பீடியும் ஐக்கிய இலங்கையும்

1984 என்று நினைக்கிறேன். எனது 19 வயதில் ஒருமுறை இலங்கையின் முக்கிய புகையிரதச்சந்தியான மாகோவில் ஒரு இரவை முழுமையாகக் கழித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

சிங்களமொழி அந்நாட்களிலும் கைவந்த கதைதான். இருப்பினும் அது பதட்டங்கள் உச்சமடைந்திருந்த நாட்கள். கைதுகள் சாதாரணமானவை. தனிச் சிங்கள இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் இரவில் நடமாடுவது ஆபத்தாக இருந்த நாட்கள்.

இரவு 10மணியிருக்கும் மாகோசந்தியில் இருந்த சிற்றூண்டிச்சாலையில் தேனீர் வாங்கியபின் மிகுதிப்பணத்தை எண்ணிப்பார்த்தேன். மறுநாள் தேனீருக்கும் காலையுணவிற்கும் போதுமாயிருந்தது.

மழைதூறிக்கொண்டிருந்தது. பயணிகள்இரயில்கள், பொதிஇரயில்கள் என்று புகையிரதங்கள் வந்து போயின. சிற்றூண்டிச்சாலை அலுத்தது. வெளியே நின்றேன்.

சற்றுத்தள்ளி ஒருவர் பீடியின் புகையை வெளியே ஊதிக்கொண்டிருந்தார். மாலையில் இருந்து அவரும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு 50 வயதிருக்கும். அதற்கு மேலுமிருக்கலாம். முகத்தில் சில நாட்தாடி

‘மட்டக்களப்பு ரயிலுக்காகவா நிற்கிறீர்கள்’. என்றார். ஆம் என்று தலையாட்டினேன். ‘இரவு இங்குதான் தங்கவேண்டும்போல’ என்றார்.
அதற்கும் தலையாட்டினேன்.

அப்போது அங்கே வந்த ரயில்நிலைய அதிகாரி, ‘இரவு நீங்கள் இங்கு தங்கியிருக்க முடியாது. போலீஸ் வரும் என்று கூறினார்’.

எவரையும் இந்த ஊரில் அறியேன் யாரிடம் போவேன்? என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது ரயில்நிலையத்தின் சிற்றூழியர் ஒருவர் கையில் லாம்புடன் வந்தார்.

சிங்களத்தில் உரையாடி தனது வீட்டுக்கு அழைத்தார். நான் ‘பீடிபுகைப்பவரும் தனியே நிற்கிறார். அவரும் வரலாமா’ என்று நான் கேட்டபோது ‘அதிலென்ன பிரச்சனை’ என்று கூறி நடந்தார். நான் அவர் பின்னால் நடக்கத்தொடங்கினேன். பீடிமனிதர் அசையவில்லை.  ‘எனக்கு பயமாயிருக்கு நீங்க போங்க’ என்றுவிட்டு ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டு எங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.

லாம்பின் வெளிச்சத்தில் தண்டவாளங்களின் நடுவே நடந்துகொண்ருந்தோம். மழை தூறத்தொடங்கியது இரயில்எண்ணை படிந்திருந்த சிலிப்பர் கட்டைகள் வழுக்கத்தொடங்கின. நான் சிலிப்பர் கட்டைகளைத் தவிர்த்து கருங்கற்களில் கால்வைத்து நடந்துகொண்டிருந்தேன். திடீர் என எனக்குப்பின்னால் யாரோ நடப்பதுபோன்று  தோன்றியதால் திரும்பிப்பார்த்தேன். இருட்டில் பீடி புகைந்துகொண்டிருந்தது.

‘தம்பி, உனக்கு பயமில்லையா’ என்றார் பீடி.
‘என்னத்துக்கு?’ என்றேன். அமைதியானார்.

ஒரு தென்னந்தோட்டத்திற்குள்ளால் நடந்து ஒரு கொட்டிலை அடைந்தோம். ‘வெளியே ஒரு கிடங்கு இருக்கிறது. அதுதான் எனது தண்ணீர்க்கிடங்கு, கவனம் விழுந்துவிடாதீர்கள்’ என்றார் லாம்புடன் வந்தவர்.

களிமண்தரை, தென்னமோலையால் வேயப்பட்ட குடிசை. லாம்பு வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமும் இல்லை. படுப்பதற்கு பிய்ந்துபோன சாக்குக்கட்டிலொன்றும், அடுப்பங்கரையில் சில பாத்திரங்களும், ஓரு குடத்தில் நீரும் இருக்க வாசலிற்கு அருகே ஒரு கொழுக்கியில் சில உடைகளும்  மட்டுமே அக்குடிசையினுள் இருந்தன.

வெளியில் மழை. உள்ளே மழையின் பிசுபிசுப்புடன் மழைத்துளிகள் ஓலையில் மோதி ஓயும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தது.

«மல்லி பொனவாத» (தம்பி குடிப்பாயா?) என்று ஒரு போத்தலை நீட்டினார். இல்லை என்று சிங்களத்தில் கூறினேன். பீடிமனிதர் «நான் குடிப்பேன் என்றார். வாங்கிக்கொடுத்தேன். போத்தலை அப்படியே இறக்கினார்.

சற்றுநேரத்தில் அவர்களுக்குச் சுருதிசேர்ந்தது. எனக்கு பசித்தது. குடத்தில் இருந்து நீர் அருந்தினேன்.

பீடிமனிதர் இப்போது தமிழில் உரையாடத்தொடங்கியிருந்தார். மற்றையவரும் சிங்களத்தில் உரையாடினார். நான் காலை நீட்டி படுத்துக்கொண்டேன்.

அவர்கள் இருவருக்கும் மேலும் தாகமெடுத்தது. என்ன மொழியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டார்களோ நான் அறியேன். இருவரும் புறப்பட்டுப்போனார்கள். நான் தூங்கிப்போனேன்.

எனது தூக்கம் கலைந்தபோது இருவர் உரையாடுவது கேட்டது. அவர்களை நான் கண்டபோது அவர்கள் தள்ளாடியபடியே ஐக்கிய இலங்கை உருவாகிக்கொண்டிருந்தார்கள்.

மறுநாள் அதிகாலை நெளிந்தவொரு அலுமீனிய தேனீர்க்குவளையில் தேனீர் வந்தது. ஒருவர் குடித்துமுடியம்வரையில் மற்றையவர் காத்திருக்க வேண்டியிருந்தது. அவரிடம் இருந்தது ஒரே ஒரு தேனீர்க்குவளை.

அந்தச் சிங்களவரும் எம்மைப்போன்று காலையுணவு அருந்தவில்லை. மீண்டும் தென்னந்தோட்டத்தினுள்ளால் நடந்து தண்டவாளத்தை அடைந்தபோது விடிந்திருந்து. அவர்கள் இருவரும் இப்போது நண்பர்களாகியிருந்தனர். நான் மொழிபெயர்ப்பாளனாய்ப் பதவியுயர்ந்திருந்தேன்.

பீடிமனிதர் மற்றையவரை தனது ஊருக்கு அழைத்தார். காலம் அனுமதித்தால் வருவேன் என்றார் இவர். இரயில் நிலயத்திற்கு வந்தோம். கந்தோருக்குள் புகுந்து பச்சை, சிவப்புக்கொடிகளை கையிலேந்தியபடியே வெளியே வந்தார் அவர். பீடிமனிதர் அவருக்கு ஒரு பீடியை நீட்டினார். இருவரும் புகைத்தபடியே நடந்துபோனார்கள்.

இரயில் வந்தது. ஏறிக்கொண்டேன். தூரத்தே அந்த மனிதர் பச்சைக்கொடி காட்டுவது தெரிந்தது. அவரை இரயில் கடந்துபோது நாம் அவரைநோக்கி கையசைத்தோம்.

சிறு சந்திப்பிலேயே சில மனிதர்கள் தங்களின் நினைவுகளை ஆழமாகச் செதுக்கிவிட்டு நகர்ந்துகொள்கிறார்கள். இப்படியான நிகழ்வுகள் விசித்திரமானவை.

33 ஆண்டுகளின்பின்பும் அந்த மனிதரையும் பீடிமனிதரையும் நினைத்துக்கொண்டிருக்கிறேனே, ஏன்?
எமக்குள் என்ன உறவு?

சில கேள்விகளு பதில் இருக்கக்கூடாது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்