33 வருடங்களின் பின்னான பிராயச்சித்தம்

மாலைப் பொழுதொன்றில் மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன். சிறிதாய் மழை தூறிக்கொண்டிருந்த போது வீதியோரத்தில் நின்றிருந்தது ஒரு சிட்டுக்குருவிக் குஞ்சு அதை மிக அருகில் கடந்தபோது அது பறப்பதைத்  தவிர்த்து ஆர்வமாய் வீதியில் இருந்த எதையோ கொத்தியபடி தன்னை மறந்திருந்தது. கடந்து சில அடிதூரம் சென்ற பின்பு திரும்பி்ப் பார்த்தேன். அக் குருவி இப்போ வீதியின் நடுவில் நின்றது. அதனை வேகமாக கடந்து போன சைக்கிலையும் அது சட்டைசெய்யவில்லை. அடுத்து வந்த காரின் சக்கரத்தையும் அது ச‌ட்டை செய்யவில்லை. வீதிக்கு நானே அதிபதி என்பது போல் அநாயசமாக நடந்து திரிந்து கொண்டிருந்தது, பயமறியா இளங்கன்று போல். பறப்பதற்கு கற்றுக் கொள்ளாத குருவிக் குஞ்சு அது.

நான் எனது நடையை நிறுத்தி குருவியைப் பார்ப்பது போல ஒரு பெண்ணும் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் எண்ணமும் ஒன்றாய் இருந்திருக்க வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் குருவிக்கருகில் நின்றோம். நாம் குருவியை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடலாம் என பேசிக் கொண்டதால் காரியத்திலும் இறங்கினோம்.

நான் வீதியின் குறுக்கே நின்று வாகனங்களை நிறுத்துவதாகவும், அவர் குருவியை பிடிப்பது என்றும் ஒப்பந்தமாயிற்று.  விதியின்  நடுவில் கத்தரி வெருளி போன்று கைகளை அகட்டியபடியே இருபுறத்தாலும் வந்த வாகனங்களை நிறுத்தினேன். வாகனமோட்டிகளின் முகங்களில் எனக்கேதும் சுகயீனமோ என்ற சந்தேகம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.


அப் பெண் குருவியைப் பிடிக்கப் பார்த்தார். அது பிடிபடும் போல் பாவ்லா காட்டியபடியே பிடிபடாமல் இருந்தது.

எங்கள் நிலையைக் கண்ட இன்னொரு பெண்ணும் எம்முடன் சோர்ந்து கொண்டார். இப்போ குருவியின் உயிகை் காப்பாற்ற மூவர் முயன்று கொண்டிருந்தோம் குருவிக் குஞ்சு மீண்டும் வீதியோரத்துக்கு சென்றிருந்தது. வாகனங்களில்  சென்றவர்கள் புதினம் பார்த்தனர். குருவியை பிடிக்க முயற்சித்த பெண் குருவியை பிடிப்பார் ஆனால், குருவி அவரின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியினால் அவரது கையை விட்டு தப்பி வெளியே வந்தபடியே இருந்தது.


நான் வீதியோரத்தில் இருந்த ஒரு மட்டையை எடுத்து அதை  குருவிக் குஞ்சின் கீழ் வைத்து குருவிக் குஞ்சை தூக்க முயற்சித்தேன். குருவி அதில் எறுவது போல் நடந்து வரும் ஆனால் எறாது. இப்படி அவரும் நானும் சிரமப்படுவதை உணர்ந்து எம்முடன் சேர்ந்து நான்காவது பெண் எம்மை விலகச் சொல்லி ஒரு அமுக்கில் குருவிக்குஞ்சை பிடித்து மரங்களுக்கு நடுவில் அதனை விட்டுவிட்டு வந்தார்.

நாம் தாய்க்குருவி அருகில் வருகிறதா என்று பார்த்திருந்தோம். அருகில் ஒரு குருவியின் குரல் கேட்டது. சரி இனி அது வாகனங்களால் அரைக்கப்பட்டு உயிரை இழக்காது என்றப‌டியே கலைநது போனோம்.

இதன்  பின் தொடரூந்தில் உட்கார்த்திருந்த போது ஏறத்தாள 33 வருடங்களுக்கு முன் எனக்கும் ஒரு சிட்டுக்குருவிக்கும் இடையில் நடைபெற்ற கதை ஒன்று நினைவிலாடியது.

விடுதிவாழ்க்கையில் இருந்து பாடசாலை விடுமுறைக்கு வீடு சென்றிருந்தேன். விடுமுறையின் போது ”கட்டபொல் (catapult)” கட்டுவதுதே பெரும் திட்டமாயிருந்ததால் கொய்யா மரம் தேடி கையுக்கு அடக்கமான Y வடிவலான ஒரு சிறு கொப்புடன் வீடுவந்து அதை அளவாய் வெட்டி, சீவி காயவைத்து, சைக்கில் கடைக்கராரிடம் ஒரு டியூப் துண்டு வாங்கி, சப்பாத்து திருத்தும் கடையில் ஒரு தோல் துண்டு எடுத்து அதை கல்லால் தேய்த்து மிருதுவாக்கி ஒரு கட்டபொல் உருக்கிய போது மனது காற்றில பறந்து திரிந்தது.

catapult  உருவாக்கியாகியாகிவிட்டது. ஆனால்  நான் குறிபார்த்து அடிக்கிறேன் எதுவும  எனது கல்லினால் தாக்கப்படுவாய் இல்லை. தி‌டீர் என்று ஆட்டுக்கொட்டிலுக்கு மேலே ஒரு சிட்டுக்குருவி நிற்பது தெரிய எனக்கு தெரிந்த முறையில் குறிபார்த்து அடித்தேன். சில இறகுகள் காற்றில் பறக்க சுறுண்டு விழுந்தது குருவி. குறிபார்த்த போது இருந்த சந்தோசம் மாறி மனதினுள் இனம்புரியாத பயம் குடிவந்திருந்தது. அருகில் சென்று பார்த்த போது பரிதாபமான கண்களினால் என்னைப்பார்த்தபடியே பறக்கமுடியாது கிடந்தது குருவி. அதை தூக்குவதற்கு பயமாயிருந்தது.  உரு சிறு தடியால் தட்டிவிட்டேன்.  அப்போதும் அது பறக்கவில்லை.

வீட்டில் இருந்து சற்று சோறும், தண்ணீரும் கொணர்ந்து வைத்தேன். இது நடந்த  போது நேரம் மதியமிருக்கும். மாலைவரை குருவி அசையவில்லை. நான் வைத்த சோற்றையும், நீரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனம் முழுவதும் கல்லைக் கட்டிவிட்டது போல் கனத்திருந்தது. குருவியினருகே காவலிருந்தேன். எனது  பொறுமையும் கரைந்திருக்க மெதுவாய் கம்பினால் குருவியினை தூக்க முயற்சித்த போது உயிர் பெற்று பறந்தோடி மறைந்தது அந்தக் குருவி.

பல ஆண்டுகளுக்கு பின்னான இன்று ஒரு சிறு சிட்டுக்குருவியின் உயிரைக்காப்பாற்றி அன்று செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டேனோ என்று யோசிக்கிறேன்.

அப்படியாயும் இருக்கலாம். எது எப்படியோ மனது மகிழ்ச்சியாயிருக்கிறது.


இன்றைய நாளும் நல்லதே!


உலகத்திலுள்ள சகல சிட்டுக் குருவிகளுக்கும் இது சமர்ப்பணம்.

.

4 comments:

 1. நல்ல பதிவு.
  வயது ஏறுகிறது. மனசு மாறுகிறது.

  ReplyDelete
 2. ஆகா....உங்களை பற்றி தான் மலையாள கவி வயலார் பாடி விட்டு சென்றிருப்பாரோ...................http://www.4shared.com/audio/zM0b5ghT/Manishada_-_Vayalar.html

  ReplyDelete
 3. சிட்டு குருவிகள் நிறையவே கற்றுத் தருகின்றன எமக்கு :) வாழ்வில் அரிய தருணங்களில் இதுகும் ஒன்று.

  ReplyDelete

பின்னூட்டங்கள்