குழந்தையுலகப் பரவசங்கள்

பல வருடங்களின் பின் ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் பாக்கியம் அண்மையில் வாய்த்தது.
பெண்குழந்தைகளிடத்தில் வார்த்தைகளால் கூறிவிடமுடியாத அன்பிலான ஈர்ப்பு இருப்பதாய் உணர்பவன் நான். சலனமற்ற, ஆழமற்ற சிற்றாற்றில் ஆறுதலாக, தன்பாட்டில் வழிந்தோடும் நீரோட்டத்தின் பாதுகாப்புணர்வு போன்ற அவர்களது பார்வையில் எப்போதும் அன்பு உயிர்த்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் அருகிலிருக்கும்போது மனம் உணரும் அமைதியையும், பாதுகாப்புணர்வையும் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துபார்த்தால் மட்டுமே அவற்றின் ஆழத்தை உணரமுடியும்.
ஆண்குழந்தைகளிடத்தில் எப்போதும் எறும்புகளைப் போன்றதொரு அவசரம் இருக்கும். அடுத்த கணத்திற்குள் உலகை ஆராய்ந்து முடித்துவிடவேண்டும் என்ற பரபரப்பான அவரசம் அது. காத்திருப்பது என்பது அவர்களைப்பொறுத்தவரையில் அர்த்தமற்றது. அவர்கள் சுற்றாடலும் பரபரப்பாகவே இருக்கும்.
பெண்குழந்தைகளிடத்தில் இந்தப் பரபரப்பு இல்லை. அவர்களுக்கு வேண்டியளவு நேரமிருக்கிறது. நேரத்தை மறந்தவர்கள் அவர்கள்.
ஆண்குழந்தைகளின் அருகாமையில் குறும்புத்தனம் செய்யவே மனம் விரும்பும். ஆனால் பெண்குழந்தைகளிடத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்து, அவர்களுடன் உரையாடி, அவர்களின் ஆயிரம் கேள்விகளுக்கு அவர்களின் புரிதலுக்குட்பட்ட வகையில் பதிலளித்து, சிரித்து விளையாடும்போது காற்றில் சருகாய் உணரும், மனம்.. அற்புதமான தாலாட்டுணர்வு அது.
குழந்தை உலகத்தின் வாசல், நம்பிக்கையுணர்வு. அது பாதுகாப்புணர்வின் அடிப்படையில் மிக மிக நுண்ணிய அவதானங்களைக் கொண்டு உருவாக்கப்படுவது.
குழந்தைகளின் நம்பிக்கையைப்பெற்றவர்களுடனான உரையாடல்களில் நெகிழ்ச்சி, அருகாமை, சிரிப்பு, அழுகை, கோபம் அனைத்திலும் எல்லை கடந்த பாதுகாப்புணர்வு இருக்கும். ஆனால் நம்பிக்கையற்ற மனிதர்களுடனான அவர்களின் உரையாடல்கள் சடங்குகளைப்போன்ற செயற்கைத்தன்மையும் மன இடைவெளியும் உடையவை.
எனது சிறுவயது முதலே குழந்தைகள் என்றால் பெரும் பிரியம் இருக்கிறது. எனது பேரதிஸ்டம் அவர்களுக்கும் என்னை பிடித்துப்போகிறது. என்னவென்று இத்தனை குழந்தைகளையும் வசீகரிக்கிறாய் என்பார்கள், நண்பர்கள். நான் அவர்களை வசீகரிக்கவில்லை. வசீகரீக்கப்பட்டிருக்கிறேன். அவ்வளவே.
குழந்தைகளின் உலகத்தில் முட்டாளாய் இருப்பது அறிஞர்கள் அவையில் உட்கார்வதிலும் பெருமையானது, உயிர்ப்பானது.
குழந்தைகளிடத்தில் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதிலும் பெண்குழந்தைகளிடத்தில் ஆயிரம் கதை இருக்கும். அவர்களின் கதையுலகினுள் புகுந்து அங்கு வாழ்ந்துபாருங்கள். வாழ்வின் அயர்ச்சிகளை கணப்பொழுதில் நீக்கும் கதைகள் அவை.
அன்றொரு நாள் ஒருத்தியுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலில் சந்தித்தோம். “ஒரு இரகசியம் சொல்கிறேன்” என்றுவிட்டு “அம்மாவின் வயிற்றுக்குள் ஒரு தங்கை இருக்கிறாள்” என்றாள். அவளது அப்பனிடம் ” வாழ்த்துக்கள்” என்றபோது ஆச்சர்யப்பட்டார். வைத்தியருக்கும், தனக்கும், மனைவிக்கும் மட்டும் தெரிந்த இரகசியம் எப்படி எனக்குத் தெரிந்தது என்று அவருக்குப் புரியவில்லை. நானும் இரகசியம் காத்தேன்.
கடந்த சனிக்கிழமை நிகழ்வின் இடைவேளையில் ஒன்பதே மாதமான மகளுடன் வந்த நண்பரிடமிருந்து அவளை வாங்கிக்கொண்டேன். கவனமாகப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்றது உள்மனது. இரண்டு கைகள் நிறைய பூக்களை அள்ளிக்கொள்வதுபோன்ற மெதுமையுடன் எனது கைகளுக்குள் ஏந்திக்கொண்டேன். மனது சுற்றியிருந்த உலகை மறந்துபோனது.
மென்மையான, பட்டுப்போன்ற, குளிர்மையான, உறுதிகொள்ளாத தேகம். உந்தி உதைக்கும் பிஞ்சுக் கால்கள். தலைக்கு பாதுகாப்பாக ஒரு கையை பிடித்துக்கொண்டேன். கண்களில் “யார் இது” என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை ஏந்திக்கொண்டபின் நான் நெகழ்ந்துபோயிருந்தேன்.
மெதுவாய் முட்டு முட்டு என்று முட்டினேன். முகத்தில் இருந்த கேள்வி மறைந்து புன்னகை தெரிந்தது. உயர்த்திப் பிடித்தபோது முகத்தில் சிரிப்பு வந்தது. வயிற்றில் கொஞ்சினேன். அவ்வளவுதான். நாம் நண்பர்களானோம். பிஞ்சுக்கைகளினால் காதைப்பிடித்து இழுத்தாள். முகத்தில் தட்டினாள், கால்களால் உதைத்து உன்னினாள். நான் தாலாட்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு கொட்டாவியின் பின் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் பாடலொன்றை முணுமுணுக்கத்தொடங்கினேன். எனக்குத் தெரிந்த ஒரே ஒரு பாடல் அதுதான். 1996ம் ஆண்டு முதன் முதலாய் தந்தையானபோது தானாவே உருவாகிக்கொண்ட பாட்டு அது. இளையமகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. இன்றும் அவள் என்னை அப்பாட்டுக்காக கேலி செய்வாள்.
அப்பாட்டில் அதிக வசனங்கள் ஏதும் இல்லை. ”அப்பாட செல்லம், அக்காட செல்லம், அப்பம்மாவின் செல்லம்” என்று குழந்தைக்கு தெரிந்த அனைவரையும் பாட்டுக்குள் இழுத்துவருவேன். அவ்வளவுதான்.
எனது பாடலில் குழந்தை மிரண்டதோ என்னவோ எழுந்து உட்கார்ந்து என்னுடன் உரையாடத்தொடங்கினாள். மொழியற்ற ஆனால் பரஸ்பரம் புரிந்த ஒரு உரையாடல் அது.
இடையிடையே அவளது முகம் எனது முகத்துடன் மோதியபோது என்னை ஆசீர்வதிப்பதுபோன்று சிரித்தாள்.
Navaratnam Paraneetharan வந்து மகளை வாங்கிக்கொண்டார். பரணியில் பொறாமையாக இருந்தது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்