முகமிழந்த மனிதர்கள்


முகமிழந்த ஒரு சமுதாயத்தின் கதையிது.

பல தடவைகள் கடந்து போயிருக்கிறேன் இவர்களை. பல கதைகள் கேட்டிருக்கிறேன் இவர்களைப் பற்றி. இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் பின் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆவல் அதிகரித்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பொருநாள் ஒஸ்லோ புறநகர்ப்பகுதியான குரோன்லான்ட் என்னும் இடத்தி்ல் அமைந்திருக்கும் ஒரு கொமினிகேசன் சென்டருக்கு மாலை 8 மணிபோல் போயிருந்தேன்.
நான் அங்கு நின்றிருந்த போது அங்கு வந்தனர் சில மனிதர்கள்
வயது 30 ஐ தாண்டியிருக்கும் எல்லோருக்கும்
பேரன், தகப்பன், மகள் போலிருந்தனர் அவர்கள் வயதில்
களைத்த, சவரம் செய்யாத முகம் ஆண்களுக்கு
ஊத்தை திட்டுத்திட்டாய் பெண்கள் முகத்தில்
வருடக்கணக்கில் தண்ணியை கண்டறியாத உடைகள்
அந்த மனிதர்களும் அப்படியே போலிருந்தது
முகத்தில் வந்தடித்த துர்வாடை

அவர்கள் உள்ளே வந்ததும் முகம் சுளித்தது உள்ளேயிருந்த மனிதர் கூட்டம்
சிலர் ஏதொ முணுமுணுத்தனர்
வந்திட்டாங்கள்.. கவனம் சாமான்கள் என்றனர் வேறு சிலர்
விரைவாய் வெளியேறினர் இன்னும் சிலர்

அவர்களோ மற்றவர்களை கவனிக்கவில்லை. தங்கள் மொழியில் ஏதோ சொன்னார்கள் அந்த கடைக்காருக்கு அவரும் அதை புரிந்தவர் போல் தலையாட்டினார்.

ஒரு சிறிய காகிதத்தில் ஒரு தொலைபேசி இலக்கத்தை எழுதி அதை கடையுரிமையாளரிடம் கொடுத்தனர். அவரும் இலக்கம் 3 என்று அவர்கள் மொழியில் சொல்ல 3ம் இலக்க அறைக்குள் புகுந்து கதவைச்சாத்தி கதைக்கத் தொடங்கினார் ஒருவர். மற்றவர் ஒருவர் வேறு இலக்க அறைக்குள் புகுந்து கொண்டார். அவர்களுள் மிகவும் வயதானவர் அங்கிருந்த ஒரு கதிரையில் கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். மற்வர்கள் இருவரும் மிகவும் சத்தமாய் புரியாத மொழியில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கடை முழுவதும் ஒரு வித துர்நாற்றம் பரவிக் கொண்டிருந்தது. பலரும் முகம் சுளித்தனர், நான் உட்பட. என் மனம் முழுவதும் ஏன் இவர்கள் இப்படி மணக்கிறார்கள் என்ற கேள்வியாயிருந்தது.

கதைத்து முடிந்து மிகவும் சில்லறையாயிருந்த காசுகளை கொடுத்து, கடனும் சொல்லி, கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பெரியவரை பலவந்தமாக எழுப்பி அழைத்துப் போயினர் அவர்கள்.

கடைக்காறர் கதவுகளை நன்றாய் திறந்துவிட்டார், வாசனைத்திரவியம் தெளித்தார், ஸ்பிரிட் கொண்டு தொலைபேசியை கழுவினார். இப்படிச் செய்யாவிட்டால் அவரின் பாவனையானர்களை இழக்க நேரிடும் என்றார். ஒத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது நான் கண்ட காட்சியும் அது தந்திருந்த வாசனையும்.

இது இப்படியிருக்க உங்களுக்கு 4 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கதையையும் சொல்ல வேண்டிய அவசியமேற்படுகிறது.

தொழில் நிமித்தம் ஸ்சுலோவாக்கியா (பழைய செக்கொசுலோவாக்கியாவில் இருந்து பிரிந்த நாடு) போயிருந்தேன். ஒரு சிறிய நகரத்தில் வேலை. ஒரிரு நாட்களாக வேலை செய்து கொண்டிருந்தேன். வேலை செய்யும் இடத்தின் கீழ் மாடியில் ஒரு கடையிருந்தது. என்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் வெளியில் இருந்து மதிய உணவு அருந்திக் கொண்டிந்தேன் அக்கடைக்கருகில் இருந்த ஒரு கடையில். திடீர் என குய்யோ முறையோ என்று சத்தம் கேட்டது. அவலக்குரல் தோளுக்கு பின்னால் கேட்க திரும்பிப் பார்த்தேன். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மலைபோல் இருந்த ஒரு மனிதன் (பக்கத்துக் கடைக்காரன்) தர தரவென இழுத்து வந்து விசிறி எறிந்தான்.பின்பு கம்பொன்றினால் அடிக்கத் தொடங்கினான்
.
கேட்பார் எவருமில்லை.
பலர் புதினம் பார்த்தனர்.
சிலர் தலைகுனிந்திருந்தனர்.
பொறுக்கவில்லை எனக்கு. நன்பனிடம் சொன்னேன் வா போய் அந்த மனிதனிடம் பேசி அடிப்பதை நிறுத்தச் சொல்வோம் என்று. கதிரையில் இருந்து எழும்பிப் போன போது கையைப்பிடித்து பலவந்தமாய் இருந்தினான் செக்கோசுலாவாக்கியா நண்பன்.

இப்போது கர்ப்பிணியின் முகத்தில் அருந்து இரத்தம் வரத்தொடங்கியிருந்தது. ஒரு பெரியவர் ஏதோ புரியாத மொழியில் ஏதோ கத்தினார். அவருக்கும் அந்த மலை போன்ற மனிதன் ஏதோ சொல்லி திட்டியதது போலிருந்தது. பெரிசும் அடங்கிப் போனது. அவனும் அடிப்பதை நிறுத்தி தனது கடைக்குள் புகுந்து கொண்டான்.

சற்று நேரத்தில் தானே எழும்பி கடைக்காரனை திட்டியபடியே மறைந்து போனாள் அந்தக் கர்ப்பிணி. ஸ்செக்கோசுலாவாக்கிய நன்பன் மௌனித்து, தலைகுனிந்திருந்தான். ஏதும் பேசவில்லை. ஏன் நீ பக்கத்துக்கடைக்காறன் அவளை அடித்த போது தடுக்கமுன்வரவில்லை என்றேன். பிறகு கதைப்போம் என்றான். எனக்கும் அமைதி வேண்டியிருந்ததால் நானும் ஏதும் பேசவில்லை. அனால் அந்த கர்ப்பினியின் ஓலம் காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த வந்த பல மணி நேரங்களில் என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அந்தக் கர்ப்பினியின் காயம் எப்படிப்பட்டதோ, ஏதும் மருந்து போட்டிருப்பாளா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
வேலைமுடிந்த போது காரில் என்னை ஏற்றி ஒரு அழகான ஆற்றங்கரையில் இறக்கி இருகில் இருந்த வாங்கு ஒன்றில் இருக்கப் பணித்தான் அந்த நண்பன்.

நீ பார்த்த காட்சி எமது ஊரில் மிகச் சாதாரணமானது. அதை யாரும் தடுப்பதுமில்லை, தட்டிக் கேட்பதுமில்லை என்றான்.

ஏன் என்ற போது..

அந்தப் பெண் ஜிப்சி இனத்தைச் சேர்ந்தவள் என்றும், அவர்கள் திருடியே பிழைப்பவர்கள் என்றும், இன்றும் திருடும் போது பிடிபட்டதால் அடிவாங்கினாள் என்றும் சொன்னான். இவர்களுக்கு அரசு எத்தனையோ சலுகைகளை செய்திருந்தாலும், தொழில் வசதிகளை ஏற்படுத்தியிருந்தாலும் இவர்கள் திருடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்றும் சொன்னான்.

நம்ப முடியவில்லை என்னால்.

நண்பன் மேலும் இவர்கள் படிப்பறிவற்றவர்கள், அடிக்கடி இடம் பெயர்பவர்கள் என்றும், புரிந்து கொள்ள முடியாத ஒரு இனம் என்றும் இவர்களை எவரும் மதிப்பதில்லை என்ற போது வேதனையாயிருந்தது.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா அல்லது மற்றவர்கள் தான் அவர்களை புரியாமல் பாடாய் படுத்துகிறார்களோ என்று கேட்கத் தொடங்கியிருந்தது மனம்.

இத்துடன் பழைய கதை முடிகிறது. புதிய கதை தொடர்கிறது.

அன்று அந்த கொமினிகேசன் கடைக்குள்ளும் வந்து போனவர்கள் அதே ஜிப்சி இனத்தைச் சேர்ந்தவர்களே.
பலருக்கும் இவர்களை ஜிப்சி இனத்தவர்கள் என்றால் தான் புரியும் என்பதால் எழுதினேன். ஆனால் அம் மக்களுக்கு தங்களை அப் பெயர் கொண்டு அழைப்பது பிடிப்பதில்லை என்றும் தங்களை உரொம்மானி இனத்தவர் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள் என்று அறிகிறேன். எனவே நானும் இனி அவர்கள் உரோமானி மக்கள் (Romani people) என்று அழைக்கிறேன்.

உரோமானி மக்கள் (Romani people) அல்லது ரோமா மக்கள் என்பவர்கள் தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும். இவர்கள் பொதுவாக ஜிப்சிகள் என அழைக்கப்படுகின்றனர். ரோமானி மக்கள் உலகெங்கும் பரந்து வாழும் ஓர் இனக்குழுவாகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர் என்று உரோமானி மக்கள் (Romani people)பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா சொல்கிறது.

இவர்களின் இடம்பெயர் வாழ்வு ஏறக்குறை 1000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாம். பழைய காலத்து இமிகிரன்ட்ஸ் (immigrants) இவர்களாத்தான் இருக்குமோ?

இவர்களுக்கென்று ஒரு நாடில்லை. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளிலும் இவர்கள் பரந்து வாழ்கிறார்கள்.இவர்களின் சனத்தொகை ஏறக்குறைய 15 மில்லியன் என கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிகமாக வாழ்கிறார்களாம். அவர்களின் முன்னோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களுக்கென்று ஒரு கொடியும் இருக்கின்றது

உலகப் பிரபல்யமடைந்த ஸ்பானிய நாட்டு பிளமன்கோ (Flamenco) நடனம் இவர்களுடையதே. இவர்களின் இசையும் மிகப் பிரபல்யமானது. Jean Baptiste "Django" Reinhardt (1910-1953) என்னும் உருமானியர் ஐரோப்பாவின்முதலாவது உண்மையான ஜாஸ் இசைக் கலைஞன் என அழைப்படுகின்றார்.

இவர்கள் செப்பு, பித்தளை கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பிரபல்யமானவர்கள்.

இவர்களின் சமயம் ”ரொமானிப்பென்” என்று அழைக்கப்பட்டாலும் இவர்களில் பலர் கத்தோலிக்கர்கள், கிறீஸ்தவர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள் என பல சமயங்ளை பின்பற்றுகின்றனராம்.

இரண்டாம் உலக மகா யுத்த்தத்தின் போது 500 000 க்கும் அதிகமான ஊரோம்மானி மக்கள் வதைமுகாம்களில் கொல்லப்பட்டார்களாம். ஸ்கன்டிநேவிய நாடுகள் இவர்களுக்கு தங்கள் நாட்டின் சிறுபான்மையினம் என அதிகாரபூர்வமாக அறிதித்திருக்கிறது. சுவீடன் உரொம்மானி மொழியை அரச மொழியாவும் அங்கிகரித்திருக்கிறது.

எவ்வளவு சிறப்பான அம்சங்களையும், அங்கீகாரங்களையும் கொண்டதோர் சமுதாயம் இவ்வாறு கூனிக்குறுகி, மிதிபட்டு வாழவேண்டியதன் அவசியமென்ன? பலர் பலவிதமான கருத்துக்களைச் சொல்கிறார்கள். முக்கியமானது விழிப்புணர்வின்மையும், கல்வியறிவின்மையும் என்பது பலரது வாதம். ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அந்தக் கருத்தையும்.

பல அரசுகள் செய்த கொடுத்த வதிகளையும், உரிமைகளையும் உதறித்தள்ளி விட்டு இடம்பெயர் வாழ்வினையும், கூட்டுவாழ்வினையும் மீண்டும் மீண்டும் தெரிவு செய்கிறார்கள் எனின் அதற்கும் ஏதொவொரு காரணம் இருக்கத்தானே வேண்டுமென்கிறது எனது மனம். அது எது?

பல நாடுகள் பழங்குடியினரை நாங்கள் ”மனிதர்களாக்குகிறோம்” என்று முகாம்களில் வைத்து பண்ணிய கொடுமைகள் பற்றி நாமறிவோம். உரொம்மானி மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

எனக்கு ஏதோ இது மனிதமிழந்தவர்கள் மனிதர்களை மனிதர்களாக்கப்போகிறோம் என்று சொல்வது போலிருக்கிறது இந்தமுகாம்களில் மக்களை அடைத்து மனிதம் பழக்குவது.

நமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற தன்னடக்கமில்லாதவர்களே ஏனைய மக்களின் கருத்துக்களை, வாழ்வுமுறையைகளையும் மதி்க்காதிருக்கின்றனர் என்பவன் நான். இப்படிப்ட்டவர்களின் கையில் தான் அளவற்ற அதிகாரங்களும் இருக்கின்றன என்பது தான் வேதனையிலும் வேதனை.

சில வேளைகளில் உரொம்மானி மக்களின் வாழ்வியலமைப்பு இன்றைய உலகிற்கு பொருந்தாதிருக்கின்றதோ என்ற சந்தேகம் வருவதையும் மறுக்க முடியாது. அந்த சந்தேகத்திற்கும் பல வலுவான காரணங்களம் இருக்கின்றன.

எது எப்படியோ, உலகத்தில் இன்னுமொரு இனம் அழிந்து கொண்டிருக்கிறது.
இறுதியாய் மனிதம் மறந்த மனிதர்கள் மட்டுமே மிஞ்சப்போகிறார்கள்..
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.

1 comment:

  1. தெரியாத தகவல்களை வலிமிகுந்த வரிகளோடு சொல்லியிருக்கிறீர்கள் :(

    ReplyDelete

பின்னூட்டங்கள்