மெதுவாய் மங்கும் காலம்

அம்மா எனக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பத்தொடங்கியது, நான் கொழும்பில், எனது மாமாவீட்டில் தங்கியிருந்து கல்விகற்கத்தொடங்கியபோதுதான். காலம் 1972. அந்நாட்களில் தமிழ்ப்பாடசாலைகள் இல்லாத பிபிலையில் பணிபுரிந்துகொண்டிருந்தனர் அம்மாவும் அப்பாவும்.

அன்று தொடக்கம் தொடர்ந்து எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டை வரும். இறுதியாக கடந்த ஆண்டும் அனுப்பியிருந்தார்.

அம்மாவின் எழுத்து அத்தனை அழகு. 84 வயதிலும். அச்சுக்கோர்த்தது போன்று எழுதுவார். எழுத்தைக் கண்டதும் அது அம்மாவிடம் இருந்துதான் வந்திருக்கிறது என்பது புரியும்.

பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வாழ்த்து அட்டை அனுப்பிவிட்டு வந்ததா? வந்ததா? என்று கேட்டபடியே இருப்பார்.

பிறந்தநாள் அன்று கட்டாயமாக அவரே தொலைபேசுவார். வாழ்த்துவார். “சந்தோசமாக இரு“ என்பார்

இந்தவருடம் வாழ்த்து அட்டை ஏதும் வரவில்லை. அம்மா தொலைபேசவும் இல்லை.

நானே தொலைபேசினேன். சற்று நேரம் உரையாடியதும் அம்மா எனது பிறந்தநாளை மறந்திருப்பது புரிந்தது. நானும் அதனை நினைவூட்டி அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. உரையாடல் முடிந்தபின்பு அம்மாவின் மடியில் தலைசாய்த்திருக்கவேண்டும் போலிருந்தது.

அம்மா தன்னைச்சுற்றியிருக்கும் உலகத்தை மெது மெதவாக மறந்துகொண்டிருக்கிறார். முதுமை அவரை மெது மெதுவாக விழுங்கிக்கொண்டிருப்பது என்னைப் பயங்கொள்ளவைக்கிறது.

ஆனால், அம்மாவோ கவலையைப்பற்றி கவலைகொள்ளாதிருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்.

முதுமை வரமா? சாபமா?

2 comments:

  1. முதுமையும் ஒரு வரமே என்னை நேசித்தவர்களை நாம் அன்புடன் நேசிக்கும் கால வித்தையை கற்றுத்தருகின்றது!

    ReplyDelete
  2. முதுமை - சாபம். முதுமையினால் வரும் மறதி - வரம்!

    ReplyDelete

பின்னூட்டங்கள்