விதைத்ததும் அறுத்ததும்

அன்றொரு நாள் இரவு 8:30 மணியிருக்கும் தொலைபேசி சிணுங்கிய போது, எதிர்முனை ”கணணிஉதவி தேவை உடனே வா” என்றபோது பணம் என்பதால் இந்தப் பிணமும் வாயைப் பிளந்தது.

அவர் வீட்டை தேடிப் பிடித்த போது நேரம் 9.30 இருக்கும். தொடர்மாடி வீட்டின் அழைப்பு மணியை இசைத்த போது கதவு தானே திறந்து கொண்டது. Lift க்காய் காத்திருந்த போது ஒருவர் Lift இன் உள்ளே வந்தார். நான் 5ம் மாடிக்கு சென்ற போது அவரும் 5ம் மாடிக்கு வந்தார். 503 ம் இலக்கத்தை அடைந்த போது அவரும் அங்கு வந்தார். பார்த்துச் சிரித்தார். சிரிக்க வேண்டும் என்பதற்காய் சிரித்தேன்.

என்னைச் சிலர் உளவாளி என்பதாய் அறிகிறேன். எனவே, இவர் என்னைப் பின்தொடர்கிறாரே என்று நினைத்த போது வீட்டின் உரிமையாளர் விற்பனை செய்யவிருந்த ஒரு பெரிய  ”Sofa” ஒன்றை அவர் வாங்க வந்திருப்பதாக அறியக்கிடைத்தது. அவர் இந்த இருக்கையை தூக்க முடியாமல் தூக்கியும், இழுத்துக்கொண்டும் வெளியேறினார். ஏனோ அவருக்கு உதவவேண்டும் என்று தோன்றவில்லை.

என்னை அழைத்தவர் தனது கணணி புதிதாய் வாங்கி வந்த mouse மற்றும் keybord ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்றார். அவரின் கணணி அருங்காட்சியகத்தில் இருப்பதற்கான சகல தகுதிகளையும் கொண்டிருந்தது. எப்போ இந்தக் கணணியை வாங்கினீர்கள் என்ற போது, ஏறத்தாள 8 - 9  வருடங்கள் இருக்கும் என்றார். இந்தக் கணணி மிகவும் பழசாகிவிட்டது என்றேன். அவருக்கு அது பிடிக்கவில்லை என்பது அவரின் பார்வை நிரூபித்தது. நான் இதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் திறப்பேன். அதுவும் எனது அரை மணிநேரம் தான் பாவிப்பேன். நான் பாவிக்காமல் கணணி எப்படி பழசாகும் என்று போர்க்கொடி தூக்கினார்.

அப்போதுதான் அவரைப் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன் அவர் ஒரு அழகிய பெணாய் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது தனது அழகிய, கவர்ச்சியான காலங்களையெல்லாம் அவர் கடந்து பல தசாப்தங்களாகியிருந்தன. அவருக்கு பற்கள் இருக்கின்றனவா என்று பட்டிமன்ற தலைப்பு வைக்குமளவுக்கு பற்கள் இருந்தன. கண்ணுக்கு கண்ணாடி போட்டாரா அல்லது மூக்குக்கு கண்ணாடி போட்டாரா என்று சந்தேகமாய் இருந்தது. குரலும், குளிரில் நடுங்குபவரின் குரல் போன்றிருந்தது.

நீங்கள் உங்களை பாவிக்காமலே உங்களுக்கு வயதாவதில்லையா என்று கேட்க நினைத்தேன். இருப்பினும் அவரின் வயது காரணமாக எனது எண்ணத்தை கைவிட்டேன்.

மிகவும் ஆறுதலாகவும், விளக்கமாகவும் கணணியுலகத்தையும் கணணிகளின் வளர்ச்சிகளையும் பற்றி இலகுவான முறையில் எடுத்துரைத்தேன். 8 - 9 வருடத்தில் கணணியுலகத்தில் குறைந்தது 3 - 5 கணணிப்பரம்பரம்பரைகள் தோன்றி மறைத்திருக்கின்றன என்ற போது, நான் தவறான நிறத்தில் இருந்ததாலோ என்னவோ அவர் என்னை நம்புவதாக இல்லை. இருப்பினும், ஏறத்தாள 30 நிமிடங்கள் கணணியுடன் கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்து அவரின் mouse மற்றும் keybord ஐ இயங்க வைத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக
”பார்த்தாயா எனது கணணி பழசாகவில்லை” என்றார்
என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் என் பல்லை நெருமிக்கொண்டு புன்னகைத்தேன். பணம் தந்தார். பெற்றுக்கொண்டு வெளியேறினேன்.

Lift ஆல் இறங்கியதும்  அந்த sofa மனிதர் sofaஐ கதவிற்கு அப்பால் எடுத்துச் செல்ல பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தார்.  sofa நான் உன்னுடன் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தது. நான் கணணி திருத்திய 30 நிமிடங்களையும் இவர் இந்த கதவினால் வெளியே செல்ல முயற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார் என்பதே எனக்கு அவர் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

பொறுங்கள் நான் ஒரு பக்கத்தில் பிடிக்கிறேன் என்றேன். நன்றி என்றார். இருவருமாய் அவரின் வாகனத்தினுள் Sofaஐ வைத்தோம். இவ்வளவு நேரமாய் இதனுடனா மாரடித்தீர்கள் என்றேன். ஆம், இது வயோதிபர்கள் வாழும் இடம் என்பதால் எவரும் உதவிக்கு வரவில்லை என்றார். பின்பு இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.

நான் விடைபெற்ற போது, எங்கே போகிறாய்? நான் என்னை உன் வீட்டில் விடுகிறேன் என்றார். எனது வீடு இருக்கும் இடம் மிகவும் தூரம் என்ற போதும் கட்டாயப்படுத்தி என்னை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்.

வாகனம் ஒஸ்லோவின் இரவினூடாக எம்மை அழைத்துப் போய்க்கொண்டிருந்தது. நாம் அவரின் பேச்சில் இருந்து இவர் ஒரு வழக்கறிஞர் என்றும், இளைஞர் சங்கமொன்றிற்காக இந்த Sofaவை வாங்கிச் செல்வதாயும் அறிந்து கொண்டேன். அவரின் இடம் ஒஸ்லோவிற்கு தெற்கில் இருந்தது. நானோ வடக்கில் வசிக்கிறேன். எனக்காக ஏறத்தாள 40 கிலோமீற்றர்கள் அதிகமாக வாகனமோடுகிறார். நான் இடையில் இறங்கிக் கொள்வதாகச் சொன்னேன். இல்லை இல்லை... ஒருவர் உதவி செய்தால் அதை நாம் மறத்தலாகாது, தவிர உன்னுடன் பேசுவது மகிழ்ச்சியைத் தருகிறது என்றபடியே என் வீட்டிற்கு அருகில் என்னை இறக்கிவிட்டார். வாகனத்தால் இறங்கிய போது கைகுலுக்கிக் கொண்டோம். உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் இல்லாவிட்டால் நான் இப்போழுதும் அங்கு தான் நின்றுகொண்டிருப்பேன் என்று சொல்லியபடியே புறப்பட்டார்.

நீங்கள் இல்லாவிட்டால், நான் வீடு வந்து சேர இரண்டு மணிநேரமாகியிருக்கும் என்பதற்கிடையில் அவரின் வாகனம் என்னைக் கடந்துவிட்டிருந்தது.

வினை விதைத்தால் வினையும் தினை விதைத்தால் தினையும் அறுக்கலாம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருந்தது எனக்கு.

இன்றைய நாளும் நல்லதே!


.

2 comments:

 1. பினாத்தலாக இருந்தாலும் நல்ல பினாத்தலாக இருக்கிறது.

  ReplyDelete
 2. ஹாய் விசரன்
  ரசிக்கும்படியான எழுத்து. வித்தியாசமான சிந்தனை
  ஆனாலும் ஒரு கேள்வி? முகமூடி மனிதனா இல்லை நிஜமா?
  எப்படி என்றாலும் பரவாயில்லை.....யாருக்கு என்ன நட்டம்
  சில நிமிடம் சிரிக்க வைத்தமைக்கு நன்றி

  ReplyDelete

பின்னூட்டங்கள்