பால்வீதிப் பயணங்கள்

அண்மையில் ஓர் நாள் குளிர் படிந்து போன ஒரு பின்மாலைப்பொழுதில் ஒஸ்லோவின் மையத்தில் அமைந்திருக்கும் பிரதான நடை வீதியில் நடந்து கொண்டிருந்தேன். குழந்தைகள், இளையோர், பெரியோர், முதியோர், செல்வந்தர்கள், பிச்சைக்காரர்கள், தெருப்பாடகர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் - விற்பனையாளர்கள், போலீசார், உரிமையாளரின் பின்னே செல்லும் நாய்கள்,  வீதியோர விற்பனையாளர்கள், கையில் மதுக்கிண்ணத்துடன் பாதையோர கடையின் வெளியே குந்தியிருப்பவர்கள், பாலியல்தொழிலாளர்கள் என்று சமுதாயத்தின் சகல அங்கத்தினரும் அப் பாதையை ஏதோ ஒரு விதத்தில் கடந்து கொண்டிருந்தார்கள். என்னைப் போல்.

எனது கால்கள் மட்டும் தன்னிச்சையாய் இயங்கிக் கொண்டிருந்தன. சிந்தனையோ ”வாழ்க்கை” பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. இந்த நகரத்துக்கும் எனக்குமான உறவு 1987இல் தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை என் மனதுக்கு அமைதி வேண்டியிருப்பின் இப் பாதையின் ஆரம்பத்தில் இருந்து நோர்வே அரசனின் அரண்மனை வரையில் மேலும் கீழுமாய் இரு தரம் நடந்து போவேன். மனம் இலகுவானது போலிருக்கும். அன்றும் அப்படித்தான் மனது சரியில்லை என்பதால் நடக்க வந்திருந்தேன்.

ஒவ்வொரு காலத்திற்கு ஏற்பவும் இந்த வீதி தனது நடையுடை பாவனைகளை எவருக்கும் தெரியாமல் மாற்றிக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு பொருளுக்கும் ஒரு உயிர் இருப்பது போல இந்தத் தெருவுக்கும் உயிர் இருப்பதை என்னால் உணர முடிகிறது. காலத்துக்கு காலம் அது தனது மகிழ்ச்சியையும், துயரத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறது. நான் இந்த வீதியுடன் நட்பாயிருக்கிறேன். அதுவும் என்னுடன் நட்பாயே இருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எம்மால் பேசிக்கொள்ளவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் முடிகிறது. சத்தியமாய் எனக்கு பைத்தியமில்லை.

இந்த வீதியினூடே எனது இருகைகளிலும் இரண்டு குருவிகளுடன் என்னை மறந்து திரிந்த நாட்களில் இந்த வீதியும் என்னுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்தது. சில காலங்களுக்கு முன்பு கனத்த மனதுடன், நினைவுகளுடன் மட்டுமே நடந்த போது, நட்பாய் தோளில் கையுடனும், என் துயரத்தை தன்னுடன் சுமந்துமிருக்கிறது இவ் வீதி. தொழில் இன்றி, மன அழுத்தங்கள், மனப் பாரங்களுடன் வாழ்ந்த காலங்களிலும் இவ்வீதியில் பல தடவைகள் அலைந்து திரிந்திருக்கிறேன். அப்போதும் ‌கூட தன்னால் முடிந்ததை எனக்கு உபதேசித்திருக்கிறது இவ்வீதி.

பல மனிதர்களுக்கு இல்லாத நன்றும் தீதுமான பல பண்புகள் இவ் வீதிக்குண்டு என்பதை ஒவ்வொரு முறையும் இவ்வீதியை கடக்கும் போது கண்டு கொள்கிறேன். இந் நேரங்களில் எமது புரிதல்கள் மேலும் மேலும் எதையெதையோ உணர்த்துவதாய் இருக்கிறது. இவ்வீதியை நன்கு அவதானிப்பீர்களேயானால் அன்பு, கோபம், குரோதம், காதல், நட்பு, சிறு சினேகம், பசி, வெறி, மயக்கம், தாபம், காமம், வறுமை, தவிப்பு, பிணி, அறிவு, அதிகாரம், அலட்சியம், அநாதரவு, திமிர், நிறவெறித்தீண்டாமை இப்படி எத்தனையோ வகையான உணர்வுகளை கண்டுபோவீர்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது புது வடிவமான உணர்வுகளை உணர்த்துகிறது எனக்கு, இவ் வீதி.

தன்னைக்கடந்து போகும் மனிதர்களின் கதைகளை மௌனமாக விழுங்கிக்கொள்கிறது. தினமும் ஆயிரக்கணக்கில் புதிய புதிய கதைகளுடன் ஒரு முடிவில்லாத பெரும் புத்தகமாய் தினமும் வளர்ந்தபடியே இருக்கிறது, இவ் வீதியின் கதைகள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் கதைகள் இவ் வீதியின் கற்களிலும், சுவர்களிலும், காற்றிலும் படிந்து போயிருக்கின்றன. இருப்பினும் அன்று போல்... இன்றும், இனியும் இவ் வீதி தனது வாயைத் திறக்கப்போவதில்லை. ஆனால் தன்னோடு பேசுபவர்களுக்கு மட்டும் சில கதைகளை  பகிர்ந்து போகிறது.

இவ்வீதியில் ஒரு மூத்திர மூலை ஒன்று இருந்தது. தற்போது அதை புதுப்பித்திருக்கிறார்கள். அது தற்போது புதிப்பித்த மூத்திர மூலையாகவே இருக்கிறது. முன்போ அம் மூலையில், அதன் சுய வாசனையையும் மீறி அதற்குள், பனிக்காலத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தூங்கிப்போயிருப்பதை கண்டிருக்கிறேன். இப்படியும் இவ் வீதி தனது ஒரு வித சமூகசேவைவையும் செய்து கொண்டு தான் இருக்கிறது.

இவ்வீதியின் அழகான காலம் இளவேனில் காலமே. தம்மை மறந்து ஓடியாடும் குழந்தைகள், இளைப்பாறும் முதியவர்கள், கையில் வரைபடத்துடன் அலையும் சுற்றுலாப்பயணிகள், முத்தமிடும் காதலர்கள், கண்களையும், பெண்களையும் கவரும் கடைக்கண்ணாடிகள், வெய்யிலின் சுகத்தை அனுவித்தபடியே பியர் குவளையுடன் அமர்ந்திருப்பவர்களும், இசைக்கலைஞர்களும், சர்கஸ் வித்தைக்காரர்களும், பிச்சை எடுப்பவர்களும், கண்ணால் வலைவீசி விலை பேசுபவர்களும் நிறைந்திருப்பார்கள். இவ் வீதியில் வீசும் காற்றுகூட அழகாயிருக்கும் அந் நாட்களில்.

இலையுதிர்க்கால மாலைகளும் இரவுகளும் மிகவும் சோகமானவையாகவே இருக்கும். கும் இருட்டும், சிணுங்கிக் கொண்டிருக்கும் மழையும், காலுக்குள் மிதிபடும் இலைகளும், காற்றையே நடுங்கவைக்கும் குளிரும் பாதையின் உயிர்ப்புத்தன்மையை, உணர்ந்து ரசிக்கும் மனநிலையை தர மறுத்துக்கொண்ருக்கும். சோகத்திலும் ஒரு அமைதியும் அழகும் இருப்பது போல் அந் நேரத்திலும் அமைதியான ஒரு அழகு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள இவ் வீதியுடன் பேசும்கலையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

பனிக்கால இரவுகள் அழகானவை. வெள்ளையுடை அணிந்த பாதையின் அழகே தனி. பனிக்கால உடையணிந்து காலின் கீழ் உலர்ந்த பனி மிதிபட நடந்தபடியே அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த அலாதியான உணர்வை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். ஒரு வித பரிபூரணமான அழகும் அமைதியையும் உணரலாம். சில நாட்களில் நடு இரவின் பின்பு தன்னந்தனியே இவ் வீதியினை கடந்திருக்கிறேன். அந்த நேரத்து பேரமைதியினூடே வீதியுடன் பேசியபடியே நடக்கும் சுகமே அலாதியானது. அற்புதமானது. இரு நண்பர்கள் தன்னந்தனியே நடப்பது போன்றது அது.

இலைதுளிர் காலத்து நாட்களும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியான குறுகுறுப்பையும், வரப்போகும் இளவேனில்காலத்தின் சுகத்தினையும் கொண்டிருப்பதால் அழகாய்த்தானிருக்கும். பனிக்கால நீண்ட இரவுகளை கரைத்து ஒதுக்கும் வெளிச்சத்தின் மென்சூடான கதிர்களை அனுபவித்தபடியே நடப்பதிலும் பெரும் சுகம் ஒளிந்திருக்கிறது.

இன்றும் குளிரை ரசித்தபடியே நடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தாய் ஒரு குழந்தையை சுமந்து சென்றுகொண்டிருந்தாள். குழந்தைக்கு இரண்டு வயதிருக்கலாம்.  வாயிலே சூப்பியுடன், குளிரினால் சிவந்த கன்னங்களுடன் தாயின் தோளில் தூங்கி வழிந்துகொண்டிருந்தது. எனக்கு மிக அருகிலேயே அத் தாய் நடந்து கொண்டிருந்தாள். அக் குழந்தை எட்டித் தொடக் கூடிய தொலைவு தான். தெய்வீகமான அந்த அழகை என்ன மறந்து ரசித்தபடியே எனது நடையின் வேகத்தை குறைத்து அவர்கள் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தேன்.

என் மனது இக் குழந்தையை போலவே எப்போதும் சூப்பியுடன் என்னை வலம் வந்த எனது இளையமகள் அட்சயாவின் குழந்தைப்பருவத்தை நினைத்துக்கொண்டிருந்தது. அவளுக்கு சூப்பியின் மீது அப்படியொரு காதலிருந்தது. இக் குழந்தைக்கும் அப்படியாய் இருக்குமோ என்று நினைத்திருந்த போது, தூங்கியிருந்த அக் குழந்தை கண்விழித்துப் பார்த்தது. பார்த்தது மட்டுமல்ல என்னைப் பார்த்து தெய்வீகமாய் புன்னகைத்தது. மனது மயங்கி நானும் புன்னகைத்தேன். அவர்கள் ஒரு இடத்தில் திரும்பிய போது கையை அசைத்தேன், புன்னகைத்தபடியே கையசைத்தது அக் குழந்தையும். தனிமையுணர்வு அகன்று மனம் நிரம்பிப் போனது, எனக்கு. மனதுக்குள் ஒரு வித குதூகலம் குடிவந்திருந்தது.  வேகமாய் நடக்கத் தொடங்கினேன்

அவ் வீதியின் முடிவில் வீதியினை திரும்பிப் பார்த்தேன். நீண்ட வீதியின் இருபுறமும் தெருவிளக்குகளுடன் தூரத்தே அரசனின் மாளிகை தெரிந்தது. நான், எனது மாளிகை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ”வருகைக்கு நன்றி, மீண்டும் வா” பேச வேண்டும் உன்னுடன் என்றது வீதி, இரகசியமாய் என்னிடம்.

இன்றைய நாளும் நல்லதே.

3 comments:

  1. It was very good naration. beautyfully writen. I addmared it very much. I also felt your feeling and I also like walking in the same street.

    ReplyDelete
  2. >நான் இந்த வீதியுடன் நட்பாயிருக்கிறேன். அதுவும் என்னுடன் நட்பாயே இருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எம்மால் பேசிக்கொள்ளவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் முடிகிறது. சத்தியமாய் எனக்கு பைத்தியமில்லை

    நம்புறேன்...

    ReplyDelete
  3. நன்று. நன்று. தியாகலிங்கம்.இ

    ReplyDelete

பின்னூட்டங்கள்