|  | 
| Team Princesses | 
இன்றைய நோர்வேஜிய பத்திரிகைகளில் ஒரு காற்ப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்  அவ்வணியின் பெறுபேறுகள் சிறப்பாக இல்லாததனால் வேலையில் இருந்து  நிறுத்தப்பட்டுள்ளார் என்று இருந்தது. 
இறுதியாட்டத்தில் அவரின் அணி 2-1  என்று ரீதியில் தோல்வியுற்றதால் அவர் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள்  அவரின் மேலதிகாரிகள். காற்ப்பந்தாட்ட உலகில் இது ஒன்றும் புதிதில்லை.  தினமும் நடக்கும் விடயம் தான்.  இன்றைய பத்திரிகைச் செய்தியை வாசித்ததும்  என் மனதில் நான் ஒரு காலத்தில் ஒரு அணிக்கு பயிட்சியாளனாக இருந்த காலம்  நினைவிலாடியது. அது பற்றிய பதிவு தான் இது.
அப்போ 2003 - 20004 ம் ஆண்டுகளாக இருக்கலாம்.  ஒரு நாள் எனது மூத்த மகள்  பாடசாலையில் இருந்து வந்து ”அப்பா உங்களுக்கு கடிதம்” என்று கடிதத்தையும்  தந்து மடியிலும் குந்திக் கொண்டாள். கடிதத்தைப் படித்தேன். அதில் மகளின்  வயதொத்தவர்களுக்காக ஒரு கால்ப்பந்தாட்ட அணி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது  பற்றி கலந்து பேச கால்ப்பந்து விளையாட விரும்பும் குழந்தைகளின் பெற்றோரை  அழைத்திருந்தனர்.
நான் கடிதத்தை வாசித்து முடித்ததும் ”அப்பா நான் புட்போல் விளையாடப் போறேன்” என்றாள். எனக்கும்  கால்ப்பந்துக்கும் மிகுந்த நெருக்கமிருந்தது. மரடோனாவைப் போல் விளையாட வேண்டும் என்று இப்போதும் ஆசை இருக்கிறது.  மகளின் வேண்டுகோள் மனதுக்குள் தேன் வார்த்தது. சரி விளையாடுங்க. நான்  கூட்டத்துக்கு போய் என்ன சொல்கிறாகள் என்று பார்க்கிறேன் என்றேன்.  இப்படி  சொன்னது தான் தாமதம் வீட்டுக்குள் இருந்த ஒரு பந்தை எடுத்து வந்து ”வா விளையாடுவோம்” என்றாள்.
எனக்கும் உசார் தொத்திக்கொள்ள விட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்தோம்.  பந்து பட்டு ஏதோ சரிந்து விழ, சர்வதிகாரி கத்த நின்று போனது எமது  விளையாட்டு.
மறு நாள் குறிப்பிட்ட கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பலர் வந்திருந்தனர்.  உள்ளூர் விளையாட்டுக்கழகம் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. 7 வயதுப் பெண்  குழந்தைகளுக்கு ஒரு கால்பந்தாட்டு அணி உருவாக்குவது பற்றி உரையாடினார்கள். பலரும்  அதை ஆமோதித்தனர். நானும் அமோதித்தேன். உள்ளூர் வினையாட்டுக்கழகம் சிரமதான  முறையிலேயே இயங்கி வந்தது. பயிட்சியாளருக்கு வருட முடிவில் ஒரு பூச்செண்டு  கொடுப்பார்கள் அதைத் தவிர எவ்வித கொடுப்பனவும் கிடையாது. எனவே பலரும்  பயிட்சியாளர் வேலையை விரும்பி ஏற்பதில்லை. 
பயிட்சியாளர் தெரிவு நடைபெற்றது. நான் அமைதியாய் இருந்தேன். எவரும்  முன்வரவில்லை. உள்ளூர் விளையாட்க்கழகத்தின் தலைவர் எனது தொழிட்சாலையில்  தொழில் புரிபவர். என்னைப் போலவே அவரும் கால்பந்தில் உலகத்தை மறக்கும்  குணமுள்ளவர். எனது கால்பந்து ஆர்வத்தையும் அறிந்தவர். அத்துடன் கிழடுகளுக்கான அணியில் என்னுடன்  கால்பந்து விளையாடுபவர். 
“சஞ்சயன் நீ பயிட்சியாளராக இருக்கத் தகுதியுள்ளவன். இப்போது நீயும் இந்தப் பதவியை ஏற்காவிட்டால் இந்தப் பெண்பிள்ளைகளுக்கான அணியை ஆரம்பிக்க முடியாது”  என்று கூறினார். 
அணி ஆரம்பிக்கப்படவில்லை என்று மகளுக்கு சொல்லி அவளின்  மகிழ்ச்சியை கெடுப்பதா? பயிட்சியாளராக மாறி எனது ஓய்வு நேரங்களை இழப்பதா?  என்று மனதைக் கேட்டேன். மனது மகளுக்கு சாதகமாய் பதில் சொல்லிற்று. “சரி நான்  பயிட்சியாளனாய் இருக்கிறேன்” என்றேன். 
என்னிடம் 10 பந்துகளையும், 15 சிவப்பு நிற பயிட்சி அங்கிகளையும்,ஒரு  விசிலையும் தந்து, கையைக்குலுக்கி வாழ்த்துச் தெரிவித்தபடி சென்றார்  விளையாட்டுக்கழகத்தின் தலைவர். 
வீட்டுக்கதவை திறப்பதற்கு முன்பே மகள் வாசலில் நின்றிருந்தாள். கையில் இருந்த  பந்துகளைக் கண்டதும் துள்ளிக் குதித்தாள். நான் பயிட்சியாளனாதில் அவளுக்கு  ஏகத்துக்கும் பெருமை. நாளை வகுப்பில் இதைச் சொல்வேன் என்றாள். அன்று தூங்க  முன் நாளைக்கு  கால்பறந்து விளையாட சப்பாத்து, காலுறை, காலுக்கு பாதுகாப்பு  கவசம், தண்ணீர்ப்போத்தல் போன்றவை வாங்கவேண்டும் என்றும் அவை ரோசா நிறத்தில் இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே  தூங்கிப்போனாள். 
எனது மனதுக்குள் மகள் கால்பந்தில் கில்லாடியாக வருவாள். உள்ளூர் கழகத்தில்  விளையாடுவாள். பின்பு மாவட்ட, மாகாண அணிகளில் விளையாடுவாள். வளர்ந்ததும்  நோர்வே அணிக்கு விளையாடுவாள். பெண்களுக்கான Liverpool அணியில்  விளையாடுவாள் என்றெல்லாம் கனவு ஓடிக்கொண்டிருந்தது.
மறு நாள் சப்பாத்து வாங்க கடைக்குப் போன போது தொடங்கியது பிரச்சனை. தன்னுடைய அளவுக்கு எல்லா  சப்பாத்தும் கறுப்பாய் இருக்கிறதே என்று அங்கலாய்த்தாள். நான் கால்ப்பந்து  விளையாடும் சப்பாத்து கறுப்பு நிறம் என்றேன். ” என்ன நக்கலா” என்னும்  தொனியில் என்னைப் பார்த்து ஒரு சிவப்பு நிற சப்பாத்தைக் காட்டி ” அப்ப இது  என்ன?” என்றாள். அடங்கிக்கொண்டேன் நான்.  முன்றாவது கடைக்குப் போனோம். அங்கும் கறுப்புநிறச்சப்பாத்துதான் இருந்தது. விலையைப் பற்றி அவள் துளியேனும் கவலைப்படவில்லை. ரோசாநிறமுடைய காலுறையும் வாங்கினாள். காலுக்கான பாதுகாப்பு கவசத்திலும்  நிறம் தேடினாள். கிடைக்கவில்லை. முகத்தை தூக்கிவைத்தபடியே கடையில்  இருந்ததை வாங்கிக் கொண்டாள்.
மறு நாள் 2ம் வகுப்பு பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் பயிட்சிகள் நாளை முதல்  ஆரம்பம் என்று கடிதம் எழுதி மகளின் வகுப்பில் கொடுத்துவிட்டேன். புதிய  காட்சட்டை, சப்பாத்து ஆகியவற்றை வீட்டிலேயே போட்டுப் பார்த்தாள். சர்வதிகாரிக்கு தெரியாமல் சிறிது நேரம் வீட்டுக்குள் விளையாடினோம். சிறுது நேரத்தின்  பின் இளைய மகளுக்கு மூத்தவள் பந்தடிக்கப் பழக்கிக் கொண்டிருந்தாள். என்  மனம் பெருமையில் மிதந்து கொண்டிருந்தது.
மறு நாள் ஐந்து மணிக்கு பயிட்சிகள் ஆரம்பிக்கவிருந்தன. நானும் மகளும் 4:30  மணிக்கே மைதானத்தில் இருந்தோம். வாகனத்தால் இறங்கியவள் புல்லில்  உட்காந்துகொண்டே ”அப்பா சப்பாத்தை போட்டு விடுங்கள்” என்றாள். அவளைத்  தயார்படுத்தி முடியும் போது மேலும் இரண்டு சிறுக்கிகள் வந்தனர். அவர்களுடன் ஊஞ்சலுக்கு  ஓடிப்போனாள் மகள். பந்தைப்பற்றி அவர்கள் கவனிக்கவே இல்லை. வந்திருந்த  பெற்றோர்கள்  சிரித்தார்கள் நானும் அசடு வழிந்தபடியே சிரித்தேன்.
5 மணி போல் மேலும் சிலர் வர பயிட்சிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை  6 ஆக  இருந்தது. விசிலை பெரிதாய் ஊதி எல்லோரையும் அழைத்தேன். எலலோரும்  வந்தார்கள் மகளைத் தவிர. அருகில் போய் அழைத்தேன். “அப்புறமாய் வருகிறேன்” என்றாள். உடனடியாக வருகிறாய் அல்லது உங்களை  விளையாட்டில் சேர்க்க முடீயாது என்றேன். கோபத்துடன் வந்தாள்.
பயிட்சியின்போதான விதிமுறைகளை விளக்கிய பின் பயிட்சினை தொடங்கினோம். எனது  வாழ்க்கையில் மறக்கமுடியாத சில நாட்கள் வரப்போவதை உணராமல் பயிட்சி  முடிந்ததுக் கொண்டோம். வீடு வந்ததும் ”சப்பாத்தைக் கழட்டி விடுங்கப்பா”  என்றாள். எதிர்கால நோர்வே நாட்டு வீராங்கனைக்கு இல்லாத உதவியா என்று  நினைத்தபடியே களட்டிவிட்டேன். அன்று மாலை முழுவதும் கால்பந்து பற்றியே  பேசினாள். நானும் கனவுகளுடன் தூங்கிப்போனேன்.
அடுத்த பயிட்சிநாள்  இன்று மொத்தமாக 8 பெண்குழந்தைகள் வந்திருந்தார்கள்.  ஆனால் எனது விசில் சத்தத்தை அவர்கள் மதிப்பதாய் இல்லை. பல முறை ஊதியும்  செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருந்தது அவர்கள் செய்கை.
இறுக்கமான குரலை  வரவழைத்துக்கொண்டு எச்சரித்தேன். வந்தார்கள். பந்துகளை காலால் தட்டியபடியே  ஓடுங்கள் என்றேன். முயற்சித்தார்கள். பந்து இவர்கள் தட்டியதும் தறி கெட்டு  உருண்டோடியது. அவர்கள் பின்னால் ஓடினார்கள். ஆனால் ஒருத்தி மட்டும் மிகவும்  திறமையாக பந்தினை கையாண்டாள். அவளிடம் கால்பந்து விளையாடுவதற்கான மிக அசாத்திய  திறமையிருந்ததை கண்டுகொண்டேன்.
சிறுது நேரத்தில் இரு அணிகளாக பிரித்து விளையாடவிட்டேன். முன்பு  குறிப்பிட்ட பெண் குழந்தை ஏனையவர்களின் காலில் பந்தை படவிடாமல் தனியேயே  விளையாடி கோல் அடித்தாள். அவள் மட்டும் 4 - 5 கோல் அடித்ததும் தோல்வியுற்ற  அணிக்கு பந்துக்காப்பாளராக நான் நின்று கொண்டேன். அப்போதும் அவள் 2 கோல்  அடித்தாள். அன்றில் இருந்து எல்லோரும் அவளின் அணிக்கே செல்ல விரும்பினர்.  மகள் வீட்டிலேயே தன்னை அவளின் அணியில் விடும் படி கட்டளையிட்டாள். அவளின்  விருப்பம் நிறைவேறாத நாட்களில் சண்டைபிடித்தோம். அவள் அழுதாள். நான்  மனவருத்தப்பட்டேன்.
இதற்குப் பின்பான ஒரு நாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடைபெற்று  கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்த கொள்ள விரும்பினார்கள் எனது  அணியினர்.  அணிக்கு உடை தேவைப்பட்டது. விளையாட்டுக்கழகம் பழைய உடைகளை  தந்தது. எனது அணியில் இருந்த அழகிகளுக்கு அவை அசிங்கமாக தெரிய, அதை  உடுக்கமாட்டோம் என்று போராட்டம் ஆரம்பித்தார்கள். நண்பர் ஒருவர் ஒரு பெரிய  கம்பனி வைத்திருந்தார். அவரிடம் எமது அணிக்கு உடைகள் ஸ்பான்சர் பண்ண  முடியுமா என்றேன். அணியின் பெயர் கேட்டார். ”இளவரசிகள்” என்றேன்.  அவர்களுக்கில்லாத உதவியா என்று அன்று மாலையே 10 கால்சட்டைகளும்,  மேலுடைகளும் தந்துதவினார். (எனது வேலையில் இருந்து அவருக்கு சில  கண்ட்ராக்ட்கள் என் மூலமாக போயிருக்கின்றன என்பது எவருக்கும் தெரியாது).
அடுத்து வந்து சனிக்கிழமை கால்பந்து சுற்றுப்போட்டி நடைபெறவிருந்தது.  மகளின் உட்சாகத்திற்கு அளவில்லை. கனவில் கோல் அடித்துக் கொண்டிருந்தாள்.  சனி காலை மிகவும் நேரத்துடன் எழும்பினாள் மகள். என்னையும்  விட்டுவைக்கவில்லை. குடும்பம் சகிதமாய் புறப்பட்டு மைதானம் சென்றடைந்தோம்.  எமது அணிக்கான சீருடையில் இளவரசிகள் நின்றிருந்தார்கள். ஒரு படம் எடுத்துக்  கொண்டோம்.
முதலாவது போட்டியில் தோல்வி. இரண்டாவதும் தோல்வி. இளவரசிகளுக்கோ இதைப்  பற்றிய கவலையில்லை. பெற்றோரிடம்  பணம் பெற்று நொறுக்குத் தீனியில் உலகத்தை  மறந்திருந்தனர். நானும் பல வியூகங்களை அமைத்து விளையாட வைத்தேன். எனது  வியூங்கள் எல்லாமே தோற்றுப் போயின.
அடுத்த வாரமும் ஒரு கால்ப்பந்து சுற்றுப்பொட்டியில் கலந்து கொண்டோம்.  அங்கும் படு தோல்வி. அதையிட்டு எவரும் கவலைப்படவில்லை. பெற்றோர்கள் நீங்கள்  சிறப்பாக விளையாடினீர்கள் என்று குழந்தைகளை பாராட்டியபடியே கலைந்து  போனார்கள். இது வரை நாம் ஒரு கோல் ஆவது அடிக்காதிருந்தது எனக்கு அவமானமாய்  இருந்தது. அடுத்து வந்து சுற்றுப் போட்டியில் 0 - 0 என்று முடிவு வந்தது.  இது எமக்கான வெற்றி என்று இளவரிகளை தெம்பூட்டினேன். அடுத்து வந்த  போட்டியில் 2-1 என்ற விகிதத்தில் தோற்றோம். ஆனால் ஒரு கோல் அடித்த  மகிழ்ச்சியில் இளவரசிகள் தோல்வியை மறந்து போனார்கள். நானும் தான்
இன்றைய பத்திரிகைச் செய்தியில் 2-1 என்று தோல்வியுற்றுமையினால் பதவியை  இழந்து பயிட்சியாளர் போன்று எனது பயிட்சியாளர் பதவியும் 2-1 என்று ரீதியில்  தோல்வியை சந்தித்த பின் இல்லாது போயிற்று.
எனது பயிட்சிக் காலத்தில் ஒரு  கோல் ஆவது அடித்தோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.  அதன் பின் மகளுக்கும்  கால்பந்து ஆர்வம் போய் கராட்டி ஆர்வம் வந்திருந்தது. இப்போதெல்லாம் மகளின்  கால்பந்து அணியின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒரு  ஏக்கம் சுழ்ந்து கொள்கிறது. இனிமேலும் அவள் கால்பந்து வீராங்கனையாக உருவாக  சந்தர்ப்பம் இருக்கிறது என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்.  அதிலும் ஒரு சுய இரக்கம் கலந்த சுகமிருக்கிறது. 
இன்றைய நாளும் நல்லதே!