ஒரு இளிச்சவாயனும் ஒரு சுத்தத் தமிழனும்


சில நாட்களுக்கு முன் நேரம் நடுநிசியைத் நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியில் பனி விளைந்து கொண்டிருக்க,  பலத்த பனிக் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. அதை ரசித்தபடியே அ.முத்துலிங்கத்தின் ”உண்மை கலந்த நாட்குறிப்புகள்” வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தின் பின் மெதுவாய் உறக்கம் வந்தது. படுத்துக்கொண்டேன். சற்று நேரத்தில் தூங்கியும் போனேன்.

கனவில் வீட்டு மணி அடிப்பது போலிருந்தது. நித்திரையும் சற்றுக் கலைந்தது. நேரத்தைப் பார்த்தேன் சாமம் 2 மணி. தி‌டீர் என எனது ஜன்னல் கண்ணாடியும் தட்டுப்பட நித்திரைகலைந்த எரிச்சலில் யா‌ராய் இருக்கும் என்ற எண்ணத்துடன் ஜன்னலால் எட்டிப் பார்த்தேன்.

தொடர்மாடிக்கு வெளியில் பனியில் புதைந்தவாறு எனது வீட்டுக்கு அண்மையில் உள்ள  தமிழர் ஒருவர் நின்றிருந்தார். (நண்பரல்ல)

அவர் கணணி திருத்த வந்திருப்பதாக நினைத்து ”இப்ப கொம்பியூட்டர் திருத்த ஏலாது” நாளைக்கு வாங்கோ என்று சைகையில் காட்டிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன்.

கட்டிலில் படுத்ததுதான் தாமதம் ஒரு பெரிய Snow கட்டி ஒன்று ஜன்னலில் ”டமார்” மோதி விழுந்தது. என்னிடம் இருந்த பொறுமை காற்றில் பறக்க...

ஜன்னலைத் திறந்து ”எத்தன மணி என்று தெரியாதோ?, இப்படியா தொல்லைப்படுத்துவது” என்று கத்தினேன். அப்போது தான் கவனித்தேன் அவர் நின்றிருந்த விதம் சற்று வித்தியாசமாயிருந்தது. இரண்டு கால்களையும் நெருக்கிப்பிடித்தபடி முதுக்கு கீழே உள்ள சதைப்பிடிப்பான பகுதியை பின்னுக்குத் தள்ளி, கண்கள் வெளியேவந்து விழுந்துவிடும் போலிருந்த நிலையில் நின்றிருந்தார்.

”கதவைத் திறவுங்கோ” என்றார்.. குரல் அடிவயிற்றில் இருந்து மிகவும் சிரமத்துடன் வந்தது.

மனதுக்குள் அவருக்கும் ஏதும் சுகயீனமாயிருக்குமோ என்று யோசனை ஓடியதால் அவசர அவசரமாய் கதவைத் திறந்தேன். உள்ளே வந்தார்.

காலில் சொக்ஸ் இல்லை, தலையில் தொப்பி இல்லை, சாரத்துடனும், இரவு படுக்கையுடுப்புடனும் ஒரு துண்டை போர்த்தியபடி நின்றிருந்தார். நான் அவரைப் பார்த்து என்னய்யா பிரச்சனை என்று கேட்பதற்கு யோசிக்குமுன் மனிதர் எனது கழிப்பறைக்குள் பூகுந்து கொண்டார். கதவைப் பூட்டக் கூட மறந்தார். கழிப்பறைக்குள் பல்குழல் ஏவுகனை தாக்குதல் நடப்பது சத்தங்கள்  stereo ஒலியில் வந்து போயின.

நித்திரை கலைந்த நான் கடுப்புடன் அவருக்காய் காத்திருந்தேன் (வெளியில்). சற்றுநேரத்தின் பின் ”அப்பாடா” என்று வயிற்றைத் தடவியபடியே வெளியே வந்தார். இப்போது கால்களும், முதுக்கு கீழே உள்ள சதைப்பிடிப்பான பகுதியும் வளமையாய் இருக்கும் இடத்தில் இருந்தன. மனிதர் நிமிர்நது நிமிர்ந்து நின்றார். அடிவயிற்றால் கதைக்காமல் வழமைபோல் கதைத்தார்.

எனக்கு நித்திரை கலைந்திருந்தாலும் எரிச்சல் எல்லையில்லாத அளவுக்கு கூடியிருந்தது.

என்னய்யா இப்படியா மற்றவர்களுக்கு இம்சை தருவது என்றேன்.

தனது வீட்டு கழிப்பறை கடந்த 3 கிழமைகளாக பழுதடைந்திருப்பதாயும், தனது வீட்டுக்கு முன் வீட்டு நண்பரின் கழிப்பறையைத் தான் தனது தாங்கள் பாவிப்பதாயும் ஆனால் இது நடுச்சாமம் என்பதால் அவரை எழுப்பி கஸ்டப்படுத்த விரும்பவில்‌லை என்றும், அதனாலேயே வேறு பல வீடுகளைத் தான் தட்டியதாகவும் இருவர் தன்னை திட்டி கலைத்ததாகவும் ஏனைய எவரும் திறக்கவில்லை என்றும் நான் தான்  தனக்கு உதவி செய்ததாகவும் சொல்லி பதிலை எதிர்பாராமல் தமிழன் என்றால் ”இப்படித்தான் இருக்கோணும், சந்திப்போம் என்ன” என்றபடியே வெளியேறினார்.

நன்றி என்ற வார்த்தையை அவர் நினைக்கவே இல்லை. என்பதுதான் கொடுமை.

எனது மனம் அவரை நீ சுத்தத்தமிழனய்யா என்று அவரைத் திட்டினாலும், நான் ஒரு இளிச்சவாயன் என்று எப்படி அவர் அறிந்துகொண்டார் என்று சிந்தித்துக் கொண்டிருந்தது. அதற்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை.

அவர் சொன்ன ”சந்திப்போம்” என்ற சொல் அன்றிரவும் அடுத்து வந்த சில இரவுகளிலும் என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அடிக்கடி சாமத்தில் பயந்து பயந்து ஜன்னலால் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பி.கு. அந்த நபரிடம் கார் இருக்கிறது. எங்கள் வீட்டில் இருந்து 2 நிமிட கார் பயணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் எரிபொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. அங்கு இரண்டு கழிப்பறைகளும் இருக்கிறது. இவ்வளவு வசதியிருக்க சாமம் 2 மணிக்கு என்னை எழுப்பவேண்டிய அவசியம் என்ன? நீங்களே சொல்லுங்கள்....

25.11.2010
.

6 comments:

  1. அவரது நடுநிசி அழைப்பு பல்குழல் ஏவுகணைத் தாக்குதலாக இன்னமும் எனது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  2. நீங்கள் ஓடி ஓடி ஆட்களுக்கு உதவி செய்யிற ஆள் எண்டு கேள்விப்பட்டிருப்பார்:)))))) உங்களை மனதுக்குள் வாழ்த்தியபடி தான் போயிருப்பார்.

    ReplyDelete
  3. நல்ல சுத்தமான தமிழில் கதை பேசி இருகிறீங்கள். சிரிச்சு முடியவில்லை. தமிழன் எங்கு போனாலும்.....

    ReplyDelete
  4. MOST FELLOW TAMILS ARE MOSTLY KIND,HAVE UNDERSTANDING,FRIENDLY WITH SMILE AND HELPFUL..!!! BUT SOME ARE GIVING TROUBLE TO OTHERS.!!!

    ReplyDelete
  5. ஆகா இந்தியாவாக இருந்தால் அனுமதி பெறாது உங்கள் வீட்டு முற்றத்தில் இருந்துவிட்டு சென்றிருக்கலாம்!
    முன் பக்க வாசலுக்கு ஒரு பூட்டு போட்டுவிட்டு பின் வாசல் வழியாக வந்து நிம்மதியாக தூங்குங்கள். எப்படி......

    ReplyDelete
  6. தலைவா நீ வாழ்க! உன் எழுத்தும் வாழ்க!.

    ReplyDelete

பின்னூட்டங்கள்