பிரபாகரன் மாவீரனா?


நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர்.  புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து  தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar  போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து.

கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த திகதி என்பதை விட, மாவீரர்களின் வாரம் என்னும் அடையாளத்தையே கொண்டிருக்கிறது. ஏன் இந்த திகதியை தெரிவு செய்தார்கள் என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு நாளாகவே அதை நான் பார்க்கிறேன். எனினும் பல ஆண்டுகளாய் என் மனதை நெருடும் ஒரு விடயமும் அதில் அடங்கியுள்ளது.

மாவீரர்கள் என்பதனை வரையறை செய்பவர்கள் யார்? விடுதலைப் புலிகளா? அப்படியாயின் ஏன் இன்னும் தமிழனின் விடுதலைப்போராட்டத்தை உலகெங்கும் அடையாளப்படுத்திய பிரபாகரனுக்கும் அவரது தளபதிகளுக்கும் ஏன்  இன்னும் மாவீரர் பட்டம் சூட்டப்பவில்லை? என்னைப் பொறுத்தவை விடுதலைப்புலிகளின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் இணையானவர்கள் எங்கும் இல்லை என்பதே எனது கருத்து. அவர்களின் அரசியல், சமுதாய அணுகுமுறைகளில் எனக்கும் மற்றும் பலரைப் போலவே  விமர்சனங்கள் இருக்கின்றன. அது வேறு, அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் மதிப்பது வேறு.

மாவீரர்கள் என்னும் பதத்தினை தமிழ்பேசும் இலங்கையர்கள் நாம் நான் வரையறுக்கவேண்டும். எம் இனத்தின் விடுதலைக்கு வித்தான அனைவரும் எனது பார்வையில் மாவீரர்களே.  *சிவகுமாரனில் இருந்து இறுதியாய் முள்ளிவாய்காலில் சாய்ந்த கடைசித்தோழன் வரையில் அனைவரும் இதற்குள் அடங்குவர். விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விடுதலைக்கு தங்களை அர்பணித்தவர்கள் எவராய் இருந்தாலும், எந்த இயக்கத்தை சேர்ந்தவராய் இருந்தாலும், எந்த கொள்கைளை பின்பற்றியவராக இருந்தாலும் அவரின் இலட்சியம் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாய் இருந்தது. எனவே அவர்களும் மாவீரர்களே.

சகோதர யுத்தங்களினால் எம்மை நாமே அழித்துக்கொண்ட போது கொலையுண்டவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாயமாகிறது? எமது விடுதலைப்போரின் இநத முடிவுக்கு முக்கிய கா‌ரணமாய் அரசியல் சாணக்கியத்தனமின்னை கூறப்படுகறது. விடுதலையின் மீது பற்றுடன் தூரப்பார்வையுடன் அரசியல் பேசிவர்கள் என்னவானார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் துரோகிப்பட்டம் சுமத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டார்கள்.  உண்மையில் அவர்கள் துரோகிகளா?  அவர்களின் குடும்பங்களின் வேதனைகளைப் பற்றி எப்போதாவது சிந்திருப்போமா? எட்டப்பன் என்றும், துரோகி என்றும் எள்ளி நகையாடி தூற்றித் தள்ளிய எமது இன்றைய நிலை என்ன? சக இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட்ட போது  இல்லாது போன உயிர்கள் அனைத்தும் துரோகிகளா? சற்று நேரம் உங்கள் மனச்சாட்சியுடன் பேசிப்பாருங்கள் புரியும்.

ரணங்களை கிளருவது எனது நோக்கமல்ல. எனினும் தவறுகளை உணர்ந்து, திருத்தி, நிமிர்ந்து கைகோர்க்க வேண்டிய காலமிது. ஏனவே விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரும் மாவீரர்களே என அறிவிக்கவேண்டிய கடமை விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுக்கும். அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உண்டு. இவ்வாறான அறிவிப்பு பலரின் ரணங்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களின் ஒற்றமைக்கு பலம் சேர்க்கும்.

கார்த்திகை 27ம் திகதியை தியாகிகளின் நாளாக ஒற்றுமையாய் கொண்டாடுவோம்.

பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு கவிதையின் வரிகள் இது. நமக்கு எதையோ சொல்லிப்போகிறதாய் உணர்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களும்
சூரியனைப் பார்த்து கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள் நாமும் கையசைத்து மகிழ்வோம்


 * சிவகுமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இவ் ஆக்கத்தை  வெளியிட்ட போது செல்வகுமாரன் என்று எழுதப்பட்டிருந்தது. பின்னூட்டம் ஒன்றில் இத் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பின்பு சிவகுமாரன் என்று மாற்றப்பட்டது.  (30.10.2011 - 06: 49 AM)

14 comments:

  1. பிரமாதம் சகோ

    நான் நீனைத்த அணித்தையும் உங்கள் பதிவாய் காண்கிறேன்

    சிந்திக்குமா தமிழினம் இனிமேலும் சிந்திக்கவிடில்??????

    பாராட்டுகள் சகா

    அருமையான பதிவு

    ReplyDelete
  2. ரணங்களை கிளருவது எனது நோக்கமல்ல. எனினும் தவறுகளை உணர்ந்து, திருத்தி, நிமிர்ந்து கைகோர்க்க வேண்டிய காலமிது// நல்ல நோக்கம்.,

    ReplyDelete
  3. நவம்பர் 27 ல்தான் மாவீரர் தினம். 26ல் அல்ல.நவ 27ல் சங்கர் முதலாவது புலிப்போராளி இறந்தது.

    ReplyDelete
  4. Maaveerar's day is on november 27th. Not 26. It is celebrated as a week long event. Not one day.

    ReplyDelete
  5. நீங்கள் நினைக்கின்றீர்களா விசரன் வேண்டாம் விசப்பரீட்சை இது விடையத்தில் நான் மிகவும் களைத்துவிட்டேன்

    ReplyDelete
  6. சுந்தரவடிவழகன்October 29, 2011 8:19 pm

    2 பொயின்ற்ஸ்.. முதலாவது மாவீரர் நான் கார்த்திகை 26 அல்ல. அது கார்த்திகை 27 - வழமையாக இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே - இதனை பிரபாகரனின் நாளாக உருவகிக்கின்றன. மற்றயது
    //ஏன் இந்த திகதியை தெரிவு செய்தார்கள் என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. //
    இதில் விவாதிக்க என்ன இருக்கிறது. 82 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 திகதி புலிகளின் முதலாவது போராளி சாவடைகிறார். அதனாலேயே அது அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.

    தேடிப்பார்த்ததில் நீங்களும் ஒரு இலங்கையர் என்று அறிந்தேன். ரொம்ம்ம்பபபப நன்றி...

    ReplyDelete
  7. ஒரு வாரம் முழுவதும் நடைபெறுவது என்பது யாவரும் அறிந்ததே. அனானி நண்பர் கூறியது போல 27ம் திகதியே மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது.

    ReplyDelete
  8. சுந்தரவடிவழகன்October 29, 2011 8:39 pm

    முன்னதைப்போலவே இந்த கருத்தையும் வெளியிட மாட்டீர்கள் என நம்புகிறேன். இருந்தாலும் உங்களுடைய புரிதலுக்கு..

    புலிகள் இயக்க மாவீரர் பட்டியலில் - புலிகளால் சுடப்படாத (புலிகளால் சுடப்பட்ட ஒருவரைக்கூட மாவீரராகத்தான் அறிவித்திருக்கிறார்கள். ஜெகன்)மாற்று இயக்கங்களில் இருந்து மரணித்தவர்களையும் மாவீரர் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள். செல்வகுமாரன் இல்லை - சிவகுமாரன் அவரது நினைவுநாளையே தமிழீழ மாணவர் நாளாக புலிகள் அறிவித்தனர்.. தெரியுமா.. குட்டிமணி ஜெகன் என்ன புலிகளைச்சேர்ந்தவர்களா.. அவர்களும் மாவீரர்களாகத்தான் அறிவித்திருக்கிறார்கள். ஏன் ஈரோஸ் இயக்கத்தில் சாவடைந்தவர்களையும் மாவீரராக நினைவு கூருகிறார்கள்..
    ---
    கருத்துக்கூறுகிறேன் என்று சும்மா கிளம்பக் கூடாது. உங்களுக்கு இப்படியான எழுத்துக்கள் தவிர்ந்து - மற்றய எழுத்துக்கள் நன்றாக வருகின்றன. அ. முத்துலிங்கம் போல.. அக் குறிப்புகள் நன்றாக இருக்கின்றன. அவருக்கும் - இந்தக் கோதாரி ஒன்றும் தெரியாது. அதனால இதுகளைப்பற்றி ஒன்றும் கதைக்கிறதும் இல்லை.
    -----------
    இந்தக் கருத்துக்கள் எதனையும் நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனா உங்கள் மீதான இந்த விமர்சனங்களை விடாத மனநிலை உள்ள நீங்கள் புலிகள் மீதான விமர்சனங்களைப்பற்றி பேசுவது நல்ல முரண்..

    ReplyDelete
  9. நண்பர் சுந்தரவடிவழகன் அவர்களே! உங்களின் பட்டியலில் EPRLF, PLOT, TELO,மற்றும் ஏனைய இயக்கங்களின் அங்கத்தவர்களின் பெயர் இல்லயே. ஏன்? அவர்களும் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காககத்தானே போராடினார்கள். நீதி என்பது எல்லோருக்கும் சமமல்லவா?

    சிவகுமாரன் என்று திருத்தியமைக்கு நன்றி. அதனை பதிவில் மாற்றிவிடுகிறேன்.

    உங்கள் கருத்துக்களை நான் வெளியிடவில்லை என்று கூறுகிறீர்கள். எப்பொது, எந்த ஆக்கத்திற்கு அது நடந்தது என்று கூறுங்கள். அல்லது அதே கருத்தை மீளப்பதியுங்கள்.

    கருத்துக் கூறுகிறேன் என்பதற்கு ஆழ்ந்த அரசியல் அறிவு இருக்க வேண்டும் என்பதில்லை. மனதை நெருடும் எதையும் கூற எவருக்கும் உரிமையுண்டு.

    எனது எழுத்து பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    நட்புடன்
    சஞ்சயன்

    ReplyDelete
  10. சாதாரணமானவனின் மனதில் தோன்றும் எண்ணங்கள் சாதாரணமானவை அல்ல...ஒரு படைப்பாளியை உங்களுக்கு இதைப்பற்றிதான் நன்றாக எழுதவருகிறது நீ இதைதான் எழுத வேண்டும் என்று கூற வாசகனுக்கு எந்த நியாயமும் இல்லை. சுந்தரவடிவழகன் "விமர்சனங்களை விடாத மனநிலை" என்று எதை கூறுகிறார் என்று தெரியவில்லை, விசரன் கொண்டிருப்பது ஒரு பிரச்சனையின் மீதான கருத்தியல்
    அதற்கு தர்க்க ரீதியாக வாதிட வேண்டுமே ஒழிய, அதை எழுத்தே இதை எழுத்தே என்று கூறுவது வாசகன் வேலை இல்லை. நாம் விட்ட தவறுகளை சுய பரிசோதனைகள் செய்யாதவரை நமக்கு விடிவு இல்லை.

    ReplyDelete
  11. தங்கள் கருத்து தமிழர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் ஆதரிக்க தகுந்ததே. இருப்பினும் மச்சான் என கூறி ஒரே குடும்பமாக வாழ்ந்த ஈழ போராளிகள் தங்களுக்குள் சண்டையிட்டு மாண்டதும் தங்கள் தலைவர்களை ஏதோ ஒரு காரணம் சொல்லி அழித்தி இன்று தகுந்த தலைமையே இல்லாமல் செய்ததை என்ன என்று சொல்வது.

    ReplyDelete
  12. //ரணங்களை கிளருவது எனது நோக்கமல்ல. எனினும் தவறுகளை உணர்ந்து, திருத்தி, நிமிர்ந்து கைகோர்க்க வேண்டிய காலமிது. ஏனவே விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரும் மாவீரர்களே//

    மிக எளிமையாக சொல்லியுள்ளீர்கள்..

    //சாதாரணமானவனின் மனதில் தோன்றும் எண்ணங்கள் சாதாரணமானவை அல்ல...//

    நானும் முன்மொழிகிறேன்.

    ReplyDelete
  13. வைரவர்October 31, 2011 5:36 pm

    ஆமாண்டா ஆமா ....... நீங்கெல்லாம் படிச்சு, கல்யாணம் கட்டி நல்ல நிலையில குடும்பம் குழந்தைகளோட இருந்து கொண்டு அவங்க செய்தது சரியா பிழையா எண்டு விமர்சனம் வேற.......... போங்கடா போய் தமிழனுக்கு உரிய மானம் , பண்பாடு, கலாச்சாரம் , சுயமரியாதையோடு ஒவ்வொருத்தனும் இருங்க...........

    ReplyDelete
  14. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்