மண்ணாசையும், பெண்ணாசையும்

சில நாட்களுக்கு முன் நான் அழுவதாக பாசாங்கு செய்தால் ஒரு நாய்க்குட்டி என் மடியில் ஏறி தனது மொழியில் எனக்கு ஆறுதல் சொல்வதாக எழுதியிருந்தேன் அல்லவா. அந்த நாய்குட்டியின் உரிமையாளர் இன்று தான் சற்றுநேரம் பிந்தி வரவேண்டியிருப்பதால் நாய்க்குட்டியை வெளியே அழைத்துச் செல்லும் பொறுப்பினை எனக்குத் தந்திருந்தார். நான் அழுவதுபோன்று பாசாங்கு செய்தாலே என்னைத்தேற்றும் இந்த நாய்க்குட்டிக்கு இதையாவது நான் செய்யாவிட்டால் நான் மனிதனே இல்லை என்று நினைத்து, நண்பரிடம் “கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்“ என்றேன். நண்பர் தனது வீட்டுத் திறப்பைத் தந்தார்.

இது நடந்தது நேற்று. இன்று, நண்பரின் வீட்டைத் திறந்தேன். என்னைக் கண்டதும் “அய்யோ, நாசமாய்ப் போனவன் வந்துவிட்டான்“ என்று நினைக்காது, துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடையவும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு மனம் இருக்கிறது என்பது நாய்க்குட்டியைக் கண்டதும் புரிந்தது. சற்றுநேரம் அதனுடன் விளையாடியபின் நண்பர்கூறிய நேரத்தின்போது நாய்க் குட்டியைப் பார்த்து “அய்யா வா, வெளியே போவோம்” என்றேன், சுந்தரத் தமிழில். எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்காது, கதவருகில் சென்று, நின்று என்னை நிமிர்ந்து பார்த்தது. அதற்குரிய சேணத்தைப் பூட்டினேன். வீட்டைப்பூட்டிப் புறப்பட்டடோம். என்னைவிட வேகமாய் படியில் பாய்ந்து இறங்கியது. வீட்டுக்கு வெளியே வந்ததும் தனது எல்லைகளை அளவிடும் வேலையைத் தொடங்க, நான் பட்டம் ஏற்றும்போது நூலை இழக்கிவிடுவது போன்று சேணத்தின் கயிற்றை இழக்கி விட்டபடியே நடந்துகொண்டிருந்தேன். 

திடீரென்று யாரோ சேணத்தை பின்னால் இழுப்பது போல உணர்ந்து திரும்பினேன். நாய்குட்டி ஒரு மின்விளக்குக் கம்பத்தினை “ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” என்பதுபோல கம்பத்தினை மணந்துகொண்டிருந்தது. இழுத்துப் பார்த்தேன். அது நகரவில்லை. அப்போதுதான் புரிந்தது நான் நண்பர் நாயை எந்தப் பாதையால் அழைத்துப்போவார் என்று கேட்கவில்லையே என்று. அதற்கிடையில் நாய் காலைத்தூக்கி தனது GPS மார்க்கிங்ஐ செய்துவிட்டு பின்னங்காலால் மண்ணையும் காய்ந்த இலைச் சருகுகளையும் அள்ளி எறிந்துவிட்டு எதுவும் நடக்காததுபோன்று வாலையாட்டியபடியே வந்தது. 

என்னருகில் வந்ததும் நான் «என்னய்யா, இது எனக்குரிய இடம், இதில் வேறு எவரும் காலைத்தூக்கப்படாது என்று எழுதிவிட்டு வருகிறாயாக்கும்» என்றேன். அதற்கும் அது வாலையாட்டியது. நாம் நடந்துகொண்டிருந்தோம். இப்போது நான் உங்களுக்கு என்னைக் கண்டால் அளவில்லாத மகிழ்ச்சிகொள்ளும் இந்த அற்புத ஜீவனைப்பற்றி சற்றுக் கூறவேண்டும். 

அவர் ஆண்பாலானவர். ஆண்களுக்குரிய அனைத்துக் குணங்களையும் உடையவர் (புரிந்ததா). வயது 3 ஆகப்போகிறது. இளமைத் துடிப்புள்ளவர். உயரம் 19 சென்டிமீற்றர்கள். நீளம் 40 சென்டிமீற்றர்கள், அகலம் 13 சென்டிமீற்றர்கள் இருக்கக்கூடிய அதி இராட்சத உருவம் அவருக்கு. அவர் இனத்தின் பெயர் Yorkshire Terrier. “யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள்“ இட்டுச் செய்த உறைப்பான இறைச்சி, மீன் வகைகயை மட்டுமே உண்ணுவார். வீட்டில் உள்ளவர்கள் உண்ணுமுன் இவருக்குப் படைக்கவேண்டும். உணவின் பின் இனிப்பு உண்ணுவது முக்கியம் இவருக்கு. இரவு படுக்கைக்குச் செல்லுமுன் தானியங்கி பல் மினுக்கியினால் பற்களைச் சுத்தம்செய்வது இவருக்கு பிடிக்காது. இவரைப்போன்றவர்களுக்கு கட்டாயம் காப்புறுதி செய்யவேண்டும் என்று நோவேயில் சட்டமிருக்கிறது. இவருக்கு அண்மையில் பல் புடுங்கினார்கள். அந்தச் செலவீனத் தொகையைக் கேட்டால் மயங்கிவிடுவீர்கள். எங்கே இன்று தன்னை நீராட அழைத்துவிடுவார்களோ என்றும் தன்னருகில் ஒரு காதலி நிரந்தரமாக இல்லையே என்ற இரண்டு கவலைகளைவிட அவருக்கு வேறு எதுவித கவலையும் இல்லை. அவ்வப்போது நண்பர் பியர் குடிக்கும்போது நாக்கு நனைக்கவும் கிடைக்கிறது இவருக்கு. மொத்தத்தில் ராஜ வாழ்க்கை. 

நாம் நடந்துகொண்டிருந்தோம். காலநிலை சிறப்பாக இருந்தது. நாய்குட்டியின் நடவடிக்கைகள் அவர் தினமும் போகும் பாதையால் நாம் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தின. கண்ணில்படும் கம்பங்கள் அனைத்திற்கும் தீர்த்த அபிஷேகம் செய்து தனக்குரிய உறுதிப்பத்தரத்தில் கையெழுத்திட்டபடியே வந்துகொண்டிருந்தார். ஏறத்தாழ 50 கம்பங்களுக்கு அது அபிஷேகம் செய்தபோதுதான் எனக்கு அந்த சிந்தனை வந்தது. நாயின் அளவே மிகச் சிறியது. இதன் சிறுநீர்ப்பை பெரிதாக இருந்தாலும் 50 கம்பங்களை அபிஷேகம் செய்ய அதற்குள் தீர்த்தம் இருக்குமா? என்பதுதான் அந்த அற்புதக் கேள்வி. இரத்தம் சிந்தி நிலம் பிடிக்கும் மனிதர்களைவிட இது மிகவும் நிலத்தாசை கொண்ட நாய்போன்றிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். 

கம்பங்கள் இருந்தாற்தானே காலைத் தூக்குவாய் என்று நினைத்தபடியே கம்பங்கள் இல்லாத ஓரு புல்வெளியினூடாக நடாத்திச் சென்றேன். சற்று நேரம் அமைதியாக வந்தது. நாம் உரையாடியபடியே நடந்துகொண்டிருந்தோம். நான் எதைச் சொன்னாலும் அது வாலையாட்டி சம்மதம் என்றது. 

ஒருவர் தனது நாயுடன் எம்மைக் கடந்தபோது அந்த நாயும் எனது நாயும் பரஸ்பரம் சந்தித்துகொண்டார்கள். நான் அந்த மனிதருடன் உரையாடிய சற்றுநேரத்திற்குள் அது தனது வம்சவிருத்திக்கான நடவடிக்கைகளில் ஈடுபட நினைப்பதை உணர்ந்துகொண்டேன். “அய்யா, இவ்விடத்தில் வேண்டாம்“ என்று இழுத்தேன். சற்று எதிர்ப்பைக் காட்டினாலும் பின்பு என்னுடன் நடக்கலாயிற்று. திடீரென்று நாம் நடந்துகொண்டிருந்த அந்தப் புல்வெளியையும் கைப்பற்றும் எண்ணம் அதற்கு வந்திருக்கவேண்டும். சர்க்கஸ் காட்டும் நாய்போன்று இரண்டு முன்னங்கால்களிலும் நின்றபடியே ஆங்காங்கு அபிஷேகம் செய்தது. பலர் அதை பார்த்துச் சிரித்தபடியே கடந்துபோனார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. அருகே இழுத்து “இப்படி வெட்கம் கெட்ட வேலைகளை செய்யாதே எனக்கு கோபம் வரும்“ என்றேன். அதற்கு வெறிகொண்ட மண்ணாசை ஏற்பட்டிருந்திருக்கவேண்டும். உடனே என் காலருகிலேயே காலைத் தூக்கியது. “ராசா, நீ எங்காவது போய் என்தையும் செய். இந்த ஊரை என்ன, நாட்டையும் பிடி… என் காலை மட்டும் விட்டுவிடு“ என்று சேணத்தின் கயிற்றினை இழக்கிவிட்டேன்.

நாம் காடு, மேடு, மலை, சிற்றாறுகள், வீதிகள் என்று அலைந்து திரிந்து வீடு வந்தோம். நான் சோபாவில் சரிந்தேன். நாய் தண்ணீர்பாத்திரத்தை நக்கிக்கொண்டிருந்தது. இன்று ஒஸ்லோவில் தமிழர்களிடத்தில் வளரும் நாய்களிடத்தில், நண்பரின் நாயிடம்தான் அளவுகணக்கில்லாத நிலம் இருக்கிறது. நண்பரின் நாயை ஒரு போடியார் என்று சொல்லாம் இப்போது. மண்ணாசையும், பெண்ணாசையும் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல.

1 comment:

  1. ஆஹா மறந்து போன போடியார் வார்த்தைகள் இன்னும் நாயின் நடைப்பயணத்துடன் நளிணமாக))

    ReplyDelete

பின்னூட்டங்கள்