இருண்ட கண்ட ம் இருளாத மனிதம்

அன்று ஒஸ்லோவில் கடும் மழை. மிகக் கடுமையான மழை. ஒஸ்லோ வீதிகளின் பாவங்களை கழுவி, பாதாள சாக்கடையினுள் தள்ளிக் கொண்டிருந்தது, மழை. சிலர் மழையில் நனைந்தடிபடியே நடந்து கொண்டிருந்தனர். அவர்களின் பாவங்களும் கழுவப்பட்டிருக்கலாம்

குடையுடன் மழையை ரசித்தபடியே மெதுவாய் ஒஸ்லோவின் முக்கிய வீதியை ஒன்றை கடந்து கொண்டிருந்தேன்.

ஹலோ ஹலோ என்று யாரோ என்னை அழைப்பது கேட்டு நிமிர்ந்த போது, முன் பின் அறிந்திராத ஒருவர் என்னை நோக்கி கை காட்டிக் கொண்டிருந்தார். ஆச்சர்யமாக இருந்ததால் என்னையா என்று சைகையில் கேட்டேன். ஆம் என்று அங்கே பார், என்று ஒரு கடையின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினார்.  முதல் பார்வையில் எதும் புரியவில்லை. உற்றுப் பார்த்தேன். இருட்டாக இருந்து உள்ளே.  அருகில் சென்று பார்த்த போது ஆபிரிக்க நண்பர் அலாவுதீன் (Aladin) கை காட்டிக் கொண்டிருந்தார்.  எனக்கு அலாவுதீனைக் கண்டது அற்புதவிளக்கைக் கண்டது போல் மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய நண்பருக்கு நன்றி கூறி பழைய நண்பரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

ஒரு கையை நெஞ்சில் வைத்து, மறு கையால் என் கையை குலுக்கியபடியே How are you man?  என்று ஆபிரிக்க ஸ்டைலில் குசலம் விசாரித்தார் நண்பர். ஏதோ  இருக்கிறேன் என்று சொல்லி சம்பாசனையை ஆரம்பித்து பேசிக்கொண்டிருந்தோம்.

அவரைக் கண்டு  ஏறத்தாள 5 -6 மாதங்களாகின்றன. இவரைப் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன். (பார்க்க ஒரு தாதாவும் சாதாரணமானவனும்). ஆபிரிக்காவுக்கு அவர் விடுமுறைக்கு செல்லவிருந்தார் நாம் இறுதியாக சந்தித்த போது. அங்கு ஒரு internett cafe திறப்பதற்காக நோர்வேயில் பல பழைய கணணிகள் வாங்கி என்னிடம் திருத்துவதற்கு தந்திருந்தார். நானும் திருத்திக் கொடுத்தேன். அந் நாட்களில் அவரிடம் பணம் இல்லாததால் எனது சேவைக்கான பணம் 500$ டாலர்களை பின்பு தருவதாக தெரிவித்த போது நானும் அதை ஏற்றுக் கொண்டிருந்தேன். அதன் பின் எமது தொடர்பு அற்றுப் போனது.

எனக்கு பணத்தேவை எற்பட்ட போது பல முறை அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லை என்ற பதிலே கிடைத்தது.  எனது 500$ களும் அம்பேல் தான் என்று எண்ணியிருந்தாலும் மனதின் மூலையில் அது கிடைக்கும் என்ற எண்ணம் சற்று இருந்தது.

இன்று அவர் ஒரு தேனீர்க் கடைக்குள் இருக்கிறார் என்பதை அறியாமல் நான் வீதியால் நடந்து கொண்டிருந்த போது, என்னைத் தேடிவந்து, அழைத்து, தன் முன்னே உட்காரவைத்து, எனது சுகம் விசாரித்து, நான் உனக்கு தரவேண்டிய பணத்தை தருவேன், சில நாட்கள் நீ பொறுப்பாயா என்று கேட்கிறார் அம் மனிதா். ”இல்லை” உடனே வேண்டும் என்று கூறும் நிலையில் நான் இருக்கவில்லை. அவரின் நேர்மை மிகவும் பிடித்திருந்தது. எனவே வசதி வரும் போது தாருங்கள் என்றேன். Thank you My friend  என்று கையை பற்றி கண்ணால் நன்றி சொன்னார்.

பேசிக் கொண்டிருந்தோம். அவர் தனது கணணிகளை ஆபிரிக்காவுக்கு அனுப்ப கொடுத்தவர் அதை அனுப்பவில்லை என்றும், அதனால் தனது திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாது போய்விட்டதாக மனவருத்தப்பட்டார். அவர் என்னிடம், ஆபிரிக்கனை ஒரு போதும் நம்பாதே என்ற போது எனக்கு  சிரிப்புத் தான் வந்தது.

முழுப் பூசணியை சோற்றுக்குள் புதைப்பது போல கண் முன்னேயே நம்பிக்கைக்கான ஆதாரம் இருக்கும் போது என்னை ஆபிரிக்கனை நம்பாதே என்கிறாறே என்று யோசிக்கலானேன்.

தொடர்ந்து, அவர் ஆபிரிக்காவாலில் இருந்த நாட்களி்ல் நோர்வேயில் அவரது வீடு களவு போயிருக்கிறது என்றார்.  உங்கள் நிலமை பறவாயில்லை நீங்கள் ஆபிரிக்காவில் நின்ற போது களவு போயிருக்கிறது, ஆனால் தமிழன் ஒஸ்லேவெில் நிற்கும் போதே களவு போகிறதே என்று அவரை சற்று ஆறதல் படுத்தினேன். பலமாய் சிரித்தார்.

விடைபெற்ற போது உனது பணத்தை சத்தியமாய் திருப்பித் தருவேன் என்றார். தயக்கமெதும் இன்றி அது  எனக்குத் தெரியும் என்றேன். இருவரும் கை குலுக்கிக்கொண்டாம். மிக இறுக்கமாக கையைப் பற்றிக் குலுக்கினார். விடைபெற்றுக் கொண்டோம்.

வெளியில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. என் மனமோ அவரின் நேர்மையின் ஈரத்தில் நனைந்து சிலிர்த்திருந்தது. சக இனத்தவர் ஒருவர் 40 $ க்காக என்னை கண்டால் தலை தெறிக்க ஓடுகிறார், அவர் ஓடும் போது தடுக்கி விழுந்துவிடுவாரோ என பயமாயிருக்கிறது. மனிதர்கள் பலவிதம்.

உண்மையான, ஈரமான மனமுடையவர்களினாவேயே இந்த உலகு இயங்குகிறது என்பது புரிந்திருந்தது எனக்கு, மீண்டும்.

எனக்கு வாய்க்கும் நண்பர்கள் பலரும் இப்படியானவர்களாகவே இருக்கிறார்கள். நான் அதிஸ்டசாலியோ?

 இல்லை, பேரதிஸ்டசாலி.


இன்றைய நாளும் நல்லதே!



.

4 comments:

  1. மரத்தில் ஈரம் இன மத உணர்வுகளைக் கடந்தது. அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. நான் கனக்க 'அனுபவப்' பட்டிட்டன்; காசு வந்தபின்தான் ஈர மனத்தை நம்புவேன்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்