இரண்டு சுவாமிகளும் அவர்களின் திருவிளையால்களும்

சில நாட்களுக்கு முன் எனது முகப்புத்தகத்தில் ஒரு இனிமையான அதிர்ச்சி காத்திருந்தது. பால்யத்து நண்பர் ஒருவர் என்னைக் கண்டுபிடித்திருந்தார். ஏறத்தாள 25 வருடங்களின் பின் வேறொரு வாழ்க்கைப்பருவத்தில் மீண்டும் அறிமுகமாகிறோம். காலம் அவரை இந்தியாவிலும், என்னை நோர்வேயிலும் நிறுத்தியிருந்தது. அவருக்கு என்னுடன் தொடர்பு இல்லாதிருந்தாலும் BBC செய்திச்சே‌வை போன்று என்னைப்பற்றிய  சகலமும்  அறிந்திருந்தார். அது ஆச்சர்யமாய் இருந்தது எனக்கு. அவரைப்பற்றி ஒரு சிறு செய்தியேனும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இது ஆச்சர்யமில்லாத செய்தி.

ஒன்றரை மணிநேரமாக ”ஸ்கைப்” மூலமாக உரையாடினோம். பல பால்ய நண்பர்களுடன் அவருக்கு தொடர்புகள் இருந்தன. அவர் மூலமாக மூன்று பால்ய சினேகங்கள் அறிமுகமாகின.  இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை என பலரும் பல தேசங்களில் வேர்பதித்து கிளைவிட்டிருந்தார்கள். நான் பனிவிளை பூமியில் வேர்பதித்திருக்கிறேன்.

பரஸ்பர விசாரிப்புகளின் பின் இரகசியமான விடங்களுக்குள் எமது சம்பாசனை புகுந்த போது மீண்டும் பதின்மவயதுக்கள் புகுந்ததுகொண்டோம்.  ”அவள்”  என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டு அவள் எங்கே இருக்கிறாள் தெரியுமா? என்ற போது நான் 1980 - 83ம் ஆண்டுகளுக்குள் நுளநை்திருந்தேன். ”அவள்” என்பது நண்பனின் முதற் காதல். அது பற்றி நான் ” கொல்லாமல் கொல்லும் காதல்” என்று ஒரு பதிவு இட்டிருக்கிறேன். இது பற்றி நண்பரிடம் கூறியபோது ” அப்ப நீ என்னை மறக்கவில்லை” என்றார். குரலில் பெருமையும், குதூகலமும், நட்பின் நெருக்கமும் நிறைந்திருந்தது.

ஊரிலிருந்த அத்தனை அழகிய ராட்சசிகளும் அவர் நினைவில் இருந்தது ஆச்சர்யம்தான். அதை விட ஆச்சர்யம் அந்த ராட்சசிகளை அவர் வர்ணித்த அழகு.  ”டேய்! அவள்” .... என்று பால்யத்து மொ‌ழியிலேயே வர்ணித்தார். வாழ்வின் வலிகள், போராட்டங்கள் மறந்து மீண்டும் பதின்மவயதுக்குள் சென்று வந்த உணர்வைத் தந்தது அவருடனான உரையாடல். மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டோம். நண்பருடனான சம்பாசனை வாயில் ஒட்டிக்கொள்ளும் தேனீரின் சுவை போன்று ஒரு சுகத்தை தொடர்ந்து தந்து கொண்டேயிருந்தது அந்த மாலை முழுவதும்.

இன்று காலை முகப்புத்தகத்தில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது முகப்பத்தகத்தில். அவரும் பால்யத்து நண்பர் தான். எனது  முகப்பத்தக படம் ஒன்றில் அவர் தன்னை பதிவு (tag)  செய்திருந்தார். நட்பு அழைப்பு விடுத்திருக்கிறேன் அவருக்கும்.

இந்த நண்பரும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் திறமைக்கு அவரின் ”திருவாய்” மட்டுமே காரணமாய் இருந்தது. அவர் விளையாட்டில் அதி சூரன். கால்பந்து, கிறிக்கட், கரப்பந்து தொடக்கம் தென்னைமரம் ஏறுதல், நீந்துதல், போலி ஆங்கிலப்புலமை என்று அவரிடம் பல திறமைகள் ஒளிந்திருந்தன, 1980 களில். காதலிக்கிறேன் என்று ஒரு பில்ட்அப் வேறு.

எம்மிருவருக்கும்  இடையில் ஏராளமான இரகசியங்கள் உண்டு. யார் யார் உள்ளூர்க் காதல்கள் என்பது தொடக்கம், ஊருக்குள் நடந்த பலான சமாச்சாரங்கள்வரை  எமக்குத் தெரிந்திருந்தது. இதற்காகவே சில ஊர்ப்பெரிசுகள் எம்மிடம் வாலாட்டாதிருந்தார்கள். முக்கியமாய் மட்டக்களப்பு நகரத்து இளைஞர் கோஸ்டியிலிருந்த நபர் ஒருவர்.

குறிப்பிட்ட நபருக்கும் எமக்கும் ஏற்கனவே விளையாட்டுக்களின் மூலமாகவும், அவர்களின் டவுனில் நாம் அழகிய ராட்சசிகளை ரசித்ததாலும் ”ஆகாது” என்று ஆகியிருந்தது. ஏறத்தாள எம்.ஜி.ஆர், நம்பியார் நிலையிலிருந்தோம் நாம்.

அப்படியான நாட்களில் ஒரு நாள் குறிப்பிட்ட நபரின், முறுக்கேறிய வயதின் இம்சையால், அவர் மட்டக்களப்பு பஸ் ஸ்டான்ட் விலைமாதுகளின் ஒருத்தியுடன் மகிழ்ச்சியாய் இருக்க எம்மூர் காட்டுப்பகுதியை அவர் தெரிவு செய்ததனால் அதன் பின்னான பல காலங்களில் அவர் எம்மிடம் மிகுந்த மரியாதையாக நடக்க வேண்டியிருந்தது. இதற்கு எனது நண்பர் முக்கிய காரணமாய் இருந்தார்.

ஒரு முன் மாலை நேரம், அவர்கள் இருவரும் எம்மூர் காட்டுப்பகுதிக்கு செல்வதை கண்ட நண்பர், இருவரையும் அடையாளம் கண்டு கொண்டார். விரைந்து வந்து என்னையும், இன்னும் சிலருடனும் காட்டுப்பகுதியுனுள் காத்திருந்து ” சிவபூஜையில் கரடியாய்” புகுந்து ரகளை பண்ண, அவர்கள் ஓடித்தப்ப வேண்டியதாயிற்று. அதன் பின்னான காலங்களில் டவுன் அழகிகளை எவ்வித சட்டச்சிக்கல்களும் இன்றி நாம் ரசிக்க அனுமதி கிடைத்திருந்தது எமக்கு.

எனது நண்பரின் அங்கில மோகம் அலாதியானது. கிறிக்கட் மச்ட்களை ஆங்கிலத்திலேயே கேட்பார். அதே போலவே மீண்டும் ஒப்புவிப்பார். நண்பரை நன்கு அறியாதவர்கள் வந்தால் நண்பர் ஆங்கிலத்தில் மேதாவி என்றே நம்புவர். அந்தளவுக்கு வேகமாகவும், புதியவர்களுக்கு புரியாமலும் உண்மையிலேயே ஆங்கில மேதாவி போன்று பேசுவார்.

எமது ஊரில் ஒரு பாழடைந்த மில் இருந்தது. நெல் காயவைப்பதற்காக அங்கு பெரும் சீமெந்து நிலம் இருந்தது. அதற்கருகில் ஒரு தண்ணீர் டாங்க். நண்பரோ எம்மை அந்த சீமெந்துநிலத்தில் வட்டமாக சைக்கில் ஓடச் சொல்லுவர்ர். அவரோ தண்ணீர் டாங்க் இல் அமர்ந்த படியே ஆங்கிலத்தில் ”கார் ரேஸ்” வர்ணணை போன்று எமது சைக்கிலோட்டத்துக்கு வர்ணணை கொடுத்துக் கொண்டிருப்பார், ஆங்கிலத்தில்.  வர்ணணை செய்வதில் அவருக்கு அசாத்தியமானதோர் திறமையிருந்தது, ஆசையுமிருந்தது.

ஒரு முறை நாம் வேலி கட்டுவதற்காக பனையோலை தறிக்கச் சென்றிருந்தோம். அவற்றை ஏற்றிவர ஒரு வண்டிலையும் வாடகைக்கு அமாத்திக்கொண்டோம். பனைமரத்தில் ஏறி ஓலைகள‌ை தறித்துப்போட்டார் நண்பர். பின்பு கீழ் இறங்கி வண்டிலில் ஓலைகைளைக் வைத்து கட்டும் போது நண்பர் ஓலைகளுக்கு மேல் ஏறி நின்று கயிற்றை இழுக்க அது அறுந்து நண்பர் கீழே விழுந்தார். மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல நண்பர் விழுந்தாலும் விழுந்தார் கள்ளிமுள் பற்றையினுள். ஒரு விதமாக அவரை மீட்டு வெளியில் எடுத்த போது அது நண்பரா அல்லது முள்ளம் பன்றியா என்னுமளவுக்கு அவர் உடலில் கள்ளிமுட்கள் இருந்தன. எம்மால் முடிந்ததை அகற்றி டாக்டரான எனது தாயாரிடம் அழைத்துப் போனேன். உடனேயே ஆஸ்பத்திரியில் அனுமதித்து பல மணிநேரங்களாக முட்களை அகற்றி நண்பனின் முள்ளம்பன்றி அவதாரத்தை முடித்து வைத்தார் அம்மா. அதன் பின் பல காலங்கள் அம் முட்கள் அவருக்கு இம்சை தந்து கொண்டேயிருந்தன.

ஒரு முறை நாம் கிறிக்கட் விளையாடுவதற்காக எமது மைதானத்தில் ”பிட்ச்”  போட்ட போது அந்த ”பிட்ச்”ஐ சமப்படுத்துவதற்று மெயின் வீதியில் இருந்த ரோடு போட உதவும் ”ரோளரை” நண்பருடன் சேர்ந்து, நாம் ஐவர் இழுத்து வந்தோம். அத் திட்டத்தின் ”ப்ராஜெக்ட் மனேஜராக” இருந்தவரும் எனது நண்பர் தான்.

ஒரு இரவு ஒரு வீட்டுத் தோட்டத்தில் இரகசியமாய் இளநீர் பறித்துக்கொண்டிருந்தோம். (பிற்காலத்தில் வேரொரு நெருங்கிய நண்பர் அந்த வீட்டு மாப்பிள்ளையாவார் என்பது அன்று எமக்குத் தெரியாதிருந்தது). எங்களின் கெட்டகாலம், அவ் வீட்டு நாய்கள் விழித்துக்கொள்ள, வீட்டின் உரிமையாளர் டார்ச்லைட் சகிதமாக ஓடிவந்தார். நண்பர் மரத்தில் இருந்து இறங்கி ஓடும் போது இடுப்பில் இருந்த சாரத்தை களட்டி தலையை மறைத்து முக்காடு போட்டுக்கொண்டார். என்னால் அப்படி செய்ய முடிவில்லை, வெட்கமாய் இருந்ததால். ஓடத் தொடங்கினேன். பின்னால் வயதான ஒரு குரல் ”அது  டொக்கரம்மான்ட மூத்த மகன்” என்று கத்தும் கத்தம் கேட்டது.  அச் சத்தத்தின் எதிரொலி சில மாதங்களுக்கு முன் லண்டன் போன போது அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகிய எனது நெருங்கிய நண்பர் வீட்டிலும் எதிரொலித்தது.

ஒரு காலத்தில் ஏறாவூர் புகையிரதநிலைய அதிபருடன் தனவுவதையே தொழிலாகக் கொண்டிருந்தோம். அதற்கு முக்கிய காரணம் அந்த புகையிரநிலைய அதிபரின் மாமனார். எம்மை எங்கு கண்டாலும் திட்டடி்த்தீர்த்தபடியே இருந்தார். அவர் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்ற திமிரும் இருந்தது அவரிடம். எனது நண்பரின் பொறுமை எல்லை தாண்டியது ஓர் நாள்.  அன்று தொடக்கம் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு  செல்லும் ”இரவு தபால் ரயில்” ஏறாவூர் இரயில் நிலயத்தை நெருங்கும் போது ஏறாவூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுப் போகத்தொடங்கியது. ரயில் புறப்பட்டதும் மின்சாரம் மீண்டும்வந்து.  புகையிரநிலைய அதிபரினால் இந்த மர்மத்தை பல மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் ரயில் நிலைய மின்சார இணைப்பை  ”பியூஸ்ஐ” களட்டி இல்லாது செய்ததை அவர் அறிந்திருக்க சந்தர்ப்பமில்லை. ரயில் நிலைய அதிபர் பெரும் பாடுபட்டார், அவரின் மனைவியின் தந்தை எம்மை காணும் போதெல்லாம் திட்டித்தொலைத்தனால்.  பிற்காலத்தில் ரயில் நிலைய அதிபரின் மாமனாரை இயக்கங்கள் கடத்திச் சென்று கொலை செய்தது வேறு கதை.

இப்படி இந்த நண்பரின் அட்டகாசங்களும், திறமைகளும் எல்லையில்லாதிருந்தன. சிங்கள, இஸ்லாமிய, தமிழ் நண்பர்களிடத்தில் எனது நண்பர் மிகவும் பிரபல்யமாக இருந்தார். அந்தக் காலத்தில் அவர் ஒரு ஹீரோ என்றால் அது மிகையில்லை.

எமக்கு முதன் முதலில் பலான புத்தகங்கள், படங்கள், மற்றும் பலான விடயங்களை அறிமுகப்படுத்தியதும், அவர் தான். எங்களுக்கு பல விதத்திலும் அவரே குருவாயிருந்தார். நாமும் அவருக்கு அடங்கிய சீடர்களாயிருந்தோம்.

சென்ற வருடம் ஊருக்கு சென்றிருந்த போது நண்பரைத் தேடும் பணியை பலர் மூலமாகவும் முடுக்கிவிட்டேன். சாதகமான பதில்கள் எதுவும் வரவில்லை. ஒருவர் மட்டும் அவரைத் தேடாதீர்கள் அவர் பற்றி ஊருக்குள் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றார். மனவருத்தத்துடன் திரும்பினேன்.

நோர்வே வந்ததும் மீண்டும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டேன். நண்பரைப் பற்றிய தகவல் ஒன்று கிடைத்தது.

நான் கூறப்போவது சத்தியமான உண்மை. எனவே அதிர்ச்சியடையாதீர்கள்.

எனது நண்பர் ”சுவாமி” என்னும் அடைமொழியுடன் உலாவருகிறாராம், ஊரில்.

இதில் என்ன தப்பிருக்கிறது. ”சுவாமி” ஆகும் முழுத் தகுதியும் அவனுக்கிருக்கிறது.. மன்னிக்கவும் ... அவருக்கிருக்கிறது.

அவரின் சீடனாகும் தகுதி என்னிடம் இருக்கலாம்.

சஞ்சயானந்த சுவாமிகளுக்கும், அவரின் ”சுவாமி” நண்பருக்கும் ஒரு ”ஓ” போடுங்கள்.


இன்றைய நாள் மிகவும் நல்லது.




7 comments:

  1. ஐயா சஞ்சை முகப்பில் ஒரு நல்ல படம் போட்டுவிட்டு பக்திப்படம் எடுத்துவிட்டு வணக்கம் போடும் போது அதனைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். நானும் ஏதும் உங்கள் தில்லு முள்ளுகள் சொல்லப் பூறயளாக்கும் என்று முழுக்க வாசித்தேன். சாமி வேடம் வேண்டாம். சிசியன் வேடம் ஓகே.(கங்கைமகன்)

    ReplyDelete
  2. சாமிஈஈஈஈஈஈஈஈயோவ்.

    ReplyDelete
  3. அவரின் ”சுவாமி” நண்பருக்கும் ஒரு ”ஓ” போடுங்கள்.// sari pottuduvom..

    ReplyDelete
  4. I know, who was it "T" isn't it?. other one "V" ,ok . I know you avoid something something , that time really I don't know you become a writer, you have lots of stock in your mind.write something more about San Ja yanantha Suvami. where is abdulhai?

    ReplyDelete
  5. அச்சசோ சிறு வயது ரகளைகள் ..................சாமியாரே பரவாயில்லை என்றா சாமியின் படம்?

    ReplyDelete

பின்னூட்டங்கள்