நிலத்தின் மனிதர்கள்

பாலஸ்தீனத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பக்காலங்களில் அவர்களது விடுதலைப்போராட்டத்துடன் கைகோர்த்திருந்திருந்தது என்பதையும் மறுக்கமுடியாது. யசீர் அரபாத் என்னும் பெயரின் மகத்துவத்தையும் நாம் மறந்திருக்கமுடியாது.
எனது பாலஸ்தீனத்து நண்பனுடன் வாகனத்தில் பயணித்துக்கொண்டிந்தேன். ரொபின் (பாலஸ்தீனக் கிறீஸ்தவ மதத்தவர்) அரபு மற்றும் ஹீபுரூ (யூதர்களின் மொழி) மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவன்.
மலைப்பகுதியின் வெம்மையான காற்று முகத்திலடித்துக்கொண்டிந்தது. இறுதி மழைத்துளி நான்கு மாதங்களுக்கு முன்தான் பெய்தது, இன்னும் 3 மாதங்களின் பின்தான் மீண்டும் மழை, இன்று வெக்கை தாங்கமுடியவில்லை என்றபடியே தண்ணீர்ப்போத்தலை எடுத்து அண்ணாந்து குடித்தான், ரொபின்.
நான் ஊர்ப்புதினங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்ட கறுப்புக் காற்சட்டை, வெள்ளை மேலாடை, கறுப்பு கோட், நெற்றியின் இருபக்கங்களிலும் சுருண்டு தொங்கும் சுருட்டை மயிர், உச்சந்தலையில் வெள்ளை நிற கிப்பாவுடன் (சிறு தொப்பி) ஒரு யூத இனதவர் தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நடந்துகொண்டிருந்தார். நாம் அவரைக் கடந்தபோது அவரது பார்வை இறுக்கமாகவே இருந்தது.
குழந்தைகள் இன்று ஒரு கறுப்பனைக் கண்டோம் என்று நண்பர்களிடம் என்னைப்பற்றி கூறி மகிழ்ந்திருக்கக்கூடும்.
மீண்டும் ரொபின் தண்ணீரை தொண்டைக்குள் கவிட்டான். அதன் பின் “இந்த வீதியில் இறுதியில் உள்ள மாடிக்குடியிருப்பில் ஒரு இரும்புப் பெண் இருக்கிறார். உனக்கு அதிஸ்டம் இருப்பின் அவரை நீ காணலாம்” என்றபடியே வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
வீதியின் நடுப்பகுதியில் வானத்தின் வேகத்தைக் குறைத்தபடியே, மேலே உள்ள சாரளத்தில் இருந்து கையசைக்கும் முதியவரைக் கவனி, என்றான்.
இவனது வாகனம் அவருக்கு பழக்கமானதாக இருக்க வேண்டும். தலைமுடியினை மறைத்த உடையுடன் அவர் கைசைத்துக்கொண்டிருந்தார். இவன் கண்ணாடியில் யாரும் வானகத்தை கவனிக்கிறார்களா எனப் பார்த்தான். எதிரே இருந்த காவலரனில் இருந்து அவதானிப்பது தெரிந்தது.
“கை காட்டாதே, பார்க்கிறார்கள்” என்றான். எதுவும் நடவாததுபோன்று நாம் அவ்வீதியை கடந்துகொண்டோம்.
அம் மூதாட்டிக்கு 80 வயதிருக்கலாம். வாழ்க்கை முகத்தில் தனது அனுபவத்தை சுருக்கங்களாக பதிந்திருந்தது. இரும்புக் கம்பிவேலியிட்டு தனது சாரளத்தை மறைத்துவைத்திருந்தார். அதைக்கடந்து துப்பாக்கிக்குண்டுகளும் ஏதேனும் திரவப்பொருட்கள் மட்டுமே செல்லமுடியும்.
ரொபின் வாகனத்தை திருப்பி எமது முகாமுக்குச் செலுத்தும்போது ஒரு கதை சொல்லத் தொடங்கினான்.
இந்த முதியவர் தங்கியிருக்கும் கட்டிடம் முன்பு பாலஸ்தீனர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்தக் பகுதியும் அவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்தப்பெண் அங்கு தனது குடும்பத்துடன் வாழ்ந்திருந்தார். 5 பெண்குழந்தைகள், 3 ஆண்குழந்தைகள். கணவன் தோல்பதனிட்டு அதில் கைத்தொழில் செய்பவர். வீட்டுக்கு கீழே அவரது கடை இருந்தது. அது முன்னொருகாலத்தில் மிகப்பிரபலமான கடைத்தெரு. அவர்களது வீட்டுக்கான வாயில் அக்கடைத்தெருவிலேயே இருந்தது.
அரபு மொழியில் இன்டி(f)பாடா (Intifada - انتفاضة) என்று ஒரு சொல் உண்டு. இதை ஈழத்தமிழுக்கு மொழிபெயர்த்தால் “பொங்கு தமிழ்” எனலாம். அதாவது எழுச்சி, மக்கள் எழுச்சி எனப்பொருள்படும்.
முதலாவது intifada (1987–1991)வின்போது கணவர் சுடப்பட்டு இறந்தபின் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். 2005ம் ஆண்டிளவில் அவரது வீடு அமைந்திருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை வாங்கிவிட்டோம். இது எங்களுக்குச் சொந்தமானது என்றபடியே இரண்டு யூத இனத்துக்குடும்பங்கள் அந்த கட்டத்திற்கு குடிவந்தன. இராணுவமும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களுடைய சொத்துரிமைப்பத்திரம் செல்லுபடியாகாது என நீதிமன்றம் தீர்மளித்த பின்பும் அவர்கள் அங்கு வாழ்ந்தனர். இராணுவப்பாதுகாப்பு பலமானது. காவலரண் உருவாகியது. அதைச்சுற்றி ஓரு குடியேற்றம் உருவாகத்தொடங்கிற்று. இருபகுதியினரும் மற்றைய பகுதியினரை கொலைசெய்துள்ளனர். பழைய ஆகமத்தில் குறிப்பிடப்படும் ஆப்பிரகாமின் சமாதியில் இரு இனத்தவர்களும் மற்றய இனத்தவர்களை கொன்றுகுவித்த கதையொன்று இருக்கிறது. அதை இன்னொருநாள் எழுதுகிறேன்.
இவரை அங்கிருந்த எழுப்புவதற்கு பகீரத முயற்சிகள் நடந்தன. பேரம் பேசப்பட்டது. வெற்றுக் காசோலை கொடுக்கப்பட்டது. இவரது வீட்டுக்கான வழங்கல் பாதைகளை அடைத்தார்கள். கடும் தொந்தரவு கொடுத்தார்கள். மனிதக்கழிவுகளை வீசினார்கள். எண்ணிலடங்கா தொல்லைகளைக் அனுபவித்தபின்னும், இது எனது நிலம், எனது வீடு, இங்குதான் வாழ்வேன், இறப்பேன் என்றுவிட்டு வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறார். வெளியே செல்லவேண்டும் எனின் வேறு வழியால் செல்லவேண்டும். சாரளத்தினருகே உட்கார்ந்திருப்பது அவர் பொழுதுபோக்கு. ரொபின் அவருக்கு அவ்வப்போது உதவுபவன். என்னை அவரிடம் அழைத்துப்போகக் கேட்டேன். நிட்சயமாக என்றிருக்கிறான்.
பாலஸ்தீனர்களின் பிரபலமான அந்த கடைத்தெரு இன்டிபாடாவின் பின் இராணுவத்தினால் மூடப்பட்டுவிட்டது. வியாபாரிகள் நட்டப்பட்டார்கள். 800 குடியேறிகளுக்கு 1000 இராணுவத்தினர் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். குடியேறிகளின் பகுதிக்குள் வாழும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கை மிகச் சிரமமானது. அவர்களுக்கென்று சில பாதைகள் மட்டுமே உண்டு. அவற்றை மட்டுமே அவர்கள் பாவிக்கலாம். சில பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாது. இராணுவக்கெடுபிடி அதிகம். இரண்டு நிடமிடங்களில் கடந்துவிடும் பாதை தடைசெய்யப்பட்டுள்ளதால் 15 நிமிடம் சுற்றி, மிகவும் உயரமான,கடும் பள்ளமான பாதைகளால் அவர்கள் பயணிக்கவேண்டும். வயதானவர்களுக்குக் கூட சலுகைகள் ஏதும் இல்லை.
இப்படியான சிரமங்கள் இருப்பதால் இப்பகுதி பாடசாலைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. இராணுவக்கட்டுப்பாட்டிற்கும், ஏனைய சிரமங்களுக்கும் பயந்து எவரும் அப்பாடசாலைகளை தெரிவுசெய்வதில்லை. வைத்தியசாலைகளும் அப்படியே. இஸ்ரேலிய வைத்தியசாலைக்கு பாலஸ்தீனர்கள் செல்லமுடியாது.
இப்படியான காரணங்களினால் இப்பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களின் சொத்துக்கள் விலை மிகவும் குறைவாகவே இருக்கும். வாடகைக்கும் விடமுடியாது. பாலஸ்தீனர்கள் வெளிநாட்டவர்களுக்கு சொத்துக்களை விற்க முடியாது என்ற சட்டம் மிகவும் கடுமையாக பாலஸ்தீன சுயாதீன அரசினால் அமுல்செய்யப்படுகிறது. இதற்குரிய முக்கிய காரணம் பினாமிகளின் பெயரால் அவற்றை யூதர்கள் அதீத விலைக்கு கொள்வனவு செய்து சிறிது காலத்தின்பின் தங்களின் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் அங்கு குடியேறுவதும், அதைத்தொடர்ந்து இராணுவ உதவியுடன் குடியேற்றம் ஆரம்பமாவதுமாகும்.
காலப்போக்கில் ஏழ்மையும், அடக்குமுறையும் இவர்களை இடம்பெயரச்செய்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக மனிதர்கள் குடியிருக்காத வீடுகள்களை இஸ்ரேலிய அரசு தனது சொத்தாக்கிக்கொள்கிறது.
பாலஸ்தீனர்களின் நிலத்தில் எவ்வாறு அவர்கள் வீடுகளை அரசுடைமையாக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். குடியேறிகள் வாழும் பகுதி பாலஸ்தீனர்களின் நிலமானாலும் அது இஸ்ரேலிய அரசின் கட்டுப்பாட்டிற்குரியது.
இவையனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புப் திட்டங்களே.
இத்தனையையும் எதிர்த்து தனது நிலத்திற்காகவும், நாட்டுக்காகவும் ஒரு பெரும் அரச இயந்திரத்தை எதிர்த்து வாழும் அந்த மூதாட்டியின் மெதுமெதுப்பான சுருக்கங்களைக்கொண்ட கைகளை பற்றிக்கெள்ளவேண்டும். எனது அம்மாவின் கையைப் போலிருக்கக்கூடும் அது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்