ஒரு தந்தை பிரசவிக்கப்பட்ட கதை

26.12.1996, 21 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் எனது வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது என்பதை அறியாமல், Volda என்னும் கிராமத்தில் அமைந்திருந்த வைத்தியசாலையில் இரத்தமும் சதையுமான அவளை எனது கையில் ஏந்தினேன்.

அவள் அப்போதுதான் பிரசவிக்கப்பட்டிருந்தாள். “தொப்புள்கொடியை வெட்டு“ என்றனர் செவிலியர். அவளுக்கு வலிக்கும் என எண்ணியதால் “மாட்டேன்“ என்றேன்.

அதேநாள் அவள் விக்கியபோது செவிலியரைத் திட்டினேன். அவர்கள் சிரித்தார்கள். விக்கலும் கடந்துபோனது.

செவிலியர்களே அவளை எவ்வாறு நீராட்டுவது என்பதை எனக்குக் கற்பித்தார்கள்.

வீடுவந்ததும் எனக்காக உணவு தயாரிக்காது பத்திய உணவுடன் காலத்தை கடந்துகொண்டேன். இரவில் அவளை கீழ்மாடிக்கு அணைத்தெடுத்து வருவேன். மார்பின் இளஞ்சூட்டில் தூங்கிப்போவாள். பாலுக்கு மட்டும் விட்டுக்கொடுப்பேன். வேலையில் இருப்புக்கொள்ளாது தவிப்பேன். வீடுவந்ததும் அவளே உலகமென்றானது.

நீராட்டுவது எமக்கிடையிலான ஒரு திருவிழா. மெதுவாய் இடது மணிக்கட்டில் தலையை ஏந்தி, விரல்களால் அவளது இடதுகையைப்பற்றி நீரில் அமிழ்த்தி, வலதுகையால் நீராட்டி, கண்களுக்குள் நீர் புகாது, மென்மையான தலைமுடியினை நீரால் கழுவி, கண், காது, மூக்கு, கைகள், உடல், கால்களை நீராட்டி, அவளுடன் உரையாடி உரையாடி எங்கள் திருவிழா தொடர்ந்துகொண்டிருக்கும்.

காலம் 5 – 6 மாதங்கள் ஆனபின் நீராட்டத்தை நிறுத்துவது சிரமமானது. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிணாள். மெதுவாய் கெஞ்சி, கொஞ்சி பருத்தித்துணியில் அவளைச்சுற்றியெடுத்து தலைமுடியினை துடைத்துவிடுவேன். அற்புத அழகாய் சிரிப்பாள்.

ஓடிக்கொலோன் வாசனையுடன் அப்படியே அவளை தொட்டிலுக்குள் இட்டு பால் புட்டியைக்கொடுத்ததும் கண்கள் சொக்கிப்போகும்வரை பாலைக்குடித்துவிட்டு கண்ணயர்வாள். சிலநாட்களில் எனது படுக்கையில் எனது மார்பில் உறங்கிப்போயிருப்பாள். நானும் மனதுநிரம்பி உறங்கியிருப்பேன்
.
“ப்பா”...என்பது “அப்பா” என்று மாறிய நாள் காற்றில் நடந்தேன். என்னிடம்தான் நடைபயின்றாள். எனது வயிற்றில் உட்கார்ந்திருந்து துள்ளுவது அவளுக்கு பிடித்தமானது. பாலூட்டுவது தவிர்த்து என்னால் எதையும் செய்ய முடிந்தது. அவள் வளர்ந்தபோது அவளின் நீண்ட கேசத்தினை அழகாகப் பின்னவும் பழகிக்கொண்டேன்.

அவளது தங்கை பிறக்கும்வரையில் எமக்கிடையில் ஒரு உலகம் இருந்தது. பின்னாட்களில் அவளது தங்கையும் அங்கு இணைந்துகொண்டாள்.

எங்கள் உலகம் அற்புதமானது. பனிக்காலத்தில் பனிச்சறுக்கும், இளவேனிற்காலத்தில் துவிச்சக்கரவண்டியோட்டங்களும், காட்டுவழிப்பயணங்களும் தூரதேசப்பயணங்கள் என்றும் காலத்தை உழுதுகொண்டிருந்தோம்.

அவளுக்கு எழுத்தறிவித்த பெருமையும் எனக்குண்டு. கதைகள்மேல் அவளுக்கு அதீக காதல் இருந்தது. என்னையும் ஒரு கதைசொல்லியாய் ஏற்றுக்கொண்டவள் அவள்தான்.

அவளுக்கு துவிச்சக்கரவண்டி ஓடுவதற்கு பழக்கியது ஒரு பெரிய கதை. விழுந்தெழும்பியபோதெல்லாம் நான் திட்டுவாங்கினேன்.

அவளின் அணிக்கு காற்பந்தாட்ட பயிற்சியாளனாய் நான்பட்ட அவஸ்தைகள் ஆயிரம். வீட்டினுள்ளும் காற்பந்து விளையாடி கண்ணாடிப்பொருட்களை உடைத்து, அக்குற்றத்தை ஏற்ற பெருமையும் எனக்குண்டு.

அவளுடைய முதலாவது கைத்தொலைபேசி வெள்ளைநிற Nokia 5310. அவளது துவிச்சக்கரவண்டியும் வெள்ளை நிறம்.

இடுப்பளவு நீளமான தலைமுடி இருந்தது. ”அப்பாதான் நோகாமல் தலை இழுத்துவிடுவார்” என்றபடியே என்னிடம் சீப்பினை நீட்டுவாள்”

என் வாழ்க்கை பிரளம்கொண்டு ஆடி,  மணவிலக்கானபின் இங்கிலாந்தில் என்றானது அவளது வாழ்க்கை.

நான் மன அழுத்தங்கள், தனிமைணர்வு, மனச்சோர்வுகளைக் கடந்து சற்றே நிமிர்ந்தபோது பதின்மவயதுகளை கடந்துகொண்டிருந்தாள் அவள்.

ஒரு நாள் ”அப்பா, பல்கலைக்கழகத்தில் சூழலியல் கற்கப்போகிறேன்” என்றாள். ”மகிழ்ச்சி” என்றேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ”அப்பா, ஒரு வாரத்தில் வருகிறேன். நாம் வடக்கு நோர்வேயை சுற்றிப் பார்க்கப்போகிறோம் என்றாள். 7 நாட்களில் எறத்தாள 6500 கிலோமீற்றர்கள் பயணித்திருந்தோம். வாகனத்திலேயே தங்கினோம். மலைகள் ஏறினோம், கடற்கரைகளை கடந்தோம்.

பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தை அவுஸ்திரேலியாவில் கடந்துகொண்டாள்.

சில மாதங்கள் உலகம் சுற்றினாள்.

இப்போது மூன்றாம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்தில். இன்னும் இரண்டு வருடங்கள் கற்கப்போகிறாளாம்.

”இது உனது உலகம் நீயே அதன் அதிபதி” என்றிருக்கிறேன் அவளிடம்.

மரக்கறிகளை மட்டும் உண்பதோடு, பால் முட்டை ஆகியவற்றை தவிர்க்கிறாள். ”மச்சம் உண்ணாதே” என்று எனக்கும் உபதேசிக்கிறாள், திட்டுகிறாள்.

திடீர் திடீர் என்று தொடர்புகொள்வாள். ஆயிரம் கதை இருக்கும் அவளிடம். உலகத்தை மாற்றும் இளரத்தம் அவளையும் ஆட்டுகிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

அவ்வப்போது பல இணைப்புக்களை அனுப்புவாள். கட்டாயம் பார். உலகம் அழிவுப்பாதையில் செல்கிறது. அதை நாம் திருத்தவேண்டும் என்பாள். நானும் இப்படித்தான் உன் வயதில் நினைத்தேன் என்பதை நான் அவளுக்கு இதுவரை கூறியதில்லை.

வழிகாட்டுவதோடு நின்றுவிடுகிறேன். அப்படிச் செய், அதை தெரிவுசெய் என்று நான் கட்டளை இடுவதில்லை.

அது தவறு என்பது எனது எண்ணம். குழந்தைகளை வாழ்வின் சிரமங்களில், துன்பங்களில், துரோகங்களில், ஏமாற்றங்களில் இருந்து பாதுகாப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையை அவர்கள் விழுந்தெழும்பி கற்றுக்கொள்ளவேண்டும். தேவையானபோது கைகொடுக்கலாமே அன்றி அவர்களின் வாழ்க்கை நாம் வாழ முடியாது.

என் அப்பன் இப்படித்தான் என்பது அவளுக்குத் தெரியும். அதுவும் மனதுக்கு பெரும் ஆறுதலான விடயமல்லவா.

பெண்குழந்தைகளை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்ற எனது கற்பனைகளை, வாழ்வின் யதார்த்தம் வென்ற என்னோடல்லாத கடந்த 9 வருடங்களிலும் சுயம்புவாய் வளர்ந்துகொண்டவள் அவள்.

அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ளப் பழகும் அவள் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளப் பழகுகிறாள் என்றே எண்ணத்தோன்றுகிறது. அவளது வயதில் நான் இத்தனை முதிர்ச்சியாக இருந்ததில்லை.

அவளின் வெட்டொன்று துண்டிரண்டென்ற பேச்சினை, வயதுக்கேயுரிய சினத்தினை, சமூகநல ஆர்வத்தை தள்ளியிருந்து ரசிக்கிறேன்.

அன்றொருநாள் ”அப்பா, பல்கலைக்கழகத்தின் கைப்பந்து அணிக்கு தேர்வாகியிருக்கிறேன்” என்றாள். மனது பெருமையுணர்ந்தது.

காலம் எமக்கிடையே கண்ணுக்குப்புலப்படாத ஒரு இடைவெளியொன்றினை உருவாகிவிட்டிருக்கிறது என்பததை மறுப்பதற்கில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்ய முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

மணவிலக்குகள் தரும் ஈடுசெய்யமுடியாத இழப்புக்கள் இவைதான்.

26.12.2017 நேரம் 00.01

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா என்றேன்"
"ம்.... I love you Appa’ என்றாள்"

3 comments:

 1. தந்தையின் தவிப்புக்கள் என்றாவது உணர்ந்துகொள்ளப்படலாம் அண்ணாச்சி!

  ReplyDelete
 2. சஞ்சயன்
  நேற்றிரவிலிருந்து யோசனைகள் ஓடிற்று.
  எனக்கு உங்கள் பார்வை( வாழ்கை) ஒரு basicவடிவம் தருகிறது. நானும் இதே வயதில் உலகை மாற்றலாம் எனும் விம்பம் கொண்டிருந்தன். Sigle parent ஆக நான் முகம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தது/இருக்கிறது. எனினும், என்னை விட்டால் பிள்ளைகளுக்கு ஆருமில்லை இவ் வாழ்க்கையை ஒரு mission என நினைத்து என் விருப்பு வெறுப்பை அப்பால் தள்ளி கம்பீரமாக வாழ வேணும். என் பங்களிப்பை சரியாகச் செய்ய வேணும் என ஒரு உந்து சக்தியாக உள்ளது உங்கள் பத்தி.

  ReplyDelete
 3. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் முகநூலில் மிகுந்த மன்அழுத்தத்தில் இருப்பதாகவும், எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றிருப்பதாகவும் பதிவிற்றிருந்தீர்கள். நான் அதற்கு மறுமொழியாக உங்களை என்னை போன்ற சாதாரணமானவர்களுக்காக தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அன்றிலிருந்து தொடர்ந்து உங்கள் வலைப்பூவை படித்து வருகிறேன். பயனுள்ள பல பதிவுகளை என்னை போன்ற சாதாரணமானவர்களுக்காக எழுதி வருகிறீர்கள். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete

பின்னூட்டங்கள்