ஒரு புடவையால் நான் பட்டபாடு

அம்மா வீட்டை கழுவித் துடைத்தபோது, வீட்டில் ஒரு புதிய புடவை இருந்திருக்கிறது.அதன் காரணமாக என்னைச் சுற்றி பெரும்புயல் அடிக்கிறது. புயல் மையம் கொண்ட இடம் அம்மா.

”இதை யாருக்கு குடுக்க வாங்கினாய்” என்று கேட்டபடியே என்னை வீடு முழுக்க கலைத்துக்கொண்டிருக்கிறார் அம்மா.

”ஓம்... அம்மா கேட்டபது சரிதானே, யாருக்கு வாங்கினீங்க அண்ணா” என்கிறாள் தங்கை.

அம்மாவிடம் உங்களுக்கு புது மருமகள் வரப்போகிறாள் என்கிறார், மச்சான்.
”டேய் மருமகன் சொல்லுறது உண்மையா?” என்று பயந்துபோய்க்கேட்கிறார், அம்மா.

”இல்லை அம்மா, அப்படி ஒரு நாசமறுப்பும் இல்‌லை” என்று தலையடித்து சத்தியம் பண்ணியிருக்கிறேன்.

என் ஒஸ்லோ முருகன் சத்தியமாக நான் அந்த புடவையை வாங்கவில்லை. அப்படி புடைவை வாங்கிக்கொடுக்குமளவுக்கு எனக்கு யாரும் இல்லை.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்னும் தீவீரவாதி நான். தவிர, புடவைக்கடை என்றாலே எனக்கு அலர்ஜி இருக்கிறது. அங்கு சென்றாலே இரத்தக்கொதிப்பும், தலைசுற்றும், வாந்திபேதியும் வரும்.

இரண்டு நாட்களாக அம்மாவின் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் எல்லா சாமிப்படங்களின் முன்பும் சத்தியம் பண்ணிவிட்டேன். அம்மா ஓய்ந்ததாய் இல்லை.

தங்கையிடம் நீ வாங்கினாயா என்றேன். இல்லை என்கிறாள்.

மச்சானும் அப்படியே.

அம்மா கடைக்கே போகவில்லை.

நானும் வாங்கவில்லை.

அப்ப எப்படி இந்த புடவை வீட்டுக்கு வந்தது என்று‌ யோசித்தபடியே நேற்று தூங்கினேன்.

சாமம்போல் பொறிதட்டியது ....

அம்மாவின பிறந்த நாளுக்கு வந்தவர்கள் அம்மாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு அது.

இப்போதெல்லாம் அம்மாவின் மறதி உலகப்பிரசித்தமானது.
”இருடி... விடியட்டும்” என்று கறுவிக்கொண்டிருக்கிறேன்.


இந்த வருடம் விடுமுறையின்போது நடந்த கதை இது

2 comments:

  1. ஆஹா ஞாபக மறதி சில கதைக்கு வழிகாட்டுது) )))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  2. >”இதை யாருக்கு குடுக்க வாங்கினாய்” என்று கேட்டபடியே என்னை வீடு முழுக்க கலைத்துக்கொண்டிருக்கிறார் அம்மா.

    இதில் என்ன பிழை?

    ReplyDelete

பின்னூட்டங்கள்