இதமான மனிதனும் பதமான சொல்லும்

லண்டன் மாநகரத்தில் ஒரு பஸ்தரிப்பிடத்தில் எனது இளைய மகளுடன்  நின்றிருந்தேன். கடையில் என்ன என்ன வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டபடியே நின்றிருந்தாள் அவள். அவள் கண்ணில் இருந்த ஆர்வத்தின் அழகைப் பார்த்தபடியே நின்றிருந்த போது, பஸ் வந்தது.  நின்றது.

கதவு தானாகவே திறந்துகொள்ள மகளிள் கையை பிடித்தபடியே உட்புகுந்து டிக்கட்‌ஐ சரியார்க்கும் கணணிமயப்படுத்தப்பட்ட இயந்திரத்தில் டிக்கட்ஐ வைக்கிறேன் ”குட் மோர்னிங் சேர்” எனனும் கணீர் என்ற குரலால் திடுக்கிட்டு நிமிர்ந்த போது கண்ணாடிக் கூண்டின் உள்ளே இருந்து நட்பாய் புன்னகைத்தபடி தலையாட்டினார் சாரதி. எனது மகளுக்கும் ”குட் மோர்னிங் லிட்டில் லேடி” என்றார். அவள் சிரிக்க, நாம் குட் மோர்னிங் என கூறியபடியே அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம். எமக்கு பின்பு பஸ்ஸில் ஏறிய எல்லோருக்கும் ”குட் மோர்னிங்” சொன்னார் அந்தச் சாரதி.


அனைவருக்கும் அது புதுமையாக இருந்தது என்பது அவர்களின் முகபாவனையில் இருந்து அறியக்கூடியதாயிருந்தது. இயந்திரத்தனத்தில் பஸ்ஸில் ஏறி, சிந்தனை எங்கோ சென்றிருக்க சாரதியை கடந்து போகும் எல்லேரையும் ”இதோ உங்கள் சாரதி, நானிருக்கிறேன்” என்பது போலிருந்தது அவர் நடவடிக்கை.

இறுக்கமான முகத்துடன் வந்தவர்களும் புன்னகைத்தார்கள் அவருக்கு. அவரைக் கடந்து போன அனைவரும் அவரை திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்கள். அவரும் புன்னகைத்தபடியே இருந்தார்.

சாரதியின் நடவடிக்கைகள் புதினமாயிருந்ததால் அவரை அவதானிக்கலானேன். நாம் இறங்கும் இடம் வரை அவர் தனது காலை வணக்கத்தை தனது பஸ்ஸில் ஏறிய அனைவருக்கும் கூறிக்கொண்டே வந்தார்.

அவரின் நடவடிக்கையினால் பஸ்ஸில் ஒரு வித புன்னகை பரவியிருந்தது. சிலரின் முகங்கள் அவரை வினோதமாகப் பார்த்தன.

சக மனிதனுக்கு வணக்கம் சொல்பவனை வினோதமாகப் பார்ப்பது சாதாரணமாகவும், சக மனிதனுக்கு வணக்கம் சொல்லாது இருப்பது  வழமையாகவும்  இருக்கிறதே என்று எனது சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

நாம் இறங்கும் இடம் வந்து நாம் இறங்கிய போது கைகாட்டி விடைபெற்றார். மகளும் மகிழ்ச்சியாக கை காட்டினாள். நான் தலையாட்டினேன்.

அதன் பின் இந் நிகழ்ச்சியினை நான் மறந்து போயிருந்தேன், அன்று மாலை மகள் அதை நினைவுறுத்தும் வரை. அவளுக்கும் அது ஆச்சரியமாய் இருந்திருக்க வேண்டும்.

அந்த சாரதி ஒரு வித்தியாசமானவர் என்றாள். ஏன் என்ற போது ஏனைய சாரதிகள் இப்படி வணக்கம் சொல்வதில்லை ஆனால் இவர் சலிக்காமல் எல்லோருக்கும் சொல்கிறாரே என்றாள். ஆம் என்று சொல்லி புன்னகைத்தேன். ”ஐ லைக் தட், ஐ லைக் ஹிம்” என்றாள் மகள். நானும் தான் என்றேன். மயக்கும் புன்னகை பதிலாய் கிடைத்தது.

அறிமுகமில்லாத அனைவருக்கம் வணக்கம் சொல்லி நட்பாகும் அவரை எனக்கு ஏனோ பிடித்துப்போயிற்று. பலரின் பாரங்களை கண நேரமாவது இறக்கிவைக்கிறது அவரின் வணக்கம். எத்தகைய பெருந்தன்மையான சேவையது?

முகத்தை இறுக்கமாக வைத்தபடியே தினமும் எத்தனையோ மனிதர்களை கடந்து போகிறேன். இன்று கூட பஸ் நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் அழுதபடியே தொலைபேசிக்கொண்டிருந்தாள். தொலைபேசிய பின்பும் அவளின் அழுகை நின்றதாயில்லை. அருகில் நான் நின்றிருந்தாலும் ஆறுதலாய் எதுவும் கூறவில்லை. சக மனிதனுக்கு கஸ்டத்திலும் கைகொடுக்க மறுக்கிறதோ என் மனது? ஏன்? என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை

ஆனால் அம் மனிதர்ஒரு சொல்லினூடாக குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை புன்னகைக்க வைக்கிறார். பலரின் ஏக்கங்களுக்கு அவர் வடிகாலாயிருக்கிறார். எதிர்பாராத நேரத்தில் எமக்குக் கிடைக்கும் அன்பான உபசரிப்பு போல் மனதுக்கு இதமாயிருக்கிறது அவரது ஒற்றை வார்த்தை. ஒரு வார்த்தையால் அவ்விடத்தில் உள்ள பலரையும் மனதுக்குள் புன்னைக்கவைக்கிறார்.

இவை நடந்து இரண்டு நாட்களின் பின் ஒரு கடும் மழை நாள், நனைந்த உடுப்புடன், 10 - 15 நிமிடங்களாய் பஸ்ஸூக்கு காத்திருக்கிறேன். உடம்பும் மனதும் மழையின் கனத்தில் நனைந்து சோர்ந்து போயிருந்தது. எப்படா வீடு போவேன் என்றிருந்த போது பஸ் வர, அதில் ஏறிக்கொண்ட போது ”குட் ஈவ்னிங், சேர்” என்ற குரல் கேட்க நிமிந்து பார்த்தேன். புன்னகைத்தபடி உட்கார்ந்திருந்தார் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த அதே சாரதி. என் மனமும் உடலும் நீர் பிழியப்பட்ட பஞ்சாகிப் போயின.

”குட் ஈவ்னிங் சேர், குட் ஈவ்னிங் மேடம்” என்று எல்லோரையும் வாழ்த்திக் கொண்டிருந்தார் அவர்.
பஸ் ஓடிக்கொண்டிருந்து.
வெளியே மழை உலகத்தை கழுவிக்கொண்டிருந்தது.
உள்ளே அம் மனிதர் மிக மிக அழகாயிருந்தார்.

இன்றைய நாளும் நல்லதே!


.

3 comments:

 1. "வெளியே மழை உலகத்தை கழுவிக்கொண்டிருந்தது" இதை படிக்கின்ற போது மனசுக்குள்ள குளிருது - அதியமான்

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு சகோ. குறிப்பாக பயணிகளிடம் வணக்கம் சொல்லும் ஓட்டுநரைப் பார்த்தப் போது முதன் முதலில் எனக்கும் வியப்பாகவே இருந்தது. எரிச்சல் தோய்ந்த முகத்துடன் கடுப்பாய் இருக்கும் ஓட்டுநர், எரிந்து விழும் நடத்துநர் - ரொம்ப பழகினால் மட்டுமே சென்னையில் சில நடத்துநர்கள் முகம் கொடுத்துப் பேசுவார்கள் ... இப்படிப் பழகிய எனக்கு ?

  முதன்முதலி வெளிநாட்டில் இப்படியான ஒரு அனுபவம் கிடைத்த போது நானும் கண்கள் மிளிரக் கண்டுக் கொண்டேன். கொஞ்சம் அந்நியமாக இருந்தாலும் பழக்கப் படுத்தி கொண்டேன் ... பேருந்தில் இருந்து இறங்கும் போது அத்தகைய ஓட்டுநருக்கு நன்றிகள் சொல்லக் கற்றுக் கொண்டேன் !!!

  ஆனால் இங்கும் அனைத்து ஓட்டுநர்களும் அப்படி நடந்துக் கொள்வதில்லை .. கொஞ்சம் நடுவயதில் இருக்கும் வெள்ளைக்கார மற்றும் சில ஆசியர்கள் ( சீனர்கள் ) மட்டுமே வணக்கம் வைப்பார்கள். நமது தெற்காசிய ட்ரைவர்கள் எல்லாம் உம்ம் .. என்றே இருப்பார்கள் !

  ஒவ்வொரு மனிதனக்கும் நாம் காட்டும் ஒரு சிறுப் புன்னகை கூட எவ்வளவு !!! இதம் தருகின்றது அல்லவா >? நம்மில் பலர் குடும்பத்தவரிடமே முகம் கொடுத்து புன்னகைக்க மறந்திருப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது.

  ReplyDelete
 3. கருத்தான பதிவு!

  ReplyDelete

பின்னூட்டங்கள்