பாவிகளின் பரியாரியார்கள்

எனது கால் முறிந்து ஒரு மாதமாகிறது. சந்திர மண்டலத்தில் நடமாடும் மனிதர்களின் காலணியென்றைப்போன்ற மிக மொத்தமான, உயரமான, பிளாஸ்டிக் காலுடன் நடமாடித்திரிகிறேன். காண்பவர்களின் கண்களில் நான் தென்படுகிறேனோ இல்லையோ கால் தென்பட்டுவிடுகிறது.

எனக்குப் பல குழந்தைகளைப் பழக்கம். அவர்கள் எனது காலைப்பார்த்து அனுதாபிக்கும்போது அம் முகங்களில் இருக்கும் உண்மையான சோகம், வலிக்கிறதா என்று கேட்கும் அவர்களின் குரலில் எனக்கு வலிக்கக் கூடாது என்று இருக்கும் ஆதங்கம், ஓ.. .பரிதாபத்திற்குரியவனே என்று இந்நாட்டு மொழியில் என்னை அணைத்து முத்தமிட்டு ஆறுதலளிக்கும் அவர்களின் அற்புதமான மனம் என்று பலதும் எனக்குத் தரும் மனஆறுதலையும் பலத்தையும் அவர்கள் அறியமாட்டார்கள். எதையும் எதிர்பார்க்காதது அவர்களின் அன்பு.

அன்றொருநாள், ஒருத்தி தூரத்தே இருந்தபடியே என்னைக் கண்டு கையசைத்தாள். அருகிற்சென்றதும் ஒரு கதிரையை இழுத்துப்போட்டுவிட்டு “உட்கார்” என்று கட்டளையிட்டாள். அப்புறமாய் தேனீர், சிற்றூண்டி, உணவு என்று அனைத்தையும் எடுத்துவந்து தந்து என்னுடனேயே அமர்ந்திருந்தாள். அவளுக்கு அப்படியொன்றும் வயசில்லை. 9 வயதிருக்கலாம். பெரும் கரிசனையுடன் என்னைக் கவனித்துக்கொண்டாள்.

அவளை ஒருவாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். காணும்போதெல்லாம் அருகே வந்து

“எப்படியிருக்கிறாய்?
வலிக்கிறதா?
கால் சுகமாக இன்னும் எத்தனை நாள் எடுக்கும்?
எத்தனை நாட்களுக்கு ஊன்றுகோலுடன் நடப்பாய்?”
என்று பல கேள்விகளுடன் வருவாள்.

அவளைக் கண்டதுமே மனம் நெகிழ்ந்துபோகும். அது தரும் பெரும் ஆறுதலை எப்படி எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. சில சம்பவங்களைப் புரிவதற்கு அந்த அந்த சூழ்நிலைகளில் எம்மைப் பொருத்திப் பார்த்தாலும் அவற்றின் தார்ப்பர்யத்தை உணரமுடிவதில்லையல்லவா. அவற்றைப் புரிய அந்த அந்த மனிதர்களின் வாழ்க்கையை வாழவேண்டும். அது சாத்தியமில்லையல்லவா. அப்படித்தான் இதுவும்.

அன்று Oslo அம்மன் கோயிற் திருவிழா. ஒரு பெரிய கட்டிடத்தின் மூன்றாம் மாடியிற்தான் கோயில். மாடிப்படிகளை ஊன்றுகோலின் உதவியுடன் ஏறிக்கொண்டிருந்தபோது நண்பிகளுடன் மேலே இருந்து கலகல என்ற சத்தத்துடன் துள்ளியபடியே இறங்கிக்கொண்டிருந்தாள்.

என்னைக் கண்டதும் “நில்லுங்கள்” என்று நண்பிகளை நிறுத்தி, அவர்களை விலகச்செய்து, என் பின்னால் வந்தவர்களுக்கு “இவருக்கு கால் சுகமில்லை, அவரை முதலில் ஏறவிடுங்கள்” என்று கட்டளையிட்டு நிறுத்தி, எனது மெய்காவலாளிபோன்று பாதுகாப்பாக அழைத்துச் சென்றாள். அதன்பின் அவளது தோழிகளும் எனக்குத் தாதிகளாயினர்.

“தண்ணி வேணும் என்றேன்”. நால்வர் ஓடிப்போய் ஒரு குவளையில் தேனீருடன் வந்தார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அன்னதானம் வந்தது, இனிப்புவகைகள் வந்தன, தேனீர் வந்தது ஒரு சக்கரவர்த்தியைப்போன்று நான் உட்கார்ந்திருக்க அத்தனையும் நடந்தது. என்னைச் சுற்றியிருந்தார்கள். அவர்களின் கையில் இனிப்புகள். இடையிடேயே “வலிக்கிறதா” என்ற கரிசனையான விசாரிப்பு.

தாயார் வந்து அவளை அழைத்தார். நண்பிகளுடன் மறைந்துபோனாள். நான் உடகார்ந்திருந்த இடத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியம்மா என்னைப் பார்த்து “யார் அது, மகளா என்றார்” இல்லை என்று தலையையாட்டினேன்.

அங்கேயே உட்கார்ந்திருந்தேன். உள்ளங்கையை குவித்தபடி ஒடிவந்து, திருநீறு அணிவித்தாள். சென்றுவருகிறேன் என்றுவிட்டு அவளது இரண்டு கைகளுக்குள்ளும் என்னையடக்கி முத்தமிட்டு விடைபெற்றாள்.

அப்போதும் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பாட்டியம்மா “அம்மாளாச்சி இவளை அனுப்பி நீறு பூசியிருக்கிறா, கெதியில் சுகம் வரும்” என்றார்.

நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு மூன்று பெண் குழந்தைகள். சிறியவளுக்கு 8 – 9 வயதிருக்கும். என்னைக் ஊன்றுகோலுடன் கண்ணுற்ற நாளன்று என்னை பேட்டி கண்டாள். அவளுடைய வயதுக்கேற்ற வகையில் நான் விடயத்தை புரியவைத்தாலும் அவளால் அதை புரியமுடியாதிருந்திருக்க வேண்டும். அப்படியென்றால் “உனது காலில் புற்றுநோயா” என்ற அவளது சந்தேகத்தையும் “இல்லை” என்று தீர்த்துவைத்தேன். குழந்தைகள் எப்படியெல்லாம் கண்டதையும் கேட்டதையும் தொடர்புபடுத்திச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இவள் ஒரு உதாரணம்.

தமிழ் உணவகத்தில் உட்கார்ந்திருந்து எழுதிக்கொண்டிருந்தேன். தந்தையுடன் கடைக்கு வந்த சிறுவன் ஒருவன் அங்குமிங்கும ஒடியபடியே விளையாடிக்கொண்டிருந்தான். வயது மூன்று நான்கு இருக்கும். எனது கால் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கவேண்டும். வருவதும் பார்ப்பதும் போவதுமாய் இருந்தான்.

கையைக் காண்பித்து வாருங்கள் என்றேன். மூன்றாம்முறை வந்தான். அருகில் இருந்த கதிரையில் காலைத்தூக்கி வைத்தேன். சுற்றிப் பார்த்தான்.

“என்ன இது?” மனதைக் கொள்ளைகொள்ளும் மழழைத்தமிழ்.
“சப்பாத்து”
“பெரிய சப்பாஆஆத்து”

இப்போதுதான் எனது மறுகாலைக் கண்டான். அவனது கண்கள் எனது கால்களில் தங்கின.

அப்பாவிடம் சென்று அப்பாவை அழைத்து வந்து காண்பித்தான். அப்பா எனக்கு சற்று அறிமுகமானவர். அவர் உரையாடத் தொடங்கினார். இவன் காலிலேயே கண்ணாயிருந்தான்.

“எனக்கும் இப்படி சப்பாத்து வேணும்”

என்ன பதில் சொல்வதில்லை என்று எனக்குப் புரியவில்லை. தந்தையார் சிரித்தார்.

சுதாரித்துக்கொண்டு அவனிடம் “மாமாவின் காலுக்கு சுகயீனம்” என்றேன்.

நோர்வேஜிய மொழியில் “காய்ச்சலா” என்றான்.

தர்மசங்கடமான நிலை. பயலுக்கு காய்ச்சல் வந்தால் அப்பாவிடம் சப்பாத்துக் கேட்பானே என்று சிந்தனை ஓடியது.

“இல்லை, என்றும் நான் தவறி விழுந்ததால் கால் முறிந்தது” என்று கூறினேன்.

அதன் பின்பும் அவனிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தன. தந்தையுடன் புறப்பட்டபோது ”மந்து குடிங்க” என்றது மட்டும் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எனது நண்பர் சஹீரும், மனைவியும் இருவருமே வைத்தியர்கள்.அவர்களுக்கு 3 குழந்தைகள். கடைக்குட்டி அமாராவுக்கு 5-6 வயதிருக்கும். அவள் என்னுடன் அதிகம் விளையாடுவதில்லை. அவள் சில நாட்களுக்கு முன் எங்கள் பாடசாலை மகிழ் நிகழ்வில் சந்தித்தபோது அவளின் கண் எனது காலில் இருந்தது. அவளது தாயார் “அமாரா, சஞ்சயன் மாமாவுக்கு கால் உடைந்துவிட்டது” என்றுபோது நான் அவர்களுக்கு அருகில் நின்றிருந்தேன். என் காலை எட்டிப் பார்த்தாள். முகத்தில் இருந்த புன்னகை மறைந்துபோனது. தாயின் அருகே நின்றபடியே “ஏன் காலை உடைத்தாய்?” என்ற அவளது கேள்விக்கு நான் “உனது அப்பா அடித்த்தால் கால் உடைந்துவிட்டது” என்றேன். தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீ அப்பாவை அழைத்துக் கேள்” என்றார் அவர்.

“அப்பா இங்கே வாருங்கள்“ என்று கத்தினாள்.

அவர் திருப்பிப்பார்க்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் கத்தியபோது அவர் வந்தார்.

அவரிடம் “ஏன் மாமாவின் காலை உடைத்தாய்?” என்று இறுக்கமான குரலிற் கேட்டாள்

அவரும், இவர் எனது இனிப்பை எடுத்தார் என்றபோது

ஒருவருக்கும் அடிக்கக்கூடாது என்று அதிகாரமான குரல் கட்டளையிட்டாள். தந்தையும் தலையாட்டினார்.

முன்பொருநாளும் இல்லாதவாறு அன்று என்னுடன் விளையாடினாள்.

புறப்படும்போது என்னிடம் வந்து என்னை அணைத்து முத்தமிட்டு விடைபெற்றபோது வலித்தால் அப்பாவுக்கு தொலைபேசு அவர் மருந்துதருவார் என்றாள்.

இவளின் இந்த அன்பைக் கடந்தும் வலிக்குமா என்ன?

நான் வாதையால் துவண்டுகிடக்கும் காலங்களை எண்ணிப்பார்க்கிறேன். எனது குழந்தைகள், நண்பர்களின் குழந்தைகள், முன்பின் அறியாத குழந்தைகள் என குழந்தைகள் என் கைபிடித்து, நிமிர்த்தி, ஆசுவாசப்படுத்தி, ஆறுதற்படுத்தி மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

அவர்களது அன்பும், ஆதரவும், நம்பிக்கையும், உரிமையான கோபமும், விளையாட்டும், சேட்டையும் மனம் சோர்ந்திருப்பதற்கானதல்ல என்கின்றன.

உண்மையும் அதுவல்லவா.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்