ஊனமறு நல்லழகே , வீரமடி நீ யெனக்கு

1989களில் வயோதிபர்களை பராமரிக்கும் ஒரு அரசநிறுவனமொன்றில் எனக்குத் தொழில். இரவுநேரங்களிலும் வேலை இருக்கும்.
சில வயோதிபர்களுக்கு இரவு என்பதே பகல், பகல் என்பதே இரவு. சிலர் இரவுநேரங்களை வெறுத்தனர். சிலர் அதற்காகவே காத்திருந்தனர். இரவுகளை வெறுத்தவர்கள் தூக்கமற்று புலம்பியபடியே இருளைத் திட்டியபடியே துயிலுக்காக் காத்திருக்க, இரவை கொண்டாடியவர்களோ விடியும்வரை நடந்தனர், ஆடினார்கள், பாடினார்கள் உலாச்சென்றார்கள், என்னை இருத்திவைத்து கதைசொன்னார்கள். இப்படியான இரவின் மனிதர்களை பார்க்கவரும் விருந்தினர்களும் இரவுநேரங்களிலேயே வந்துபோயினர். இருள் இந்த மனிதர்களுக்கு அன்பாளனாய் இருந்தது.
அங்கு ஒரு முதிய பெண் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் உடல் இயக்கமிழந்திருந்தது. முழங்கால்கள் மடிந்து தசைகள் இறுகிப்போயிருந்தன. சுள்ளிகளைப்போன்று மெலிந்த தேகம். எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும். முகத்தில் மட்டும் சற்று உணர்விருந்தது. படுக்கைப்புண் ஏற்படாதிருக்க அவரை நாம் ஒரு நாளைக்கு பலதடவைகள் திருப்பி திருப்பி படுக்கவைக்கவேண்டும். மறுமுறை நாம் வரும்வரை அவர் அப்படியே படுத்திருப்பார். அவரால் உணவினை மென்று உண்ணமுடியாதாகையால், நீராகாரமே அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வப்பொது அவரது கண்களில் தென்படும் ஒளியினையும் இருளினையும் வைத்தே அவரது மனநிலையை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.
உடல் உணர்வுகளை இழந்திருந்ததாலும் இயற்கை உபாதைகள் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. உடல் கல்போன்று இறுகியிருப்பதால் சுத்தம்செய்வதும் அவருக்கும் சுத்தம் செய்பவருக்கும் பெரும் வேதனையையும் சிரமத்தையும் கொடுத்தது.
அவரைப் பார்ப்பதற்காக ஒரே ஒரு மனிதர் மட்டுமே வருவார். தினமும் இருமுறை வந்தார் அவர். அவருக்கு 85 வயதிருக்கலாம். அந்த வயதிற்கு திடகாத்திரமான உடம்பு. தும்புபோன்ற முடி. அழகாக உடுத்தி கைத்தடியுடன் வருவார். இரவில் அவர் வரும்போது நேரம் 11ஐ நெருங்கிக்கொண்டிருக்கும். பகலில் மதியம் 1மணிபோல் வருவார். குறைந்தது 2 மணிநேரம் அங்கு உட்கார்ந்திருப்பார்.
அந்தப் பெண்ணிற்கு தனியறை கொடுக்கப்பட்டிருந்தது. எம்மைக் கடக்கும்போது வணக்கம் என்பார். அறைக்குள் புகுந்தால் அவர் வெளியேறும் வரையில் எமக்கு அந்த அறையில் வேலை இருக்காது. அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். மருந்து கொடுப்பது மட்டுமே எமக்கான வேலையாக இருந்தது.
நான் சில நேரங்களில் மருந்துகளுடன் அந்த அறைக்குள் சென்றிருக்கிறேன். அறை இருட்டாகவே இருக்கும். சாரளங்கள் இரண்டும் மூடப்பட்டு திரைச்சீலை இடப்பட்டிருக்கும். பகலில் அவர் வந்துதான் திரைச்சீலைகளை விலத்தி சாரளங்களை திறந்து ஒளியையும் காற்றையும் உள்ளே அழைப்பார். மற்றையவர்களுக்கு அந்த அனுமதி இருக்கவில்லை.
அவரது கட்டில் உயரமானது. நான்கு பக்கமும் சிறியதொரு தடுப்புக்களும், அதற்கேற்ற உயரத்தில் அவருக்கான இருக்கையும் அங்கிருந்தது.
அறைக்குள் வந்ததும், “வந்துவிட்டேன்” என்றபடியே குனிந்து அப்பெண்ணின் நெற்றியில் முத்தமிடுவார். அப்பெண்ணின் கண்கள் மிளிரும்.
கலைந்திருக்கும் முடியினை மிகக் கவனமாக நீவியெடுத்து காதின்பின்புறமாய் சொருகியும், தலையின் பின்புறத்திற்கு நகர்த்தியும் விடுவார். பெண்ணின் முகம் உயிர்த்திருக்கும். புன்னகைக்காமலும் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பிக்க முடியுமல்லவா.
காலையும் மாலையும் அப்பெண்ணிற்கு தலை சீவி அலங்காரமும் செய்வது அவரது வேலை. விறைத்து, வறண்டு, முடங்கியிருக்கும் கால்களுக்கு எண்ணை பூசி, பாதங்களை அமத்தியபடியே அவருடன் உரையாடுவார். பதில் ஏதும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை அவ்வுரையாடல்களில். பழைய சம்பவங்களை விபரிப்பார். அவரே சிரிப்பார். மீண்டும் உரையாடல் தொடரும்.
கை, கால் நகங்களை வெட்டி, நிறமிட்டு, உதட்டுச்சாயமிட்டு, அழகிய தலைச்சோடனைகளிட்டபின்பு கண்ணாடியொன்றைக் கொணர்ந்து அப்பெண்ணிற்கு முன்னால் காண்பிப்பார். அந்நேரங்களில் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழியும். அன்பாய் ஒரு துணியினால் கண்ணீரை ஒற்றியெடுப்பார்.
ஒரு இளவேனிற்கால மதியம், அப்பெண்ணை வெளியே அழைத்துச்செல்ல அனுமதிகேட்டார். அவரால் உட்கார்ந்திருக்க முடியாது என்ற நிர்வாகியிடம், கட்டிலுக்கு சில்லுகள் உண்டு. வெளியே தார் இடப்பட்ட பாதை. எனவே சற்றுநேரம் அனுமதியுங்கள் என்றார். அனுமதி கிடைத்தது.
எமது நிறுவனத்தைச் சுற்றியிருந்த பாதையில் சற்றுநேரம் கட்டிலை தள்ளிச்சென்று நிறுத்தி அவர் கொண்டுசென்ற உணவினை அப்பெண்ணுக்கு ஊட்டி, தானும் உண்டு மகிழ்ந்தார். அன்று மாலையும் கட்டில் ஊர்வலம் சென்று வந்தது.
ஒரு பனிக்காலத்து நாள் காலை அப்பெண் நிரந்தமாய் துயிலுற்றபோது முதலில் வந்தவரும் அவரே. பலர் வந்தார்கள். சென்றார்கள். அந்நேரத்திலும் அமைதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்ததைக் கண்டேன். எவருடனும் அவர் உரையாடவில்லை. ஒருவரைத் தவிர ஏனையவர்களும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
வேறு இடத்தில் இருந்து அன்று மாலை வந்த அப்பெண்ணின் மகன் மட்டும் இவரைக் கட்டியணைத்து முதுகில் தடவி ஆறுதல் சொன்னார். அப்போது அவர் குழந்தைபோன்று விம்மி விம்மி அழுதார். மகன் அழுதபோது அவனை இவர் அணைத்திருந்தார்.
காரியங்கள் முடிந்தபின் எமது நிறுவனத்திற்கு ஒரு பெரும் ரோஜா பூஞ்செண்டுடன் வந்து அப்பெண்ணினை பராமரித்த அனைவருக்கும் தனிப்பட நன்றி சொல்லிப்போனார். எனது கையையும்பற்றி நன்றி என்றார். அவரது வார்த்தைகளின் உண்மைத்தன்மையை அவரது கண்களில் காணக்கிடைத்த்து.
அன்று இரவு, நிர்வாகியிடம் “மிகவும் வித்தியாசமான கணவர் இவர், இப்படியானவர்களும் இருக்கிறார்களே” என்ற என்னைப் பார்த்து நிர்வாகி “அது அப்பெண்ணின் கணவரல்ல, பெண்ணின் குழந்தையின் தகப்பனும் அல்ல, நெருங்கிய உறவினருமல்ல” என்றுவிட்டு மௌனித்துவிட்டு அவரே தொடர்ந்தார்.
“அப்பெண்ணின் கணவர் இறந்து 3 வருடங்கள் இருக்கும். அப்பெண் இங்கு வந்து 7 வருடங்கள் இருக்கலாம். கடந்த 7 வருடங்களிலும் இவர் இங்கு வராத நாளே இல்லை எனலாம். அப்பெண் மிக வலியான திருமணவாழ்க்கையைக் கடந்தவர். கணவர் இங்கு வந்ததே இல்லை. அப்பெண்ணின் குடும்பத்தில் மகனுக்கு மட்டுமே தெரிந்த உறவு இது” என்றார்.
பல நாட்களாய், நாமிருந்த அறையில் அவர் தந்துபோன ரோஜாக்களின் வாசனையிருந்துகொண்டேயிருந்தது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்