ஆறுமுகநாவலரால் வந்த வினை

எனக்குப் பழக்கமான குரங்கொன்று, ஐக்கிய ராஜ்யத்தில் வாழ்கிறது. அக் குரங்கு சில மாதங்களுக்குமுன் ஒரு கடுவன் குட்டி ஈன்றது. முதன் முதலாக அவன் செய்த உருப்படியான வேலை அதுதான்.

வைத்தியசாலையில் இருந்து தொலைபேசியில் ‘அண்ணை சிங்கம் பிறந்திருக்கு“ என்று அவன் கத்தியபோது… டேய், குரங்குக்கு எப்படியடா சிங்கம் பிறக்கும் என்றேன். மகிழ்ச்சியின் உச்சத்தில் எனது எள்ளலை அவன் கவனிக்கவில்லை.

5வது நாள் தொலைபேசியில் வந்தான்.

‘அண்ணை, இவன் இரவில் படுக்கிறான் இல்லை. அட்டகாசம் பண்ணுகிறான்’

‘அய்யா, பச்சைக் குழந்தை அப்படித்தான் இருக்கும்’

‘உங்கட பெட்டையளும் இப்படியா இருந்தார்கள்?’ என்றான்’

உலகத்தில் இருக்கிற எல்லா பச்சைக்குழந்தைகளும் அப்படித்தான் என்று ஆறுதல்கூறினேன்’.

நாட்கள் 30 ஆனபோது வந்தான்.

‘அண்ணை, பெடி என்னைப் பார்த்து சிரிக்கிறான் இல்லை,
பார்க்கிறான் இல்லை,
உடம்பு பிரட்டுகிறான் இல்லை,
சத்தம் போடுகிறான் இல்லை,
பால்குடித்துவிட்டு கக்காவுக்கு போறது தான் இவனுக்கு வேலை.
மூசி மூசி படுக்கிறான்’

என்று ஒருதொகைக் குற்றச்சாட்டுக்களை தனது கடுவன்மேல் சுமத்தினான்.

‘டேய், விசரா! அது இப்பதான் பிறந்த பிள்ளை. அப்படித்தான் இருக்கும்’

‘அண்ணை, உங்கட பெட்டையளும் அப்படியா இருந்தார்கள்?’

‘ஓம்’ என்று கூறி அவனை மீண்டும் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

இடையிடையே தொ(ல்)லைபேசுவான். அப்போதும் புலம்பல்தான்.

இன்று மீண்டும் தொ(ல்)லைபேசியில் வந்தான். பின்புலத்தில் கடுவன் மழழைப்பேச்சுச் சத்தும் கேட்டது.

‘என்னடா பெடி ‘என்ட அப்பன் ஒரு மடையன்’ என்று கத்துறான்’ என்றேன்.

‘அண்ணை, இவனுக்கு இப்ப 5 மாதமாகிறது.
கத்த மட்டும் தெரிகிறது.
வேறு ஒன்றும் செய்கிறான் இல்லை.
உடம்பு பிரட்டவில்லை,
தவழவில்லை,
உட்காரவில்லை. நான் நடக்கப்பழக்கினாலும் நடக்கிறான் இல்லை.
தொப் தொப் என்று விழுகிறான்.

யூடியுப்இல் இவன் வயது பிள்ளைகள் பாடுது, ஆடுது, நடக்கிறது, படிக்கிறது. கொம்பியூட்டர் விளையாடுது. இவன் ஒன்றுமே செய்கிறான் இல்லை. உங்கட பெட்டைகளும் இப்படியா இருந்தார்கள்?’ என்றான்.

‘எனக்குச் சூடாகியது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு ‘ஓம் ராசா… அவளவை 3 மாதத்திலேயே நடந்து 5 மாதத்தில் ஓடத்தொடங்கினார்கள் என்றேன்.

‘அண்ணை, அமேசூன்’ல பிள்ளைகளுக்கு எப்படி சிறுவயதில் சிந்தனை விருத்திசெய்யலாம் என்று ஒரு புத்தகம் இருக்கு. அதை வாங்க யோசிக்கிறேன்’ என்றான்.

எனக்கு பச்சைத் தூசணம் வாயில் வந்தது. அடக்கிக்கொண்டு ‘ராசா.. உன்ட குடும்பத்துக்கு இப்ப தேவையானது வம்சவிருத்தி. அதற்குரிய வேலையைப்பார்’ என்றேன் எரிச்சலில்.

‘அண்ணை, கோவிக்காதீங்கோ. இவன் ஏன் இன்னும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறான்? உங்கட பெட்டைகளும் இப்படியா இருந்தவர்கள்?’ என்றான் மீண்டும்.

என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் போனது.

‘ஓமடா ஓம். இரண்டுபேரும் பயங்கர துடியாட்டம். 9 மாசத்தில மூத்தவள சைக்கில் ஓடினவள்»

அந்தக் குரங்கு அதையும் நம்பிவிட்டது. அப்ப ஏன் அண்ணை இவன் ஒன்றும் செய்யுறான் இல்லை’ என்றான்

ராசா… ‘அது அப்பன் எப்படி இருந்தானோ அப்படித்தான் பிள்ளைகளும் இருக்கும். தவிர இன்னொரு முக்கிய விடயம் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறதாம்’ என்ற போது மௌனமாகினான். சற்று நேரத்தின்பின்

‘என்னது அது’

அப்பா படித்த பாடசாலை உதவாது என்றாலும் என்று சொல்லிவிட்டு கடும் எரிச்சலில் தொலைபேசியை நிறுத்திவைத்தேன்.

இதை ஒரளவு தாங்கலாம். ஆனால் சென்றவாரம்

‘அண்ணை, எனக்கு ஒரே நேரத்தில் மூன்று பிள்ளை பிறக்கவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது என்றதுதான் என் நெஞ்சிற்கு வலிக்கிறது.

சே…. எங்க இருந்தடா வர்ரீங்க.

எல்லாம் யாழ்ப்பாண டவுணுக்குள் ஆறுமுகநாவலர் செய்ய வேலையால் வந்த வினை. இதன் காரணமாகத்தான் இவன் உருப்படாதுபோனான்.

3 comments:

 1. ஆறுமுக நாவலர் என்ன செய்தார் யாழ் நகருக்கு ?
  வரலாறு தெரியாது அதுதான் கேட்கின்றேன்

  ReplyDelete
 2. அவர் இந்துக்கல்லூரியை ஆரம்பித்தார். அங்குதான் கதையில் வரும் குரங்கு படித்தது. :)

  ReplyDelete
 3. என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் போனது.!)))))))))))))))))

  ReplyDelete

பின்னூட்டங்கள்