நொதிக்கும் கள்ளூறும் நினைவுகள்

நான் எனது பதின்மக் காலங்களில் சில பெண்களிடம் காதல் வயப்பட்டிருக்கிறேன். அவர்களில் முதலாமவள் காதலுக்கான அர்த்தங்கள் புரியாததோர் பருவத்தில் திடீர் என்று கூடும் மழைமேகங்கள் போல் வந்தாள், அடைமழையாய் பொழிந்தோய்ந்தாள். நனைந்திருந்த காலங்களில் தூறலாய் மாறி பின்பு மறைந்து போனாள். இன்றும் அவள் முகமும், பளுப்பு நிறமான அவளின் வெள்ளைப்பாவாடையும், அவளின் உருக்கமான தேவாரங்களும் இன்றும் நினைவிலாடுகின்றன. (பார்க்க: 33 வருட ரகசியம்: அவளும் கோயிலும் நானும்)

அதேபோல் இன்னுமொருத்தி விடயங்கள் புரியத் தொடங்கிய காலங்களில் பூரண நிலாவின் அழகுடன் வந்து போனாள். எம்மிருவருக்கும் இருவருக்கும் இது இனக்கவர்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது, இன்று. இது நடந்து, சிறிது நாட்களில் அவளுக்கு ஒரு காதலனும், இன்னும் சிறிது காலத்தில் அவனே கணவனாகவும், அதன் பின் குழந்தை என்றும் ஆகிப்போயிருந்த, எனக்கு இன்னொருத்திமேல் பருவக்கவர்ச்சியற்ற காய்ச்சல் வந்து, தசாப்தங்களாய் நீண்டழிந்த பெருஞ் சரித்திரமது.

பதின்மவயதில் காதலின் அவஸ்தையை அதை அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளலாம். ஆனால், பலரும் அவ்வவஸ்தையை தாண்டி வந்தவர்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. கண்ணீரின் சுமை சுகமாக இருக்கும் காலமது. காமம் எனபது துளியும் கலக்கப்படாத காலங்கள் அவை. ஒரு வித பரிசுத்தத்தின் சுகத்தினை தினமும் உணரக் கூடியதாக இருக்கும், புதிது புதிதாய் பிறக்கும் அந் நாட்களில் காத்திருப்பும், தவிப்பும், தரிசனமும் வெவ்வேறான உணர்வுகள் என்றாலும் மொத்தத்தில் அவை சுகமானவை என்பதே உண்மை. தவித்து தவித்து, தவம் செய்த காலமது.

வாழ்வின் பாதியை கடந்த பின்பு, களைத்தொதுங்கும் நேரங்களில் இன்றும் நெஞ்சினை மயிலிறகால் நீவிப் போகும் நினைவுகளவை.

வாழ்வின் வரைபடங்களை அறிந்து களைத்தோயும் சுமைதாங்கியாக இருப்பதற்காகவே உருவாக்கப்பட்ட காலங்களோ அவை என்று நினைக்கத் தோன்றுகிறது இன்று.

நான் விரும்பிய பெண்களுமுண்டு, என்னை விரும்பிய பெண்களுமுண்டு. எல்லா மனிதரிடத்திலும் இப்படியான ரகசியங்கள் நிட்சயம் இருக்கும். எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்த மிட்டாயை, எடுத்துண்ணும் விறுவிறுப்பு கலந்த சுவை போன்றது அந்த ரகசியங்களின் நினைவுகள்.

நாம் விரும்பப்படுவதன் சுகமே தனி. காற்றல் பறப்பது போன்ற உணர்வது. பெருமை என்னும் கடலில் மிதக்கும், மனக் கப்பல். நம்மை காற்றில் நடக்கவைக்கும். அதே போல் நாம் விரும்பப்படவேண்டும் என்று நினைக்கும் போது நாம் விரும்பப்படாவிட்டால் கல்லாய் கனக்கும் மனம். ஊன் உருகி கண்ணீராய் கரையும். அதிலும் சுகம் என்பவர்களும் உண்டு.

புதின்மகாலத்து நட்பின் சுகமும், தூய்மையும் வாழ்வின் பிற்காலங்களில் கிடைப்பதில்லை. எனக்கும் இப்படியான நட்பு வாய்த்திருந்தது. வேறு சிலருக்கும் நான் அப்படியானதோர் நட்பாய் வாய்த்திருந்தேன். நினைத்தாலே இனிக்கும் நட்புகள் அவை.

வாழ்வின் வேகத்தில் மூச்சடைத்து நிமிரும் காலங்களில் பலதும் தொலைந்து போயிருக்கிறது. நட்பில் இருந்து காதல் வரை.

தோழமையாய் சுகத்தையும், சோகத்தையும் பகிரக்கூட எம்மில் எத்தனை பேர் அலைந்து திரிகிறோம். ஏன்?
விடைதெரியா வினாக்களுக்குள் இதையும் சோர்திருக்கிறேன் இந் நாட்களில்.

வாழ்வினை கடக்கும் போது உற்ற நண்பன் ஒருவனை அருகில் கொண்டிருப்பவர்கள் அதிஸ்டசாலிகள். பலருக்கு ஏனோ அந்து அதிஸ்டம் வாய்ப்பதில்லை என்பது ‌அவர்களின் தூரதிஸ்டமே. எனக்கு பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே தோமைமையை பகிர்ந்து கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திக்கும் அந்த ஒரு சில நாட்களின் போது நட்பின் சுவையை முழுவதுமாய் அனுபவிக்கமுடிவதில்லை. சுடு உணவை ஏதோ அவசரத்தில் உண்டது போலிருக்கும் அது. ருசியும், ஆத்மதிருப்தியும் அங்கிருப்பதில்லை. தொலைபேசியினூடாக பேசிக்கொள்ளலாம் நட்பின் அருகாமையையும், உயிர்ப்பையும் அனுபவிக்க முடியாதென்பேன் நான்.

தேடிப்போய், ஊர்க்காற்று உண்டபடி ‌எதையெதையோ பகிர்ந்து அழுது தீர்க்க துடிக்கிறது மனது. அங்கும் அப்படியாயே இருக்கும். வாழ்வு எவருக்கும் பொதுவானதல்லவா? வாசல்படி அங்குமுண்டு இங்கமுண்டு.

காதலையும் சுவைத்திருக்கிறேன், நட்பினையும் சுவைத்திருக்கிறேன். வாழ்வின் அர்த்தம் புரியத் தொடங்கும் இந் நாட்களில் ஏனோ, காதலை விட நட்பே பல காலம் தோளோடு தோளாய் வருகிறது போலிருக்கிறது எனக்கு. உங்களுக்கு?


இன்றைய நானும் நல்லதே!


தொலையாதிருக்கும் நட்புக்கு இது சமர்ப்பணம்.


.

8 comments:

 1. உங்கு நிறைய 'take away' சாப்பாட்டுக் கடைகள் உண்டோ? :-). அடுத்த ஒரு மாதத்திற்கு அண்ணன் வீட்டில் சமையல் இல்லை என்று பட்சி சொல்லுகிறது.

  ReplyDelete
 2. எஸ் சக்திவேல் @ பட்சியை மீண்டுமொருமுறை வந்து பார்த்துப் போகச் சொல்லுங்கள். (பொரியலுக்கு உதவும், எனக்கு)

  வாழ்வின் அனுபவம் பேச எதற்கு தயக்கம்? நான் முழுமையற்றவன் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். நன்றும் தீதும் இங்குமுண்டு எங்குமுண்டு.

  ReplyDelete
 3. அண்ணே, வேடிக்கையாகப் பேசுவது என் இயல்பு. நீங்கள் serious ஆக எடுத்து விட்டீர்கள் போலுள்ளது. :-)

  ReplyDelete
 4. உங்கள் மின்னஞ்சலை தந்துதவ முடியுமா?
  adsayaa@gmail.com

  ReplyDelete
 5. உள்ளதை உள்ளபடி சொல்லவும் ஒரு பக்குவம் வேண்டும் அதை கண்டேன் உங்கள் எழுத்து வடிவிலே

  ReplyDelete
 6. காதலை விட நட்பே பெரிது பொன் மொழிகள்! வாழ்த்துகின்றேன் உங்களை!

  ReplyDelete
 7. அருமையான பதிவு. உண்மை உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை
  எழுத்தைத் தேடினேன் மின்னலாய் கிடைத்தது. நன்றி

  ReplyDelete

பின்னூட்டங்கள்