அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள்

1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன்.

கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலரல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், ச‌தையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை ‌வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போது முதன் முதலில் அவளை என்னுடன் அணைத்துக்கொண்டேன். வார்த்தைகளில் விபரிக்க முடியாத அனுபவம். பயமும், மகிழ்ச்சியும், தடுமாற்றமும் ஒன்றாய் கலந்த நிலை அது. நாமிருந்த அறையுனுள் ஒரு சிறிய நோர்வேநாட்டுக் கொடி வைக்கப்பட்டது.

அன்று மாலையே தனிஅறைக்கு மாற்றப்பட்டோம். குழந்தையையே பார்த்திருந்தேன். தூங்கிக் கொண்டிருந்தாள். தூங்கியபடியே இருந்தாள். ஒருவித பயம் என்னை சுழ்ந்துகொள்ள, மருத்துவத் தாதியை அழைக்கும் மணியை அமத்தினேன். கனிவான பார்வையுடன் வந்தார் ஒரு தாதி. குழந்தை கண்திறக்கவில்லை, தவிர ஒரே தூங்கிக்கொண்டிருக்கிறது என்றேன். ஆம் அதற்கென்ன என்றார் அலட்சியமாய். பின்பு, இது ஒன்றும் ஆபத்தில்லை, இப்படித்தான் எல்லாக் குழந்தைகளும் என்றபடியே அன்றுவிட்டார். என்னால் அவரை நம்பமுடியவில்லை. அடிக்கடி குழந்தை  மூச்சுவிடுகிறதா என்று பார்த்தபடியே இருந்தேன்.

அதே நாள், குழந்தை பால் குடித்த பின் அவளுக்கு விக்கியது. அவள் விக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு எனது நெஞ்சு வெளியே வருவது போலிருந்தது. குந்தையை துக்கியபடியே தாதிகளின் அறைக்கு ஓடினேன், குழந்தை விக்குகிறது என்றேன். எனது அவஸ்தையை சட்டைசெய்யாமலே விக்கல் தானாகவே அடங்கும், வீணாகக் குழம்பாதே என்றார்கள், என்னை திரும்பியும் பாராமல். சற்று நேரத்தில் விக்கல் அகன்று போனது.

மறுநாள் குழந்தைகளை எவ்வாறு நீராட்டுவது என்று கற்றுத் தந்தார்கள். பயந்து பயந்து கற்றுக்கொண்டேன். உடைமாற்றவும் கற்றுக்கொண்டேன். வீடு வந்த போது எனக்கு என்று சமைத்துக்கொள்ள முடியவில்லை. பத்திய சாப்பாட்டை எனக்கும் சேர்த்து செய்துகொண்டேன்.

குழந்தையை அடிக்கடி பார்ப்பதும், அவள் மூச்சு விடுகிறாளா என்று அவதானிப்பதுமாயிருந்தேன். வீடுவந்த பின்பும் ஒரே தூங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை. என்னை ஒரு தடவையேனும் பாக்கவில்லையே என்று ஒரு ஆதங்கம் குடிவந்துகொண்டது. கட்டிலின் அருகே குந்தியிருந்து பார்த்துக்கொண்டேயிருப்பேன். நான் அருகிலிருப்பதை அறியாது தூங்கிக்கொண்டிருப்பாள் அவள்.

நாட்கள் ஓட, ஓட அவளின் கண்பார்வை ஒரு இடத்தில் குத்திநின்று என்னைப் பார்த்துச் சிரித்த போது உலகமே மறந்துபோன நிலையில், நாள் முழுவதும் அவளுடனேயே ஓடிற்று. அவள் இரவில் தூங்க மறுத்த நாட்களில் அவளை காரில் வைத்து மணிக்கணக்காய் கார் ஓடியிருக்கிறேன். அவளும் தூங்கிப் போவாள். மீண்டும் வீட்டுக்குள் வந்ததும் அழத்தொடங்குவாள். அவளின் கையுக்குள் எனது சின்னவிரலை வைத்தால் பிஞ்சு விரல்களால் இறுக்கமாய் முடிக்கொள்வாள். அந்த ஸ்பரிசத்தில் மெய்சிலிக்கும். பால் குடித்தபின் ”ஏவறை” எடுப்பதற்காய் அவளை நிமிர்த்தி, எனது தோளில் அவள் தலை சாய்த்து, முதுகில் தட்டியபடியே ஏவறை வரும் வரை நடந்துகொண்டிருப்பேன். அவளுக்கு ஏவறை வராதிருந்தால், எனக்கு ஏவறை வராது அசௌகரீயப்படுவது போலுணர்வேன். இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்.

விரைவில் என்னை பார்த்து சிரிக்கமாட்டாளா என்று நினைப்பேன். சிரித்ததும், உடம்பு திருப்புவாளா என்று காத்திருப்பேன். உடம்பு திருப்பியதும், உட்கார மாட்டாளா, தவழமாட்டாளா என்று கனவு ஓடிக்கொண்டேயிருந்தது. நாட்கள் மெதுவாய் கடந்து போவது போல் ஒரு பிரமை. அவளை அணைத்தபடியே தூங்கிப்போவேன். திடீர் என்று முழிப்பு வரும். அவளின் வசதியாகத் தூங்குகிறாளா என்று எழும்பியிருந்து பார்ப்பேன். நாட்கள் செல்லச் செல்ல அவளின் மெதுவான சத்தங்களுக்கெல்லாம் அர்த்தம் புரிந்தது. எது எது பசிக்கான, தூக்கத்துக்கான, சுத்தத்திற்கான, மகிழ்ச்சிக்கான சத்தங்கள் என்று தெரிந்த பின் அவளுடன் ஒரு வித தொடர்பாடல் கிடைத்ததுபோலாயிற்று.

மிருதுவான தலைமுடி, மெதுமையான கன்னங்கள், ஒளி கொண்ட கண்கள், உமிழ்நீரில் நனைந்தொழுகும் வாய், மடிப்பு விழுந்த கழுத்தும் வயிறும் தொடைகளும், மிருதுவான கால்கள் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்‌வொரு வாசனை, எல்லா வாசனைகளும் கலந்ததோர் இன்னுமொரு வாசனை. என்னால் இன்றும் அவ்வாசனைகளை உணர முடிகிறது.

5 - 6 மாதங்களின் பின்னான காலங்கள் மிகவும் இனிமையானவை. என்னை யார் என்று அடையாளம் கண்டு கொண்டாள். அன்னியர்கள் அழைத்தால் என் கழுத்தைக் கட்டிக்கொள்வாள். பெருமையில் நிறைந்து போகும் மனது. அப்பாவின் குழந்தை என்பார்கள், மகிழ்ச்சிக்கு அளவிருக்காது அந்நேரங்களில். 

”முட்டு முட்டு” என்றால் முட்டுவாள், ”சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” விளையாடுவோம். அவளை தூக்கியபடியே துள்ளினால் அல்லது ஓடினால் பெரிதாய்ச் சரிப்பாள். அவளின் எச்சில் கலந்த முத்தங்களினாலும், பல்லில்லா வாயினால் கடித்தும், பூப்போன்ற அவளது கைகளினால் அணைத்தும், அவளின் அன்பிளை அள்ளி அள்ளி பொழிந்திருக்கிறாள், என்மீது.

எமது வீட்டில் ஒரு சாய்மனைக்கதிரை இருந்தது. பின் மாலைப்பொழுதுகளில் அவளை என் நெஞ்சில் சாய்த்தபடியே தூங்கவைப்பேன். துங்கியதும், அவளின் அழகு தெய்வீக அழகாய் மாறிப்போகும். அவள் சுவாசத்தின் ஒலியினை ரசித்தபடியே அவளைப் பார்த்திருப்பேன். தூக்கத்தில் சிரிப்பாள், நானும் சிரிப்பேன். சில வேளைகள‌ில் அழுவது போல் விம்முவாள், அதை தாங்க முடியாது அவளின் தலைவருடி முதுகினைத் தடவி என்னுடன் அணைத்துக்கொள்வேன். சிறு சிறு சுகயீனங்களின் போது என்னுடனேயே இருப்பாள். சுருண்டு, தளர்ந்து போயிருக்கும் அவளைப் பார்ப்பதே பெரும் வேதனையாயிருக்கும். என் தோளில் சார்த்தியபடியே தாலாட்டுப்பாடுவேன். மெதுவாய் உறங்கிப்போவாள். இன்றுவரை என் தாலாட்டில் உறங்கிப்போனவர்கள் இருவர். அவர்களில் இவள் முதலாமவள்.

‌உடலைப் புறட்டி, உட்காந்து, தவண்டு, எழுந்து நின்று, தள்ளாடி நடந்த போது அவள் ஏதோ உலகசாதனை செய்தது போலிருந்தது எனக்கு. மாலைநேரங்களில் வீடு வரும் போது கதவருகில் காத்திருப்பாள். அள்ளி‌ கையில் எடுத்தால் அதன் பின்னான நேரங்கள் நீராய் கரைந்தோடும். அவளின் நீராட்ட நேரங்கள் மிகவும் மகிழ்ச்சியானவை. நீரினுள் விளையாடி அலுக்காது அவளுக்கு. உடல் துடைத்து, தலை துவட்டி, ஓடிகொலோன் இட்டு, உடைமாற்றிய பின் அழகியதோர் பொம்மையாய் மாறியிருப்பாள் அவள். தூக்கமும் வந்தமர்ந்திருக்கும், அவள் கண்களில். பால்போத்தலுடன் என்னருகில் தூங்கிப்போவாள். என்னை மறந்து ரசித்திருப்பேன் நான். அவளின் ஈரம் துவட்டிய ஒரு பருத்தித்துணியோன்று இன்றும் என்னிடம் இருக்கிறது. அதில், இன்னமும் அவளின் ஈரமும், வாசனையும் ஒட்டியிருப்பதாகவே உணர்கிறேன். அதைக் கையிலெடுத்து முத்தமிடும்  நாட்களும் உண்டு.

முதன் முதலில் ”அப்பா” என்று அழைத்த போது எமது நெருக்கம் மேலும் கூடிப்போனது. நெருக்கம் மேலும் அதிகரித்தது தன்னை தேற்றிக்கொள்ள அவள் என் கழுத்தையே கட்டிக்கொள்ளத் தொடங்கியதால். அந் நேரங்களில் அவளின் குழந்தையாய் மாறிப்போனேன் நான். அந் நாட்களில்,  அவளை அம்மா என்று அழைப்பதையே விரும்பினேன். எனது அம்மாவிடம் கிடைக்கும் ஆறுதல் அவளிடம் கிடைத்தது.

அவளின் வயது ஒன்று, இரண்டு, மூன்று என்று ஆகிய போது அவளே யாதுமாய் இருந்தாள். எமது நடைப்பயணங்கள், சைக்கில் பயணங்களில் அவளின்  ”ஏன்” என்னும் கேள்விகளுக்கு அவளுக்கு புரியும் படி பதில் ‌கூறமுடியாது தடுமாறியிருக்கிறேன். சில நேரங்களில் அவளின் கேள்விகள் சிந்திக்கத்தூண்டும்.

அவளின் தூக்கம் கலையும் நேரங்களில் அருகில் இருந்து தலைகோதி, முத்தமிட்டு, அள்ளி அணைத்து, தூக்கி, இறுக அணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ”போர்” தான். நான் கெஞ்சி, அவள் மிஞ்சி அதன் பின்பு தான் எங்கள் போர் ஓய்நது போகும்.

அவளுக்கு மூன்று, நான்கு வயதாயிருக்கும் நாட்களில் படுக்கைக்கு செல்லும் முன் கதை சொல்லத் தொடங்கியிருந்தேன். தினம் தினம் புதிய புதிய கதைகள். பாட்டி வடை சுட்ட கதை, சொன்னதை செய்யும் சுப்பன் கதை, குரங்குகளும் தொப்பிகளும் கதைகளில் இருந்து தற்கால ”பார்பி”, ”டெலி டபீஸ்” மற்றும் ”ப்ராங்லின்” போன்றவர்களை வைத்து நான் இயற்றிய கதைகள் வரை தினமொரு கதை அவளுக்கு 10 வயதாகும் வரை கூறியிருக்கிறேன். அவளுக்கு பிடித்த ”கதைசொல்லி” நான் என்பதில் எனக்கு ஏகத்துக்கும் பெருமையுண்டு.

அவளுக்கு சைக்கில் ஓடப்பழக்கியது என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். இரண்டே நாளில் ”அப்பா கையை விடு, நான் இப்போ தனியே ஓடுகிறேன்” என்றாள். பயந்து பயந்து கையை விட்டதும் தடுமாறி தடுமாறி ஓடி, சற்று நேரத்தில் திடமாய் ஓடினாள். அவளின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள். பெருமையாய் நெஞ்சுவிம்பி நின்றிருந்தேன் நான். பனிச்சறுக்க விளையாட்டிலும் அப்படியே. அவளும் நானும் பனியில் நீண்ட தூரம் சறுக்கிச் செல்வோம். நேரம் மறந்து நீண்டு போகும் எமது விளையாட்டு.

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய நாட்கள் அவை. தினம் தினம் உயிர்த்திருந்தேன். அண்மையில் ”அபியும் நானும்” திரைப்பட இயக்குனர் ராதாமோகனுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத் திரைப்படத்தைப்பற்றியும் பேசக்கிடைத்தபோது எனது வாழ்வின் ஒரு பகுதியை படம் பிடித்திருக்கிறீர்கள் என்றேன். புன்னதை்தபடியே ”தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா” என்னும் அப் படத்தின் பாடல் வரிகள் உண்மையானவை என்றார். என் நெஞ்சு விம்மியடங்கியது. ஆம், அந்த வரிகளின் உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவே வாழ்வின் உச்சம்.

இருப்பினும், பெருங்குடி நன்மக்கள் சிலர், தந்தையர்க்கு குழந்தைகளின் மேல் பாசமில்லை என்கிறார்கள். ஏளனப் புன்னகையுடன் கடந்துபோகிறேன், அவர்களையும்.


காவியா என்னும் எனது காவியத்துக்கு இது  சமர்ப்பணம்.


24 comments:

  1. மீண்டுமொரு மனதை தொடும் பதிவு. அருமை!

    ReplyDelete
  2. மனதைத் தொட்டது மாத்திரமல்ல கண் கலங்க வைத்து விட்டது ..ஆம் பெண் பிள்ளைகளுக்கும் ஆண்பிள்ளைக்கும் வித்தியாசத்தை நான் உணர்ந்தேன்..பெண் பிள்ளைகள் உணர்ச்சிகளை வெளியிடும் விதமே தனி தான் ..முதற் பிள்ளையின் உணர்வு தனிதான் ... முதற் பிள்ளையை நான் பார்த்த பொழுது ஏதோ ஒளிக்கீறு வந்திறங்கிய மாதிரித் தெரிந்தது ...பிள்ளை பிறந்தவுடன் எல்லாப் பாரமும் நீங்கி அந்தரத்தில் பறந்தது போல் உணர்ந்தேன் ....நினைவூட்டியதற்கு நன்றி..

    ReplyDelete
  3. Miga arpudhamaaga ezhudhi irukireergal. kangal panithu vittadhu. idhai ponra anubhavam engal veetilum undu.

    Priya

    ReplyDelete
  4. அழகாக , குழந்த உலகத்தோடு மிக நெருக்கமாக இணைந்து எழுதியுள்ளீர்கள்!

    ReplyDelete
  5. ”தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா” என்னும் அப் படத்தின் பாடல் வரிகள் உண்மையானவை
    எனக்கும்தான்.

    ReplyDelete
  6. என் அப்பாவை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் !

    ReplyDelete
  7. அந்த பசுமையான நினைவுகள்....மீண்டும் துளிர்த்தன.அனுபவிக்காத வர்களுக்கு புரியாது எனக்கும் இதனரைபகுதி வரை ஒரு காலத்தில் கிடைத்தது .....அபியும் நானும் நல்ல கதை எல்லா அப்பாக்களும்பார்க்க வேண்டும். .

    ReplyDelete
  8. nice post.... thanks to share.... www.rishvan.com

    ReplyDelete
  9. //உடலைப் புறட்டி, உட்காந்து, தவண்டு, எழுந்து நின்று, தள்ளாடி நடந்த போது அவள் ஏதோ உலகசாதனை செய்தது போலிருந்தது எனக்கு.//

    நாம் குழந்தைகளோடு செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் மறக்க முடியாதவை... என் குழந்தையைக் கொஞ்சி விளையாடும் பருவத்தில் (7மாதம்) இப்போது நானிருக்கிறேன்.. ஒவ்வொரு கிழமையும் அவனைப் பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் பயணம் செய்கின்றேன்..

    அருமையான கட்டுரை... இவை மீண்டும் வராத நாட்கள்

    ReplyDelete
  10. >குழந்தையை அடிக்கடி பார்ப்பதும், அவள் மூச்சு விடுகிறாளா என்று அவதானிப்பதுமாயிருந்தேன். வீடுவந்த பின்பும் ஒரே தூங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை.

    அதே அதே. அதிகம் தூங்கினாலும் worried. அதிகம் 'முழித்திருந்தாலும்; worried.

    ReplyDelete
  11. தந்தைப்பாசம்!

    ReplyDelete
  12. நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகிய நடை

    ReplyDelete
  13. இந்த கற்பனையில் தான் நானும் வாழ்கிறேன்.................என்று நிஜமாகும் என்று தெரியாமல்...........!!!

    ReplyDelete
  14. கதைக்குள் ஒரு கதைபடித்தேன். அந்தக்கதையின் கனம் உணர்ந்தேன்.

    "இருப்பினும், பெருங்குடி நன்மக்கள் சிலர் தந்தையர்க்கு குழந்தைகளின் மேல் பாசமில்லை என்கிறார்கள். ஏளனப் புன்னகையுடன் கடந்துபோகிறேன், அவர்களையும்".

    fijf;

    ReplyDelete
  15. Great!!! No words to say!!!!

    ReplyDelete
  16. கலங்கடிச்சிட்டிங்க. இன்னொரு அபியும் அப்பாவும் படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு

    ReplyDelete
  17. மகளின் பாசத்தை தந்தை எவ்வாறு உணர்ந்தார் என்பதைச் சொல்லி மனதில் கனதியைத் தந்த பதிவு .

    ReplyDelete
  18. அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள். தந்தையுள்ளத்தின் பரிவும் நெகிழ்ச்சியும் வரிக்கு வரி நிதர்சனம்.

    எனக்கு மிகவும் பிடித்த இப்பதிவை வலைச்சரத்தில்
    பதிவிட்டுள்ளேன். உங்களின் மற்ற சில படைப்புக்களையும் இணைத்துள்ளேன்.

    கீழிருக்கும் சுட்டி உங்கள் பதிவு இணைத்த எனது இடுகை.

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_20.html

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  20. Mihavum arumayahe yeluthi irukkiringe Sanjeyan Anna, ithu yennudaiye kannukkutti mahalin (thaai) anpup polivai unarthiye kathai pile ullathu..ungal pathivukku yenadhu valthukkal.

    ReplyDelete
  21. Mihavum arumayahe yeluthi irukkiringe Sanjeyan Anna, ithu yennudaiye kannukkutti mahalin (thaai) anpup polivai unarthiye kathai pile ullathu..ungal pathivukku yenadhu valthukkal.

    ReplyDelete
  22. பெண்பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி இன்னொருவனின் கையிலே ஒப்படைத்து விடுகிற போது ஏற்படும் ஆழமான பிரிவுத் துயரம் தாங்க முடியாததது. இது ஒவ்வொரு தந்தைக்கும் ஆனது. ஒரு தாயாகி குழந்தையை வளர்த்தெடுக்கிற தந்தையின் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அம்மாக்கள் மட்டும் அல்ல. அப்பாக்களும் கூட தெய்வீகமான தியாகப் படைப்புக்களே. ஆண்மைகளுக்குள் மௌனமாய் கசியும் ஈரவலியின் வேர் மிகவும் ஆழமானது. குறிப்பாக பெண்பிள்ளைகள் மீதான தந்தைப் பாசம் நெகிழ்ச்சிக்குரியது. அனுபவித்து எழுதிய வரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தந்தையின் சத்தியம் மிக்க சாட்சிகள் ஈரமாக இருக்கிறது. இது எப்போதும் ஈரமாகவே இருக்கும்.

    ReplyDelete
  23. பெண்பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி இன்னொருவனின் கையிலே ஒப்படைத்து விடுகிற போது ஏற்படும் ஆழமான பிரிவுத் துயரம் தாங்க முடியாததது. இது ஒவ்வொரு தந்தைக்கும் ஆனது. ஒரு தாயாகி குழந்தையை வளர்த்தெடுக்கிற தந்தையின் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அம்மாக்கள் மட்டும் அல்ல. அப்பாக்களும் கூட தெய்வீகமான தியாகப் படைப்புக்களே. ஆண்மைகளுக்குள் மௌனமாய் கசியும் ஈரவலியின் வேர் மிகவும் ஆழமானது. குறிப்பாக பெண்பிள்ளைகள் மீதான தந்தைப் பாசம் நெகிழ்ச்சிக்குரியது. அனுபவித்து எழுதிய வரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தந்தையின் சத்தியம் மிக்க சாட்சிகள் ஈரமாக இருக்கிறது. இது எப்போதும் ஈரமாகவே இருக்கும்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்