வற்றாக் கதைகள்

எனக்கு கதைகளில் பெரும் ஆர்வமுண்டு. இதன்பெருமை எனது தாயாருக்கே உரியது. அவர் என்னையும் தம்பியையும் தனது இருபக்கங்களிலும் இருத்தி வாசித்த கதைகளுக்கு எண்ணிக்கையில்லை. அதைவிட அவர் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்.

எனக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு ஏறத்தாழ 4 வயது இடைவெளியுண்டு. தங்கை பிறக்கும்வரையில் மூத்தவளுக்கும் எனக்குமான ஒரு இரகசியஉலகம் இருந்தது. தங்கைக்கு விபரம்புரியத்தொடங்கியதும் அந்த இரகசிய உலகம் மூவருக்கு என்றானது.

கதைகேட்பது என்றால் எனது மகள்களுக்கு பெருவிருப்பம் இருந்தது. கதைசொல்வதில் எனக்கு பிடிப்பு இருந்தது. இரவு படுக்கையில் தினமும் புதிய புதிய கதைகள் சொல்வேன். ஒரு காலத்தில் என்னிடம் இருந்த கதைகள் தீர்ந்துபோனபோது கற்பனையில் கதைகளை உருவாக்கினேன். அவற்றை விரிந்த கண்ணுடன் ஒருத்தி கேட்டுக்கொண்டிருக்க மற்றையவள் கையைச் சூப்பியபடி கேட்டுக்கொண்டிருப்பாள்.

1945ஆண்டு பின்லாந்தில் குழந்தைகளுக்கான மும்மி த்ரொல் (ஆங்கிலத்தில் Moomins) என்னும் நூல் வெளிவருகிறது. அதனை எழுதியவர் பின்லாந்து மற்றும் சுவீடனைச் சேர்ந்த  Tove Jansson என்னும் எழுத்தாளரும் சித்திரக்கலைஞருமாவார். அதன்பின்னான 25 வருடங்களில் அவர் மேலும் அக்கதையின் தொடர்ச்சியாக 12 நூல்களை வெளியிடுகிறார். அவை குழந்தைகளுக்கான சித்திரங்களையும், கதைகளையும் உள்ளடக்கிய நூல்கள். பிற்காலத்தில் அவை  திரைப்படங்களாகவும் வெளிவரும் என்பதையோ, குழந்தைகள் இக்கதையை கொண்டாப்போகிறார்கள் என்றோ அவர் அன்று அறிந்திருக்கமாட்டார்.

இக்கதை ஒரு காட்டில் வாழும் நோர்வேஜிய மொழியில் Troll என்று அழைக்கப்படும் குறளிகளைக் அடிப்படையாகக்கொண்டது. கதையின் கரு குடும்பஉறவுகள், குழந்தையின் வளர்ச்சி, சூழல் அமைப்புக்கள், பருவகாலங்கள் என்று பலதையும் உள்ளடக்கியது. கதைக்களம் மலைப்பகுதியில் உள்ள ஒரு காடு. அங்கு தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறது மும்மி என்னும் பாத்திரம்.

சுற்றாடலை ஆராய்ந்தறியும் ஆர்வம் மும்மிக்கு அதிகம். ஆதனால் அவன்படும் அவஸ்தைகளும் அதிகம். அவனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பதாயும் நன்மை தீமைகளை உள்ளடக்கியதாயும் இருக்கும். கதைகள் மிக விறுவிறுப்பானவை.

நோர்வேஜிய அரச தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நேரங்களில் மும்மி கதையை வெளியிட்டனர். அது பலத்த வெற்றியையீட்டியது. கடைகளில் மும்மி படம்கொண்ட உடைகள், பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், விளையாட்டுப்பொருட்கள், தேனீர்க்குவளைகள், சாப்பாட்டுக்கோப்பைகள் என்று பலதும் விற்றுத்தீர்ந்தது.

எனது மகள்களுக்கான கதைகள் தீர்ந்துபோனபோது நான் இந்த மும்மியை எனது கதைகளுக்குள் அழைத்துவந்தேன். காடு, மிருகங்கள், பனிநிறைந்த மலைகள் என்று பலவிடயங்களை உள்ளடக்கி பறக்கும் கம்பளத்தையும் இணைத்துக் கதைபேசி சில காலங்களைக் கடந்துகொண்டேன்.

அப்போது எங்கள் ஊருக்கு மும்மி கதையை நாடகமாக அரங்கேற்றும் குழுவினர் வந்தார்கள். மூத்தவளுக்கு பாடசாலையில் இதுபற்றி கூறியதில் இருந்து «நாடகம் பார்க்கவேண்டும்” என்றாள். இளையவளுக்கு எதுவும் புரியாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

நாடக அரங்கேற்ற நாள் வந்தது. ஊரே திருவிழாக்கோலம்பூண்டது. குழந்தைகளும் பெரியவர்களும் மும்மியைப்போன்று அலங்கரித்துக்கொண்டு நாடகத்திற்கு வந்தார்கள். நாங்களும் சென்றோம். அக்காள் கதிரையின் நுனியில் உட்கார்ந்திருந்து ரசித்தாள். இளையவள் எனது கழுத்தைக் கட்டிக்கொண்டு பார்த்தாள். பயுமூட்டும் காட்சிகள் வந்தபோது என்னை இறுகக்கட்டிக்கொண்டாள்.

நாடகம் முடிந்ததும் அக்காள் மும்மியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். தங்கைக்கு அதன் மிக நீண்ட மூக்கு பயமளித்ததால் என் கையைவிட்டு இறங்க மறுத்தாள்.

அன்றிரவு நாம் மும்மியைப்பற்றிப் பேசிக்கொண்டே உறங்கிப்போனோம்.
நேற்று மாலை ஒரு நண்பரின் வீட்டில் திருத்தவேலைகள் செய்யும்போது ஒரு பெட்டியினுள் மும்மியின் படம் பதியப்பட்ட தேனீர்க்குவளையைக் கண்டதும் எங்கள் கதை அங்கு திரும்பியது.

மருத்துவக்கற்கையில் இறுதி ஆண்டில் உள்ள தனது மகளின் தேனீர்க்குவளை அது என்றார் அவர்.

நான் மும்மியை எனது கதைகளுக்குள் அழைத்துவந்து நாட்களையும், எனது மகள்களையும், வீட்டில் இருந்த மும்மி நூல்களையும், அந்த நாடகம் நடைபெற்ற தினத்தினையும் நினைத்துப்பார்த்தேன்.

குழந்தைகளாய் இருந்தபோது கதை கேட்பதற்காய் ஆவலுடன் இருக்கும் மனிதர்கள் ஏன் வளர்ந்தபின் கதை மேலிருக்கும் ஆர்வத்தினை இழந்து போகிறார்கள்?
வாழ்க்கை என்னும்  கதையில் அவர்கள் வாழத்தொடங்குவதாலா?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்