சீட்டுக்கட்டு ராணி

எனது நண்பர்களின் எண்ணிக்கையைவிட அதிகமானது சிறுவர் சிறுமியரின் தோழமை எண்ணிக்கை.
அதில் ஒருத்திக்கு 3 - 4 வயதாக இருக்கும்போதே நாம் நண்பர்கள். இப்போது அவளுக்கு 9 வயது.
அவளின் பெற்றோரையும் நான் அறிவேன். அன்றொரு நாள் அவளது தந்தை இப்படிச் சொன்னார் ”எனது இளைய மகள் உங்களைப்பற்றி அடிக்கடி உரையாடுவாள்”.
நெகிழ்ந்துபோனது மனது.
அவள் சரளமாகத் தமிழ்பேசுவாள். பெரும் வாயாடி அவள்.
எங்கு என்னைக் கண்டாலும் ஏதாவதொரு குறும்புத்தனம் செய்வாள். நானும்தான்.
நேற்று மாலை, ஒரு விழாவில் அவளைக் கண்டேன். நண்பியர் சூழ உட்கார்ந்திருந்தாள். அவளின் நண்பியரையும் நான் அறிவேன் என்பதால் அருகில் உட்கார்ந்து உரையாடிபோது அவர்கள் சீட்டுக்கட்டு விளையாடுவதை அவதானித்தேன்.
எனக்கு சீட்டுக்கட்டு விளையாட்டில் ஒருவர் ஒரு சீட்டினை எடுத்து அதனை எனக்குத் தெரியாமல் சீட்டுக்கட்டினுள் வைத்தால் அந்த சீட்டினை கண்டுபிடிக்கும் தந்திரம் தெரியும்.
எனவே ”அம்மா! ஒரு மஜிக் காண்பிக்கவா” என்றேன்.
” நான் உன் அம்மா இல்லை” என்று பதில் வந்தது.
சற்றுநேரத்தின் பின் ”சரி” என்றாள். கண்களில் ஆர்வம் தெரிந்தது.
சீட்டுக்கட்டை வாங்கி எண்ணிப்பார்த்தேன் 52 சீட்டுக்கள் இருந்தன.
”ஒரு சீட்டை எடுத்து நண்பிகளுக்கு காண்பித்தபின் உங்களக்கு விரும்பிய இடத்தில் வைய்யுங்கள்” என்றேன்.
பெரும் இராணுவ ரகசியத்தைப் பார்ப்பதுபோன்று ஒரு சீட்டை மூவரும் பார்த்தார்கள். பின்பு இருவர் என்று கண்களை மூட, ஒருத்தி சீட்டுக்கட்டினுள் அந்த சீட்டை வைத்தாள்.
நான் எனது மந்திர தந்திர விளையாட்டுக்களைத் தொடங்கினேன்.
”நான் வென்றால் நீங்கள் மூவரும் என்க்கு ”முத்தம்” தரவேண்டும். நீங்கள் வென்றால் நான் உங்களுக்கு ”முத்தம்”தருவேன் என்றேன்.
நாங்கள் வென்றால் ஒன்றும் தரமாட்டோம். நீயும் தரத்தேவையில்லை என்று என்னை மடக்கினாள் அவள்.
”ஓ ஜீபும்பா ... ஓடிவா.. சூ காளி.. மந்திர காளி” என்று மந்தரித்தபடி சீட்டுக்கட்டினை பரப்பி எனது தந்திரத்தின்படி வரவேண்டிய சீட்டினை எடுத்து ”இதுவா உங்கள் சீட்டு” என்று கேட்டேன். எனது குரலில் பெருமிதம் இருந்தது.
”இல்லை, இல்லை” என்று விழுந்து விழுந்து சிரித்தனர்.
பிழைக்க முடியாதே. எப்படி பிழைத்தது என்பது எனக்குப் புரியவில்லை.
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தேன்.
இப்போதும் பிழைத்தது.
நண்பிகள் மூவரும் விழுந்து விழுந்த சிரித்தபடியே கேலிபண்ணிணார்கள்.
எனக்கு வெட்கமாக இருந்தது.
”அடியேய், நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்றேன்.
இல்லை இல்லை என்று வாதித்தனர்.
எனக்கு சற்று வெட்கமாயும் இருந்தது. நாம் அமர்ந்திருந்த மேசையில் வேறு பல வளர்ந்தோரும் எனது திருவிளையாடலை கடைக்கண்ணால் கவனித்தபடி இருந்தார்கள்.
மூன்றாவது தடவையும் நான் தொல்வியுற்றபோது எனக்கே எனது தந்திரத்தின் மீது அவநம்பிக்கை வந்தது.
அப்போது அந்த சிறுக்கி என்னைப் பார்த்து ”சில வேளை மேசைக்கு கீழ் ஏதும் கார்ட் விழுந்திருக்கும்” என்றாள்.
மேசைக்குக் கீழ் பார்த்தேன். அங்கு ஒரு சீட்டு கிடந்தது.
”அடியேய் கள்ளி” என்றேன்
கல கல எனறு சிரித்தார்கள்.
இறுதியாக கீழே இருந்த சீட்டினையும் இணைத்து எனது மஜிக்ஐ காண்பித்தேன். சரியாக வந்தது.
கேட்காமலே மூன்று முத்தம் கிடைத்தது.
கொட்டிக்கிடக்கும் பணம், பதவி, சொத்துக்கள் வாழ்விற்கு அர்த்தம் போதிப்பவை அல்ல.
இப்படியான சின்னஞ்சிறு சம்பவங்களே வாழ்வின் அர்த்தத்தை போதிக்கின்றன.
குழந்தைகளின் உலகினைப் புரிந்தால் அதுவே பேரின்பம்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்