அபிநயாஞ்சலி 2014 - எனது பார்வை

இன்று அபிநயாஞ்சலி 2014 நிகழ்ச்சியை காணக்கிடைத்தது. மிகவும் ரசித்தேன். நோர்வே மாணவர்களின் திறமை மெருகேறியபடியே இருக்கிறது. ஒஸ்லோ இளையோருக்கும், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் ஒஸ்லோவில் பல அழகிய கலைநிகழ்வுகளைக் காணக்கிடைக்கிறது. மகிழ்ச்சி.

இது அபிநயாஞ்சலி 2014 பற்றிய எனது பார்வை. இது நடனம்பற்றிய துறைசார் நிபுணத்துவம் அற்ற ஒரு மனிதனின் பார்வை. எனவே நடனங்களின் சரி பிழைகளோ, சாஸ்திரநுணுக்கங்களோ இங்கு உரையாடப்படப்போவதில்லை. மாறாக என் மனதை கவர்ந்த, சிந்திக்கத்தூண்டிய, எழுதத்தூண்டிய விடயங்களை பகிரவே நினைத்திருக்கிறேன். உரையாடவிரும்புவோர் உரையாடற் விழுமியங்களுக்கு உட்பட்டு உரையாடலாம்.

தரமான மேடை, துறைசார் நிபுணர்களினால் (டெக்னீஷீயன்கள்) நிர்வகிக்கப்பட்ட ஒலி, ஒளியமைப்புக்கள் ஒரு நிகழ்வின் வெற்றிக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்று இன்றைய நிகழ்வு ஒரு உதாரணம். நேர்த்தியான, ஆர்ப்பாட்டமில்லாத மேடையமைப்பும் நிகழ்விற்கு சிறப்புசேர்த்தன. இருப்பினும் இதே மேடையலங்காரத்தை பலதடவைகள் கண்ணுற்றிருக்கிறேன் என்பதை மறைப்பதற்கில்லை.

ஒலிபரப்பாளர்களின் நேர்த்தியான தமிழும், நோர்வேமொழியும் கேட்பதற்கு இதமாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தது. கேதீஸ்வரனின் குரல் கம்பீர வசீகரமானது. அவரது நிகழ்ச்சித்தொகுப்பினை நான் காண்பது இதுவே முதற்தடவை. பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு என்று ஒஸ்லோவில் சில ஜாம்பவான்கள் உண்டு. கேதீஸ்வரனும் காலப்போக்கில் அவர்களுடன் சேர்ந்துகொள்வார் என்றே நினைக்கிறேன். போட்டி நிகழ்வினை நெறிப்படுத்திய நிதுலாவின் தமிழும் அழகு. நோர்வே குழந்தைகளின் தமிழக்கு நான் அடிமை. மெளனிஷாவின் நோர்வேமொழியானது மீனுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா ரகம்.

சம்பிரதாயமான வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. மாணவியரின் பயிற்சியின் பலனை மேடையில் காணக்கூடியதாய் இருந்தது.‌ தாண்டவ நடனமானது பரதம், மோகினியாட்டம், கதக் என்ற நடனவகைகளை உள்ளடக்கி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. பலரும் இந் நடனத்தை ரசித்தார்கள் என்றே கருதுகிறேன். கரகோஷம் அதையே கூறியது. ஆடையலங்காரங்களும் நேர்த்தியாக இருந்தன. குழந்தைகளின் அசைவுகளும், நகர்வுகளும் சமச்சீராகவும் ரசிக்கத்தக்கனவாகவும் இருந்தன. சாதாரண ரசிகர்களின் மனதைக்கவர்ந்த நடனம் இது.

கண்ணண் வருகை“இன் குட்டிக் கண்ணண்கள் நிகழ்வினை அழகாக்கினார்கள் என்றே கூறவேண்டும். அத்துடன் கண்ணண் நின்றிருந்த தேர் நகர்ந்த காட்சியமைப்பும் அழகு. உடை மற்றும் உருவ அலங்காரங்கள் ஒரு நிகழ்வின் தரத்தை மேற் தளத்திற்கு நகர்த்துவதற்கு முக்கியமானவை. இப்போதெல்லாம் நாம் இப்படியான நுணுக்கங்களில் அதிக கவனத்தையும், நேர்த்தியையும் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறோம். அது மகிழ்ச்சிக்குரியது.

பிரிவுத்துயரை கூறும் ஒரு பாரதியின் பாட்டிற்கு தாலாட்டு அபிநயம் ஏன்? அவற்றிற்கான தொடர்பு என்ன? நான்தான் அதை பிழையாக விளங்கிக்கொண்டேனோ நானறியேன். தவறு எனின் மன்னித்துக்கொள்ளுங்கள்.

போட்டி நிகழ்வுகளில் முடிவுகனளப் பற்றிய சர்ச்சைகள் வராதிருந்தாரல்தான் ஆச்சர்யம். வெற்றி தோல்வியை அனைவராலும் ஒரேவிதமாக ஏற்றுக்கொள்ளமுடிவதில்லையே. முக்கியமாக பெற்றோருக்கு.

கடந்த ஆண்டின் போட்டிகளின்போது தோல்வியுற்ற மாணவியின் அழுகை இந்த ஆண்டு வெற்றியின் அழுகையாக மாறியிருந்தது. தோல்விகளையும் வெற்றிகளாக மாற்றலாம் என்பதை நினைவூட்டியது இச்சம்பவம்.

நாட்டிய நாடகத்தின் ஆரம்ப காட்சியமைப்புகள் அழகாக இருந்ததை நான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். கல்யாணத்தின்போது ஒரு பெண் மணமக்கள், நண்பர்களுடன் Selfie எடுப்பது போன்ற காட்சியை மிகவும் ரசித்தேன். இன்றைய யதார்த்தம் அது.

நாட்டிய நாடகம் என்று அறிந்ததும் நான் மகிழ்ந்ததென்னவோ உண்மைதான். நாட்டிய நாடகம் நான் எதைக் கருதினேன் என்று கூறியபின் தொடர்வதே சிறந்தது என்று நினைக்கிறேன். அதற்கு முன், இன்றைய நாட்டிய நாடகத்தின் கருவைக்கொண்ட Theme dans  ஒன்றினை நடன ஆசிரியை மேரி ஒளிவிழா ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் செய்திருந்தார் பதிவுசெய்கிறேன். ஒரு கருத்தை பலவிதங்களில் செய்வதொன்றும் தவறில்லை. மூலக்கதை ஒன்றாக இருப்பதாலேயே இதை இங்கு குறிப்பிடுகிறேன்.

பரதநாட்டிய அசைவுகள், அபிநயங்கள், வசனங்களின் அடிப்படையிலான ஒரு நடன நாடக நிகழ்வு என்றே நினைத்தேன். அதனாலோ என்னவோ என்னால் நாட்டிய நாடகத்துடன் ஒன்ற முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னைப்பொறுத்தவரையில் நாட்டிய நாடகத்தின் கதை நகரும் பாகங்களின் முக்கியதுவத்தை அறிந்து அதற்கேற்ப காட்சிகளை, நடனங்களை, கதையின் கனத்தை காண்பிக்கவேண்டும் எனக் கருதுபவன் நான். இந்த நடனத்தை போன்ற நடனவகைகளை நாட்டிய நாடகம் என்று கூறாமல் Theme dans என்றால் அது பொறுத்தமாயிருக்கும் என்றே நினைக்கிறேன். உதாரணமாக மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவ்வாறான Theme dans நடைபெறுவதைக் கூறலாம்.

இன்றைய நாட்டிய நாடகத்தின் கரு ”பெற்றோர்களின் பிரிவினால் குழந்தைகள் படும் அவலம்”. சிறந்ததொரு கரு. இது புலம்பெயர் சமூகத்தின் சாபங்களில் ஒன்று. நாட்டிய நாடகம் பற்றி, நிகழ்வின்பின், நண்பர்களுடன் உரையாடிபோது பிரச்சனைக்கான தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்று வாதம் வந்தது. எனனைப்பொறுத்தவரையில் பிரச்சனையை சமூகத்திடம் கொண்டுசெல்வதும் முக்கியமானதென்பேன். அதைத்தான் மாணவியரும் செய்திருந்தார்கள்.

ஆனால் நாட்டிய நாடகத்தின் ஆரம்பகாட்சிகளான காதல், அதன் பின்னான திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறத்தல், வளர்தல்பற்றிய காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும், சினிமா பாணியும், நேரமும், மிகச் சிறப்பாக இருந்தாலும் கதையின் அதி முக்கிய கருவான ”பாதிப்புறும் குழந்தையின் மனநிலை”க்கு என்னும் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஆரம்பக்காட்சிகள் கதையின் கரு அல்லவே. கதையின் கரு முக்கியத்துவம் பெறும் இடம் நாட்டிய நாடகத்தின் இறுதிப்பாகமே.

எனவே அப்பகுதி அதிக கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இந் நாட்டிய நாடகத்தை ஒரு தராசில் இடுப்பார்த்தால் கதையின் கரு இருக்கும் பாகம் கனம் குறைந்திருப்பதாகவே தோன்றும். இதனாலே என்வோ எனக்கு நாட்டிய நாடகத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. தாலியைக் களற்றி கணவனின் முகத்தில் எறிந்ததை பலரும் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள் என்பது முரண்நகை.

நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய ராதா சர்மாவின் உரையானது இடம், பொருள், ஏவல் உணர்ந்த மிகவும் பண்பட்ட, இளையோராலும் புரிந்துகொள்ளக்கூடிய ‌மொழியிலான உரை. அவர் ஒரு தலைசிறந்த நடன ஆசிரியர் என்பதை அவரது உரை காட்டிற்று.

சுயம்பு ஹரிகரனின் வாய்பாட்டு அருமை. ஒஸ்லோவில் அவர் இருப்பது எமக்குப்‌ பெருமை. இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் முக்கிய கவனத்தைப்பெற்றவர்கள் இசையை வழங்கிய எமது இளையோர்கள். இவர்களில் பலருடன் திறமையை இவ்வருடம் நோர்வே தமிழ்ச் சங்கம் நடாத்திய கர்நாடக இசைக்கச்சேரியில் கண்டிருந்தேன். சிறப்பாகவும், விரைவாகவும் வளரும் கலைஞர்கள் இவர்கள். இவர்களுக்கு பெரியதொரு பாராட்டு என் சார்பில். இவர்களுள் மெய்சிலிர்க்வைக்கும் பிறவிக் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

ஒரு சிறு குசும்பு:   :)
குத்துவிளக்கேற்றல் நிகழ்வில், பலவருடங்களின் பின் ஒஸ்லோவின் முக்கிய தமிழ்பிரமுகர்கள் ஒரே மேடையில் தோன்றியதை காணக்கிடைத்தது. அரசியல், கால, சூழ்நிலை மாற்றங்களின் அறிகுறியா இது? அதுவும் மகிழ்ச்சியானதே. காலம் பதில்கூறட்டும்.

பிரதமவிருந்தினர் ஒருவரின உரை என்பது ஒரு நிகழ்வின் முக்கிய உரையாகக் கருதப்படும். ஆனால் நேற்றைய நிகழ்விற்கு திருஸ்டி கழிப்பதற்காகவே பிரதமவிருந்தினரும், கொளரவ விருந்தினரான லண்டன் ஆசிரியையும் உரையாற்றினார்கள் என்றே நினைக்கிறேன். இதைவிட மிச்சிறப்பாக சமூகம் சார்ந்த கலை, சார்ந்த பிரக்ஞையுடன் உரையாற்றக்கூடியவர்கள் இங்கு இருக்கிறார்களே. இவ்வளவு அழகான நிகழ்வில் இவ்வளவு மோசமான, தவறான உள்ளடக்கமுள்ள உரைகள் தேவைதானா?

ஒருகேள்வி: ஏன் அனைத்துக் கலைக்கூடங்களும் அதிகமாக இந்துமதத்தின் புராணக்கதைகளை மட்டுமே  நடனங்களாக மாற்றுகிறார்கள்? இது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் பொருந்தும். நடனமாட வேறு கருக்களே இல்லையா? அல்லது இது எமது கற்பனை வறட்சியைக் சுட்டிக் காட்டுகிறதா?

இனி எழுதப்போகும் விடயம் சர்ச்யைத் தரலாம். அச்சர்ச்சை ஒரு வளமான உரையாடலாக மாறும் எனின் மகிழ்வேன்.

இலண்டன் நகரத்தில் இருந்து வந்திருந்த சிறப்புவிருந்தினர் உரையாற்றியபோது ”இந்த பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவுக்கு சமனானது என்ற தொனியில் கூறினார். இக்கூற்று எந்தவிதமான சமிக்ஞைகளை குழந்தைகளுக்கும், சமூகத்துக்கும் கொடுக்கும் என்பதை அவர் அறியாமலா அவ்வாறு உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் ”இல்லை, எமது பட்டமளிப்பினை  பல்கலைகழக பட்டமளிப்புடன் ஒப்பிடுவது தவறு என்று கூறியிருந்தாலாவது அவ்வுரையின் தவறும் அதன் தாக்கமும் குறைந்திருக்கும். ஆனால் எவரும் மறுத்துரைக்காதது இப்போது நிகழ்சியின் பொறுப்பாளர்களும் அதே கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையல்லவா தருகிறது?

இந்தக் குழந்தைகளின் நடனம்பற்றிய கல்வியை நாம் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவுடன் ஒப்பிடலாமா? மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி அங்கு இருக்கிறதே. பல்கலைக்கழக்கல்வி என்பது  எத்தனை ஆழமானது, விரிவானது. ஏறத்தாள 3 - 4 ஆண்டுகள் முழுநேரமாக, ஆய்வுகள், விரிவுரைகள், பெரும் பரீட்சைகளின் பின் கிடைப்பதே பல்கலைக்கழகப் பட்டமும், பட்டமளிப்பும். அதிலும் முதுமானிப் பட்டம், கலாநிதிப் பட்டம் என்றால் அவற்றின் கனம் வேறு.

அப்படிப்பட்ட பட்டமளிப்புடன் இக்குழந்தைகளின் பட்டமளிப்பை ஒப்பிடுவதும், அவை இரண்டும் ஒரே தகுதியுடையவை என்னும் தொனியில் உரையாற்றுவ‌தும் குழந்தைகளின் மனதிலும், பெற்றோர்கள் மனதிலும்  தேவைக்கு அதிகமான எண்ணங்களை வளர்க்காதா? நான் கற்றுத்தேர்ந்துவிட்டேன் என்ற எண்ணத்தையும் துளிர்க்கவைக்காதா? ஆங்காங்கே தலைக்கனத்தையும் தராதா? இது வளமானதா? இவற்றிற்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

புலம்பெயர் நாடுகளில் பரதக்கலையை கற்பது இலகுவல்லை. கற்பதை பாராட்டுவது அவசியம். ஆனால் இப்படியான போலியான புகழ்ச்சிகளும், பேச்சுக்களும், செயல்களும் எமது கலையின் தரத்தினை உயர்த்துமா? கலையின் தரம் என்பதில் எப்பொழுதும் சமரசம் இருத்தலாகாது. அவ்வாறு செய்யப்படும் சமரசங்கள் கலையின் வளர்ச்சிக்கு தடங்கலாகவே இருக்கும் என்பதை நாம்எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்.

குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக பட்டங்கள் வளங்கப்படுகின்றன என்றே நான் எண்ணுகிறேன். எனவே அப்பட்டங்களை பல்கலைக்கழப்பட்டங்களுடன் இணைத்து சிந்திப்பதும், உரையாற்றுவதும், எம்மை நாமே குழப்பிக்கொள்ளுவதும் எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளவதற்குச் சமம்.

இவரது உரையானது மிகவும் மலிமானதாகவே இருந்தது. அவரது பல கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை. உரையில் போலித்தன்மை அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது.
பிரபல மற்றும் பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர், லண்டன் ஓரின்டல் பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர் இவ்வாறு உரையாற்றியது ஆச்சயர்மாகவும், வேதனையாகவும், துக்கமாகவும் இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் நாம் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஆனால் எனது அனுபவத்தின்படி முகஸ்துதி செய்பவர்கள் நண்பர்களாகவும், விமர்சனத்தை முன்வைப்பவர்கள் எதிரிகளாகவும் நினைக்கும் சமூகம் எம்முடையது. போலியான முகஸ்துதியில் எனக்கு ஏற்பில்லை. அது வளமற்றது என்பதில் அதீத நம்பிக்கையுடையவன் நான்.

ஆனால் உரையாடலில் நம்பிக்கையுள்ளவன்.

தோழமையுடன்
சஞ்சயன்







No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்