வரிக்குதிரையாக மாறிய இளம் பெண்

இன்று காலை நிலக்கீழ் பேரூந்தில் இருந்தபடி சுற்றாடலை ரசித்தபடி இருந்திருந்தேன். குழந்தைகள், சிறுவர்கள், விடலைகள, பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரும் அங்கிருந்தனர். 

அடுத்து வந்த நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் ஒரு பெண் உள்ளே ஏறினாள். அவளைக் கண்டதும் என்மனதில் வரிக்குதிரையின் நினைவே வந்தது. அவள் வரிக்குதிரை போல் கறுப்பில் வெள்ளை நிற சட்டையணிந்திருந்தாள். மெலிந்து நீண்ட முகம், வரிக்குதிரையின் மூக்கு போன்று வழவழப்பான மூக்கு, நீண்ட காது, திடமான தசையுடைய கைகள், கால்கள், வரிக்குதிரை வால் போன்ற பழுப்பு நிறமான கூந்தல், புடைத்த கழுத்து என அவளுக்கும் வரிகுதிரைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருந்ததாய் தெரிந்தது எனக்கு. மிக அலட்சியமாக அவள் நின்றிருந்த விதமும் வரிக்குதிரையின் தன்மையையே காட்டிற்று.

அவளையே பார்த்திருந்தேன். ஏன் எனக்கு இவள் வரிக்குதிரையாய் தெரிய வேண்டும் என்று சிந்தனையோடிக் கொண்டிருந்தது.

அதன் பின் எனக்கு முன்னால் இருந்த ஒரு ஆணிண் மேல் என் கண்கள் சென்ற போது திடுக்கிட்டு விட்டேன், நான். அவர் ஒரு பனிக்கரடி போலிருந்தார். பழுப்பு நிறமான உடை. தலை மட்டும் தெரிய  உடலின் மற்றைய பகுதிகள் மறைக்கப்ட்டிருந்தன.  பருமனான முகத்தில் கூர்மையான கண்கள். பருத்த திடமான சப்பாத்து,  செழித்து வளர்ந்த உடம்பு என இருவர் உட்காரும் இடத்தை பிடித்தபடி உட்கார்ந்திருந்தார் அவர்.

மனம், குழம்பி என்னையும் குழப்பியது. ஏன் நான் இவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுகிறேன் என புரியவில்லை. எனது சிந்தனையையும் மீறி மனது மற்றைய மனிதர்களையும் மிருகங்களுடனும், பறவைகளுடனும் ஒப்பிட்டது. சில வேளைகளில ஏற்படும் சிந்தனைகள் விசித்திர‌மானவையாகவே இருக்கின்றன. காரணம் என்ன என்று புரியவில்லை.

எனக்கு முன்னால் ஒரு தாயும் இரு குழந்தைகளும் இருந்தார்கள். குழந்தைகளின் சேட்டைகளை அனுபவித்தபடியே தாய் ஐன்னலுக்கப்பாலிருந்த உலகில் தன்னை மறந்திருந்தார். எனக்கேதோ அவர் ஒரு கிழட்டுச் சிங்கம் போலவும் குழந்தைகள் சிங்கக் குட்டிகள் போலவும் இருந்தனர். பெண்ணிண் உடல்வாகு கிழட்டுச் சிங்கத்தை ஒத்ததாகவும், குழந்தைகளின் உடம்பு சிங்கக் குட்டிகளை ஒத்ததாகவும் இருந்தது. குந்தைகள் அவர் மீதி ஏறி வியைாடினர். தம்மை தானே தள்ளி விளையாடினர். தாய் எங்கொ பார்த்திருந்தாலும் கவனம் குழந்தைகளில் இருந்தது. இடையிடையே குழந்தைகளை தம் கட்டுப்பாட்டி்ற்குள் அழைத்துவந்தார். சிங்கம் போல் பெரிதாய் கொட்டாவியும் விட்டார்.


இவர்களுக்கு அருகில் அழகிய பஞ்சவர்ணக் கிளியொன்று தேவைக்கு அதிகமான உதட்டுச்சாயத்தை கண்ணாடியில் பார்த்தபடி அப்பிக் கொண்டிருந்தது. தலைமயிர் இளஞ்சிவப்பாயும், தோடுகள் பஞ்சை, மஞ்சல் நிறத்திலும், தலைச்சோடனைகள் இன்னும் பல நிறங்களிலும். உடை மெ்ல்லிய பச்சை, மஞ்சல், நீல நிறத்தில் இருந்தன. யாருடனோ தொலைபேசினாள். குரலும் கீச்சுக்குரலாயிருந்தது.

இன்னுமொருவர் சற்று தள்ளி அமர்ந்திருந்தார். மெல்லிய நீண்ட உடம்பு, வழுவழுத்து மினுங்கும் உடை. அவரைப் பார்த்ததும் பாம்பு மாதிரி இருந்தார். பாம்பாட்டியின் மகுடியை பார்த்திருக்கும் பாம்பு மாதிரி தனது கையில் இருந்து iPhone இல் லயித்து அதைத் தவிர வேறு எதிலும் கவனம் இன்றியிருந்தார். iPhoneஐ பறித்தால் பாய்ந்து கொத்திவிடுவாரோ என்று என் சிந்தனையோடிற்று.

அடுத்து வந்த புகையிரத நிலையத்தில் அந்த வரிக்குதிரைப் பெண் இறங்கி அழகாய் நடந்து போனாள். அவளின் பின்புறம் மட்டுமே தெரிந்தது எனக்கு. அதுவும் வரிக்குதிரை மாதிரியே இருந்து.

அன்று, என்னுடன், அந்த நிலக்கீழ் புகையிரதத்தில் பயணித்த யாராவது,
என்னடா இது .. என்னருகில்
அண்டங்காக்கை நிறத்தில்
பேத்தைகளின் வண்டியுடன்
டைனோசர் முட்டை‌ போன்ற தலையுடன்
பன்றியின் அசிங்க அழகோடு
கிழட்டுக் குரங்கு வயதில்
ஒருவன் குந்திருந்து என்னை ஆந்தைக் கண்ணால் பார்க்கிறானே என்று நினைத்திருக்கக் கூடுமோ?

இருக்கலாம் ....

யாமறியோம் பராபரமே!


.

4 comments:

 1. முன் ஜென்மத்தில் காட்டு ராஜாவாக இருந்திருப்பீர்களோ?

  ReplyDelete
 2. குளிசை எடுத்தீர்களா?

  ReplyDelete
 3. இல்லை வேட்டைக்காரனாக இருந்திருப்பார் போலும்.............!

  ReplyDelete
 4. @மாறன், you hit the nail in the head. :-)

  ReplyDelete

பின்னூட்டங்கள்