கதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்

முன்பொரு காலத்திலே சஞ்சயன் என்றொருவர் நேர்வேயில் வாழ்ந்திருந்தார். இப்போதும் வாழ்கிறார். அவரின் மனச்சாட்சியாகிய நான் எழுதும் ஒரு பதிவு இது.

அவருக்கும் எனக்குமான உறவு ஏறத்தாள 46 வருடங்களானது. எங்களைப் போல் சண்டைபோட்டு சாமாதானமாகியவர்கள் யாராவது இருப்பார்களோ என்பது சந்தேகமே. நாம் நண்பர்களாகவும், எதிரிகளாகவும் இருந்திருக்கிறோம். நான் வென்ற நாட்களும் இருக்கின்றன. என்னை மிதித்து துவைத்து தனது குரோதங்களை, விரோதங்களை அவர் தீர்த்துக் கொண்ட நாட்களும் உண்டு. நன்றும் தீதும் பிறர் தர வாரா!

இன்றைய பதிவு முன்பொரு காலத்தில் எமக்குள் நடந்த யுத்தத்தினைப் பற்றியது. அதில் அவரே அன்று வென்றார். பல ஆண்டுகளின் பின்னான ஒரு நாள், நான் அச் சம்பவத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்றேன். எழுது என்றார, சில வாரங்கள் சிந்தித்த பின். ஆக இறுதியில் அந்த யுத்தத்திலும் வெற்றி பெற்றது நான் என்பதில் எனக்குப் பெருமையிருக்கிறது. நான் என்றெல்லாம் வெற்றிபெறுகறேனோ அன்றெல்லாம் அவரும் வெற்றிபெறுவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் அவரால் அதை ஜீரணிக்க முடியாதிருக்கும் சில பல சந்தர்ப்பங்களில்.

அந் நாட்களில் அடிக்கடி தொழில் நிமித்தமாக வெளிநாடு பயணமாக வேண்டியிருக்கும் அவருக்கு. இன்று பலராலும் கஜனி அல்லது சஞ்சய் ராமசாமி என்று செல்லமாக அழைக்கப்படும் அவருக்கு, அந்தக் காலத்தலேயே ஞாபகமறதி என்னும் நோய் அவர் உடலினுள் மெல்லப் பரவியிருந்தது.

ஒரு முறை போலந்து நாடு சென்று திரும்பிக்கொண்டிருந்தார். விமானம் 6 - 7 மணிநேரம் தாமதமாகி வந்து சேர்ந்து. வீடு வந்து சேரும் போது மேலும் 2 மணிநேரங்கள் தாமதமாகியிருந்தன. நம்மவருக்கோ பலத்த அலுப்பு. வெய்யில் காலமாகையால் பயணக்களைப்பு, வெக்கை இரண்டும் சேர்ந்து உடனே குளிப்பதற்கு அவரை உந்திக் கொண்டிருந்தன.

நமது கதாநாயகன் தனது மறதியின் மீது கடும் பயம் கொண்டவர். எனவே பயணங்களின் போது எப்போதும் அவரது கடவுச் சீட்டு அவரது காட்சட்டை பையினுள்ளே இருக்கும். அது அவருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதை மறுப்பதற்கில்லை. அன்றும் அப்படித்தான் கடவுச்சீட்டு காட்சட்டைப் பையில் இருந்தது. குளிக்க முதல் உடைகளை அகற்றி அவற்றை உடுப்புக்கழுவும் இயந்திரத்தில் இட முதல் மறக்காமல் கடவுச் சீட்டை எடுத்து உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே வைத்தார்.

அவரின் உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே உடுப்பு காயவைக்கும் இயந்திரம் இருந்தது. இவ் இரண்டு இயந்திரங்களுக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி இருந்தது. கடவுச்சீட்டை அங்கு தான் செருகி வைத்தார். வெளியில் அரைவாசியும் உள்ளே அரைவாசியுமாக கடவுச்சீட்டு இருந்தது. உடுப்பு கழுவும் சவர்க்கார தூளை இயந்திரத்தினுள் இட்டு இயந்திரத்தை இயக்கிவிட்டு குளித்து உடைமாற்றி, உண்டு களித்து, இளவரசிகளுடன் விடையாடி ஓய்ந்து தூங்கிப்போனார் நம்ம ஹீரோ.

உடுப்புக்கழுவும் இயந்திரம் இயங்க இயங்க கடவுச்சீட்டு மெல்ல மெல்ல நகர்ந்து இரண்டு இயந்திரங்களுக்கும் நடுவில் போய் ஔிந்து கொண்டது. நம்மவரும் கடவுச் சீட்டை  சுத்தமாக மறந்து போனார். நாட்கள் ஓடின. கடவுச்சீட்டு ஒளிந்த இடத்தில் இருந்த வெளியே வரவில்லை. இவரும் அதை தேடவில்லை. ஏறத்தாள ஓரு மாதத்தின் பின் திடீர் என்று ஒரு நாள் மீண்டும் வெளிநாடு போகவேண்டி ஏற்பட்டது.

கடவுச்சீட்டை தேடினார். தேடினார். வீட்டின் எல்லைவரை சென்று தேடினார். கத்தினார், குதித்தார், அவருக்கே உரித்தான பாணியில் குழந்தைகளை வெருட்டினார். குழந்தைகள் இது சோடா போத்தல் மாதிரி.. திறந்து சற்று நேரம் புஸ்ஸ் என்று காற்று வரும் பிறகு அடங்கிவிடும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்கள் இவரைக் கண்டுகொள்ளவே இல்லை.

அடுத்தது அதே வீட்டில் இன்னொருவர் இருந்தார். அவருக்கும் இவருக்கும் வீட்டுக்கு வீடு வாசல்படி போல அடிக்கடி வெடிக்கும, அடங்கும். கடந்த சில நாட்களாக வெடித்துக்கொண்டிருந்தது. அதையும் சோர்த்து
 ”நீ தான் எடுத்து அதை விற்றிருக்கிறாய் என்றார்” நம்மவர்
பதிலுக்கு பார்வையால் இவரை எரித்தார் அவர்
இவர் திட்டினார் அவரை
உனது தம்பியை வெளிநாட்டுக்கு எடுக்க அதை இலங்கைக்கு அனுப்பிவிட்டாய, உனது குடும்பமே கொள்ளைக்காரர்கள என்றதும் தொடங்கியது குத்தாட்டம்.
குழந்தைகள் போய் படுத்துவிட்டார்கள்.
நம்மவரின் வாயால் அன்று வந்த வார்த்தைகளை என்னாலேயே சகிக்க முடியவில்லை. எனவே அவற்றை தவிர்த்து விடுகிறேன் இங்கு.

மற்றவர் குற்றம் சாட்டப்பட்டு, வார்த்தைகளால் காயப்படுத்தப்பட்டு கண்ணை கசக்கியதும் நம்மவருக்கு வெற்றியின் வெறியும் மமதையும் அதிகமாகி அன்றைய நாளை தனது வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாற்றிக் கொண்டார். நானும் பேசிப் பார்த்தேன். பச்சைத் தூஷணத்தால் திட்டினார் என்னை. அடங்கிவிட்டேன் நான்.

போலிஸ் சென்று புது கடவுச் சீட்டு பெற்றுக் கொண்ட பின்பும்  இந்த கடவுச்சீட்டு விடயம் ஏறத்தாள பல மாதங்கள் ஏறக்குறைய தினமும் நடந்தது.   மற்றவரும் இப் பிரச்சனையை எடுத்ததும் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். மற்றவரை எரிச்சல் மூட்ட இதையே  இதையே ஆயுதமாக எடுத்தார் நம்மவர்.

அதே வேளை நம்மவரின் வீட்டுக்கு ஒருவர் வந்து போவார். அவர் ஆட்கடத்தல் தொழிலில் இருந்ததாகவும் வதந்தயிருந்தது. நம்மவர் அவரையும் சந்தேகப்பட்டார். திட்டினார். அறுவான் என்றார். ஊருப்படமாட்டான் என்றார். பச்சைத் தூஷணத்தாலும் திட்டித் தொலைத்தார். நான் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டேன்.

நான் பேச முற்படும் போது என்னையும் அநியாயமாய் அடக்கினார். ஆனால் நம்பவரின் வீட்டை விட்டு வெளியில் குறிப்பிட்ட நபரின் பெயரை மறந்தும் உச்சரிக்கவும் இல்லை, புறம் பேசவும் இல்லை.  ஆதலால் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன் என்பதும் உண்மைதான்.

பின் பொருநாள் நம்மவரின் உடுப்புகழுவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காய் வேறு இடம் மாற்றிய போது ஒளிந்திருந்த கடவுச்சீட்டு வெளியில் வந்த போது நம்மவர் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. மனிதா் தலையைக் குனிந்துகொண்டார். நான் அருகில் சென்று தோளில் கை போட்டுநாம் சற்று பேசலாமா என்றேன்.  தர்ம அடி வாங்கிய வடிவேலு போல் மிகப் பரிதாபமாய் பார்த்தார் என்னை.

அவரை அழைத்துக் கொண்டு வெளியில் சிறு நடை சென்று வந்த பின் வீட்டில் இருந்த மற்றவரிடம் வேண்டா வெறுப்பாய்  மன்னித்துக்கொள் என்றார். மாபெரும் கொளரவப் பிரச்சனையல்லவா எனவே  ஒரு சொல்லுடன் அடங்கினார் நம்மவர். நானும் பெரிதாய் எதையும் பேசவில்லை. அவர் தன் தவறை உணர்ந்ததே எனக்கு போதுமானதாய் இருந்தது.

அதன் பின்னான காலங்களில் நம்மவர் மற்றையவரிடம் ” மறதில அங்க இங்க வைக்கிறது பிறகு என்ட குடும்பத்தை இழுத்து திட்டுறது” என்று வாங்கிக் கட்டும் போதெல்லாம் நம்மவர் குனிந்த தலை நிமிராதிருப்பார்.

இது நடந்ததன் பின் எவரையும் ஆதாரமின்றி திட்டுவதை நிறுத்தியிருக்கிறார் நம்மவர். எனவே நானும் அவரிடம் இவ்விடயம் பற்றி பேசுவதை நிறுத்தியிருக்கிறேன். இது பற்றி உங்களுடன் பேச நான் பல காலமாய் முயற்சித்திருந்தாலும் அனுமதி கிடைத்து சில நாட்களே ஆகின்றன. ஆக நம்மவர் நாள் போக போக சிறுது சிறிதாய் பண்படுகிறார் என்றே யோசிக்கத்தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?

உங்களுக்குள்ளும் எனது உறவினன் ஒருவன் இருப்பதாக அறிகிறேன். விரும்பினால் பேச அனுமதியுங்கள்.

என்னைப் பேச அனுமதித்த அவருக்கும், கதையை கேட்ட உங்களுக்கும் நன்றி.


இன்றை நாள் மிகவும் நல்லது!

தலைப்பு பற்றி தயவு செய்து திட்டாதீர்கள். மன்னித்தருளுங்கள் .. கூல் மாமு கூல்

13 comments:

  1. உங்கள் மறதி பற்றிப் படித்தபோது எனது மறதிகள் பற்றியும் எழுத வேண்டும் போலிருக்கிறது.

    ஆனால் எனக்கு இவ்வாறு வித்தியாமாகச் சொல்லத் தெரியாது.

    அந்தக் காலத்தில் சிரித்திரனில் மறதி மறதி மறதி.. என ஒரு கட்டுரையை நான் எழுதியதும் ஞாபகத்தில் வருகிறது.

    ReplyDelete
  2. இதென்ன தலைப்பு?

    இதற்குத்தானா?

    page view today- 1,000,345
    page before today- 22 (20 by Sanjayan, family and friends); 2- accidental

    :-)

    ReplyDelete
  3. எஸ். சக்திவேல் @ எனது மனதைத் திறந்தேன் காற்று வருவதற்காக. அத்துடன் எனது இரகசியம் ஒன்று அம்பலமாகிறது.. எனவே தான் கதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள் என்று பெயர் வைத்தேன். காகம் இருக்க பனம்பழம் விழுந்த மாதிரி பீல் பண்ண வைக்கிறீங்களே...

    சத்தியமா நான் சாமியாரை நினைக்கலீறங்கண்ணா...

    ReplyDelete
  4. >சத்தியமா நான் சாமியாரை நினைக்கலீறங்கண்ணா...
    நம்பிறேங்க!
    :-)

    ReplyDelete
  5. பிரமாதம். எல்லோருக்கும் இப்படியான அனுபவம் நிச்சயம் இருக்கும். எனக்கும் நிறைய உண்டு

    ReplyDelete
  6. எல்லோர் வாழ்க்கையிலும் இப்படியான அனுபவம் வருவது உண்டு. பகிர்ந்த விதம் புதுவிதம். அருமை!

    ReplyDelete
  7. பகிர்ந்த விதம் புதுவிதம். அருமை!

    ReplyDelete
  8. தலைப்பு இருக்கட்டும், எழுதி இருக்கிற மறதிய பற்றின ரகசியம் இருக்கட்டும்.. PASSPORT-யை சொருகி வைக்க
    தெரிவு செய்த இடத்தை பற்றின முட்டால் தனத்தை நினைக்கும் போது உங்கள் குழந்தை மனதுதான் நினைவில் வருகிறது...

    ReplyDelete
  9. மறதி............. ஹாஹா...... அருமை!


    சிகப்புக் கல் நெக்லெஸை 'தொலைத்து'விட்டு வீட்டில் இப்படிக் கத்திக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது:-)

    ஆனால்..... தூஷணம் சொல்லலையாக்கும்!

    ReplyDelete
  10. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  11. அடக் கடவுளே இப்பிடியும் மறதி வந்து இந்தளவில கொண்டு போய் விடுமோ !

    ReplyDelete
  12. உண்மைதான்.சின்ன விடயங்களை பெரிதாக்கி மற்றவர் மேல் பாய்வதும் அதுவே தவறு நம் பக்கம் என்று ஆனவுடன் விடயத்தை மிகச்சிறிதாக்கி மௌனமாவதும் நமக்கும் உண்டு...சீக்கிரம் பண்பட வேண்டும்.பதிவு சிறப்பாயுள்ளது

    ReplyDelete
  13. மறதியின் ரகசியங்கள் ...

    ReplyDelete

பின்னூட்டங்கள்