் என்றார் விமானி. விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தபோது  வாய்க்குள் நுளையமறுத்த பெயருடன் ஒருவர் என்னை தமிழர்களின் கடைகள் அதிகமுள்ள ஒரு தெருவுக்கு அழைத்துப்போனார்.

அங்கு மீசைக்கார கவிஞனின் பெயருடைய ஒரு உணவகத்தினுள் என்னை அழைத்துச் சென்றார். ஒரு மூலைக்குள் பலர் உட்கார்ந்திருந்தனர். என்னைக் கண்டதும் அனைவரும் எழுந்து கையைக் குலுக்கினார்கள். நானும் அவர்களின் கையைக் குலுக்கினேன்.

அவர்களில் இருவர், நோர்வேயில் நான் தினமும் உணவு உண்ணும் உணவகத்தின் உரிமையாளரின் நெருங்கிய உறவினர்கள் என்று அறியக்கிடைத்தது. அவர்களின் முகச்சாயலும், நிறமும் அதை உறுதிசெய்தது. அந்த உறவினர்களும்  சாப்பாட்டுக்கடை வைத்திருக்கிறார்கள்.

சற்று நேரத்தில் உயரம் சற்றுக் குறைந்த மனிதரொருவர் வந்தார். அனைவரும் மீண்டும் எழுந்து கையைக் குலுக்கினார்கள்.  நானும்  ‌கையைக் குலுக்கினேன். தனது பெயர் சசி என்றார். நான் சஞ்சயன் என்றேன். அப்போது ஒருவர் என்னைப் பார்த்து ”இவர்தான்   சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், பூ, ஐந்து ஐந்து ஐந்து  என்ற தென்னிந்தயப் படங்களின் இயக்குனர் சசி என்றார். மலைப்பாக இருந்தது மனிதரின் தன்னடக்கத்தைப்பார்த்தபோது. மனிதரையும் எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. நாம் நட்பாகிப்போனோம்.

இருள் அந்த நகரத்தை சுழ்ந்துகொண்டபோது. நாம் தங்கவேண்டிய விடுதிக்கு எம்மை அழைத்துச்சென்றவர் ”அண்ணை கவனம். தொலைபேசிகளை கவமாக வைத்திருங்கள்” என்றார். எனக்கு விமானத்தில் சந்தித்த பாட்டியம்மா நினைவில் வந்தார். அது மட்டுமல்ல அவரின் மருமகன் இப்போது Remy Martin  உடன் மித மிஞ்சிய மகிழ்ச்சியில் மிதந்துகொண்டிருப்பார் என்றும் நினைத்துக்கொண்டேன்.

எம்மை அழைத்துவந்தவர், இயக்குனர் சசிக்கும், எனக்கும் இரண்டுநாட்கள் ஊர்சுற்ற அனுமதி உண்டு என்றிருக்கிறார். இங்கிலாந்து இளவரசி கேட் அம்மையாரின் மாமியார் தனது இரகசியக் காதலனுடன் நடந்து திரிந்த இந்த நகரத்து வீதிகளிலும், மாவீரன் அலெக்சான்டர் குதிரையில் பாய்ந்தோடிய இந்த நகரத்தின் வீதிகளிலும், நானும் இயக்குனர் சசியும் நடந்துதிரியவேண்டும் என்று விதி எழுதியிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது, இளவரசி கேட் அம்மையாரின் மாமிக்கு இந்த நகரத்தில் நடந்த கதி எனக்கு நடக்காதவரை.

பி.கு: இயக்குனர் சசியின் ஒரு படத்தையும் நான் இதுவரை பார்க்கவில்லை. எனவே இரவோடு இரவாக சில படங்களை பார்க்கவேண்டியிருக்கிறது. சசியிடம் இதுபற்றி வாய் திறவாதிருப்பீர்களாக.



2 comments:

  1. tell him SOLLAMALE is superb, a film I have seen many times, Livingstons best film,
    premraj

    ReplyDelete
  2. http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/sasi-01.html

    ReplyDelete

பின்னூட்டங்கள்