சேர்ந்து சிந்திப்போமா?

இன்று (26.06.11) ஒஸ்லோவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழாவிற்கு மாலை போல் சென்றிருந்தேன். குழந்தைகள், சிறுவர் சிறுமியர், வளர்ந்தோர் என்று பலரும்  மகிழ்ச்சியாய் இளவெனில் காலத்தின் சுகத்தினை அனுபவித்தவாறு நின்றிருந்தனர். நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியாகவே நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இவ்விளையாட்டுப்போட்டியில் மாவீரரை கௌரவப்படுத்தும் விதமாக அரசியல், கருத்து பேதமின்றி அனைத்து தமிழ்த் தரப்பினரும் பங்குபற்றியது மனநிறைவான விடயம். இவ்விழாவினை ஒழுங்கு செய்தவர்களும், அதில் பங்கு பற்றிச் சிறப்பித்தவர்களும் பாராட்டுக்குரியவர்களே!

நிகழ்ச்சிகளின் முடிவில் பரிசளிப்பு விழாவிற்கு முன்பாக ஒரு உரை  நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையை வழங்கியவர் இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள், அம் மீறல்கள் பற்றி நாம் ஏன் இந்நாட்டு மக்கள், மனிதநேய நிறுவனங்கள்,  அரசியற் கட்சிகள் என்பனவற்றிற்கு எடுத்துக்கூற வேண்டியதற்கான அவசியம் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஒருவர் அவரருகில் சென்று வாதத்தில் ஈடுபட்டார். அவ்விடத்தில் நின்றிருந்த சிலர் அவர் அவரை அகற்ற முற்பட, அவர் விவாதிக்க அவ்விடத்தில் விரும்பத்தகாத சலசலப்பு உருவாகியது. இறுதியில் அவரை சில பார்வையாளர்கள் வந்து அழைத்துப் போயினர். அதன் நிகழ்ச்சியும் இனிதே நடந்து முடிந்தது.

மேற் கூறிய சலசலப்பின் போதும், அதன் பின்பு நடைபெற்ற ஒரு சம்பவமும் என் மனதை எரிச்சலுற வைத்தது. அது பற்றிய எனது பார்வையே இந்தப் பதிவு.

முதலாவது சம்பவம்: சலசலப்பு.

அச் சலசலப்பை உருவாக்கியவரின் செயல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல நாம் அனைவருமே வெட்கப்படவேண்டியது. எம்மக்களுக்காக நடைபெறும் விழாவில் அதுவும்  எமது விடுதலைப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் நடைபெறும் விளையாட்டுவிழாவில்  நாம் இவ்வாறு இடையூறு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அநாகரீகமானது, கண்டிக்கத்தக்கது.

அவரின் கருத்து எந்தவித கருத்தாக இருப்பினும் அதை நாகரீகமான முறையில் விளையாட்டு விழா முடிந்த பின்பு முன்வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து.

இவ் விளையாட்டு விழாவினை யார் நடாத்துகிறார்கள் என்ப‌தனை அறிந்த பின்பு தானே அவ்விளையாட்டில் பங்கு பெறவோ, அல்லது அந் நிகழ்வினை பார்வையிடவோ வருகிறோம். எம் கருத்துக்கு ஒவ்வாதவரின் நிகழ்வு எனின் நாம் அங்கு செல்வதனை தவிர்க்கலாம், அல்லது அங்கு சென்றாலும் அந் நிகழ்வுக்கு இடையூறு செய்யாடமலிருப்பதே நியாயம், தார்மீகம்.

ஒரு மகிழ்ச்சியான விளையாட்டுவிளையாட்டு விழாவின் போது, எமது குழந்தைகளுக்கு முன், அவர்கள் தங்களின் பரிசில்களுக்காக மிக மகிழ்ச்சியாக காத்திருக்கும் வேளையில் இவ்வாறான நடத்தைகள் அவசியம் தானா? இதனால் என்ன பயன் கிடைக்கிறது? சற்றும் சிந்திக்காமலே இவ்வாறான நடத்தைகள் எவ்வித நன்மையையும் பயக்கப்போவதில்லை என்பதனை நாம் அறிவோம்.

விளையாட்டுக் குழுக்களுக்கு பொறுப்பானவர்களும் தங்கள் அங்கத்தவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்து, குறிப்பிட்ட நபர்களுக்கு  அதன்  பாதகங்களை எடுத்துக் கூறாதவிடத்து அவர்களும் ஒரு தவறுக்கு மறைமுகமாக உடைந்தையாகிறார்கள் என்பது எனது கருத்து.

இரண்டாவது சம்பவம்: விரும்பத்தகாத வசனம்.

இது மேற் கூறிய சம்பவம் நடந்த போது அவ்வுரையை ஆற்றியவர் தனது உரையை முடித்ததும் விளையாட்டுப் போட்டியினை நடாத்தும் குழுவில் உள்ள முக்கிய பணியாளர் ஒருவர் ஒலிவாங்கியில் பின்வரும் தொனியில் உரையாற்றினார்.
”தமிழ் மக்களின் பெரும் ஆதரவோடு இவ் விளையாட்டுவிழா நடைபெறுகிறது. இவ் விழாவினை  அசம்பாவிதங்கள் இன்றி நடாத்த அனைவரினதும் உதவி தேவை” என்றார்.

இக் கூற்று வரவேற்கத்தக்கது. பலரும் வரவேற்பார்கள் அதை. நான் உட்பட.

ஆனால் தொடந்து வந்த வார்த்தைகளை அவர் சற்று சிந்தித்த பின் பேசியிருக்கலாம் என்பேன் நான்.
அவர். ”நாம் எவருக்கும் பயப்படமாட்டோம்” என்றார்.

இவ் வார்த்தைகள் அவசியம் தானா? இது ஒரு வித மறைமுக சவால் போன்றல்லவா இருக்கிறது. இதனால் ஏற்படும் வடுக்கள், வலிகளை நாம் அறியாதவர்களா என்ன?

அவரின் மனநிலையை நான் நன்கு உணர்கிறேன். எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில், பலரின் அளவற்ற உதவிகளோடு, எவ்வித தனிப்பட்ட நலனுமின்றி இந்த விளையாட்டுவிழாவினை நடாத்துகிறார்கள். அதன் போது வேண்டுமென்றே தகாத நடத்தைகள் மூலம் இந் நிகழ்வு குழப்பப்படுவதை அதில் பங்குபெறும் எவராலும் தாங்கமுடியாது என்பதை நான் அறிவேன்.

இருப்பினும் மேற் கூறப்பட்ட காரணத்திற்காக அவரின் கூற்று ”நியாயமானது” என்று என்றால் ஏற்க முடியாதிருக்கிறது.

ஏன்னெனில், காலாகாலமாக எமக்குள் ஏற்பட்ட பிரிவுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் எமது சகிப்புத் தன்மையற்ற தன்மையே காரணம் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இன்றும் பிளவுகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந் நிலையில் பலரின் மனங்களையும் ரணமாக்கும் வார்த்தைகள் தேவைதானா?

அவர் அந்த வார்த்தைகளை தவிர்த்திருப்பார் எனின் மறப்போம், மன்னிப்போம், முன் நகர்வோம் என அவர் நடந்து கொள்கிறார் என அர்த்தப்பட்டிருக்கும். ஆனால் அவரது வார்த்தைகளின் தொனி சவால் விடுவது போல் இருப்பது தமிழர்களுக்கு நன்மை பயக்குமா என்பதே எனது கேள்வி. இல்லை என்பதே எனது பதிலாகவும் அமைகிறது. இவ்வார்த்தைகளை நான் மட்டுமல்ல அங்கு நின்றிருந்த பலரும் ரசிக்கவில்லை என்பதை அவர்களின் முகபாவனைகள் காட்டின.

பல தமிழர்களை, தமி‌ழர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படு்த்தும் TCC அமைப்பினர் மத்தியிலிருந்து இவ்வாறான சவால்கள் அவசியம் தானா? அதுவும் நாம் சிதறுண்டு போய்கொண்டிருக்கும் இன்றை காலகட்டத்தில்.

இது பற்றி விவாதிக்கப்படும் பல இடங்களில் அவரின்  கூற்று ஒரு தனிப்பட்ட மனிதனின் கூற்றாக  பார்க்கபட மாட்டாது. அது TCC அமைப்பினரின் கூற்றாகவே பார்க்கப்படும். அது  எமக்கு சாதகமானதா? நிட்சயமாக இல்லை.

சிறு கண நேர உணர்ச்சி பலரின் மனங்களையும் ரணமாக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இவ்வாற தவறுகள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்புக்களிடம் இருந்து வருவது விரும்பத்தக்கதல்ல. உரியவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்புகிறேன்.
----------------------------------------

இது பற்றி யாராவது விவாதிக்க விரும்பினால் உங்கள் கருத்துக்களை தனிப்பட்ட பெயர்களை தவிர்த்து, நாகரீகமான முறையில் விவாதிக்கலாம். அநாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் அகற்றப்படும் என்பதனையும் அறியத் தருகிறேன்.

அனுமதி பெற்ற ‌பின்பே இப் பதி‌வினை பிரதி எடுக்கலாம்.

நன்றி
நட்புடன்சஞ்சயன். செ

2 comments:

 1. ஏதோ கிடைத்த இடத்தில் அகப்பட்ட வேலைகளை தனக்குப் பொருத்தமோ இல்லையோ ஏற்றுக்கொண்டு எங்கோ போகின்றோம் என்ன செய்கின்றோம் என்பது தெரியாமலேயே பலர் சென்று கொண்டிருக்கின்றோம்.

  நான் உளறிவிட்டேனோ என்று தன்னைத் தானே மீட்டிப்பார்க்கும்வரை எந்தமாற்றமும் நடைபெறப்போவதில்லை. எனக்குப் பேச்சு சுதந்திரம் உள்ளது நான் எதையும் பேசலாம் என்கின்ற போக்கு அதிகமாக இருந்திருக்கும்.

  டைனசோர் என்ற மிருகம் மிகப்பெரிதாக இருந்தபோதும் சூழ்நிலைகளை சரிவர சமாளிக்கத் தெரியாததால்தான் அழியும் நிலைக்கு சென்றது.

  நாளை வேறொருவர் வேறுமாதிரி…….

  தவறு என்று தெரிவதை தவறு என்று சொல்லும் உங்கள் தைரியம் பிடித்திருக்கின்றது. தமக்கு சரி என்று தோன்றியதை செய்துமுடித்த அவர்களது துணிச்சலும் எனக்கு பிடித்திருக்கின்றது.

  தனிநபர் நலனுக்காக அன்றி அனைவருக்கும் பாதகமில்லாது செயல்பட முயற்சி செய்யத்தான் வேண்டும். ஆனால் அதுதான் நடப்பதில்லையே? அதனால் உலகம் என்ன இருண்டா போய்விட்டது?

  சண்டையிட்டுக் கொண்டு நெருக்கமான எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமேயில்லை. அதைவிட அவர்களைவிட்டு விலகி தெரியாதவர்கள் போல் இருப்பதே நல்லது.

  உலகம் பெரியது வாழ்க்கை சிறியது தேவையற்ற முட்டாள்தனங்களால் குறுகிய நாட்கள் வீணடிக்கலாமா?

  அதிகமாக உளறிவிட்டேனோ?

  ReplyDelete
 2. நீங்கள் உளரவில்லை.
  ”அதனால் உலகம் என்ன இருண்டா போய்விட்டது” என்கிறீர்கள். இருளத் தொடங்குகிறது என்றே நான் நம்புகிறேன்.

  ”சண்டையிட்டுக் கொண்டு நெருக்கமான எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமேயில்லை. அதைவிட அவர்களைவிட்டு விலகி தெரியாதவர்கள் போல் இருப்பதே நல்லது”
  என்னும் கருத்து ஏற்புடையது. ஆனால் கருத்துவேறுபாடுகளுக்கு அப்பாலும் பொது நன்மைக்காக நண்பர்களாக இருக்கலாம் என்பதே எனது கருத்து.

  ReplyDelete

பின்னூட்டங்கள்