விதிக்கப்பட்ட பயணங்களும் ஒரு பயணியும்

பயணங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. சிறு பயணங்கள், குறும் பயணங்கள் தொடக்கம் நீண்ட பயணங்கள் என்று மனிதர்கள் தினமும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். எனது பயணங்களில் எனக்கு 5 - 6 வயதான காலங்களில் பெற்றோருடன் புகையிரதத்தில் பயணம் செய்ததே, எனது நினைவுகளில் உள்ள முதற் பயணமாகும். எனது பெற்றோர்கள் அரச ஊழியர்களாக இருந்ததால் வருடத்தில் மூன்று தடவைகள் இலவசமாக புகையிரத்தில் பயணிக்கலாம்  என்ற அரச சலுகை இருந்தது. அச் சலுகையை நாம் பயன்படுத்திக்கொள்ளும் போது  புகையிரத்தில் உள்ள தூங்கும் வசதியுள்ள அறையிலேயே பயணிப்போம்.

எப்போதும் நான் மேலே உள்ள படுக்கையில் படுக்கவே விரும்புவேன். அப்பா தனது ”சுந்தரலிங்கம் சுருட்டுடன்” ஜன்னலோரத்தில் இருப்பார். அம்மாவிடம் தம்பியிருப்பான். அப்பா தண்ணீர் எடுப்பதற்காக இறங்கினால் புகையிரதம் புறப்படும் வரை தண்ணீர் பிடித்தபடியே இருப்பார். புகையிரதம் புறப்பட்டு வேகமெடுக்குமுன் ஓடிவந்து ஏறுவார். அந்நேரங்களில் அப்பாவை விட்டு விட்டு புகையிரதம் சென்றுவிடுமோ என்று பயந்திருப்பேன். ஆனால் அம்மா மட்டும் இதைப் பற்றி கவலைப்படாது தனது வேலைகளில் மூழ்கியிருப்பார். கடதாசித் துண்டுகளை சிறிய சிறிய துண்டுகளாகக் கிழித்து ஓடும் புகையிரதத்தின் ஜன்னலினூடாக  பறக்கவிட்டபடியே கடந்த போன அந்தப் பயணங்கள் மிக அழகானவை.

பாடசாலை நாட்களில் இலங்கைச் சுற்றுலா சென்ற பயணம் இன்றுவரை பசுமையாய் நினைவிருக்கிறது. ஹட்டன் குளிரில் அதிகாலையில் குளித்ததும், மலைநாட்டு பஸ்பயணத்தின் போது எடுத்த வாந்திகளும், பொலன்நறுவை சிலைகளும், குண்டசாலை விவசாயப்பண்ணையும் என்று அந்த சுற்றுலா என் மனதில் தனது நினைவுகளைச் செதுக்கியிருக்கிறது. ஓடிச்செல்லும் ஆற்றின் கரையில் முளைத்திருக்கும்  பசுமையான புற்களைப் போல் பயணங்கள் எனக்குள் பலவிதமான அனுபவங்களை தந்து போயிருக்கின்றன.

பயணங்களின் போதுதான் நான் அதிகமாகமாய் கற்றுக்கொள்கிறேன். என்னை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. எனது பலங்களும் பலவீனங்களும் கற்பிக்கப்படுகின்றன. 1985ம் ஆண்டில் ஒரு நாள் ஒரு புகையிரத நிலையத்தில் இரவைக் கழிக்க நேர்ந்தது. தனியே சிங்களவர்கள் மட்டும் வாழும் இடம். நானும் இன்னுமொரு வளர்ந்த தமிழரும் மட்டுமே தமிழர்கள். அவருக்கு ஏறத்தாள 50 - 55 வயதிருக்கலாம். அங்கு தங்கியிருந்த ஏனையவர்கள் சிங்களவர்கள். இரவு 10 மணிபோல் போலீஸ் வந்து எவரும் புகையிரத நிலையத்தில் தங்கயிருக்க முடியாது என்றும் வெளியே செல்லுமாறும் பணிக்கப்பட்டோம். எங்கு செல்வது என்று எமக்குப் புரிவவில்லை. சிங்களவர்கள் புத்தவிகாரைக்குச் சென்றனர். நாம் இருவரும் மட்டும் புகையிரதநிலையத்துக் வெளியே நின்றிருந்த போது புகையிரதநிலைய கடைநிலை ஊழியர் ஒருவர் எம்மை தனது வீட்டுக்கு அழைத்துப் போனார்.

கனத்த இருட்டில் ஒரு ஒற்றையடிப்பாதையூடாக அவர் முன்னே நடக்க நான் இரண்டாவதாயும், மற்றையவர் மூன்றாவதாயும் நடந்து கொண்டிருந்தோம். எனக்கு சிங்களம் தெரிந்திருந்ததால் நானே அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். மற்றயவரோ சிங்களம் என்பதை மருந்துக்கும் அறியாதவராய் இருந்தார். அவருக்கு அந்த சிங்களவர் மேல் நம்பிக்கை இருக்கவில்லை. இருப்பினும் வேறு வழி இல்லாததால் எம்மை பின்தொடந்துகொண்டிருந்தார். சிங்களவங்கள் இரவைக்கு பூந்து வெட்டினாலும் வெட்டுவாங்கள் என்று சந்தேகப்பட்டார். அவரை நான் அறுதல் படுத்தவேண்டியிருந்தது.

சிறிது நடையின் பின் அவரின் ஓட்டைக் குடிசைக்கு வந்தோம். அவர் தனியே வாழ்ந்திருந்தார். குடிசையின் அருகே தண்ணீர் கிடங்கு இருப்பதால் இரவில் அவதானமாக நடமாடவும் சொன்னார். அப்படியானதோர் இடத்தில் நான் அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் தங்கவில்லை. ரொட்டி சுட்டுத் தந்தார். அமிர்தமாய் இருந்தது எனக்கு.  மற்றையவரை நோக்கி பெருவிரலை வாய்க்குள் விடுவது போல சைகையில் கேட்க, மற்றவர் தலையாட்ட அவர்கள் இருவரும் இருட்டுக்குள் கரைந்து போயினர். நான் நூளம்புகளுடன் தூங்கிப்போனேன். திடீர் என இருவர் பேசுவது கேட்க தூக்கம் கலைந்து பார்க்கலானேன். அவர்கள் இருவரும் குசையின் வெளியே எதையோ குடித்தபடி  ஒருவர் தமிழிலும் மற்றையவர் சிங்களத்திலும் சில ஆங்கில சொற்களுடனும் தமது நட்பின் அன்னியோன்யத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.ஒரே பீடியையும் பகிர்ந்து கொண்டார்கள். அங்கு ஒரு ஐக்கிய இலங்கை உருவாகிக்கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் ரொட்டியும், பிளேன் ‌ டீயும் கிடைத்து. தன்னிடம் இருந்த சிறியதையும் அவர் பகிர்ந்துகொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  அவரின் உபசரிப்பில் உண்மையின் வாசனை இருந்தது.

நாம் விடைபெற்றுக்கொண்ட போதும் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர். நேற்றிவு அவருக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்திருந்தது போலிருந்தது. அவர் ” இந்த மனிசன் நல்ல மனிசன்” என்று அந்த சிங்களவரைப் பார்த்த கூறியபோது இருவரும் புன்னகைத்துக்கொண்டனர்.

இன்றும், என்னுள் இருக்கும் மறக்கமுடியாத பயணமாக இருக்கிறது அந்த இரவும், அவ்விரவின் நிகழ்வுகளும். உபசரிப்பது என்பது மனது சம்பந்தப்பட்டது என்பதை உணர்த்திய பயணம் அது.

பதின்மக்காலத்தில் ஒரு முறை நண்பனின் குடும்ப நண்பர் ஒருவருடன் அயித்தியமலை கோயில் திருவாழாவிற்குச் சென்றிருந்தோம். காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் கோயில். பல மணிநேர பயணம். எம்மை அழைத்தச் சென்றவர் போன்றதொரு நகைச்சவையாளனை நான் இன்றுவரை சந்தித்ததில்லை. மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தார். அவருக்கு ஜீப்  ‌கொடுத்திருந்தார்கள். சாரதியும் இருந்தார். எமக்கும் அவருக்கும் ஏறத்தாள 20 வயது வித்தியாசம் இருக்கும். இருப்பினும் அவரது நகைச்சுவையான பேச்சும், செயல்களும் அவரது வயது வித்தியாசத்தை இல்லாது செய்திருந்தது. அந்த இரண்டுநாட்களும் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்தோம். அந்த இரண்டுநாட்களையும் நானும் எனது நண்பனும் இன்னும் மறக்கவில்லை. பிற்காலங்களில் அவர் கடந்து வந்த வேதனைகளை, துன்பமான வாழ்க்கையைப் பற்றி வேறு சிலர் கூறிய போது நகைச்சுவையால் தனது வலிகளை மறந்தும் மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்தியும் போகிறார் அவர் என்று புரிந்து கொண்டேன். அந்தப் பயணமும் வாழ்க்கையின் வலிகளை கடக்கும் வழிகளைத் கற்றுத் தந்தது.

 பயணங்கள் திட்டமிட்டவையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. திடீர் திடீர் பயணங்கள், எதிர்பாரத பயணங்கள் விறுவிறுப்பைத் தருவது மட்டுமல்ல மனதுக்கு பல விதமான அனுபவங்களைத் தரக்கூடியவை.

ஒரு நாள் மதியம் எனது குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது தொலைபேசியில் அறிமுகமானவர் ஒருவரின் குழந்தை சுகயீனம் கொண்டுள்ளதாகவும்,  உதவிக்கு வருமாறும்  கேட்டக்கொள்ளப்பட்டேன். அவர்கள் வீடு சென்றபோது வைத்தியர் குழந்தையை மிக அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்றார். குழந்தையுடனும்,  தகப்பனாருடனும் அவசர சிகிச்சைக்கான ஹெலிகாப்படரில் பயணப்படவேண்டிவந்தது. அந்தப் பயணம் ஏறத்தாள 10 நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் உயிருக்கு போராடும் குழந்தைக்கு முன் தந்தையின் நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். தன்நிலை மறந்து, சுய நிலை இழந்து, உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், பேச்சிழந்து, வாய் குளறி,  கண்ணீர் வழிந்தோட மகனின் பெயரை அரற்றியபடியே நின்றிருந்தார் அவர்.  நெஞ்சை உலுக்கிய பயணம் அது.


இயற்கையுடனான ஒரு அலாதியான அனுபவத்தை தந்த பயணம் நான்  வடக்கு நோர்வேயில் கல்விகற்றிருந்த நாட்களில் நடந்தது. ”இயற்கையும் புகைப்படக்கலையும்” என்னும் துறையில் கல்விகற்றுக்கொண்டிருந்த காலம் அது.

வட துருவத்தில் பனிக்காலங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும். ஒரு முறை 5 நாட்கள் நாம் மலைப்பகுதியில் பயணிக்க நேர்ந்தது. எமது குழுவில் ஏறத்தாள 15 பேர். 15  பனியில் சறுக்கும் வண்டிலை இழுக்கும் நாய்கள். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் 5 நாட்களுக்கு தேவையான பொருட்களுடன் புறப்பட்டோம். பனிச்சறுக்கும்,  பனிநாய்கள் இழுக்கும் வண்டில் ஓட்டமும், பனியில் அவசர நேரங்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது எப்படி என்ற வகுப்புக்களும், திறந்த வெளியில் லாவூ என்னும் கூடாரத்தினுள் குளிர்ப்பையினுள் உறங்குவதும், ஐஸ் படிந்து போன ஆற்றில் மீன் பிடிப்பது எப்படி என்றும் புதிய புதிய, வாழ்வில் மறக்கமுடியாத இயற்கையனுபவங்களை தந்த பயணம் அது.  

எல்லாவிதமான பயணங்களும் மகிழ்ச்சியாக அமைந்திருந்தன என்றில்லை. ஒரு முறை  பயணத்தின் போது புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டேன். என்னை மிகவும் வருத்திய பயணம் அது. வழக்கை போலீசாரே மீளப்பெற்ற பின்பே மனம் அமைதியாயிற்று. மன அமைதியற்ற பயணங்கள் எவ்வளவு கொடுமையான அனுபவத்தை தரும் என்பதை நான் அறிந்து கொண்டதும் அந்தப் பயணத்தின் போது தான்.

தினமும் பயணங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிலக்கீழ்தொடரூந்து பயணங்கள் தினம் தினம் புதிய அனுபவங்களை  தந்து போகிறது. அண்மையில் ஒரு நாள் நிலக்கீழ்தொடரூந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறுமி தாயின் பின்னால் மறைந்திருந்து என்னைப் பார்த்து பார்த்து நட்பாய் புன்னகைத்தபடியே நின்றிருந்தாள். அவள் யார் என்று எனக்குப் புரிய சற்று நேரமெடுத்தது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு விழாவின் போது முன்பின்னறியாத என்னுடன் நட்பாகி பல மணிநேரங்களாக என்னிடம் வருவதும் போவதும், விளையாடுவதுமாய் இருந்தவள் அவள். எனது மடியில் அமர்ந்து தனது தொலைபேசியில் படம் வேறு எடுத்தாள், அவ் விழாவின் போது. அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். கண்ணைச்சுருக்கி, அழகாய் வெக்கப்பட்டு, மெதுவாய் புன்னகைத்து தாயின் பின் மறைந்து கொண்டாள். அவளாள் அன்றைய பயணமும் பேரின்பப் பயணமாகிப்போனது.

பயணங்கள் எப்போதும் எதையாவது கற்பித்தபடியே என்னை தன்னுடன் அழைத்துப் போய்க்கொண்டேயிருக்கின்றன.  நானும் காற்றில் பறக்கும் சருகினைப்போல் வாழ்க்கைப் பயணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். எனது பயணங்கள் முடியும் வரை நான் பயணித்தக்கொண்டே இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது, எனக்கு.
எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான்.

உங்கள் பயணங்கள் அழகாயிருக்கக் கடவதாக!

6 comments:

  1. நல்ல பயணம் நன்றாகத் தொடரட்டும்...

    ReplyDelete
  2. உங்கள் எழுத்துகள் பழைய நினைவுகளை புரட்டி நிக்கிறது மீட்டு பார்க்க சொல்லி........பதிவுக்கு நன்றி.......

    ReplyDelete
  3. நல்ல பதிவு. நாடு நடுவே வரும் விளக்கங்கள், நல்ல தயிர் சோற்றில் பல்லுக்கு தட்டுப்படும் மாங்காய் துண்டு போல் உள்ளது. இனிமை.எஸ்.ரா-வின் பாதிப்பு மிக அதிகமாக தெரிகிறது. சிறிது காலம் அவர் நூல்களை தொடாமல் இருங்களேன்.

    ReplyDelete
  4. அந்தச் சிங்கள நண்பர்கள் போன்றவர்கள்தான் இன்னும் மானுடத்தின்மீது நம்பிக்கை இருக்கப் பண்ணுகிறவர்கள்.

    ReplyDelete
  5. உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது விசரன்.உங்கள் நடை முதிர்ச்சி உள்ளதாக இருக்கிறது .நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  6. தங்களின் வாழ்க்கை பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete

பின்னூட்டங்கள்