அடக்கத்தின் இருப்பிடமும் தளும்பாத நிறைகுடமும்

 சில வாரங்களுக்கு முன் நடந்த கதையிது.

அன்று காலை தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கு அந்தப் பெயரை எங்கோ கேட்டது போலிருந்தாலும் அப்போது அதைப் பற்றி கேட்பது அநாகரீகம் என்பதால் அமைதியாயிருந்தேன். தனக்கு கணணி சம்பந்தமாக உதவி தேவைப்படுவதாயும் என்னை அவரின் இருப்பிடத்திற்கு வருமாறும் அழைத்தார்.

அவர் கூறிய இடத்திற்குப் போய் இறங்கிய போது இலையுதிர்கால நேரமாகையால் வழி எங்கும் பலவண்ண நிறங்களில் உதிர்ந்த இலைகள் இரைந்து கிடந்தன. மழை பெய்து கொண்டிருந்தது.

அவரின் வீட்டு மணியை அழுத்தினேன். வீடியோவில் பார்த்து 6ம் மாடிக்கு வா என்றார். Lift ஐ தேடிப் போனேன். அதனருகில் ”Lift பழுது” என்றிருந்து. எனது வி‌தியை நொந்தபடி 6மாடிகளும் ஏறி மூச்சு வாங்கியபடி நின்ற போது கதவைத் திறந்தார். நான் மூச்சு வாங்குவதை கண்டதும்
”என்ன உடற்பயிட்சி செய்தாயா” என்றார் குசும்பு கலந்த குரலில்.
”Lift வேலை செய்யவில்லை” என்றேன்
 வெடித்துச் சிரித்தார்
பின்பு என்தோளில் கைபோட்டு என்னை Lift வாசலுக்கு அழைத்துச் சென்றார். அங்கும் ”Lift பழுது” என்று எழுதியிருந்தது.
என்னை அதனை வாசிக்கச் சொன்னார்.
நானும் வாசித்தேன்.
அதனருகில் உள்ள கடைசிச் சொல்லை வாசி என்றார்
அது மிக மிகச் சிறிய எழுத்துக்களினால் எழுதப்பட்டிருந்தது.
அது என்ன என்றார்.
”இல்லை” என்று எழுதியிருக்கிறது என்றேன்.
இப்ப அந்த மூன்று சொற்களையும் சேர்த்து வாசி என்றார்.
புரிந்தது எனக்கு..
”Lift பழுது இல்லை” என்றேன் எனது முட்டாள் தனத்தை நொந்தபடி

தான் தான் அதை ஒட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்.  ”Lift” இல் ஏறி வருவதை விட படியில் ஏறி இறங்குவது உடலுக்கு நல்லம் என்றார்.

வீட்டினுள் போய் கணணிக்கருகில் அமர்ந்ததும் அவரின் பெயர் பற்றிய விடயம் ஞாபகம் வர
”உங்கள் பெயரை எங்கோ கேட்டிருக்கிறேன் போலிருக்கிறது” என்றேன்
”இருக்கலாம்” என்றார்
அந்தப் பெயரில் ஒரு பெரிய நடிகர் இருந்தாக ஞாபகம் வந்தது. அவரா நீங்கள் என்றேன்.
”இல்லை, இந்த அறையில் உள்ள படங்களைப் பார் புரியும். அது வரை நான் தேனிர் கலந்து வருகிறேன்” என்று சொல்லி வெளியில் போனார்.
படங்களைப் பார்க்கலானேன்.
பெரிய பெரிய அரசியல்வாதிகளின் படங்கள், நோர்வே அரசனின் ”சிறந்த சேவையாளர்” விருது, பிரபல பிரதமராகவும், ஐக்கியநாடுகள் சபையின் சுகாதாரப்பிரிவுக்கு தலைவியாகவும் இருந்த Gro Harlem Brundtland இன் படமும் இருந்தன. ஆனால் இவர் யார் என்பது மட்டும் பிடிபடவில்லை.
அந்த அறை முழுக்க ஒரே புத்தகங்கள் இரைந்து கிடந்தன. வைப்பதற்கு இடமின்றி நிலத்திலும் அடுக்கியிருந்தார்.

கையில் தேத்தண்ணியுடன் வந்து
”இது எனது தேத்தண்ணி தயைவு செய்து குறையிருப்பின் பொறுத்துக்கொள்” என்றார் மிகவும் பணிவுடன்.
”எனது தேத்தண்ணியை நீங்கள் குடித்தால் இப்படி பேச மாட்டீர்கள்” என்றேன்.
”அப்ப நாமிருவரும் பிரபலமான சமையல்காரர்கள்” எனறு சொல்லிச் சிரித்தார்.

அவரைப்பற்றி நான் கேட்ட கேள்வியை அவர் மறந்து போயிருந்தாகத் தெரிந்தது. மீண்டும் கேட்டேன்.
”பெரிதாய் ஒன்றுமில்லை என்னைப் பற்றி சொல்ல” என்றார்.
பின்பு தானே ”நான் அரசியலில் இருந்தேன் என்றும். அந்த நாட்களில் சில பதவிகள் வகித்தேன்” என்றும் சொன்னார்.
எனது ஆவர்வம் அதிகமாக ”என்ன பதிவகள் என்றேன்”
தனது அரசியல் வாழ்வு 1960ம் ஆண்டுகளில் தொடங்கியதாகவும்
தொழிற்கட்சின் இளைஞர் அணியின் தலைவராக தான் அரசியலில் புகுந்து

தொழிற்கட்சியின் வடக்குநோர்வே மாகாணத்தின் பொறுப்பாளராகவும், பின்பு இன்னொரு மாகாணத்தில் தொழிற்கட்சியின் பொறுப்பாளராகவும், அதன் பின்பு நோர்வே தொழிற்கட்சியின் நிர்வாகசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் தொழிற்கட்சியின் பிரதம தலைவராகவும் இருந்தாக சொன்னார்.  சற்றே ஆறியவர் மிகவும் அடக்கமான குரலில் 70களின் இறுதியில் தான் போக்குவரத்து அமைச்சராவும் இருந்ததாகவும் சொன்னார்.

இவரைப் பற்றி பெரிதாய் அறிந்திருக்காவிடினும் நோர்வே அரசியலில் முக்கிய புள்ளி ஒருவரை சந்தித்திருக்கிறேன் என்பது புரிய, எழும்பி அவரின் கைகளைப் பற்றியபடி உங்களை சந்தித்ததில் மிக்கு மகிழ்ச்சி என்றேன். நானும் அதையே சொல்கிறேன் என்றார் முதுகில் ஒரு தட்டு தட்டி.

அவருக்கு வயது 70 - 75 இருக்கலாம். மனைவி வேலைக்கு போகிறார். தனக்கு முன்பைப் போல் ஓடியாட முடியாதிருக்கிறது என்றார். தனக்கு மூட்டு நோ இருப்பதாகவும் குளிர்காலத்தில் உடல் உபாதைகள் அதிக கஸ்டத்தை தருவதாகவும் சொன்னார்.  மெளனமாய் தலையாட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு வரப்போகும் வயோதிபம் மனதுக்குள் ஏதோ செய்தது.

அவரின் நாய் ஓடிவந்து என்னை முகர்ந்து பார்த்தது.
இவன் இப்படித்தான் யார் வந்தாலும் முகர்ந்து பார்ப்பான். மிகவும் சாது. எனது நண்பன். இவனுக்கு 3 வயதாகிறது என்று தனது நண்பனை அறிமுப்படுத்தினார். அவரின் நண்பரும் என்னை மணந்து பார்த்துவிட்டு, திருப்பதிப்பட்டவராய் எங்களருகில் படுத்துக் கொண்டார்.

கணணியை திருத்திக் கொண்டு அவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றார்.  முக்கியமான புத்தகமாகக் ”சார்ஜன்ட்” என்னும் புத்தகத்தைக் குறிப்பிட்டார். அதில் கம்யூனிசம், வேவுபார்த்ததல் பற்றி எழுதப்பட்டிருந்ததாகவும், அது பலத்த சர்ச்சையை அந்தக்காலத்தில் எழுப்பியிருந்ததாகவும் சொன்னார். அவர் பல புத்தகங்கள் எழதியிருப்பதாகவும், தற்போதும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அறியக்கிடைத்தது.

இவ்வளவு பெரிய ‌மனிதர் இந்தளவு அமைதியாக, அடக்கமாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நம்மூர் அரசியல்வாதிகளை ஞாபகத்தில் வந்தார்கள். என்னையறிமல் எனக்கு சிரிப்பு வந்தது.

கணணி திருத்தி முடிய எதிர்காலத்தில் ஏதும் கணணிப்பிரச்சனை என்றாலும் வந்து உதவி செய்வாயா என்றார் மிகவும் பணிவாக. அவர் கைபற்றி ”நிட்சயமாக” என்று சொல்லி வெளிக்கிட்டேன். வெளியில் வந்து Liftஐ தேடிப் போனேன். அங்கு ”Lift பழுது” என்றிருந்தது. எனக்குள் சிரித்தபடி படிகளில் இறங்கத் தொடங்கினே். கதவருகில் நின்றபடி என்னைப் பார்த்து கைகாட்டி விடைபெற்றார் பெரியவர்.

இன்றைய நாளும் நல்லதே.

.

7 comments:

  1. மீண்டும் ஒரு பாடம் உணர்த்தும் அனுபவம்!

    ReplyDelete
  2. வாழ்வில் நிறைய மனிதர்களை சந்திக்கிறீர்கள் அவர்களிடம் நிறைய பாடங்களை கற்றுக் கொள்கிறீர்கள்.
    அனுபவம் சிறந்த ஆசான் . நன்றி . மேலும் தொடர்க.

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகளை படித்தபின் ஒன்று மாத்திரம் நல்லாவே புரிகின்றது. உங்கள் "தொழிலை" நன்றாக நேசித்து ரசித்து செய்கின்றீர்கள். இனிவரும் நாட்கள் எல்லாமே நல்ல நாட்களாக உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்:))))

    ReplyDelete
  4. வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  5. ஆற்றலும் அடக்கமும் கொண்ட குசும்பு மனிதர் எனலாமா? சுவார்ஸமாக இருந்தது.

    ReplyDelete
  6. i agree with yarl... நீங்கள் உங்கள் பணியை நேசிக்கிறீர்கள்...

    ReplyDelete
  7. உங்கள் நாட்டு அமைச்சரை பார்க்க இப்போதை கிளம்பி விட்டேன். தமிழக அமைச்சர்களின் பராக் தாங்க முடியவில்லை!

    ReplyDelete

பின்னூட்டங்கள்