பாசமும் பாரமும்


இதை எழுதத் தூண்டிய எனது பூகுட்டிக்கும், வேறு சிலருக்கும் எனது நன்றிகள்
..........................................................

இனி கதைக்குப் போவோம்...

மதிய வெய்யிலும், இளவேனில் கால குளிரும் தங்களுக்குள் ‌யார் பெரியவன் என போட்டி போட்டுக் கொண்டிருந்தன. என் காதை சூடேற்றிக் கொண்டிருந்த சூரியனை குழப்பாமல் காதை மேலும் சூடேற்றுவதற்கு வசதியாய் சூரியனை நோக்கி காதை திருப்பி வைத்துக் கொண்டு, வேலியில் சாய்ந்து கொண்டேன். என்னைச் சுற்றியிருந்த பலரும் கறுப்பு கண்ணாடிகளுடன் சூரியனின் சூட்டை அனுபவித்தபடி என்னைப் போலவே காத்திருந்தார்கள்.

நான் மணியைப் பார்த்தேன்
15.04 என்றது கைத்தொலை பேசியில் இருந்த மணி.

ஒடுங்கிய அந்த பாதையின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.
பல வித வயதிலும், உருவத்திலும், இனத்திலும், நிறத்திலுமானவர்கள் நான் நின்ற இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்புக் குடியிருந்தது.

ஒரு கை தாயின் கையை பிடிக்க, மறு கையில் கரடிப் பொம்மை அசைந்தாட, தத்தி நடைபயின்று வந்து கொண்டிருந்தாள் ஐரோப்பா கண்டமும் ஆபிரிக்கா கண்டமும் கலந்து செய்ததொரு குழந்தை. சுறுள் சுறுளான செம்பட்டை முடி காற்றில் அசைந்தாட, பழுப்பு நிறமான முகத்தில் நீலமான கண்களுடன் நான் தான் உலகின் முழு அழகும் என்று சொல்வது போல் வந்து கொண்டிருந்தாள். அவளின் கண்களிலும் ஆர்வம் தெரிந்தது.

நிறைமாத கற்பிணியொருவர் நடக்க முடியாமல் ஓய்வெடுத்து ஓய்வெடுத்துப் பெருமூச்செடுத்தபடியே வந்து கொண்டிருந்தார்.

வயது போன தடியூண்றிய தாத்தாவின் கையுடன் தனது கையைக் கோர்த்தபடி வந்து கொண்டிருந்தார் ஒரு பாட்டி.
கையுக்குள் இருந்த ஒரு குமிழியை அசைத்து, திருப்பி தனது சக்கர நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார் நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி.
தமக்குள் பேசியபடியே வந்தனர் ஒரு தம்பதியினர்.
கண்கள் மட்டும் தெரியக் கூடிய புர்க்கா அணிந்தபடி வந்து கொண்டிருந்தார் வயது என்ன என்று குறிப்பிட்டுக் கூற முடியாத ஒரு பெண்.
தலைப்பாகையுடன் வந்தார் ஒரு சீக்கியர்.
தாடி வளர்த்து தொப்பி போட்ட இஸ்லாமியர் இருவர்.

தவிர

தனித்தனியே வந்தனர் பலர்.
தெரிந்தவர்கள் பேசிக் கொண்டனர்.
சிலர் புன்னகைத்துக் கொண்டனர்.
கடந்து போனார் ஒரு தமிழ்ப் பெண். புன்னகைத்துக் கொண்டோம்.

மீண்டும் மணியைப் பார்த்தேன்
மணி 15.15 நெருங்கிக் கொண்டிருந்தது.

வந்தவர்களும் ஆர்வமாய் காத்திருந்தனர்.
சில குழந்தைகள் சில நிமிடங்களுக்குள் நட்பாகிக் கை கோர்த்து விளையாடினார்கள்.

நேரம் 15.15

டிரீரீரீரீரீங், டிரீரீரீரீரீங் என Wimbledon Primary School என்னும் ஆரம்ப பாடசாலையில் மணியடித்தது.

எல்லோரினது கவனமும் பாடசாலையின் கதவுகளை நோக்கி திரும்ப பாலர் வகுப்புக்குள் பூத்திருந்த பூக்கள் எல்லாம் ஓடி வந்து கொண்டிருந்தார்கள் தத் தம் செடிகளை நோக்கி.

அந்த முகங்களில் தான் எத்தனை எத்தனை ஆனந்தம்.
தாயிடம் ஓடும் றோசாக்கள்!
தந்தையிடம் ஓடும் சூரிய்காந்திகள்!
குனிந்து முழங்காலிட்டு தன் கழுத்தில் தொங்கும் பேத்தியை தூக்கும் முதிர்ந்த மரம் ஒன்று.
தலை கலைத்து சிரிக்கும் குனிந்து தன் மகளை தூக்க முடியாத கர்ப்பிணியாய் கனிந்திருந்த இள மரம் ஒன்று.
தனது சக்கர நாற்காலியில் குழந்தையின் புத்தகப்பையை வாங்கி வைத்து குழந்தையின் கை தடவும் சக்கர நாற்காலிச் செடியும்
ஓடிவரும் தன் பெண்குழந்தையை தூக்கி காற்றி லெறிந்து பிடிக்கும் ஒரு கம்பீர ஆண்மரமும்
தன் பெற்றோரை காணாமல் விம்ம தயாராகும் பிஞ்சு மொட்டும்
ஓடி வந்த வேகத்தில் விழுந்து பெருங்குரலெடுக்கும் சிறு மழலை ஒன்றும் அவனை நோக்கியோடும் தாய்மரமும் சிறு மொட்டைப் பார்த்துக் கையசைக்கும் சிறுமலருமமாக,

அந்த சில நிமிடங்களில் அவ் இடம் ஆனந்தங்களால் நிரம்பிய பூங்காவாக மாறியிருந்தது.

மற்றவர்களின் மட்டற்ற மகிழ்ச்சியை நேரில் பார்த்ததும் எனக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிக கொள்ள. புன்னகை முகத்தில் கேக்காமலே வந்தமர்ந்தது.

எனது சிறு மலரைத் தேடினேன். அணைத்து முத்தமிட துருதுருத்தது
கையும் மனமும். எனது மலர் சற்றே வளர்ந்து விட்டதால் இன்னும் 5 நிமிடமெடுக்கும் அவள் வெளியே பறந்து வர.

சுற்றிலும் நோக்கலானேன்.

அருகில் நின்றிருந்த சிறுவன் தந்தையின் கையில் இருந்தபடி மூச்சு விட மறந்து தன்னை ஆசிரியை good boy என்று பாராட்டியதை சொல்லிக் கொண்டிருந்தான். ஆச்சரியப்பட்டு விரிந்த தந்தையின் கண்களில் இருந்த பெருமை கண்டு புன்னகைத்தான் சிறுவன். இறுக அணைத்துக் கொண்டார் தந்தை.

கையிலிருந்த அஜந்தா ஓவியத்தை பாட்டியிடம் காட்டிக் கொண்டிருந்தாள் ஒரு குட்டித் தேவதை. கறுப்பு கண்ணாடி கழட்டி, வாசிக்கும் கண்ணாடி போட்டு vonderfull என்று பாராட்டி உச்சிமோர்ந்தார் பாட்டி. மறக்காமல் பக்கத்தில் நின்றிருந்தவருடன் பேசிக் கொண்டிருந்த தாத்தாவுக்கும் காட்டி பெருமைப் பட்டுக் கொண்டார்.

காலையில் பாடசாலை போன தனது அண்ணணை தாயின் கையிலிருந்து குனிந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஒரு சிறு ‌குழந்தை.

சற்றுத் தொலைவில் கர்ப்பிணித் தாயின் வயிற்றை தடவியபடியே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு தேவதை.

சொல்லிவைத்தால் போல் எல்லா பெற்றோரும் குழந்தைகளின் பாடசாலை பையை வாங்கிக் கொண்டார்கள் போலிருந்தது எனக்கு.
இலகுவான இரு கைகளையும் வீசி கதை கதையாய் சொல்லும் சிறுசுகளும் ஆச்சரியமாய் கதை கேக்கும் பெரிசுகளும்...
எனக்கு தெரியாதது உனக்கு தெரிந்திருக்கிறதே என்று சொல்லி
அறிஞர்கள் அவையில் அறிவாளியாவதை விட குழந்தைகளின் சாம்ராஜ்யத்தில் முட்டாளாயிருப்பதே மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்பதை நிருபித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.

எத்தனை, எத்தனை கதைகளுடன் ஓடி வருகிறார்கள், சொல்கிறாகள் சொல்கிறார்கள்.. ‌சொல்லி முடியுதில்லை.. வீட்ட போயும் முடியாது..
பாடசாலைக்கு சென்ற களைப்பே தெரியவில்லையே இவர்களிடம்.
வேலையால் வரும் என்னையும், பாடசாலை முடிந்து வரும் இவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.ஏதோ புரிந்தும் பரியாதது போலிருந்தது. குழந்தையும் கடவுளும் ஒன்று என்பதன் உண்மையும் புரிந்தது.

தனது புதிய கறுப்பு நண்பனை தன் தந்தையிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் ஒரு வெள்ளைப் பாலகன்.
அவரும் முழங்காலிட்டு குந்தி அவன் கைபற்றிக் குலுக்கினார்.
தன் பெயர் முகமட் என்று பெரிய மனிதன் மாதிரி சொல்லி கை குலுக்கினான் அந்தச் சிறுவன்.

உச்சி பிரித்து
இரண்டு பின்னல் போட்டு
சிவப்பு ரிபன் கட்டி
பொட்டு வைத்து
சிவப்பில் வெள்ளை
அல்லது
வெள்ளையில் சிவப்பு
சதுரமிட்ட சட்டை
காற்றில் அசைந்தாட
வந்து
தன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டாள்
சற்று முன் என்னைக்கடந்து போன தமிழ்த்தாயின் சொந்தப் பூ..

அம்மா நாளைக்கு சுவிம்மிங் இருக்கு என்று சொன்ன போது நாளைய நாளின் மகிழ்ச்சி தெரிந்தது
அந்த தமிழ் பூவின் குரலில்.

தாயிடம் புத்தகப் பையை கொடுத்துவிட்டு,
ஊஞ்சலுக்கு ஓடி...
ஊஞ்சல் பறித்து
வேகமாய் ஊஞ்சலாடிக்
காட்டிய சிறுவனைப் பார்த்துக் கவனம் மெதுவாய் ஆடு என்றார் தாய்.
அவனோ ஏறத்தாள 180 பாகையில் ஆடிக்கொண்டிருந்தான்.
தாயிடம் பெருமையையும், பயத்தையும் கண்டேன்.

டவுன்ஸ் சின்றொம் குழந்தையைக் கைப்பற்றி அழைத்து வந்து அக் குழந்தையின் தாயிடம் அவனை ஒப்படைத்து
திரும்பிப், திரும்பிப் பார்த்து கையசைத்தபடியே, தன் தாயிடம் ஓடினான் உண்மையான தேவதூதனொருவன்.

கதவருகில் தெரிந்தாள் என் மலர். எனக்குக் கை காட்டிய படியே பக்கத்தில் ஒரு நண்பியிடத்தில் ஏதோ சொல்லிச் சி‌ரித்தாள். நண்பியும் சிரித்தாள்.என்னைப் பற்றித் தான் ஏதோ சொல்லி சிரிக்கிறார்கள் என்றது பேய் பிடித்த, பெரியவர்களின் உலகத்தில் வாழும் என் மனது.

காக்க வைத்து அருகில் வந்து அணைத்துக் கொண்டாள்.
பிறவிப்பயனடைந்தேன் நான்.

பாடசாலைப் பையை வாங்கிக் கொண்டேன்.
சற்றே தண்ணி குடித்தவள்... கண்களினால் வேணுமா என்றாள்
‌சிரித்து வேணாம் என்றேன்.
கைகோர்த்த படி புறப்பட்டோம்.
திடீர் என ஊர் ஞாபகம் வந்தது.

யுத்தத்தின் எச்சத்தினால் பெற்றோரை இழந்து தவிக்கும் பிஞ்சுகளின் மனதும், பிச்சைக்காரர்களே இல்லாத என்னூரில் இன்று கையேந்தி நிற்கும் பிஞ்சு விரல்களும்..



2 comments:

  1. ரசித்தேன் அண்ணே

    ReplyDelete
  2. ரசிக்கும்படி இருந்த்தது

    ReplyDelete

பின்னூட்டங்கள்