"Why don't you love me, Jenny? I'm not a smart man... but I know what love is."

ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும்தேடித் தேடிப்பார்ப்பது நெஞ்சோடுகிளத்தல் அன்றி வேறென்ன?

ஒரு காலத்தில் 'நினைத்தாலே இனிக்கும்' எனக்கு அப்படி இருந்தது. அந்நேரத்து வயது அப்படி.

இப்போது Forrest Gump. 1994இல் இருந்து பலதடவைகள் பார்த்தாகிவிட்டது. இறுதியாக நேற்றிரவு.

ஒவ்வொரு முறையும் புதிய புதிய செய்தியொன்றை மனது கண்டுகொண்டு கிறங்கிப்போகிறது.

- தாய் மகனுக்கான உறவு.
- சக வயத்தொவர்களின் கொடுமை
- பால்யத்து சகியின் தோழமை
- Bubba உடனான நட்பும் அவன் இறந்தபின் அவனது குடும்பத்திற்கு உதவும் மனது.
- யுத்தமும் இழப்பும்
- இராணுவத்தில் தனது மேலதிகாரி Lieutenant Dan Taylor உடனான நட்பும் அன்பும்.

என்னை Gumpஇன் தோழனாக்கியது அவனது Jenny மீது அவனுக்கிருக்கும் அடங்காத காதல்.

அன்பு என்பது உரிமைகோருவது அல்ல என்பதை மிக அழகாக இத்திரைப்படம் உணர்த்துகிறது.

பால்யத்துச் சகியை, காதலியை அவ்வப்போது அவனிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்கிறது காலம்.

சில நேரங்களில் அவளாகவே விலகிச்செல்கிறாள்.

அப்போதும்கூட அவள்மீதான அவனின் காதல் குறையவில்லை.

இது இலகுவல்ல. என்னால் அவனைப் போன்று இருக்கவே முடியாது. சுக்குநூறாகியிருப்பேன். ஆத்திரப்பட்டிருப்பேன்.

வேறுபலருடன் பழகும் அவளை, அவளின் விருப்பப்படி வாழ அனுமதிப்பதும், அவளாகவே அவ்வாழ்க்கைகளில் இருந்து அலுத்துக் களைத்துத் திரும்பும்போதெல்லாம் அவளைக் காதலித்துக் கொண்டாட அவனால் எப்படி முடிந்தது. இது சாத்தியமானதா?

அவள் தன்தைத் தவிர்த்து மற்றையவர்களை கொண்டாடியபோதும் பொறாமையை, சினத்தை, சுயபரிதாபத்தை எல்லாம் கடந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வை எதிர்கொள்ளும் மனம் எப்படி வாய்தது?

இறுதியாக காலம் அவளை அவனிடமே ஒப்படைக்கிறது. அப்போதும் அவனின் நேசிப்பில் குறையேதுமில்லை. அவள் இறந்தபின்பும்தான்.

இதுவா மனவிசாலம்?

Forrest Gumpஇன் வசனமென்றுடன் இப்பத்தியை முடிக்கிறேன்.

"Why don't you love me, Jenny? I'm not a smart man... but I know what love is."

#Forrest_Gump

1 comment:

  1. விரைவில் தேடிப்பார்க்க வேண்டும் திரைப்படத்தை.

    ReplyDelete

பின்னூட்டங்கள்